Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

Tuesday, January 14, 2014

பொங்கல் வாழ்த்து - வக்கிரம்!


தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள் ஊடகங்கள் வாரி வழங்கும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளும் – சிறப்பு மலர்களும் நம்மை சொர்க்கத்திற்கே இட்டுச் செல்கின்றன. மடாதிபதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ‘இனிய பொங்கல் நல் வாழ்த்துகளை’ திகட்டத் திகட்ட வாரி வழங்குகின்றனர். இதை எல்லாம் பார்த்து ‘தை மாத மேக நடனங்களால்’ ‘ஒரு மாது மயங்குவதைப்’ போல நாம் மயங்கிக் கிடக்கிறோமோ என எண்ணத்தான் தோன்றுகிறது.
பட்டி மன்ற பேச்சாளர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாரி வழங்கும் குத்தாட்ட -  கும்மளாட்டக் கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் இந்தப் பொங்கல் குதூகலமான பொங்கல்தான். மகிழ்ச்சி எனும் கானல் நீரில் திசை தெரியாமல் நாம் நீந்திக் கொண்டிருக்கிறோம். நம்மை மகிழ்வித்த அவர்களோ அடுத்த நிகழ்ச்சிகளுக்கு தங்களை தயார்படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.  
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகம் பெரும் வறட்சியை எதிர் நோக்கியுள்ளது. நெல்லை-கன்னியாகுமரி நீங்கலாக வேலூர் முதல் தூத்துக்குடிவரை இதுதான் நிலைமை. மார்கழி-தை மாதங்களில் நெஞ்சை அள்ளும் நஞ்சையும்-புஞ்சையும் அற்றுப் போய் புல்-பூண்டைக்கூட தேடவேண்டிய அவலத்தில் தமிழக கிராமங்கள். நெல், கரும்பு, வாழை, வேர்க்கடலை, கேழ்வரகு, மிளகாய், முள்ளங்கி, வெங்காயம் என சகலவிதமான பயிர்கள் செழித்து வளர்ந்து பார்ப்போர் நெஞ்சைக் குளிர்விக்கும் பசுமையோடு திகழும் கிராமங்கள் இந்த ஆண்டு கரிசல் காடுகளையே நினைவு படுத்துகின்றன. ஓடைகளும் - ஆறுகளும் வறண்டு போனதால் ஏரிகளும் குளங்களும்  வாய்பிளந்து கிடக்கின்றன. நா வறண்டு உதடு பிளந்தால் எச்சிலாவது சிலசமயம் நம் உதட்டை ஈரப்படுத்தும். அந்த எச்சிலுக்கே வழி இன்றி விழி பிதுங்கி நிற்கின்றாள் 'பூமித்தாய்'.
சம்பா போனாலும் தைப்பட்டமாவது கைகொடுக்கும் என நம்பி விதை விதைத்தான் விவசாயி. கிணற்றுக்கடியில் மிச்சமிருந்த நீரை இறைத்து விதைக்கு உயிர் கொடுத்தான். மரணத்தேதி குறித்தாகிவிட்டது என்பது தெரியாமலேயே பூமியைப் பிளந்து எட்டிப் பார்த்தன பயிர்கள். சொட்டச் சொட்ட ஊறிய நீரை இறைத்தாலும் ஒரு பாத்தி இரண்டு பாத்திக்கு மேலே எட்டவில்லை என்பதால் வறட்சி தாங்கும் மரவல்லிக்கு உயிர் கொடுக்க முயன்றான். கிணற்றைப் நம்பி இனி பயனில்லை என பஞ்சாங்கத்தைப் பார்த்தான். வருணபகவானை நம்பி தீபத்திற்காகக் காத்திருந்தான். வானிலையை கணிப்பதில் சந்திராயன்களும்-இரமணன்களுமே திண்டாடும் போது ஆற்காடு சீதாராமய்யர்களை நம்புகிறோமே என பரிசீலிக்கிற நிலையில் அவன் இல்லை. தீபமும் வந்தது. பக்தர்களின் ஆரோகரா இவன் செவிகளை எட்டியபோது இவனுக்குத்தான் அந்த அரோகரா என்பதை உணராமல் இன்னமும் கருகிய பயிரையும் வானத்தையும் வெறித்துப் பார்த்து காத்திருக்கிறான்.