Tuesday, March 29, 2011

கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா? தெக்கத்தியானா?

"வை ராஜா வை!"

 "பத்து வச்சா நூறு! நூறு வச்சா ஆயிரம்!"

"இன்னக்கி விட்டா என்னைக்கும் வராது!"

"வை ராஜா வை!"

இப்படி கிராமங்களில், கோயில் திருவிழாவின் போது லங்கர் கட்டை உருட்டி , மூனு சீட்டைப் புரட்டி, அப்பாவி மக்களுக்கு ஆசை காட்டி, மோசடி மூலம்  காசை அள்ளும் பித்தலாட்டக் காரர்களை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. ஏமாறாதவர்களும் இருக்க முடியாது. ஆசை யாரைத்தான் விட்டது? புத்தனே வந்தாலும் இவர்களிடமிருந்து தப்புவது கடினம்தான்.

இப்போது தேர்தல் திருவிழா. கிராமம் முதல் நகரம் வரை மூனு சீட்டுக் காரர்கள் கடை விரித்து விட்டார்கள். கோயில் திருவிழாவின் போதும் கூட்டணி அமைத்துதான் கடை விரிப்பார்கள். தேர்தல் திருவிழாவிலும் அதே பாணிதான். 

மாரியாத்தா திருவிழா போல உள்ளுராட்சித் தேர்தல் திருவிழா; பொங்கல் திருவிழா போல சட்டமன்றத் தேர்தல் திருவிழா; தீபாவளி திருவிழா போல நாடாளுமன்றத் திருவிழா என திருவிழாக்கள் எதுவானாலும் கடை விரிப்பதோ அதே கபட வேடதாரிகள்தான்.

கோயில் திருவிழாவோ, தேர்தல் திருவிழாவோ எதுவானாலும் ஏமாளி என்னவோ அதே அப்பாவிகள்தான். ஏமாளியில் சிறந்த ஏமாளி யார் என்கிற போட்டிக்கு இங்கே அவசியமில்லாமல் போய்விட்டது.

ஆனால் மூனு சீட்டு மோசடியில் அதிகம் கொள்ளையடித்தவன் யார்? ஊரைப் பொருத்து, தொகுதியைப் பொருத்து, மாநிலத்தைப் பொருத்து இதில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. இருந்தாலும் கொள்ளையடிப்பதில் திறமைசாலி யார் என்ற கேள்விக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிட முடியாதுதான். 

தமிழ்நாட்டு அரசியல்வாதி மந்திரியாக இருந்த போது புதுமனைப் புகுவிழா நடத்தினானாம்.அதற்கு நாடெங்கிலும் இருந்து அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் வந்திருந்தார்களாம்.  செட்டி நாட்டு அரண்மனைக் கணக்காய் கட்டியிருந்த வீட்டைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்து அசந்து போனார்களாம் வந்திருந்த வடநாட்டு அரசியல் வாதிகள்.

'பரம்பரை பரம்பரையாய் அரசியலில் இருக்கும் நம்மால் இது போன்ற ஒரு பங்களாவைக் கட்டமுடியவில்லை. நேற்று அரசியலுக்கு வந்தவன் இப்படிக் கட்டியிருக்கிறானே' என வாய் பிளந்து நின்றார்களாம் வட நாட்டு அரசியல் வாதிகள்.  "ஜீ ... இது எப்படி சாத்தியமானது?" என காதருகில் சென்று குசு குசு குரலில் கேட்டானாம் வட நாட்டுக்கார நண்பன். "பிறகு சொல்கிறேன். முதலில் விருந்தை முடி" என்றானாம் தமிழ்நாட்டு்காரன்.

விருந்து முடிந்தது. இரகசியத்தைக் கேட்டவன் நெருங்கிய நண்பன் என்பதால் அவனை மட்டும் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றானாம்.

"இதோ இந்தப் பாலத்தை நான்தான் கட்டினேன். பாலம் கட்டும் போது சிந்திய சிமெண்ட்டில்தான் எனது வீட்டையும் முடித்தேன்" என்றானாம்.

பாலம் எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்ட வட நாட்டு நண்பன் விடை பெற்றுச் சென்றானாம்.

பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து, தனது வடநாட்டு நண்பனிடமிருந்து புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பு வர, தமிழ் நாட்டு அரசில் வாதி வடக்கே சென்றானாம். அவனது வீட்டைப்பார்த்து இவன் அசந்து போனானாம். நம்மை விஞ்சிவிட்டானே என்று உள்ளூர பொறாமை. வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள காதருகே சென்று "இது எப்படி?" என குசு குசு குரலில் கேட்டானாம். 

"விருந்தை முடி பிறகு சொல்கிறேன்" எனக் கூறிவிட்டு நகர்ந்தானாம். வந்தவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்ப அன்றைய நாள் கழிந்தது. "காலையில் பார்க்கலாம் தூங்கு" எனக் கூறிவிட்டு அவனும் தூங்கச் சென்றுவிட்டானாம். பிரமிப்பூட்டும் இம்மாளிகை உருவான இரகசியம் தெரியாமல் அன்றைய தூக்கம் போனது தமிழ்நாட்டுக்காரனுக்கு.

மறு நாள் பொழுது விடிந்தது. தமிழ் நாட்டுக்காரனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றானாம்.

"இதோ பார் பாலம்" எனக் காட்டினானாம் வட நாட்டுக்காரன். அவன் காட்டிய இடத்தில் எதுவும் இல்லை.

"எங்கே பாலம்?" என்று மீண்டும் கேட்டானாம் தமிழ் நாட்டுக்காரன்.

"இந்தப் பாலம்தான் அங்கே எனது பங்களா" என்றானாம். 

ஒரு நிமிடம் அசைவற்று நின்ற நண்பனை அனைத்து அழைத்துச் சென்றானாம் வட நாட்டுக் காரன்.

4 comments:

  1. இல்லாத அணையில் விழுந்த ஓட்டையை அடைப்பதற்கு நிதி ஒதுக்கும் நமது மத்திய , மாநில மந்திரிகளை அடையாளம் காட்டியதற்கு நன்றி ஐயா.

    அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!

      Delete
  2. அருமையான பதிவு சு.மோகன சுகுமார் அறிவியல் கண்டுப்பிடிப்பாளர்

    ReplyDelete