தங்கையின் நிலத்தில் ஏற்கனவே ஒரு கொல்லையில் காய்கள் பறிக்கப்பட்ட கடலைக் கொடிகள் போர் போடுவதற்குத் தயாராய் காய்ந்திருந்தன.
ஆடிக் காற்றில் அம்மியே நகரும் என்பார்கள். அப்படித்தான் இருந்தது இந்த ஆண்டு ஆடிக் காற்று. வெயில் வேறு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. காற்று மற்றும் வெயிலினால் காய்ந்த கடலைக் கொடிகளிலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. கடலைக் கொடிகள் மாடுகளின் மனம் கவர்ந்த தீனி என்பதால் அவற்றைப் பக்குவமாய் இலைகளோடு பதப்படுத்தி போர் போட வேண்டும். இலைகள் அற்ற வெறும் கடலைத் தண்டுகளை மட்டும் மாடுகளுக்குத் தீனியாய்த் தருவது வெள்ளைச் சோற்றை வெறுமனே தின்பது போலாகிவிடும்.
மாலை நேரம், காற்று சற்றே குறைந்திருந்தது. மேற்கே அடிவானம் கருமேகங்களால் சூழப்பட்டு எந்நேரமும் மழை வரலாம் என்று அறிகுறி தெரியவே, மனிதர்களுக்கான கடலையைக் காப்பதைவிட மாடுகளுக்கான கடலைக் கொடிகளைக் காப்பதே முக்கியம் என்பதால், குவிந்து கிடந்த கடலைக் கொடிகளை கட்டுக் கட்டத் தொடங்கினார் எனது மைத்துனர். நல்ல வேலை அன்று மழை வரவில்லை. மாலை நேர கருமேகங்களைக் கண்டு, மழை வருமா வராதா என்பதை துல்லியமாய்ச் சொல்லும் வல்லமை பெற்றிருந்தனர் நம் மூதாதையர்கள். எல்லாம் பட்டறிவுதான்.
ஒரு அடி உயரத்திற்கு பெரிய கற்களை வைத்து அதன் மீது குறுக்கும் நெடுக்குமாக கழிகளைப் போட்டு, அதற்கு மேலே தென்னை ஓலைகளைப் பரப்பி, கடலைக் கொடி போர் போடுவதற்கான அடித்தளம் தயாரிக்கப்பட்டது. நேரடியாக தரையிலே போர் போட்டால் ஈரம் கோர்த்து மண்ணில் உருவாகும் செல்கள், கொடிகளை அரித்து வீணாக்கி விடும்.
கடலைக் கொடிகளை ரசித்து ருசித்து மாடுகள் உண்ணுவதற்கு ஏற்ப, போர் போடும் போது இடையிடையே கல் உப்பையும் தூவி வைக்க வேண்டும். மேலிருந்து கீழ், அரை வட்டம் வரும் வரை போரை நன்றாகத் தட்டி அதன் மீது வைக்கோலையோ தார்ப்பாலினையோ போர்த்தி மழை நீர் உள் இறங்காமல் பாதுகாக்க வேண்டும்.
காய்ந்த கடலைக் கொடிகளை போர்முனைக்கு சுமக்க அன்று வைக்கோல் பிரிகள் இருந்த இடத்தில் இன்று உடுத்த முடியாத அளவுக்கு வெளுத்துப் போன சேலைகளே உதவுகின்றன. அம்மியும் பறக்கும் காலம் அல்லவா? போர் கலையாமல் சிதையாமல் இருக்க இச்சேலைகளே கச்சைகளாய் இருக்கிக் காக்கின்றன.
மறுநாளிலிருந்து அடுத்து தொடர்ந்து மூன்று நாட்களாக மோடம் பிடித்தார் போல சாரல் மழை. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் கடலை பிடுங்குவதும் பறிப்பதுமாக வேலைகள் தொடர்ந்தன. ஒரிரு நாட்களில் முடிய வேண்டிய வேலை, ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கக் காரணம், கூலிக்கு ஆள் வைக்காமல் குடும்பமே கடலையைப் பிடுங்கிப் பறித்ததுதான். கூலிக்கு ஆள் வைத்தால், பறித்ததில் ஆறில் ஒரு பங்கு கூலியாக அளக்க வேண்டும்; குடும்பமே பறித்தால் அது சேமிப்புதானே என்பதுதான் இன்றைய சிறு விவசாயிகளின் நிலை. கடலை பறிப்பது மட்டும்தான் வேலை என்றால் அதை மூன்று நாட்களில்கூட இவர்களால் முடிக்க முடியும்.
ஆனால் இவர்கள் பாடோ......?
தொடரும்
ஊரான்