Thursday, August 15, 2024

ஹோமியோபதி மருத்துவர் கொரட்டூர் சீனிவாசன் மறைந்தார்!

திருச்சி பெல் நிருவனத்தில் நான் பணியாற்றிய போது, போனஸ் தொடர்பான  ஒரு போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டேன். அது முதல் மூட்டு வலி என்னை ஆட்கொண்டு முடக்கிப் போட்டது. வேலூர் ஹோமியோபதி மருத்துவர் ஜக்ரியா அவர்களின் தொடர் கண்காணிப்பால் முடங்கிக் கிடந்த நான் மெதுவாய் மீண்டு வந்தேன். அது ஒரு மறுபிறப்பு. அதன் பிறகுதான் இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் புதிதாய் மீண்டும் பணிக்குச் சேர்ந்தேன். 

மூட்டு வலி இன்னும் முழுமையாய் நீங்கிவிடவில்லை என்பதால், பணிக்குச் செல்லும் போது நான் தாங்கித் தாங்கிதான் அலுவலகம் செல்வேன். அலோபதி மருத்துவம் என்ன அலசிப் பார்த்தது. சென்னை அப்பலோவில் 'போன் ஸ்கேனிங்' கூட எடுத்துப் பார்த்தார்கள். மூட்டு வலிக்கான காரணத்தையே கண்டறிய முடியாத போது, நம்பிப் பயனில்லை என்பதால் அலோபதியை கைவிட்டு மீண்டும் ஹோமியோபதியை நாடினேன். 

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் பணியாற்றிய 20 ஆண்டு காலத்தில். அலுவலகத்தைத் தாண்டி நான் அடிக்கடி சென்று வந்த இடம் சென்னை கொரட்டூர். ஞாயிற்றுக் கிழமைகளில் மாதம் தவறாமல் ஒரு நாள் அங்கு சென்று விடுவேன். கொரட்டூர் இரயில் நிலையத்திலிருந்து கொடிநடையாய் நடந்து சென்று பத்து நிமிடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை அடைந்து விடுவேன். நடக்க முடியாத போது தானியிலும் சென்றதுண்டு. அதன் பிறகு கொரட்டூரிலேயே வேறு வேறு இடங்களுக்கு மாறிய போதும் தொடர்ந்து நான் அங்கும் சென்று வந்தேன்.

அங்குதான் அவரது ஹோமியோபதி கிளினிக் இருந்தது. ஒரு துயரரை முதல் முறையாகப் பார்க்கும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு மேலே அவருடன் உரையாடுவார். நோய்க்கான காரணங்களைக் கண்டறிவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்.

நோய் குறித்த அவரது உரையாடல் அச்சமூட்டுவதாக இருக்காது; மாறாக நோயை எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலை, நம்பிக்கையைத் தூண்டுவதாகவே இருக்கும். நாம் கேட்கிற சந்தேகங்களுக்கு பொறுமையோடு பதில் அளிப்பார். அவரது உரையாடல் நோயோடு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி சமூக நடப்புகள் மீதும் இட்டுச் செல்லும். உலக நடப்புகள் குறித்தும் பேசுவார்.  அதனால்தானோ என்னவோ அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவருடனான உரையாடலே என்னை உற்சாகப்படுத்திவிடும் என்பதால், அதன் பிறகு ஹோமியோபதி மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? சில ஆண்டுகளுக்குப் பிறகு மூட்டு வலியிலிருந்து நான் முற்றிலுமாக விடுபட்டேன். 

எனது குடும்பமே அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. நாங்கள் எதிர்கொண்ட பல்வேறு குடும்பப் பிரச்சினைகளுக்கும் ஒரு மருத்துவராக, ஒரு ஆசானாக நின்று வழிகாட்டி இருக்கிறார். நான் பெரிதும் மதிக்கும் எனது பெரியப்பாவைப் போன்றவர் அவர். அவர் இல்லையேல் நான் என்றோ துவண்டு போயிருப்பேன். 

ஆம்! இன்று முதல் அவர் இல்லை. துயரத்தில் நான் துவண்டு போய் உள்ளேன். இத்துயரிலிருந்து நான் மீள, மீண்டும் அவரேதான் துணை புரிவார். ஆம், அவருடனான நினைவுகள் ஆற்றல் மிக்கது. அத்தகைய நினைகளே என்னைத் தூக்கி நிறுத்தும். 

ஹோமியோபதியர்கள் மத்தியிலே அவர் ஒரு கலங்கரை விளக்கம். அவர் ஒரு அரசு ஊழியராக இருந்தும் ஹோமியோபதியை முறையாகக் கற்று பட்டம் பெற்றார். அதற்காகவே ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொண்டார். மருந்துகளை ஜெர்மனியிலிருந்தே தருவித்தார். 

குப்பி குப்பியாக பல மருந்துகளைக்  (multy medicine) கொடுத்து காசு பார்ப்போர் மத்தியில், ஹோமியோபதி மருத்துவக் கோட்பாடு கூறுவதுபடி மிகக் குறைந்த அளவு மருந்தை மட்டுமே (single dose) அவர் கொடுப்பார். அதற்காக அவர் 'சிங்கிள் டோஸ்' சீனிவாசன் என்றே அழைக்கப்பட்டார். கொரட்டூரிலேயே அவர் சிகிச்சை அளித்து வந்ததால் அவர் "கொரட்டூர் சீனிவாசன்" என்றும் அறியப்பட்டார். 
மிகக் குறைந்த அளவு கட்டணத்தையேப் பெற்றுக் கொள்வார். துயரர்கள் நம்பிக்கைக்காக, கூடவே பிளாசிபோவும் கொடுத்தனுப்புவார். 


சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு, இந்தியா ஏன் உலக அளவிலும் ஹோமியோபதி மருத்துவத் துறையில் அவர் பிரபலமானவர். ஆங்கிலத்தில் எண்ணற்ற மருத்துவக் கட்டுரைகளை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஹோமியோபதியைக் கற்றுக் கொடுப்பதில் மிகச்சிறந்த ஆசிரியர். எண்ணற்ற இளம் ஹோமியோபதி மருத்துவர்களை பயிற்றுவித்து நாட்டுக்கு அளித்தவர். 

எப்பொழுதும் என் நினைவில் நீங்கா இடம் பிடித்தவர் அவர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவரை நினைத்ததுண்டு. சென்று பார்க்கலாம் என்றுகூட ஆவல் எழுந்தது. ஐயகோ! என் செய்வேன்? இன்று அவர் மாண்டு விட்டதாக தோழர் ஒருவர் இரவு 8 மணிக்கு செய்தி அனுப்பி இருந்தார். காலையிலேயே தெரிந்திருந்தால் கூட அவரது உடலையாவது நேரில் பார்த்திருக்க முடியும். அந்த வாய்ப்பும் எனக்குக் கிட்டாமல் போய்விட்டது. 

என்னைப் பொருத்தவரை அவர் மறையவில்லை. என்னுள் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் இம்மண்ணில் இருக்கும் வரை நினைவுகளால் அவர் எனக்கு வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையோடு, ஹோமியோபதி மருத்துவர் ஐயா கொரட்டூர் சீனிவாசன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலுடன் என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.

பொன்.சேகர்

No comments:

Post a Comment