Showing posts with label தொடர் வண்டி. Show all posts
Showing posts with label தொடர் வண்டி. Show all posts

Friday, April 1, 2011

மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் இந்தியா!

இன்று காலை அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின் தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன். காலை நேரம், அலுவலக நாள் என்பதால் எப்போதும் போல கூட்டம் நிரம்பி வழிந்தது. கைபேசியின் ஒலிபெருக்கிகளை காதில் திணித்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த திரைப்படப் பாடல்களை இரசிக்கும் இளைஞர்கள் கையில் வழக்கத்திற்கு மாறாக தினகரன் நாளேடு. அதிலும் விளையாட்டுச் செய்தி போடப்பட்டிருந்த பக்கத்தில் இலயித்திருந்தார்கள்.

அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இனி விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்பதால் சென்னையில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து தங்களது வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள அன்றாடம் தொடர் வண்டியில் பயணிப்பவர்கள். மொத்தமாக தொடர் வண்டி இருக்கைகளை தங்களது சக உழைப்பாளி நண்பர்களுக்காக 'முன்பதிவு' செய்து கொள்ளும் 'தவறைத்' தவிர இவர்கள் எதார்த்தமான உழைப்பாளிகள். நாம் முன்கூட்டியே சென்றாலும் நமக்கு முடியாத போதுகூட இவர்களால்  இடம் கிடைப்பதில்லை என்ற வருத்தம் எப்பொழுதும் எனக்கு உண்டு.

காலையில் சுறுசுறுப்பாகச் செல்லும் இவர்கள் பகல் முழுதும் முதலாளிகளால் கசக்கி பிழியப்பட்டு மாலையில் துவண்டு வரும் போது அவர்களுக்கு நாம் இடம் தரவேண்டும் எனத் தோன்றும். 

இப்படி பிழைப்புக்காக சென்னை செல்வோரில் பெரும்பாலானோர் இளைஞர்கள். படிக்காதவர்கள், பத்தாம் வகுப்பு, +2,  அல்லது தொழில் நுட்ப பட்டயம் (diploma) என ஏழைகளால் படிக்க முடிந்த படிப்பை மட்டுமே படித்தவர்கள். இவர்களால் இதற்கும் மேலே படிக்காமல் போனதற்கு அவர்களுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அல்ல.சிறந்த கல்விக் கூடங்களும், ஆசிரியர்களும் இல்லை என்பதும், சிறந்த கல்விக் கூடங்களில் பயில்வதற்கான பொருளாதார வசதியின்மையுமே காரணங்களாகும்.

இன்று தொடர் வண்டியில் பயணித்த அத்தனை பேரும் கிரிக்கெட்டைப் பற்றிதான் பேசிக்கொண்டு வந்தார்கள். பாகிஸ்தான் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு வீரரின் பெயரரும் அத்துப்படி. முதல் ஓவரை யார் வீசியது? ஒவ்வொரு ஓவரையும் வீசியது யார்? முதல் பந்தில் எத்தனை ஓட்டங்கள்? யார் எடுத்தது? பந்து எந்தத் திசையில் அடிக்கப்பட்டது? மட்டையாளர் என்ன தவறு செய்தார்? பந்து வீச்சாளர் செய்த தவறு என்ன? குறிப்பாக இந்திய தரப்பு வீரர்களின் அத்தனை அசைவுகளும் அத்துப்படி.

அது மட்டுமல்ல இதற்கு முன்பு இவ்விரு அணிகளும் ஆடிய ஆட்டங்கள் பற்றியும் அலசிக் கொண்டிருந்தார்கள். சச்சின் சதத்தை நழுவ விட்டதற்காக பெரிதும் வருத்தப்பட்டுக் கொண்டாலும் இந்தியாவின் வெற்றி அதை சாதாரணமாக்கிவிட்டது. கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களையும் அலசிய இவர்களின் அசாத்திய நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனேன்.

வெறும் புலனறிவு மட்டுமே இத்தனை விவரங்களை அளிக்கிறது என்றால் அடுத்தடுத்த கட்டங்களில் அறிவை வளர்க்கும் போது இவர்களின் திறமை வியக்கவல்லதாக அமையும். அந்த வகையில் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை மட்டும் உணர முடிந்தது.

ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு இவ்வளவு விவரங்களும் அத்துப்படியானது எப்படி? ஆனால் படிக்கும் காலத்தில் பாடங்களை திரும்பப் திரும்பப் படித்தாலும், எழுதிப் பார்த்தாலும், அடிக்கடித் தேர்வுகள் வைத்தாலும் படிப்பு மட்டும் அத்துப்படியாக வில்லையே! ஏன்? முன்னதில் இருக்கும் ஈடுபாடு பின்னதில் இல்லை என்பதும், இதற்கு நமது கல்வி முறையில் உள்ள குறைபாடுகளுமே காரணங்களாக இருக்குமேயன்றி  'அவாளெல்லாம்' சொல்வது போல நம்மவர்களுக்கு அறிவு குறைவு, படிப்பு வராது என்பதல்ல காரணம்.

ஆனால் அவாளெல்லாம் இன்னமும் நம்மைப்பற்றி அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  "திராவிடவாளுக்கெல்லாம் புத்தி கிடையாது". இது சுப்பரமணியசாமி சமீபத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த நேர்காணலுக்காக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் உதிர்த்தது. இதை யாரேனும் பார்த்தார்களா எனத் தெரியவில்லை. காரணம் ஒரு கண்டனக் குரல்கூட இதுவரை எழவில்லை.

நான் பயணித்தது கடற்கரை விரைவுத் தொடர் வண்டி. அது கொரட்டூரில் நிற்காது என்பதால் ஆவடியில் இறங்கி அடுத்த தொடர் வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு அருகில் ஒரு இளைஞரும், எதிரில் இரு இளைஞர்களும் வந்து அமர்ந்தனர். இவர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை. மாறாக அன்றைய தேர்வுக்காக தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர்.

புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட கேள்வி பதில்களும் இவர்கள் மருந்தியல் (pharmacology) தொடர்பான தேர்வுக்காகச் செல்கிறார்கள் எனபதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. 'டர்மெரிக்கின்' பயன்பாடு, 'ஓப்பியத்தின்' பயன்பாடு என இவர்களின் பரிமாற்றம் இருந்தது. தோலைப் பாதுகாக்கவும், கிரிமி நாசினயாகவும் 'டர்மெரிக்' பயன்படுகிறது என ஒரு மாணவர் சொன்னதைக்கூட மற்றோரு மாணவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. "நான் புத்தகத்தில் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

பாடங்களைப் பற்றி முழுமையான தெளிவு இவர்களிடம் இல்லை என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. ஆறு மாத கால படிப்பை இந்த அரைமணி நேர இரயில் பயணத்தல் ஈடு செய்து விடலாம் என அவர்கள் எண்ணியிருக்க வேண்டும். மிகவும் பரபரப்பாய் காணப்பட்டார்கள். அல்லது நேற்றைய கிரிக்கெட் இந்த பரபரப்புக்கு ஒரு விதத்தில் காரணமாய் இருக்கக்கூடும்.

ஒரே ஒரு முறை பார்த்த கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களும் அங்கே அத்துப்படி. ஆறுமாத காலம் படித்த படிப்பின் மிகச்சாதாரண விவரங்கள்கூட இங்கே குழப்பமாய் இருக்கிறது. அங்கே கிரிக்கெட்டோடு உறவாடுகிறார்கள். அனைத்தும் அத்துப்படியாகிறது. அது போல படிப்பு தொடர்பானவற்றில் உறவாடுவதில்லை. அதனால் புரிவதில்லை. அறிவை வளர்த்துக் கொள்வதற்கு புற உலகோடு நாம் கொண்டிருக்கும் உறவு மிக் பெரிய அளவில் பங்காற்றுகிறது. இந்த இடைவெளிதான் பாடத்தில் தெளிவின்மைக்குக் காரணம்.

காலை நேர கிரிக்கெட் மகிழ்ச்சி, தொடர் வண்டியில் மட்டுமல்ல வீடு முதல் அலுவலகம் வரை எங்கும் இருந்திருக்கும். இன்று இந்தியா மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருக்கும். தங்கள் அலுவலகத்தில் பெரிய திரை அமைத்து கிரிக்கெட் பார்க்க அனுமதித்ததை தனது நண்பர்களிடம் பெருமையோடு பகிர்ந்து கொண்டார் ஒருவர். கிரிக்கெட் ஏற்படுத்தும் 'ஓப்பிய' போதை அவ்வளவு விரைவில் குறையாது. ஆனால் கிரிக்கெட்டால் நேற்று குறைந்த உற்பத்தி இன்று இரட்டிப்பாகும் என்பது முதலாளிக்குத் தெரியும்.

குறிப்பு: 31.03.2011 அன்றைய தொடர் வண்டிப் பயண அனுபவம்.