Saturday, December 17, 2011

பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!

”அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய மானியமாக 3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயினை விடுவித்து 
அம்மா ஆணை பிறப்பித்துவிட்டார்.

”ரூ.3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகச் செலவுகள், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், அடிப்படை வசதிகளை பராமரித்தல், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தமிழக குக்கிராமங்களின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இந்த நிதியில் இருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் விடுவிக்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.2,50,000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.30 லட்சம் நிதி விடுவிக்கப்படும். இது மட்டுமின்றி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஊரக அமைப்புகளுக்கான மாநில நிதி ஆணைய மானியம் மக்கள் தொகைக்கு ஏற்ப விடுவிக்கப்படும்.

"புதிதாக தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) உருவாக்கப்பட்டுள்ளதால் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குக்கிராமங்களை சென்றடைந்துவிடும். கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி செல்வது முழுவதுமாக தடுக்கப்பட்டுவிடும்.


என்ன? காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் கண்களில் தெரிகிறதோ! சற்று பொறுங்கள்!


உள்ளாட்சித் தேர்தல் முடிந்து சில மாதங்கள் உருண்டோடி விட்டன. வாக்குகளைப் பெற வேட்பாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமல்ல தங்கள் வளத்தையும் சேர்த்தே வாரி இரைத்தார்கள். ஆளும் கட்சி-எதிர் கட்சி என்கிற பாகுபாடின்றி அனைத்து வேட்பாளர்களுமே தங்கள் வசதிக்கேற்ப வாக்காளர்களை கவனித்தார்கள். வழக்கம் போலவே "ஆளும் கட்சிக்காரன் வந்தால்தான் நம்ம ஊருக்கு ஏதாவது செய்வான்" என்கிற நம்பிக்கையில் மக்களும் ஆளும் கட்சியினருக்கே வாக்களித்தனர்.

மற்ற பிற இடங்களில் சாதி - மத பலம் மற்றும் ஆளும் கட்சியினரின் உள்குத்து காரணமாக சில உதிரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர் கட்சியினரும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். 

வெற்றிக் களிப்பில் திளைக்கவா இவர்கள் முதல் போட்டார்கள்? போட்ட முதலை குறைந்த பட்சம் மும்மடங்காகவாவது எடுத்தால்தான் தங்களின் எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். அரசு கஜானா காலி என அம்மா அடிக்கடி சொல்லி வந்ததால் என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டிருந்த பிள்ளைகளுக்கு பால் வார்த்திருக்கிறார் அம்மா. பால் மடி வற்றினாலும் பிள்ளைகள் பட்டினியால் வாடுவதை எந்தத் தாயால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? 

தன் பிள்ளைகளுக்கு பால் வார்க்க ஊர்ப் பிள்ளைகளுக்கு பால் ஊத்தினார் - பால்விலை உயர்த்தப்பட்டது. பிள்ளைகளுக்கு தண்ணீர் கலந்த பால் கொடுத்தால் சளி பிடித்துக் கொள்ளுமாம். அதனால் சுண்டக் காய்ச்சிய பால்தான் வேண்டும் என பிள்ளைகள் அடம் பிடிப்பதால் அதற்காக ஆகும் கூடுதல் செலவை ஈடு கட்ட பேருந்திலும் கை வைத்ததால்தான் இப்போது கணிசமாக கல்லாக் கட்ட முடிகிறது. 

இப்போது தினம் தினம் கல்லா நிறைகிறது. பிறகென்ன? போட்ட முதலை பிள்ளைகள் எடுக்க வேண்டாமா? தன்னை அரியணையில் ஏற்றிவிட்ட பிள்ளைகள் குறைந்த பட்சம் போட்ட முதலையாவது எடுக்க வேண்டாமா? அதற்கான வழிதான் "தாய்" திட்டம்.

பிள்ளைகள் இனி சாக்கடையிலும் சந்தனம் எடுப்பார்கள். குடி நீரை பன்னீராக்கி கொப்பளிப்பார்கள். சாலை மேம்பாட்டில் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். தெரு விளக்குகளில் குளிர் காய்வார்கள். மொத்தத்தில் அம்மாவின் ஊட்டச் சத்தால் இனி பிள்ளைகள் வேகமாக வளந்துவிடுவார்கள். பிள்ளைகள் வளர்ந்தால் தானே தாயை கவனிக்க முடியும்.
பிள்ளைகள் இப்போது பாடத் தொடங்கிவிட்டார்கள்.
பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!
*****
தொடர்புடைய பதிவுகள்:
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

2 comments:

  1. பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!

    ReplyDelete
  2. பயங்கரமான திட்டமா இருக்கே

    ReplyDelete