Wednesday, December 7, 2011

மூனாவதா பொறந்து எவ தாலிய அறுக்கப் போறானோ!

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை. அதையொட்டிய தொழிலாளர்கள் வாழும் குடியிருப்பு. 

முன்பு கம்பும்-கடலையும் விளைந்த புஞ்சய் பூமியில் இன்று எங்கு நோக்கினும் கட்டடங்கள். அருகில் உள்ள ஊர்களில் தங்கினால் பேருந்து பிடித்து வேலைக்கு வந்து, பிறகு மீண்டும் வீட்டிற்குச் செல்வது இன்னுமொரு 'ஷிப்ட்' வேலை பார்ப்பது போலுள்ளதால் தொழிற்சாலைக்கு அருகில் தங்குவதற்கே தொழிலாளர்களும் ஊழியர்களும் விரும்புவதால் வாடகை வீடுகளுக்கு ஏக கிராக்கி. 

நெடுக்க நீட்டினால் கால் இடிக்கும்; குறுக்க நீட்டினால் கை மடங்கும். இதுதான் 'பேச்சுலர்'களுக்கான அறைகள். இதற்கு வாடகை ஆயிரங்களில் என்பதால் 'கக்கூசில்'கூட மாடி அமைப்பவர்கள் 'ஹவுஸ் ஓனர்கள்'.

நமது பொருளாதாரப் புலிகள் சொல்வதைப் போல 'சப்ளை அண்ட் டிமாண்ட் 'அதிகம் என்பதால் பெட்ரோல் விலையைப் போல எப்போதும் வாடகை ஏறு முகத்தில்தான். 

வாடகை கொடுத்து கட்டுப்படியாகாது என்பதால் சிரமம் இருந்தாலும் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் ஊர்களிலிருந்து பேருந்தில்தான் வேலைக்கு வருகிறார்கள். 

அப்படி வந்திறங்கும் தொழிலாளர்களை மட்டுமல்ல, சொந்த வீட்டுக் கனவில் மிதக்கும் பலரின் கண்களையும் உறுத்திக் கொண்டிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரிலேயே காலியாகக் கிடக்கும் விசாலாமான நிலப்பகுதி. 'பிளாட்' போட்டால் பல லட்சங்களைத் தாண்டும். 

நிலம் யாருக்குச் சொந்தம் என சில பத்து ஆண்டுகளாக நடக்கும் வழக்கு- வாய்தா.வாய்தாவுக்கு நடந்தே கால் தேய்ந்து போன பெண்மணி. சாலையையொட்டி அந்நிலத்தின் மேற்கு முனையில் ஒடிசா பழங்குடியினரை நினைவுபடுத்தும் ஓலைக் குடிசை ஒன்றில் தனது கணவனோடும் ஊணமாய் வீழ்ந்த்துவிட்ட தனது மகனோடும் காலத்தைத் தள்ளுபவர்.

முடவன் நடக்கிறான்-குருடன் பார்க்கிறான்-ஊமை பேசுகிறான் என ஊர் ஊராய் அற்புத சுகமளிக்கும் அங்கிக்காரர்கள் இக்குடிசைக்கு பல முறை படை எடுத்தார்கள். 

மரித்துப் போன கர்த்தர்கூட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கதைகள் சொல்கிறார்கள். ஆனால் முப்பதாண்டு காலம் படுக்கையை விட்டு எழாமலேயே வளர்ந்த வாலிபனை குறைந்த பட்சம் எழுந்து நிற்க வைத்திருந்தால்கூட கர்த்தர் கருணை உள்ளவர் எனக் கருத வாய்ப்புண்டு. சென்ற ஆண்டு அவன் கட்டிலை விட்டு இறந்கினான் கல்லரை நோக்கிச் செல்வதற்காக. 

 தனது கையே உடைந்தது போல நொறுங்கிப் போனாள் அந்தத்தாய். கணவன் என்கிற மற்றொரு கை இருந்தாலும் அது டான் பாஸ்கோவின் வலது கரமா என்ன போற்றி வணங்க. நடக்கும் போதுகூட அசையாத கணவனின் கைகள். இதையும் சேர்த்தல்லவா தன்னோடு சுமந்து வந்தார். 

உயிர் பிழைக்கவும்,அவ்வப் பொழுது ஓட்டையாகிப் போகும் ஓலைக் குடிசையின் ஓட்டையை அடைக்கவும் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அவர் நடத்தி வந்த சின்னஞ் சிறிய பெட்டிக்கடை. அதில் கிடைத்த சொற்ப வருவாயில் குடிசையின் ஓட்டை அடைந்ததோ இல்லையோ கணவனின் வயிறு மட்டும் 'குவார்ட்டரால்' நிறைந்து விடும். 

'குவார்ட்டரால்' கணவனின் வயிறு முட்டும் போது அந்தப் பெண்ணின் வயிறு ஒட்டிவிடும். என்ன செய்ய? 'என்னைக்குத்தான் தாலி அறுப்பானோ' என அங்கலாய்ப்பதைத் தவிர வேறெதையும் இச்சமூகம் பெண்களுக்கு வழங்கவில்லையே! 

பெட்டிக்கடையை நம்பினால் இனி பட்டினி கிடந்தே சாக வேண்டும் என எண்ணியதாலோ என்னவோ ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கோழி இறைச்சி விற்பனை செய்வார். அதில் கிடைக்கும் வருவாயில் வயிற்றைக் கழுவி வந்தார். முதுமையில் முடங்கிப் போகும் போது உதவுமே எனக் கருதி ஒரு சிறு தொகையை சேமிக்கவும் செய்தார். 

திடீரென கணவன் சீக்காகிப் போனான். கொண்டவன் கொடியவன் என்றாலும் அவன் சாவதற்கு மனம் இடம் கொடுக்குமா என்ன? மருத்துவ மனைக்கு தன் சேமிப்புடன் கணவனோடு உள்ளே சென்றவர் வெறுங்கையோடு வெளியே வந்தார். இவர் வீடு வந்து சேர்வதற்குள் கணவனும் “வீடு பேறு“ அடைந்து விட்டான்.

எல்லாம் முடிந்தது. இதுவரை எட்டிப் பார்க்காத உறவுகள் இறுதிச் சடங்கிற்கு வந்தார்கள். இதைச் செய்,  அதைச் செய் என சடங்குகளுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அங்கிக்காரர்களும் வந்தார்கள். 'மூன்றாவதாய் இவர் மீண்டும்  உயிர்த்தெழுவார்' என ஜெபித்தார்கள். 

'மூனாவதா பொறந்து இவன் எவ தாலிய அறுக்கப் போறானோ' என தன் மனதில் ஓடிய எண்ணத்தை அடக்கிக் கொண்டே வழிந்த கண்ணீரை முந்தானையால் ஒத்திக்கொண்டாள்.

1 comment: