Saturday, March 19, 2011

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!


கழிவறை, மலக்கூடம், மலசலக்கூடம், கழிப்பறை இதைத்தான் 'கக்கூஸ்', சில வேளைகளில் 'கக்கூசு' என விளிக்கிறோம். டச்சுக்காரன் சென்றுவிட்டாலும் அவனது டச்சு மொழியை மட்டும் நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது போல. காலனியாதிக்கத்தின் பதிவுகள் சில சமயங்களில் நமது உயிரோடு கலந்து விட்டது என்றால் அது மிகையல்ல.

உயிர் என்றால் என்ன? பலருக்குப் புரியாத புதிராக இன்று வரை சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. மாபெரும் மகான்கள் எல்லாம் மயிர் பிளக்கும் பல விவாதங்களை நடத்தி பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்துளார்கள். ஆனாலும் உயிர் என்றால் என்னவென்று இன்னமும் பலருக்கு விளங்கில்லை. 

மலத்தில் ஒளிந்திருக்கும் உயிர் :

'கக்கூசில்தான்', அதாவது மலத்தில்தான் நமது உயிர் ஒளிந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? உட்கிரகித்தலும் கழிவுகள் வெளியேற்றமும் நடக்கும் செயல்பாட்டுக்குப் (PROCESS) பெயர்தான் உயிர். உணவு உட்கொள்ள முடியவில்லை, தண்ணீர் குடிக்க முடியவில்லை என்கிற உட்கிரகித்தில் நின்று போனாலோ அல்லது சிறுநீர் போகவில்லை, மலம் கழிக்கவில்லை என்கிற கழிவுகள் வெளியேற்றம் நின்று போனாலோ  அப்பொழுது உடலின் செயல்பாடு முடிவுக்கு வருகிறது. அதாவது உடல் உயிரற்றதாகி விடுகிறது; செயலற்றதாகிவிடுகிறது. 

அதனால்தான் நாம் மருத்துவரைப் பார்க்கும் பொழுது நோய் எதுவாக இருந்தாலும் 'ஒன்னுக்கு நல்லா போவுதா?', 'வெளிக்கு நல்லா போவுதா?', என்று மறக்காமல் கேட்கிறார்கள். 

மலம் வெளியேறுவது ஒரு இயற்கையான நிகழ்வுதான். ஆனால் உயிரின் ஆதாரமாகவும் திகழ்கிறதே. அத்தகைய மலத்தை வெளியேற்றுவதற்கு தடங்கல்கள் ஏற்படுமேயானால் அது உயிர் வாழும் உரிமையை பறிப்பதாகும். உயிர் வாழும் உரிமையை பறிப்பதாகக்கூறி மனித உரிமைகள் சட்டத்தின்கீழ் வழக்கு தொடுப்பதற்கும் வலுவான காரணிகளைக் கொண்டது.

ஒரே ஒரு வேளை மலத்தை அடக்கிப் பாருங்கள், பிறகு தெரியும் மலம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது. பெரும்பாலும் எல்லோருக்கும் இதில் அனுபவம் இருக்கும் என்றே கருதுகிறேன்.

மலம் கழிப்பதில் இத்தனை சிக்கல்களா?:

அன்றாடம் மலம் கழிப்பதில்தான் எத்தனை எத்தனை சிக்கல்கள். வீடற்றவர்களுக்கும்,வீடிருந்தும் கக்கூஸ் வசதியியற்றவர்களுக்கும், வீதியோரங்களும்-வாய்க்கா வரப்புகளும் - ஓடைகளும் - ஏரிக்கரைகளும் -  முட்புதர்களும் - ஆள் நடமாட்டமில்லாத சந்து, பொந்துகளும்தான் 'கக்கூசுகள்'. வேறென்ன செய்வார்கள்?

'கக்கூஸ்' போவது பெரிதல்ல. கழுவுவதுதான் பெரும் பிரச்சனை. நீரில்லை என்றால் கல்லைக் கொண்டும், கல் கிடைக்கவில்லை என்றால் மண்ணாங்கட்டியைக் கொண்டும், வயல் வரப்பு என்றால் புல்லாலேயே தேய்த்தும், எதுவும் கிடைக்கவில்லை என்றால் காற்றிலே தவழ்ந்து வரும் இத்துப்போன பழைய பேப்பரைக் கொண்டும் துடைத்துக் கொள்ளலாம். ஏதோ தண்ணீர் வசதி இருக்குமானால் ஒரு சொம்பு தண்ணீர் கிடைத்தாலே போதும்.

ஆனால் கழித்த மலம்? ஓடை என்றால் காலாலேயே மண்ணைத் தள்ளி மூடிவிடலாம். நீரோடும் ஓடை, வாய்கால் என்றால் ஓடும் நீரோடு இரண்டறக் கலந்துவிடும். பல் துலக்கி வாய் கொப்பளிப்பவனுக்கும், முங்கி முங்கி குளிப்பவனுக்கும், சமையல் - சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தேய்ப்பவருக்கும் இதெல்லாம் சாதாரணமாகிவிட்டன.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு நண்பரின் திருமணத்திற்குச் சென்ற போது இந்தக் காட்சிகளைக் கண்ட நானும் என்னுடன் வந்த மற்றொரு நண்பரும் பல்லும் துலக்கவில்லை, குளிக்கவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உறவை அறுக்கும் 'கக்கூஸ்': 

உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்று கல்லங் கபடமற்ற மக்களைப் பார்ப்பது மட்டுமல்ல, நெஞ்சையள்ளும் இயற்கை அழகை இரசித்து வரலாம் என புறப்பட்டு கிராமங்களுக்குச் சென்றால்... அடடா.... பேருந்திலிருந்து இறங்கி கிராமத்தை இணைக்கும் சாலையில் நடந்து செல்லும் போது... சாலையின் இரு பக்கங்களிலும் மலக்குவியல்கள் உங்களை 'நறுமணத்தோடு' வரவேற்கும். அதுவே காலை நேரமானால் சிறுவர்கள் நெளிவதைப் பார்க்க வேண்டுமே... என்ன செய்வார்கள் பாவம்?. அந்தச்சூழலில் நெளிவதைத் தவிர வேறு வழியில்லை. பெரியவர்கள் என்றால் சற்றே அடக்கிக் கொண்டு அதக்கி அதக்கியாவது வாய்கா வரப்பைத் தேடிச் சென்றுவிடலாம். சிறுவர்களால் முடியாதே. லேசான மழை பெய்திருந்தால் போதும். காய்ந்து போல மலம் ஈரம்பட்டதால் வரும் வாடை இருக்கிறதே... ஜென்மத்திற்கும் உங்கள் 'மெமரியிலிந்து டெலிட்' செய்ய முடியாது. வேலை முடிந்து ஊரின் மற்றொரு முனையின் வழியாகச் சாலையைக் கடந்து சென்றாலும், உங்களை வழியனுப்பவதற்கும் இதே மரியாதைதான். இரு சக்கர வாகனத்தில் வேகமாய்ச் சென்றாலும் வாடையின் வேகத்தை வண்டியின் வேகத்தால் தடுத்துவிடவா முடியும்?

கிராமங்களை விட்டு நகரங்களில் குடியேறிய பிறகு,மனைவி குழந்தைகளோடு மிக நெருங்கிய உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துச்சென்று வருவதற்கே படாதபாடு பட வேண்டும். கிராமத்து விசேசங்களுக்கு அழைத்தால் வர மறுக்கிறார்கள். ”வந்தா எங்கே வெளிக்கு போரது?”, ”வயல் வரப்புக்கும் முள்ளுக் காட்டுக்குமா?” ”நம்மால முடியாதுப்பா. நீ மட்டும் போயிட்டு வா”. இதுதானே மனைவி மக்களின் கேள்வியாக இருக்கிறது. தனியாக ஊருக்குச் சென்றால் "எங்கே, பசங்கள கூட்டிட்டு வரலயா?" "கல்யாணம் ஆனதுக்கப்பறம் உன் வீட்டுக்காரிய பாக்கலயப்பா, கூட்டிட்டு வரக்கூடாதா". இது கிராமத்து பெரிசுகளின் ஆசை. எப்படிச் சொல்வது 'கக்கூசுக்காகத்தான்' அவர்கள் வரவில்லை என்று. எப்படியோ சமாளிக்க வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளில் இந்த 'கக்கூஸ்' பிரச்சனையால் உறவிழந்து நிற்க வேண்டியிருக்கிறது. 

இரயில் பாதைகளின் ஓரங்களில்:

சென்னை போன்ற நகரங்களில் இரயில் பாதைகளின் ஓரங்களில் பெண்கள் படும் 'அவஸ்தை'... எழுதவே எனக்குக் கூசுகிறது. அடுத்த ரயில் எப்பொழுது வரும் என்று தெரியாது. அதற்குள் எல்லாம் வெளியே வந்து விட்டால் ஏகப் பெருமூச்சு. இல்லை என்றால் ...இரயில் வரும் வேகத்தைவிட இரு மடங்கு வேகத்தில் எழுந்து கொள்ள வேண்டும். இந்தப் பீதியில் மலம் கழித்தால் அடுத்த ரயில் வருவதற்குள் மீதியும் வருமா? மலம் வெளியேறுவது குடலின் 'பெரிஸ்டாலிக் ஆக்சன்' (PERISTOLIC ACTION) என்று கொல்லக்கூடிய ஒருவித நெகிழ்வுத் தன்மையால்தான்.வந்த மலத்தை ரெயில் வருகிறதே என அடிக்கடி உள்ளிழுத்துக் கொண்டால் குடலின் நெகிழ்வுத் தன்மை எதிர்த் திசையில் செயல்பட்டு நிரந்தர மலச்சிக்கலுக்கும்,மூலநோய்க்கும் அல்லவா வழி வகுக்கும்.

வேலிகாத்தான் முட்புதர்களில்:

திருச்சி போன்ற பெரு நகரமாக இருந்தாலும், சாயல்குடி போன்ற சற்றே பெரிய கிராமமாக இருந்தாலும் ஆங்காங்கே இருக்கும் வேலிகாத்தான் முட்புதர்களே மக்களின் 'கக்கூசுகள்'. அதிலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஏல்லைக்கோடு வேறு. மிக எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். இல்லை என்றால் மானம் கப்பலேறி விடும். அதே நேரத்தில் கையில் ஒரு வாளெடுத்துச் செல்ல வேண்டும். அதாங்க நீளமா ஒரு குச்சி. வாளைச் சுழற்றிக் கொண்டேதான் நீங்கள் மலம் கழிக்க வேண்டும். இல்லை என்றால் மலத்தைக் கவ்வ வரும் பன்றிகளின் கூட்டம் குண்டியைக் குதறிவிடும். நினைத்தாலே குலை நடுங்குகிறது. மலத்தைக் கழிப்பதா அல்லது பன்றிகளை துரத்துவதா? குச்சி எடுக்க மறந்துவிட்டால் பன்றிகளைத் துரத்த கல்லைத் தேடினால் ஒரு கல்லையும் தொடமுடியாது. எல்லாம் குண்டி துடைத்து காயந்து கிடக்கும். எப்படித் தொடுவது?. மலம் கழிக்கத்தான் எத்தனை எத்தனை அவஸ்தைகள். மலம் கழிக்கும் போது ஒரே இடத்தில் இருக்கமுடியாதல்லவா? சற்று நகர்ந்தாலே போதும். பன்றிகளுக்கிடையில் நடக்கும் போட்டா போட்டியை பார்க்க வேண்டுமே. 'நேஷனல் ஜியாகரபிக் சேனல்காரனுக்கு' இதெல்லாம் தெரிந்தால் ஒரு பெரிய 'எபிசோடே' கிடைக்கும். பன்றிகள் இல்லை என்றால் நகரங்கள் நாறிவிடும்.
வேலிகாத்தான் முட்புதர்களில், நரகலை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் பன்றிகள் படையெடுக்கும் காட்சிகளின் 'ட்ரெயிலர்' ஜேஜே கூட்டரங்கில்  தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் காட்சி களேபரமானது. பெரிய பன்றி மற்ற பன்றிகளை – அவை கூட்டமாக வந்தாலும் சீறிப்பாய்ந்து மொத்த மலத்தையும் கப்பெனக் கவ்வும் காட்சி இருக்கிறதே… அடடா … அதுதான் நேற்று நடந்தது. ஆனாலும் சிறிய பன்றிகள் அதற்காக ஓடிவிடவில்லை. பம்மி…பம்மி சற்றே மெல்ல அருகில் சென்று பெரிய பன்றி கவ்விய போது சிதறிய எச்சங்களை நக்கி எடுத்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டே திரும்பும் காட்சி இருக்கிறதே…..அடடா…. அதுதான் இன்று நடந்தது.
நரகலில் நகரங்கள்:
நகர வாசிகள் காலை எழுந்தவுடன் வாசல்கூட்ட வெளியே வந்தால் மலம் குவியல் குவியலாய் மலர்ச்சியோடு வரவேற்கும். நீங்கள் எழுவதற்கு முன்பாகவே சிறுவர்கள்....யார் என்று தெரியாது...உங்கள் வீட்டு வாசலின் ஓரம் சாக்கடையில் மலம் கழித்துவிட்டுச் சென்றிருப்பார்கள். பாவம் சிறுவர்களுக்கு சாக்கடையின் நடுவே மலத்தைக்கழிக்கும் பயிற்சி போதாது என்பதால் பாதி கரைகளிலேயே குவிந்த விடும். பன்றிகள் இல்லாத தெரு என்றால் நீங்கள் வாசலோடு சேர்த்து மலத்தையும்தான் கழுவவேணடும். காத்தாட வாசலில் உட்கார முடியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மழைக்காலம் என்றால், அதுவும் சற்றே பலமான மழை என்றால், மழை நீர் முழுவதையும் சாக்கடை கொள்ளாத போது, சாக்கடையில் புரளும் மலத்தை அள்ளிக் கொண்டும், உருட்டிக் கொண்டும், தாழ்வான வீட்டு வாசல்களில் மலத்தை ஒதுக்கிவிட்டு மழை நீர் சீறிப்பாயும் காட்சியைப் பார்க்க வேண்டுமே. நீர் வடிந்த பிறகு தெருவெங்கும் கட்டிக் கட்டியாக ஒதுங்கியிருக்கும் மலத்தின் மீதுதான் உங்கள் வாகனங்கள் பயணிக்க வேண்டும். பாதங்கள் பதிய வேண்டும்.

எங்கிருந்து திடீரென மலக்குவியல்கள் வந்தன என ஐயம் இருக்கா?. குறைந்த வருவாயில் வாழும் பலரால் 'செப்டிக் டேங்க்' வசதியுடன் வீடு கட்ட முடியாது. வீட்டின் ஓரத்தில் திறந்த வெளிக் 'கக்கூசைக்' கட்டி, அதை கழிவு நீர்க் கால்வாயோடு இணைத்து விடுவார்கள். இருக்கிற தண்ணீா வசதிக்கு எங்கே செல்லும் மலக் கழிவுகள். சாக்கடையும் திறந்த வெளிதானே. அரைகுறைவாக கழுவப்பட்ட நிலையில் மல மிச்சத்தில் ரீங்காரமிட்ட ஈக்கள் பிற்பாடு உங்களது உணவுப் பண்டங்களை மொய்க்கும் போது ... என்ன குமட்டுகிறதோ.. அதுதானப்பா நம் மக்களின் அன்றாட வாழ்க்கை. இவ்வளவு சகிப்புத் தன்மைகளோடு வாழப் பழகிக் கொண்ட நம் மக்களை போராட வைப்பது அவ்வளவு எளிதானதா என்ன?
நகராட்சி கழிப்பிடங்கள் இல்லையா எனக் கேட்பது எனக்குப் புரிகிறது
நகராட்சி கழிப்பிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உள்ளே செல்வதற்கே நீங்கள் நடை பயில வேண்டும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் மலத்தில் கால் வைக்காமல், வழிந்தோடும் மலம் -மூத்திரத்தால் வழுக்கி விழாமல் செல்வது அவ்வளவு எளிதானதா என்ன? சில நேரங்களில் செல்லும் பாதையில் கால்வைக்கக்கூட முடியாது. மூடியிருக்கும் 'செப்டிக் டேங்க்' மீது போடப்பட்டுள்ள 'சிமெண்ட் சிலாப்' வழியாகச் செல்ல முயன்றால் அரைகுறையாக உடைந்து ஆ....வென வாயைப் பிளந்து நிற்கும் அடுத்த 'சிலாப்பின்' ஓட்டையினூடே பூகம்ப பேரழிவின் சகதி போல குவிந்து கிடக்கும் மலக் கழிவை பாக்காமல் செல்ல முயன்றால் உடைந்திருக்கும் அடுத்த 'சிலாப்' ஓட்டைக்குள் கால் மாட்டிக் கொண்டு மல 'அபிஷேகம் ஜோராய்' நடக்கும். இதையெல்லாம் மீறி 'கக்கூசுக்குள்' நுழைந்து விட்டாலும் உங்களது மானத்தைக் கப்பலேற்ற வேண்டியதுதான். கதவு இருக்காதே.. வேறென்ன செய்ய முடியும்? கதவு இல்லை என்று திரும்பவா முடியும்? கால் வைக்கவே இடமில்லை. கையில் உள்ள சொம்பை எங்கே வைப்பது? அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும். வெளிக்குப் போகத்தான் எத்தனை சூரத்தனங்கள்.

இந்தக் கன்றாவிகளைக் கண்டு மனுமேல் மனுக் கொடுத்தும் செவி மடுக்காத நகராட்சியை உலுக்கியது நகராட்சி வாசலில் மலம் கழிக்கும் போராட்டம். இது திருச்சி தில்லை நகர், காந்திபுரம் 'கக்கூசுக்காக' சில ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க வினர் நடத்திய போராட்டம். மலம் கழிக்க அணிதிரள்வதற்கு முன்பாகவே ஒரு பெரும் படை நகராட்சி அலுவலகத்திலிருந்து பறந்து வந்தது. வந்த வேகத்தில் அலசி அள்ளிச் சென்றது மலக்குவியல்களை. அதிரடிப் போராட்டங்களை அன்றாடமா நடத்த முடியும்?

ஊர்ப் பயணம் மேற்கோள்ளும் போது, இந்தக் கடனைக் கழிக்க நாம் படும் பாடு இருக்கிறதே. எழுதி மாளாது. உலக வங்கிக் கடனைக்கூட அடைத்து விடலாம். ஆனால் இந்தக் கடனை மட்டும் கழிக்க முடியாது. அவ்வளவு 'கலிஜாக' இருக்கும் நமது பேருந்து நிலைய - ரயில் நிலைய கழிப்பிடங்கள். இருக்கிற கடன் பத்தாது என்று இந்தக் கடனைக் கழிக்க காசு வேறு கொடுக் வேண்டும்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை செல்ல அருகில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். திடீர் என வயித்தக் கலக்கிவிட்டது. 'கக்கூசைத்' தேடினேன். எதுவும் இல்லை. பக்கத்தில் முள் காடு தெரிந்தது. கடனை முடித்தேன் தண்ணீர் இல்லை. என்ன செய்வது. அருகில் இருந்த கல்தான் உதவியது. 

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு:

ஆக இதுதான் இந்திய மக்களின் ஆகப் பெரும்பாலோரின் 'கக்கூஸ்' பிரச்சனை. இதைத் தீர்ப்பதற்குத்தான் எத்தனை எத்தனைத் திட்டங்கள். கிராப்புறங்கள் உள்ளிட்டு பொது சுகாதாரக் கழிப்பிடங்கள், வீட்டுக்கு வீடு அரசின் செலவில் 'கக்கூஸ்'வசதிகள் என நமது அரசுகள் மக்களை திக்கு முக்காட வைத்துவிட்டன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல் உபாதை தொடர்பாக நாட்டு வைத்தியரைப் பார்க்க புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்திற்குத் தோழர் ஒருவருடன் சென்றிருந்தேன். வீடுகளே அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தெரிந்தன. அரசின் பொதுக் கழிப்பிடக் கட்டடம் எங்களைப் பார்த்து சிரித்தது. மூடித்தான் கிடந்தது. யார் அதைப் போய்த் திறப்பார்கள் அந்தக் கிராமத்தில்?. 

சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு வீடு அனைவருக்கும் இலவச 'கக்கூஸ் 'அமைத்துக் கொடுத்திருந்தது அரசு. அப்பொழுது ஒரு முறை எனது தங்கை வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனக்கோ மூட்டு வலி. ஏரிக்கரைக்கும், வயல் வரப்புக்கும் போக முடியாது. சரி. அரசுதான் 'கக்கூஸ்'கட்டிக் கொடுத்திருக்கிறதே. நமக்கென்ன கவலை என வீட்டின் பின்புறம் சென்றேன். கால் வைத்து உட்காரும் 'பேஸ்' மட்டும்தான் தெரிந்தது. மீதி மண்ணால் மூடப்பட்டிருந்தது. என்னவென்று கேட்டேன். ”அத மட்டும்தான் வைச்சாங்க. அதல போய் யார் போக முடியும். கரும்புத் தோட்டத்துக்குள்ள போய் வா” என்றார் எனது தங்கை. இதுதான் அனைவருக்கும் இலவசமாக அரசே செய்த 'கக்கூஸ்' வசதி. இப்படி திட்டங்களோ ஏராளம். இத்திட்டங்களால் நமது வயிற்றைக் காலி செய்ய, அரசியல்வாதிகளும் - அதிகாரிகளும் அவர்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டார்கள்.   

நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களுக்கு அறைக்கு ஒரு 'கக்கூஸ்' சொந்தக் காரர்கள் வந்தால் அவர்களுக்கென தனி 'கக்கூஸ்' அதிலே 'பாம்பே மாடல்' 'வெஸ்ட்டர்ன் மாடல்கள்'.தண்ணீா் இல்லை என்றாலும் பரவாயில்லை துடைத்துக் கொள்ள 'பேப்பர்' உருளை .... என்ன கிராமத்தான் கல்லில் துடைத்துக் கொள்கிறான்.  நகரத்தான் 'பேப்பரில்' துடைத்துக் கொள்கிறான்.. நாகரிக வளர்ச்சி...வேறொன்றுமில்லை. 'ஷவர் பாத்' போல 'ஸ்ப்பிரேயர் ' கொண்டு  அலச தனி 'பிளக்சிபிள் ஹோஸ்'. இப்ப அதுகூடத் தேவையில்லை. 'வெஸ்டர்ன் மாடலில்' உட்கார்ந்தால் போதும் அடியிலிந்து தண்ணீர் பீச்சியடித்து அதுவே கழுவி விடும். கைக்கு வேலையில்லை. இப்படி வசதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.எத்தைனை பேருக்கு? வசதியற்றவர்களுக்கு இதற்கெல்லாம் வாய்ப்பில்லையே.

ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் தேர்வு நிலைப் பேரூராட்சிகளாகவும், தேர்வுநிலைப் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் ஒதுங்க ஒரு இடம் இல்லையே! 

இதோ தேர்தல் வந்து விட்டது. மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுத்துவிட்டன. எதற்கும் எச்சரிக்கை! கவ்வப் போவது மலத்தை மட்டமல்ல,  நமது வாழ்வையும் சேர்த்துதான்.

19 comments:

  1. மலம் பேசும் ஆன்மீகம் மட்டுமின்றி , அது பேசும் அரசியலும் புரிகிறது..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி மதுரை சரவணன் அவர்களே!

    ReplyDelete
  3. ம்ம்ம் ஊரான், ஊரின் மிக முக்கியமான பிரச்சினையைப் பத்தி பேசியிருக்கீங்க. காலை நேரங்களில் பேருந்து நிலையங்களில் சிக்கிக் கொள்ளும் பொழுது கக்கூசுகளை தேடியலைந்த நாட்களும், சில அனுபவங்களும் கசப்பாக நெஞ்சில் வந்து போகிறது.

    சுகாதாரத்தின் அடிப்படைத் துறையே இதுதான். என்று விளங்கிக் கொண்டு பின்பற்ற இந்த அரசாங்கம் அதற்கான சட்டங்களை எழுப்பி வசதி செய்தி கொடுக்கும். கொடுமை!!

    ReplyDelete
  4. Please take it off word verification from comment section... thanks!

    ReplyDelete
  5. ஐயோ...இந்த நேரத்தில தெரியாம தமிழ்மணம் வந்து உங்க பக்கம் வந்திட்டேன்.சரி...சரி இனிச் சாப்பாடு நளைக்குத்தான்.ஆனாலும் நாற நாற அம்பலமாக்கிட்டீங்க !

    ReplyDelete
  6. வருகை தந்து கருத்துக்கூறிய தெகா மற்றும் ஹேமா ஆகியோருக்கு நன்றி!

    ReplyDelete
  7. Thekkikattan,
    Word verification rectified. Thanks.

    ReplyDelete
  8. உண்மையிலேயே இந்த கட்டுரைக்கு விமர்சனமாய் குறைந்தது 100 வார்த்தைகளால் கோர்த்து பாராட்டி எழுத வேண்டும்.

    கையை கொடுங்க.

    திருப்பூரில் பல இடங்களில் 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது.

    ReplyDelete
  9. நன்றி! ஜோதிஜி அவர்களே.

    நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேதான் இன்றும் பல இடங்கள்.
    திருப்பூரில் இன்று முன்னேற்றம் என்றால் பாராட்டலாம்தான். உள்ளே நுழைந்தால் இருப்பது வெளியே வரும். நுழைய கொஞ்சம் துணிச்சல் வேண்டும்.

    ReplyDelete
  10. நல்லதொரு நீண்டதொரு ஆய்வுக் கட்டுரை. தேர்தல் நேரம் - அரசியல் கட்சிகளுக்கு நேரம் இருக்காது. இன்னும் இப்படி எல்லாம் தமிழ் நாட்டில் பல இடங்களீல் நடக்கின்றன என்பதனை சீரணிக்கவே இயலவில்லை. கிராமங்களில் கம்மாய் குளம் வாய்க்கால் - எல்லாம் இன்னும் இப்படித்தான் இருக்கின்றன. நாடு முன்னேற - நிலைமை மாற - பிரார்த்திப்போம்

    ReplyDelete
  11. நன்றி சீனா அவர்களே!
    நிர்ப்பந்தங்களே நிலைமையை மாற்றும்.

    ReplyDelete
  12. நினைத்தாலே குலை நடுங்குகிறது. மலத்தைக் கழிப்பதா அல்லது பன்றிகளை துரத்துவதா? குச்சி எடுக்க மறந்துவிட்டால் பன்றிகளைத் துரத்த கல்லைத் தேடினால் ஒரு கல்லையும் தொடமுடியாது. எல்லாம் குண்டி துடைத்து காயந்து கிடக்கும். எப்படித் தொடுவது?. மலம் கழிக்கத்தான் எத்தனை எத்தனை அவஸ்தைகள்.//

    அந்த காட்சிகள் மனதில் வந்து போனது.. மிக வேதனையை தந்தது.. மனிதனின் கடமையை செய்யக்கூட முடியாத இயலாமை.. எத்தனை கொடுமை..

    ReplyDelete
  13. அசிங்கப்பட்டுக்கொண்டு எழுதாமல் இருக்கும் என்போன்றவர் மத்தியில் துணிந்து விழிப்புணர்ச்சி தந்தமைக்கு பாராட்டுகள்..

    ReplyDelete
  14. எண்ணங்கள் 13189034291840215795 க்கு நன்றி!

    ReplyDelete
  15. மலத்தை நோக்கி ஓடும் பன்றிகளில் ஏனோ கட்சிகளும் கட்சிகளின் தலைவர்கள் பிம்பம் படிவதை தவிர்க்க இயலவில்லை.

    குட் ஒன்.

    ReplyDelete
  16. "மலத்தை நோக்கி ஓடும் பன்றிகளில் ஏனோ கட்சிகளும் கட்சிகளின் தலைவர்கள் பிம்பம் படிவதை தவிர்க்க இயலவில்லை."

    அதுதானே எதார்த்தம்.

    நன்றி VJR அவர்களே!

    ReplyDelete
  17. அசிங்கம் என நாம் விளிப்பதை அசிங்கப்படாமலும் அசிங்கமாக இல்லாமலும் எழுதியிருக்கிறீர்கள் ,உண்மை தான் மலம் கேட்டுப்போனால் பலம் கேட்டுப்போதும் . உடம்பில் உள்ள பல நோய்களை அறிய மலத்தையே பயன்படுத்துகிறார்கள் . மருத்துவத்துறையில் ஒரு சொலவடை உண்டு , parasitologist is one who sits on a stool at one end and examines the stool on other end . வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  18. 1000000000%%%% True... same experience I got........

    ReplyDelete
  19. தோழர் செம்ம கட்டுரை

    ReplyDelete