உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம். பல அலுவலகங்களில் ஊழியர்கள் பிற்பகல் விடுப்பில் சென்றுவிட்டார்கள். எப்பொழுதும் பரபரப்பாய் காணப்படும் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. போட்டி மும்பையில் நடப்பதால் மகாராட்டிர அரசு விடுமுறை அறிவித்து விட்டது. அரை இறுதியில் பாக்கிஸ்தானை வீழ்த்தியதால் நேற்று மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது இந்தியா. அந்த மகிழ்ச்சித் தொடருமா என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்க முதலில் மட்டை விளாசிய இலங்கை அணி 274 ஓட்டங்களைக் குவித்தது.
ஆட்டத்தைப் பெரிய திரையில் பார்த்துவிட்டு இடைவேளையின் போது வீட்டுக்கு வந்த எனது மகன் "என்ன.. செம அடி அடிச்சிடானுங்க!" என்றான். ஏதோ இவனே அடிவாங்கி வந்ததைப் போல இருந்தது அவனது ஈனக் குரல். அப்போதைக்கு அதுதான் இந்தியனின் குரலுமாகும்.
பிறகு நான் கடைவீதிப் பக்கம் சென்று வந்தேன். ஒரு சில கடைகளில் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து சிலர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் நின்றவாறே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இந்தியா மட்டை விளாசிக் கொண்டிருந்த நேரம். அனைவரும் ஒருவித சோகத்துடன் காணப்பட்டனர். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. காரணம் அப்பொழுது சேவாக் ஆட்மிழந்த நேரம்.
இலங்கை அடித்த 'செம அடியிலிருந்து' மீள்வதற்குள் தொடக்கத்திலேயே சேவாக் வீழ்ந்தால் தாங்கவா முடியும்? அதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடினாலும் இந்தியாவை வங்கக் கடலில் மூழ்கடித்தது இலங்கை . பாக்கிஸ்தானை வீழ்த்திய போது உயர் இரத்த அழுத்தத்தில் இருந்த இந்தியன், இலங்கையிடம் வீழ்ந்தபோது குறைந்த இரத்த அழுத்தத்திற்குச் சென்றுவிட்டான். உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவனைக் காப்பாற்றி விடலாம். ஆனால் குறைந்த இரத்த அழுத்தத்தில் உள்ளவனை அவ்வளவு எளிதில் காப்பாற்றிவிட முடியாது.
இலங்கையிடம் வீழந்ததால் இந்தியாவே இன்று இழவு வீடாய் காட்சியளிக்கிறது. நாளை விடுமுறை என்பதால் காரியத்தையும் முடித்துவிடலாம். ஒரு நாள் விடுப்பு மிச்சம். விளையாட்டை தனிமனித உணர்வாய் பார் என்ற போது கேட்டானா? விளையாட்டை நாட்டுப் பற்றோடு இணைத்தான். இன்று இடிந்து போய் உட்கார்ந்து விட்டான்.
இலங்கை அதிக ஓட்டங்கள் அடித்த போது, அடி தன்மீது விழுந்ததாக எண்ணினான். வலி தாங்க முடியாமல் அசைவற்று நின்றான். இலங்கை வீரர்களால் இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே!
அன்று, முல்லி வாய்க்காலில் கொத்துக் கொத்தாக தமிழன் கொல்லப்பட்ட போது துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. சோகம் கவ்வவில்லை. இலங்கையிடம் இந்தியா வீழ்ந்ததால் வருந்திய இந்தியன், இலங்கை சிங்களக் காடையர்களால் தமிழ்ப் பெண்கள் மொத்தமாகக் கற்பழிக்கப்பட்ட போது வருந்தவில்லை? ஈழத்தில் வீழ்ந்தவன் இலங்கைத் தமிழன், வேற்று நாட்டுக் காரன், அவனுக்காக எப்படி வருந்த முடியும் என எதிர் கேள்வி கேட்டு சமாதானப்படுத்தலாம்.
ஆனால் 'இந்திய' மீனவன் சிங்களக் காடையர்களால் அன்றாடம் கொல்லப் பட்டாலும் அதற்காக ஒரு சொட்டுக் கண்ணீரையாவது சிந்தியிருக்கிறானா? சிந்தமாட்டான். கொல்லப்படுபவன் தமிழனாயிற்றே. தமிழனைத்தான் இந்தியன் என்று "இந்திய - இந்தியன்" ஏற்றுக் கொள்வதில்லையே. 'மதராசி' என்றுதானே அழைக்கிறான். 'மதராசி' கொல்லப்பட்டால் இந்தியனுக்கு எப்படி கண்ணீா் வரும்? தமிழனாய்ப் பிறந்து இந்தியனாய் வாழும் இந்தியத் தமிழனும், இந்த இந்தியனின் பட்டியலில் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இதுதான் இந்திய மீனவன் மீது இந்தியன் கொண்டிருக்கும் 'தேசப்பற்று'.
ஒன்று மட்டும் புரிகிறது. எவன் வீழ்ந்தால் எனக்கென்ன? கிரிக்கெட்டில் மட்டும் இந்தியா விழக்கூடாது என்பதே இந்தியனின் இலட்சியம். இந்த இலட்சியம் பெருமூளையிலிருந்து பிறக்கவில்லை. இது சில ஆண்டுகளாகவே போதை ஊசி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டு சிறுமூளை ஏற்படுத்தியிருக்கும் 'நாட்டுப் பற்றுப்'போதை. போதை தெளிய வேண்டுமானால் பளிச் பளிச்சென பச்சைத் தண்ணீரைக் கொண்டு முகத்தில் அடிப்பது போல "எதையாவது" கொண்டு இரு கன்னத்திலும் மாறி மாறி அறைய வேண்டும். இல்லை என்றால் கிரிக்கெட்டின் நாட்டுப்பற்று போதையும் தெளியாது. கிரிக்கெட்டில் இந்தியா வீழும் போது வரும் சோகமும் குறையாது. அது வரை இந்தியா துன்பக் கடலில் துவளுவதை யாரால்தான் தடுக்கமுடியும்?
குறிப்பு: இந்தியனின் உணர்வை வெளிக்கொணரவே இப்பதிவு.