Tuesday, January 13, 2026

பொங்கப் பானைக்கும் பூணூலுக்கும் என்ன தொடர்பு?

உழவு: உலகின் அச்சாணி

“ஆழஉழுது, காயவிட்டு, எருவிட்டு, விதைத்து, நீர்பாச்சி, காவல்காத்து பயிர்செய்து உண்டுவாழும் உழவனே உலகில் உயர்ந்தவன்; உழவு உலகிற்கே அச்சாணி; உழவன் கை ஓய்ந்துவிட்டால் துறவிகூட துவண்டுவிடுவான்; பிறதொழில் செய்வோரை உழவன்தான் தாங்குகிறான்; உழவன் பிறருக்குக் கொடுப்பானே தவிர, ஒருபோதும் பிறரிடம் கையேந்த மாட்டான்” என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உழவின் பெருமையைப் போற்றிப் பாடினான் வள்ளுவப் பெருந்தகை. (குடியியல்: அதிகாரம் -104: உழவு).

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்கிறான் குடபுலவியனார். (புறநானூறு: பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை)


பயிரிடுதல்: இழிதொழிலா?

"கிருஷிம் ஸாது இதி மன்யந்தே ஸா வ்ருத்தி: ஸத்விகர்ஹிதா | விலிகந்தி முகை: காஷ்டம் அயாஸ்சைவ வஸுந்தராம் ||"  (மனு 10:84)

“பயிரிடுதலை சிலர் நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள்; ஆனால்  ஏர் கலப்பை மற்றும் மண்வெட்டியின் இரும்புக் கூர்முனைகள் பூமியைப் பிளந்து பலப்பல ஜெந்துக்களை வெட்டுவதால் உழவுத்தொழிலை இழிதொழில்” என்கிறான் மனு‌. 

அதனால், “பார்ப்பனர்கள் இந்த ‘இழிதொழிலை’ ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாது; மாறாக, வேள்விசெய்து, வேதம்ஓதி, தானம் வாங்கித்தான் அவர்கள் உயிர் வாழ வேண்டும் என நெறி வகுத்துள்ளான்.

"இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது 
கைசெய்தூண் மாலை யவர்." (குறள்: 1035)

உழவன் "தற்சார்பு" (Self-sufficiency) உடையவன். அவன் மற்றவர்களைப் போலத் தானம் பெற்று வாழ்பவன் அல்ல; உலகிற்கே தானம் வழங்குபவன். மனுஸ்மிருதி "தானம் பெற்று வாழச் சொல்கிறது", ஆனால் வள்ளுவம் "தானம் கொடுத்து வாழச் சொல்கிறது". 

மாட்டுக்கறியைக்கூட ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்வானேயொழிய, அவன் ஒருபோதும் உழவுத் தொழிலை மேற்கொள்ள மாட்டான் என்பதனால்தான், “கண்டதுண்டா கண்டதுண்டா ஏரோட்டும் அய்யரை? கண்டதுண்டா கண்டதுண்டா ஏரோட்டும் அய்யரை?” என 
மக்களைப் பெற்ற மகராசி”யில் மருதகாசி அன்றே பாடினார்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடிய பாரதிக்கு, ஊழவுத் தொழிலை நிந்தனை செய்யும் (மனு) சாஸ்திரம் மட்டும் கண்ணுக்குத் தெரியாமல் போனது ஏனோ? மருதகாசிக்கு இருந்த ‘ஞானம்’ பாரதிக்கு இல்லாமல் போனது தற்செயலா? இல்லை நரிச்செயலா? 

பொங்கல்: "இயற்கை வழிபாடா? அல்லது சடங்கு வழிபாடா?"

“பொங்கல் அன்று துவாதசி  பாரணை பிராதான்யத்தை கருத்தில் கொண்டு,

"காலை 7.45 – 8.45 மணி வரை"* அல்லது
"முற்பகல் 10.45– 11.45 மணி வரை"
இரண்டு நேரத்திலும் பொங்கல் பானை வைக்கலாம், 

என  ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது பீடாதிபதி வடகலை ஸ்ரீ வராஹ மஹாதேசிகன் என்பவர் பெயரில்  சமூக ஊடகங்களில் மேற்கண்ட செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

ஆதித் தமிழன் கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் பொங்கலிட்டது அறுவடை முடிந்து கிடைத்த பலனை நன்றியோடு கொண்டாடவே. இதில் (இந்து) மதத்திற்கும், கடவுள் சிலைகளுக்கும், திதிக்கும் (Tithi), நட்சத்திரத்திற்கும் வேலையே இல்லை. உழவனின் நேரமே பொங்கல் நேரம்.

ஆனால், உழவை இழிவாகக் கருதும் ஒரு கூட்டம், இன்று அதன் கொண்டாட்டத்திற்குள் புகுந்து நேரத்தையும் காலத்தையும் தீர்மானிப்பது என்பது ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு!

ஊரான்

No comments:

Post a Comment