Showing posts with label ஆதிசங்கரன். Show all posts
Showing posts with label ஆதிசங்கரன். Show all posts

Sunday, February 27, 2011

சாமியார்கள் அத்துப் போனால் இந்து மதம் இத்துப் போகுமா?

ஆதிசங்கரன் முதல் நித்யானந்தா வரை இந்து மதத்தை தாங்கி நிற்க இம் மண்ணில் தோன்றிய அவதாரப் புருஷர்கள் ஏராளம். அத்வைதம் முதல் ஆத்ம ஞானம் வரை இவர்கள் போதிக்காத தத்துவங்களே கிடையாது. சிலர் தத்துவங்களை உபதேசிக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் இறந்து போன பிரேமானந்தா முதல் காஞ்சி சங்கரன், நித்தியானந்தா வரை பலர் நடைமுறையில் பல தத்துவங்களை சோதித்தறிந்தவர்கள். அதிலும் குறிப்பாக காமத்துப் பாலை முந்திரி, பாதாம் பருப்புகளை அரைத்துச் சேர்த்து சுண்டக் காய்ச்சி கரைத்துக் குடித்து கரை கண்டவர்கள்.

முற்றும் துரந்த இந்த முனிவர்களுக்கு உல்லாசமாய் உலவ ஆசிரமங்களும், உலவிய பின் ஓய்வெடுக்க ஏ.சி. அறைகளும், ஏ.சி.அறையின் குளிரை சமாளிக்க காமக் களியாட்டங்களும் கட்டாயம். இவற்றில் எது வேண்டுமானாலும் குறையலாம். ஆனால் இரவு நேர லீலைகள் மட்டும் கண்டிப்பாய் நடக்க வேண்டும்.

இந்திய ஜனாதிபதியைக்கூட தீவிரவாதிகள் எளிதில் நெருங்கிவிடுவார்கள். ஆனால் ஒசாமா பின்லேடனே நினைத்தாலும் இந்தச் சாமியார்களை நெருங்க முடியாது. பாதுகாப்பு வளையங்களைத் தாண்டுவது அவ்வளவு எளிதானதல்ல. அதையும் தாண்டி ஒருவன் நித்யானந்தா-இரஞ்சிதாவின் காமக் களியாட்டத்தைச் சுட்டிருக்கிறான் என்றால் அவன் பின் லேடனுக்கேத் தலைவனாகும் தகுதி படைத்தவன்.

போலிச் சாமியார்கள்தான் கேடானவர்கள். நல்ல சாமியார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என நீங்கள் முனுமுனுப்பது எனது காதுகளில் விழுகிறது. நேற்று வரை 'ஒரிஜினல்' என்று நம்பியவன்தானே மறுநாள் காலையிலேயே போலி என்று நாறுகிறான். 'ஒரிஜினல்' என்று நம்புவதற்கான உத்தரவாதத்தை யாராவது 'பாண்டு பேப்பரில்' எழுதிக் கொடுக்கத் தயாரா?

எப்வளவுதான் நாறினாலும் சாமியார்கள் செல்வாக்கோடு உலாவுவதற்கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது? நீண்ட நாட்களாக இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் நான் திணறிய போது நித்தியானந்தா சிக்கியதும் எனக்கு விடை கிடைத்து விட்டது. தமிழகத்தின் திருவண்ணாமலை,  வேலூர் மாவட்டங்களிலும், கர்நாடகாவின் மைசூரிலும் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இவர் அகமுடைய முதலியார் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான். இப்பகுதிகளில் அகமுடைய முதலியார்கள் அதிகமாக வசிப்பது நித்தியானந்தாவின் பலம்.

1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது இவரை தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்.

சைவ வேளாள முதலியார்கள் வேதாத்திரி மகரிஷியை தூக்கி நிறுத்தினார்கள். அவர் இறந்த பிறகு இவர்களது சாதிப் படிநிலையில் ஒரே 'குரூப்பில்' இருக்கும் நித்தியானந்தாவை ஆதரிக்கத் தொடங்கினார்கள். நித்தியானந்தாவும் அம்பலப்பட்டுப் போன பிறகு வேலூர் ஸ்ரீபுரம் சக்தி 'அம்மாவை' இப்போதைக்குப் பிடித்துக் கொண்டார்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு முதலியார் பக்தனின் காணிக்கை தங்களது பரம எதிரிகளான வன்னியர்களின் மருவத்தூர் அம்மாவிடம் சென்று விடக்கூடாது.

மைசூரைப் பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் வைசியா பிரிவில் வரும் ஷெட்டி சாதியைச்  சேர்ந்த ஜக்கி வாசுதேவ், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் வெள்ளாளக் கவுண்டர்களின் ஆதர்ஷ சாமியாராக அவதாரம் எடுத்ததோடு, பிற இடைநிலைச் சாதி மக்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறார்.

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் சாதி மக்களின் ஏகோபித்த சாமியாராக விளங்கிய அச்சாதியைச் சேர்ந்த பிரேமானந்தா மண்டையைப் போட்டுவிட்டார். இப்பொழுது அங்கே ஒரு 'வேக்கன்சி' ஏற்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

தென் மாவட்ட நாடார்களுக்கும், தேவர்களுக்கும் என அந்தந்த சாதிகளைச் சேர்ந்த சாமியார்கள் இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றே கருதுகிறேன். 

பார்ப்பனர்களுக்கு?... சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. நாறிப்போன சங்கராச்சாரி முதல் வாழும் கலை ஸ்ரீ.ஸ்ரீ. இரவிசங்கர் வரை பிரபலங்கள் ஏராளம் உண்டு. மற்ற சாதிக்காரர்களாவது பக்தி பெருக்கெடுக்கும் போது பிற சாதி சாமியாரர்களைக்கூட ஒருசிலர் ஏற்றிப் போற்றுவதுண்டு;  வணங்குவதுண்டு. ஆனால் பார்ப்பனர்கள் பிற சாதி சாமியார்கள் ஒருவரைக்கூட அங்கீகரித்ததில்லை. அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

பாவம் தாழ்த்தப்பட்டவர்கள். பக்தியிருந்தும் தங்களுக்கென இதுவரை ஒரு சாமியைரைக்கூட உருவாக்க முடியவில்லை. கோயிலுக்கு நுழையவோ சாமியை வழிபடவோ உரிமை இல்லாத போது சாமியார்களை எங்கே உருவாக்கவது? இதுதான் சாதி இழிநிலைக்கு எடுப்பான ஆதாரம்.

சாமியார்களின் உயிரும் பலமும் சாதியில் ஒளிந்திருக்கிறதேயொழிய பக்தியில் அல்ல. தங்களது சாதிக்காரனின் பணம் பக்தியின் பேரால் மற்றொரு சாதி சாமியாரிடம் சென்றுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு சாதியினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதுவே சாமியார்களின் பலமாகவும் இருக்கிறது.

சாதி எங்கும் வியாபித்திருக்கிறது. இதுவே இந்து மதத்தின் வேராகவும் இருக்கிறது. வேருக்கு நீர் பாய்ச்சும் சாமியார்கள் இத்துப் போனால் இந்து மதம் அத்துப் போகுமே என்ற கவலை இந்து மதவாதிகளுக்கு. அதனால்தான் சாமியார்களுக்கு பாதிப்புகள் வரும் போதெல்லாம் அர்ஜீன் சம்பத்துக்கள் குரல் கொடுக்கிறார்கள்.