Showing posts with label பொன் ராதாகிருஷ்ணன். Show all posts
Showing posts with label பொன் ராதாகிருஷ்ணன். Show all posts

Friday, May 13, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-5

 IX

சாட்சிகள் விசாரணை

சாட்சிகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மனு: 8-88: பிராமணனிடத்தில் "கூறுக' என்றும், சத்ரியனிடத்தில் 'உண்மையைக் கூறுக' என்றும், வைசியனிடத்தில் அவனுடைய 'பசுக்கள், பொன், தானிங்கள் மேல் ஆணையிட்டுக் கூறுக' என்றும், சூக்கிரனாய் இருப்பின் 'தலை மீது ஆணையிட்டு, பொய் கூறினால் வரும் கேடுகளைக் கூறி, அச்சுறுத்திக் கூறுக' என்றும் பிரமாணம் செய்க.

பொய்ச் சாட்சி

பொய்சாட்சி அளிப்பதை ஒரு குற்றமாக கருதி விதிக்கும் தண்டனை வருமாறு.

மனு: 8-123: சத்திரியன் முதலான மூவகை கீழ் வருணத்தார் பொய்ச் சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்து விட்டு, பிறகு அவர்களை நாடு கடத்த வேண்டும். ஆனால் பிராமணராயின் நாடுகடத்தல் மட்டுமே செய்ய வேண்டும்.

மனு:8-112: ---பிராமணரைக் காப்பாற்றுவதற்காக பொய்ச் சாட்சி சொல்வது பெரும் பாவமன்று! 

முக்கிய குற்றங்களுக்கான தண்டனை

அவதூறு

மனு: 8-267: பிராமணனை அவதூறு செய்யும் சத்திரியனுக்கு 100 பணமும், வைசியனுக்கு 150 அல்லது 200 பணமும், சூத்திரன் தவறிழைத்தால் கசையடியும் விதித்தல் வேண்டும்.

திட்டுதல்

மனு:8-270: சூத்திரன், இருபிறப்பாளரை-அதாவது பிராமணன்-சத்திரியன்-வைசியன்-ஆகியோரைக் கடுஞ்சொற்களால் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.

மனு:8-271: பெயர் மற்றும் ஜாதியைச் சொல்லி ஒரு பிராமணனை, ஒரு சூத்திரன் திட்டினால்,  பத்து விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை சூத்திரன் வாயில் நுழைத்தல் வேண்டும்.

மனு: 8-272: கர்வத்தால் 'நீ இதைச் செய்யவண்டும் என்று ஒரு பிராமணனை, ஒரு சூத்திரன் கட்டளையிட்டால், சூத்திரனின் வாயிலும் காதிலும் காச்சிய எண்ணையை ஊற்ற வேண்டும்.

மனு:8-276: ஒரு பிராமணனும் ஒரு சத்திரியனும்  ஒருவருக்கொருவர் சண்டையிட்டு திட்டிக் கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும் சத்திரியனுக்கு 500 பணமும் தண்டம் விதிக்க வேண்டும்.

தாக்குதல்/அடித்தல்

மனு: 8-279: ஒரு சூத்திரன் ஒரு பிராமணனை தாக்கினாலோ அல்லது புண்படுத்தினாலோ, எந்தெந்த அவயங்களைத் தாக்கினானோ, அதற்கேற்ப சூத்திரனின் அந்தந்த அவயங்களைத் துண்டித்து விட வேண்டும்.

மனு: 8-281: ஒரு பிராமணனுடன் ஒரு சூத்திரன் சரிசமமாக உட்கார்ந்தால், அந்த ஆணவச் செயலுக்காக, சூத்திரன் இடுப்பில் சூடு போடுதல் வேண்டும் அல்லது நாடு கடத்தப்படுதல் வேண்டும் அல்லது அவனது ஆசனத்தில் அதாவது குண்டியில் ஒரு வெட்டுப் புண் ஏற்படுத்திட வேண்டும்.

(குறிப்பு: சங்கராச்சாரியைப் பார்க்கச் செல்லும் சூத்திரப் பெரும்புள்ளிகள் ஏன் தரையில் உட்காருகிறார்கள் என்பதற்கான காரணம் புரிகிறதா?-ஊரான்)

மனு: 8-282: ஒரு பிராமணன் மீது ஒரு சூத்திரன் காரித்துப்பினால், சூத்திரனின் இரண்டு உதடுகளையும் வெட்டிவிட வேண்டும்‌. ஒரு பிராமணன் மீது ஒரு சூத்திரன் சிறுநீர் கழித்தால் அவனது ஆண்குறியை வெட்டி விட வேண்டும். ஒரு சூத்திரன் ஒரு பிராமணன் மீது குசு விட்டால் அவனது ஆசனத்தை வெட்டிவிட வேண்டும்.

8-283: ஒரு பிராமணனின் முடியை ஒரு சூத்திரன் பிடித்து இழுத்தாலோ, காலை வாரினாலோ, தாடியை, கழுத்தை, விதையைப் பிடித்து இழுத்தாலோ சூத்திரனின் கையை வெட்டி விட வேண்டும்.

(குறிப்பு: இவை எல்லாம் மிகையாக ஒரு சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இன்றைய காலகட்டத்திலும் பார்ப்பனர்கள் செய்கிற குற்றங்களுக்கான தண்டனையையும், பிற சாதியினர் குறிப்பாக கீழ்சாதி மக்கள் செய்கிற குற்றங்களுக்கான தண்டனையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மேற்கண்ட கூற்று எந்தளவுக்கு உண்மை என்பது புரியும்.-ஊரான்)

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-4



அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1