Showing posts with label இந்து. Show all posts
Showing posts with label இந்து. Show all posts

Sunday, September 10, 2023

சனாதன தருமத்தின் மூலம் எது?

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழிப்பதைப் போல, சனாதன தருமத்தை எதிர்ப்பதல்ல; மாறாக அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது, இன்று, சனாதன தருமம் குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டி உள்ளது. சனாதன தருமம் என்றால் என்ன என்பது பற்றி ஆளாளுக்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். 

உண்மையில் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து மகஇக, வேலூர் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தரவுகளைத் தேடிய போது அதற்கான விடை கிடைத்தது. 

இன்று, இந்து மதம் என்று சொல்லப்படுகிற வைதீக-ஆரிய-பிராமண மதத்தின் மற்றொரு பெயர்தான் சனாதனம். அதனால்தான் இந்து மதம், சனாதன மதம் என்றும் அழைக்கப்படுகிறது. தருமம் என்றால் ஈகை அல்ல; மாறாக என்றென்றைக்கும் ஒரு இந்து தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்/கடமைகள் என்று பொருள். 

இந்து மதத்தைப் பின்பற்றுகிற ஒரு தனிமனிதன், அவனது குடும்பம், அவன் சார்ந்த சமூகம், வாழுகின்ற நாடு உள்ளிட்டவை அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களையும், விதிமுறைகளையும் பற்றியதுதான் சனாதன தருமம். இந்தச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கீழ்கண்ட இந்து மத நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர மற்ற இந்து மத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை சனாதன தருமத்தில் சேராது.

1.ரிக்-யசூர்-சாம-அதர்வன‌ எனும் நான்கு வேதங்கள். (சுருதிகள்).

2.மனுதரும சாஸ்திரம் உள்ளிட்ட 18 தரும சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), மொத்தம் 128 ஸ்மிருதிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

3.பாகவத புராணம் உள்ளிட்ட 18 புராணங்கள். இவை தவிர, உப புராணங்கள் சில இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

4.மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள்.

5.பகவத் கீதை.

மேலுள்ளவற்றில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும், ஒரு சட்ட நூல் போல தொகுத்துத் தருவதுதான் மனுதரும சாஸ்திரம். எனவே, மனுதரும சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டால், அதில் சொல்லப்பட்டுள்ள தருமங்களின் இன்றைய நடைமுறையையும் தெரிந்து கொண்டாலே சனாதனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைத்து விடும். விடையைத் தெரிந்து கொண்டால், சனாதன தருமத்தை ஒழிப்பதா அல்லது காப்பதா என்பதை ஒருவரால் முடிவு செய்ய முடியும்.

12 தலைப்புகளைக் கொண்ட மனுதரும சாஸ்திரத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். அவசியம் கருதி உடனடியாகப் படிக்க வேண்டிய சில முக்கியப் பிரிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.

தலைப்பு I: உலகத் தோற்றம், உயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் தோற்றுவாய்

31: நான்கு வருணங்களின் தோற்றம்
87,88, 89,90: நான்கு வருணங்களின் தொழில்
92, 93, 95, 96, 97, 100: வருணங்களில் உயர்வு தாழ்வு.

தலைப்பு II: வருண தருமம்

11- நாஸ்திகன்
21, 22: ஆரியர்களின் நாடு
27: சீமந்தம் எனும் தீட்டுக் கழிப்பு
30, 31, 32, 33:  பெயர் சூட்டல்
36, 39, 44, 66: பூணூல்
135, 137, 155, 156: மரியாதை

தலைப்பு III: திருமணம், திதி

4, 6, 8, 10, 11, 12, 13, 15, 16, 16, 21: திருமணம்
46: மாதவிடாய், தீட்டு
110: தாழ்ந்த சாதி

தலைப்பு IV: குடும்ப வாழ்க்கை

30: வேதத்தை நம்பாதவர்கள்
57: மாதவிடாய், தீட்டு
61: சூத்திரன் ஆளும் நாடு
79: மர நிழல் தீட்டு
162, 165: பிராமணச் சலுகை
215-219: உணவுத் தீண்டாமை

தலைப்பு V: உணவு

5, 6, 10, 14, 19, 27, 36, 48, 51: உணவுப் பழக்கம்
62, 85, 86,93: பிறப்பு இறப்பு தீட்டு
124: கிரகப்பிரவேசம், கும்பாபிசேகம் தீட்டு
147-169: மகளிர் தருமம்

தலைப்பு VI: சந்நியாசம்

தலைப்பு VII: அரசின் செயல்பாடு

32, 37-43, 54, 59, 63, 64: அரசாங்கத்தில் பிராமணர்களின் பங்கு

தலைப்பு VIII: நீதி பரிபாலனை

1, 3, 8, 11, 20-22, 24, 88 112, 123, 124: நீதித் துறையில் பிராமணர்களின் பங்கு
267-283, 352, 353: சொற்கொடுமை- தண்டனையில் பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்
379-381, 410:  தகாத உறவு, பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்.
413, 415: தொழிலாளர்கள்

தலைப்பு IX: ஆண்-பெண் தருமம்

2-3, 13, 14, 17, 19, 27-30, 46, 58, 59,69, 78, 81, 88, 94: பெண்ணடிமை
225: வேத நிந்தனை
229, 319, 320: அபராதம், பிராமணர்களுக்குச் சலுகை

தலைப்பு X: சாதிகள் உற்பத்தி, தொழில்

1-73: வருணக் கலப்பால் உருவான கீழ் சாதிகள், தொழில், வசிப்பிடம், உணவு, உடை
83, 84: பிராமணர்கள் ஏன் வேளாண்மை செய்வதில்லை.

தலைப்பு XI: பரிகாரம்
தலைப்பு XII: பாவ புண்ணியம்.

****

மனுதரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சில வாழ்வியல் நடைமுறைகள், புதிய சட்டத் திருத்தங்களால் கைவிடப்பட்டுள்ளன. ஆனால் சாதி, தீண்டாமை, பார்ப்பன மேலாண்மை உள்ளிட்ட பெரும்பாலானவை வழி வழியாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறுவதால் அவற்றை மனுதரும சாஸ்திரத்தோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால்தான், அது சனாதனமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்: 

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? தொடர்-2

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?.....தொடர்-1

Friday, August 11, 2023

நாங்குநேரியும் நடிகர் யோகி பாபுவும்!

நடிகர் யோகி பாபு கைகுலுக்கச் சென்ற போது 'கிட்ட வராதே!' என்று ஒரு அர்ச்சகர் நடந்து கொண்ட விதமும், நாங்குநேரியில் பள்ளி மாணவனை வீடு புகுந்து வெட்டிய இடைநிலைச் சாதியைச் சேர்ந்த சிறுவர்களின் செயலும் வடிவத்தில்தான் வேறு வேறானவை; ஆனால், தன்மையில் இரண்டிலும் தீண்டாமைதான் அடிப்படையானது.



ஏதோ, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில்தான் சாதி வெறி தலைவிரித்தாடுவது போலவும், மற்ற இடங்களில் எல்லாம் யாரும் சாதி, தீண்டாமை பார்ப்பதில்லை என்பது போலவும் ஒரு கருத்து நிலவுகிறது.

கிராமமோ நகரமோ ஒருவன் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு இந்துவாக வாழ்கின்ற போது அவன் உள்ளத்தில் தீண்டாமை தவிர்க்க முடியாமல் குடி கொண்டிருக்கும். சாதி மத சடங்கு சம்பிரதாயங்களை ஒரு இந்து தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் வரை,  இந்து மத உணர்வும், சாதி-தீண்டாமை உணர்வும் ஒருக்காலும் மறையாது. மாறாக மேற்கண்ட சடங்கு சம்பிரதாயங்களைத் தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்காமல், அதிலிருந்து மாறுபட்டு வேறொரு பண்பாட்டு வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் போது சாதி, மத உணர்வும், தீண்டாமை உணர்வும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும். எனது நடைமுறை அனுபவமும் அதுதான். இத்தகையோரை அரிதிலும் அரிதாகத்தான் காண முடியும்.

இந்து மதம் இருக்கும் வரை சாதியும் இருக்கும். சாதி இருக்கும் வரை தீண்டாமையும் இருக்கும். தீண்டாமை என்பது மேலிருந்து கீழாக, ஒவ்வொரு சாதியப் படிநிலையிலும் கடைபிடிக்கப்படுகிறது. அது கீழே செல்லச் செல்ல மிகவும் கொடூரமாக வெளிப்படுகிறது. இந்து மத-சாதி-தீண்டாமை ஒழிப்பு என்பது  அவ்வளவு எளிதானதல்ல; அது ஒரு நீண்ட நெடியப் போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் உள்ளடக்கியது. 

தீண்டாமை ஒரு சாதி இந்துவிடம் எவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது என்பது குறித்து 2011 இல் எழுதிய இரண்டு கட்டுரைகளையும் தொகுத்து உங்கள் முன் வைக்கிறேன்.

ஊரான்

*****

Wednesday, June 15, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?


காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது 'இப்பவெல்லாம் படிச்சவங்கதான் அதிகமா சாதி பாக்கிறாங்க' என்றார் உடன் வந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். படித்தவர்,  நல்ல ஊதியத்துடன் நடுத்தர வர்க்க வாழ்க்கையை நடத்துபவர். பொருளாதாரத்தில் அவருக்கு குறையேதும் இல்லை. பிறகு ஏன் இத்தகைய சலிப்பு!

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து பள்ளிப் பருவத்தில் எனக்கு நேர்ந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்தது என்பதைவிட எப்பொழுதும் எனது நினைவில் நிலைத்திருப்பது.

என்னுடன் படித்த மாணவ நண்பன் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் சைவப்பழக்கம் உள்ள உயர்சாதி என்பது பிறகு தெரிய வந்தது. பகல் நேரத்தில் அவனுடன் அவனது வீட்டிற்குச் சென்றேன். அவனது தாயார்தான் வீட்டில் இருந்தார். முன் பின் தெரியாத ஒருவனை தனது மகன் அழைத்து வந்துவிட்டால் அவனை உடனடியாக வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள். இது கிராமப்பகுதிகளில் அன்று நிலவிய நடைமுறை. ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் கொண்டு வந்து திண்ணையில் வைத்தார் அவனது தாயார். கையில் கொடுக்கமாட்டார்கள். தீட்டுப் பட்டுவிடுமாம். இருந்தாலும் வந்தவர்களுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுக்க மட்டும் மறுக்கமாட்டார்கள். கேட்கவில்லை என்றாலும் அவர்களாகவேத் தருவார்கள். இது தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு என்கிறார்கள் சிலர். ஆனால் இந்த சிறந்த விருந்தோம்பலில் இருக்கும் தீண்டாமை,தாகம் தீர்க்கும் தண்ணீரைக்கூட கொடிய நஞ்சாகவல்லவா மாற்றிவிடுகிறது. இது அந்தத் தண்ணீரைக் குடிப்பவனுக்குத்தான் உரைக்கும்; கொடுப்பவர்களுக்கு அது ஒரு நடைமுறைப் பண்பாடு. சமூகம் அப்படித்தான் மக்களை பயிற்றுவித்திருக்கிறது. எனது கருப்புத்தோலும் ஏழ்மையின் உருவத்தோற்றமும் நான் என்ன சாதியாயிருக்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இந்த நிகழ்வு எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இது நடந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான நண்பர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என பலதரப்பட்ட மக்களோடு பழகியிருக்கிறேன், பழகி வருகிறேன். இதில் பட்டியலின மக்கள் முதல் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் என கசல தரப்பு மக்களும் அடங்குவர். படிக்கிற காலத்தில் பார்ப்பன மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் என்ன சாதி என்பதை கண்டுபிடிப்பது கடினம். சாதிகளைக் கடந்து சக மாணவன் என்கிற உணர்வு மட்டுமே நிலவியது. ஆண்டுக் கணக்கில் ஒரே அறையில் தங்கிய நண்பர்கள்கூட என்ன சாதி என்பதை தெரிந்து கொள்ளவில்லை. அவர்களும் காட்டிக்கொள்ளவில்லை. இதுதான் அன்றைய இளைஞர்களின் மனநிலை.

தீண்டாமை என்பது எத்துனை கொடியது என்பது சாதியப் படிநிலையில் தனக்கு மேலே உள்ள சாதிக்காரர்களால் ஒருமுறையேனும் அனுபவப்பட்டவர்கள் மறக்க முடியாது. சாதியப் படிநிலையில் ஆகக் கடைகோடியாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே தீண்டாமைக் கொடுமையை அதிகம் அனுபவிப்பவர்கள்.
கிராமங்களில் பல்வேறு சாதிப் பிரிவு மக்களுக்கிடையில் கூலி விவசாயி, சிறு விவசாயி, பணக்கார விவசாயி என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்தாக வேண்டும். ஒருவரின் உழைப்பு இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது. சாதியால் வேறுபட்டாலும் உழைப்பால் ஒன்றிணைவதால் மனதில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இன்றி 'அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான்களாகப்' பழகுகிறார்கள்.  கிராமப்புற தீண்டாமை என்பது தனிப்பட்ட நபர்களின் எண்ணத்தினால் கடைபிடிக்கப்படுவதல்ல. மாறாக கிராமப்புற தீண்டாமை என்பது தான் சார்ந்த சாதிய சமூகத்திற்குப் பயந்து கடைபிடிக்கப்படும் ஒருவித 'சமூக ஒழுங்கு'. தனிநபர்கள் மனம் மாறினாலும் சமூகக் கட்டமைப்பை மீறி அவர்களால் நடந்து கொள்ள முடியாது. கோவில் திருவிழாக்கள் மற்றும் காதல் போன்ற விவகாரங்கள் தோன்றும் போது உயர் சாதி பணக்காரர்களாலும், நாட்டாமைகளாலும்தான் தங்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் தேவைகளுக்காக பெரும்பாலான சாதிக்கலவரங்கள் கிராமப்புறங்களில் உருவாக்கப்படுகின்றன.

திருச்சி உறையூரில் குழுமாயி-குழுந்தலாயி அம்மன் திருவிழா மிகவும் பிரபலம். அறிவியல் வளர்ந்தாலும் கிராமங்கள் மாநகரங்களாக வளர்ச்சி பெற்றாலும், இதுபோன்னற திருவிழாக்களின் போது அவை குக்கிராமங்களாக மாறிவிடுவதும், மக்கள் காட்டுமிராண்டிக் காலத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொள்வதையும் காணமுடியும். ஆடுகளின் கழுத்தை அறுத்து அதிலிருந்து கொட்டும் இரத்தத்தை சளைக்காமல் குடித்து பிரமிப்பூட்டும் நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  இரத்தம் குடிப்பதில் மட்டுமல்ல சாதிய ஒடுக்குமுறையிலும் தாங்கள் காட்டுமிராண்டிகள்தான் என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.

தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவிலில் இருக்கிறது குழுமாயி அம்மன் கோவில். அலங்கரிக்கப்ட்ட அம்மன் இங்கிருந்து புறப்பட்டு பறையர்கள் வாழும் காந்திபுரம் வழியாக உறையூர் செட்டித் தெருவை சென்றடையும். பூசைக்காக அம்மன் காந்திபுரத்தில் நிற்காது. படையாச்சி,வெள்ளாளர்,  செட்டியார், முத்தரையர் என பிற உயர்சாதி தெருக்களில் நாள் வாரியாக உலா வரும் அம்மன் அங்குள்ள மக்களுக்கு அலங்காரத்துடன் காட்சியளிப்பாள். உலா முடித்து மீண்டும் அம்மன் தில்லைநகருக்கு வரவேண்டும். அப்படி வரும் போது காந்திபுரத்திற்குள் நுழையும் முன்பு செட்டித் தெருவில் நிறுத்தப்படும். அம்மனின் மொத்த அலங்காரமும் அங்கே உருவப்பட்டு அம்மனமான அம்மன் மட்டுமே காந்திபுரத்திற்குள் நுழையும். உருவப்பட்ட இந்த அம்மனைத்தான் காந்திபுரம் பறையர்கள் பூசை செய்து வழிபட வேண்டும். இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தைவிட இது மிகக் கொடிய காட்டுமிராண்டித்தனம்.

இக்கொடுமையை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திபுரம் மக்கள் ம.க.இ.க தலைமையில் போராடினார்கள். அரசு சார்பில் ஒரு பஞ்சாயத்தும் கூட்டப்பட்டது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். அம்மனின் அலங்காரத்தை கலைக்காமல் அப்படியே அனுப்பி வையுங்கள் என்பதுதான் காந்திபுரம் மக்களின் கோரிக்கை. காலம் காலமாக உள்ள முறையை மாற்ற முடியாது என பிற உயர் சாதியினர் அனைவரும் ஒரே குரலில் பேசினர். காந்திபுரம் மக்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் கோவில் சாவியை நீந்களே வைத்துக் கொண்டு திருவிழாவையும் நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு அம்மனும் வேண்டாம்; திருவிழாவும் வேண்டாம் என பிற உயர் சாதியினர் அனைவரும் ஏகக் குரலில்  பேசினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றிணைவதில் மட்டும் பிற சாதிக்காரர்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு.

காந்திபுரம் மட்டுமல்ல விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்ட போது கோவில் சாவியைக் கொடுத்துவிட்டார்கள் வன்னியர்கள், ரெட்டியார்கள் உள்ளிட்ட பிற உயர் சாதியினர். இன்றைய உத்தபுரங்கள் வரை இதுதான் நிலைமை.

படிக்காதவர்கள்தான் சாதி பார்க்கிறார்கள். படித்தவர்கள் யாரும் சாதி பார்ப்பதில்லை என்கின்றனர் சிலர்.

ஆனால் இன்று...... அரசு அலுவுலகங்களில்... பொதுத்துறை நிறுவனங்களில்.... நகரங்களில்.....

தொடரும்

ஊரான்

*****

Friday, June 17, 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....

தொடர்ச்சி

எனது உடல் உருவத்தையும் கரிய நிறத்தையும் வைத்து இவன் நமது சாதிக்காரனாய் இருப்பானோ என கருதிக் கொண்டு வணக்கம் வைப்போரும் அல்லது இவன் அந்த சாதிக்காரனோ எனக் கருதி, கண்டு கொள்ளாமல் இருப்பதும் என இரு வேறு மக்கள் பிரிவினரை நான் அன்றாடம் பார்க்கிறேன். நான் யாருடைய ஆளு எனத் தெரியாமலேயே 'நம்ம ஆளுதான்' என எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு நபரைப் பற்றி என்னிடம் அறிய வைக்க ஒரு சிலர் முயலவும் செய்கிறார்கள். இரு வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் அச்சாதிப் பெண்களுக்கு வரன் பார்க்கவேறு சொல்வார்கள். மேற்கண்ட இரு தரப்பாருமே அவ்வாறு முயல்கிறார்கள்.  நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. நான் அவர்களின் சாதிக்காரனா என்பதே அவர்களுக்குக் கவலை.

இதுவரை வணக்கம் வைத்தவன் நான் அவனது சாதிக்காரன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு வணக்கத்தை நிறுத்திவிடுகிறான். இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தவன் நான் அவனது சாதிக்காரன் எனத் தெரிந்து கொண்ட பிறகு வணக்கம் வைக்கத் தொடங்குகிறான்.முன் பின் அறிமுகமே இல்லாதவன் தனது மகனுக்குத் திருமணம் என அழைப்பிதழ் கொடுக்கிறான். நான் குழம்பிப் போகிறேன். நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இதைப் பகிர்ந்த போது, தெரியவில்லை என்றாலும் தங்களது சாதிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுப்பது என முடிவெடுத்து அவ்வாறு ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் திட்டமிட்டு செய்வதாகச் சொன்னார்.

ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்தால் உறவினர்கள்கூட ஒரு சிலர் சில காரணங்களுக்காக கோபித்துக் கொண்டு வராமல் இருப்பார்கள். ஆனால் தனது அலுவலகத்தில் ஆயிரக் கணக்கானோர் பணிபுரிந்தாலும் அதில் தனது சாதிக்காரர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இதுதான் இன்று அலுவலகங்களில் நடுத்தர வர்க்க மக்களிடம் காணப்படும் சாதித் தீட்டு. படித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இச்சாதியத் தீட்டுதான் அலுவலக ஊழியர்களிடம் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பனர்களில் ஐயர், ஐயங்கார், பட்டர், தீட்சிதர் என்றும்; முதலியார்களில் செங்குந்தர், துளுவ வேளாளர், அகமுடையர் என்றும்; நாயுடுகளில் கவரா, கம்மவா என்றும்;  முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையர் என்றும் உட்பிரிவுகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் எந்த உட்சாதிப் பிரிவும் பிற உட்சாதிக்குள் குடும்ப உறவு எதையும் வைத்துக் கொள்வதில்லை.  அதாவது ஒரு செங்குந்த முதலியார் அகமுடைய முதலியாரிடம் சம்பந்தம் செந்து கொள்ள மாட்டார். குடும்ப உறவுகளில் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றாலும் அலுவலகங்களில் "நம்ம ஆளு" என்கிற கருத்தியலில் ஒன்றுபடுகிறார்கள்.

இவர்களுக்கிடையில் குடும்ப உறவு கிடையாது.பிறகு எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? படிநிலையில் தங்களின் சாதிக்கு மேலே இருக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற சாதியினர் ஒன்றுபட்டால் அதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். ஆனால் பார்ப்பனர்கள் எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? தங்களுக்கு மேலே யாரும் வந்துவிடக்கூடாது என்பது பார்ப்பனர்களின் கவலை. இதே கவலைதான் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் ஒரு சிலர் சில இடங்களில் ஆளுமைக்கு வந்துள்ளனர். இந்த ஆளுமையைத்தான் பிற உயர் சாதியினரால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தனது வாய்ப்பை தாழ்த்தப்பட்டவன் தட்டிப் பறித்துவிட்டதாகத்தான் பிற உயர் சாதிக்காரன் நினைக்கிறான். அரசு வகுத்திருக்கிற கொள்கை மற்றும் சட்டங்களின்படிதான் ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியைப் பெறுகிறான்; வேலைவாய்ப்பைப் பெறுகிறான்; பதவி உயர்வு பெறுகிறான். இதற்கு சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்டவன் எப்படி பொறுப்பாக முடியும்? தனிப்பட்ட முறையில் அவன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது எந்த வகையில் நியாயமாகும்? அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாயப்பு என்பதை உத்தரவாதப் படுத்தாத அரசின் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது கோபம் கொள்வது கோழைத்தனமல்லவா!

பார்ப்பனர் உள்ளிட்ட பிற ஒடுக்கும் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து வகையான சதி வேலைகளையும் அரங்கேற்றுகின்றனர். துறைத் தலைவராகவோ, நிறுவனத் தலைவராகவோ, தொழிற்சங்கத் தலைமைக்கோ தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிடக்கூடாது என்பதே இவர்களின் கவலை. உயர் சாதியினர் அனைவரும் ஒன்றாகக்கூடி தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கேவலமாகப் பேசி அவர்களுக்குள்ளேயே கிண்டலடித்துக் கொள்வார்கள். 'கவர்மெண்ட் ஐயர்' என்றும் 'கோட்டா' என்றும் 'மேற்படி' என்றும் பேசும் இவர்களது பேச்சு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுப்பதற்கு ஏதுவானது.

தரமான கல்வி கிடைக்காத கிராமப்புற மாணவனின் திறமை, நகர்ப்புற மாணவனைவிட குறைவாகத்தானே இருக்கும்.  இதை ஏற்றுக் கொள்ளும் உயர் சாதியினர் காலம் காலமாக கல்வி மறுக்கப்ட்ட தாழ்த்தப்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள் சற்றே திறமை குறைவானவர்களாக இருப்பது மட்டும் எப்படி குற்றமாகும்? இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட ஊழியர்களை 'ஜீரோ ' என்றும் 'வேஸ்ட்' என்றும் மிகக் கேவலமாகப் பேசுவது அன்றாடம் அலுவலகங்களில் நடக்கிறது.  இப்படி தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்தும் செயல் அவர்களை எட்டாமல் இல்லை.

இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை தண்டணையிலிருந்து காப்பாற்ற தங்களுக்கு வேண்டிய உயர் அதிகாரிகளின் தயவை நாடுகின்றனர் சாதிச் சங்கத்தினர். என்ன இருந்தாலும் "நம்ம ஆளு" இல்லையா என சப்பைக் கட்டு கட்டுகின்றனர். தனது சாதிக்காரன் என்றால் தாராளவாதமும், பிற சாதிக்காரன் என்றால் கறார் தன்மையும் என்பது இன்று அலுவலகங்களில் காணக்கூடிய ஒரு கேடு கெட்ட நடைமுறை. இத்தகைய சாதிப் பற்றுதான் அலுவலகங்களில் நடைபெறும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு மிகப் பெரிய தடையாக நிற்கிறது. ஐம்பது ரூபாய் கையூட்டு வாங்கிய கடை நிலை ஊழியன் பிற சாதிக்காரன் என்றால் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆனால் இலட்சக் கணக்கில் கையூட்டு பெற்ற தனது சாதிக்காரனை காப்பாற்றுவதற்கு சென்னை முதல் டெல்லி வரை படை எடுக்கிறார்கள்.

கற்பழிக்கும் காமுகனைக்கூட காப்பாற்ற சாதி எனும் ஆயுதத்தை இவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

நீதியும் நியாமும் இந்கே சாதியச் சாக்கடையில் மூழ்கடிக்கப்படுகிறது. இந்தச் சாதியப் போர்வையை பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் முதல் தாழ்த்தப்பட்ட சாதியனர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். பிற உயர் சாதியினர் பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாத சாதியப் போர்வை, தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் போது மட்டும் பிற சாதியனரின் கண்களுக்கு 'பவர்' கண்ணாடி போடாமலேயே தெரிகிறது. உயர்சாதிக்காரன் தவறு செய்யலாம், தாழ்ந்த சாதிக்காரன் செய்யக்கூடாது என்கிற நால்வர்ணக் கோட்பாடுதான் இங்கே கோலோச்சுகிறது. இப்படிச் சொல்வதனால் தாழ்த்தப்பட்டவர்களின் தவறுகளுக்கு நான் சப்பைக்கட்டு கட்டுவதாக நினைக்க வேண்டாம். தவறுகளைக் காண்பதில்கூட சாதியப் பார்வை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன். மற்றபடி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனபதே எனது கருத்தும்.

கிராமமோ நகரமோ தீண்டாமை இன்னும் அகலவில்லை. தன்மையில்தான் மாறுபடுகிறது.

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

முற்றும்

ஊரான்

Wednesday, July 15, 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

காலம் காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி இந்துக்களால் – இங்கே சாதி இந்துக்கள் எனப்படுபவர்கள் தீண்டாமையை கடைபிடிக்கும் சாதியினர் அனைவரும் இதில் அடங்குவர் - தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு வந்ததால் சுதந்திர இந்தியாவிலாவது இந்த இழிவு நீக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கில் இந்திய அரசியல் சாசனத்தின் 17வது பிரிவில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் சுதந்திர இந்தியாவில் தீண்டாமை தொடரவே செய்தது. எனவே தீண்டாமை கடைபிடிப்போரை தண்டிப்பதற்காக தீண்டாமை (குற்றங்கள்) சட்டம் 1955ல் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் 1976 திருத்தியமைக்கப்பட்டு சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம்-1955 என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் தீண்டாமை முன்னிலும் மூர்க்கமாக தொடரவே செய்தது. எனவே 1989ல் வன்கொடுமை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னரும் தீண்டப்படாதவர்கள் மீதான வன்கொடுமையும் தீண்டாமையும் தொடர்ந்து வருகிறது.

தீண்டாமை கடைபிடிப்பதை கைவிட சாதி இந்துக்கள் தயாராக இல்லை. மாறாக வன்கொடுமை தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என கூப்பாடு போடுகின்றனர். வாக்கு வங்கி அரசியல் நடத்தும் ஒரு சில சாதிய அரசியல் கட்சிகளும் இதற்கு தூபம் போடுகின்றன. இதன் விளைவு தற்பொழுது இச்சட்டத்தை தடுத்திட வேண்டுமெனும் சட்ட வரைவு நாடாளுமன்ற நிலைக்குழு முன் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தீண்டாமை தற்போது நவீன வடிவில் கடைபிடிக்கப்படுவதால் எந்தச் சட்டத்தாலும் அதை ஒழிக்க முடியவில்லை.

இப்போதெல்லாம் தீண்டாமை எங்கே இருக்கிறது? யார் கடைபிடிக்கிறார்கள்? என சாதி இந்துக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இளவரசனும் கோகுல்ராஜீம் மாண்டு போனதற்கு தீண்டாமை காரணம் இல்லையா?

வாடகைக்கு வீடு தரும் போது சாதி கேட்காமல் தருகிறார்களா? தீண்டத்தகாதவன் என்றால் வேறு காரணங்களைக் கூறி மறுத்துவிடலாம். இன்னமும்கூட பொது சுடுகாடு கிடையாது. பொதுக்கிணற்றில் / குழாயில் தீண்டப்படாதவர்கள் தண்ணீர் எடுக்க / பிடிக்க முடியாது? தீண்டத்தகாதவர்கள் கோவில்களுக்குள் சென்று சாதி இந்துக்களைப் போல வழிபட முடியாது.

1947க்கு முன்பு தீண்டாமை எப்படி இருந்தது? அதன்பிறகும் தீண்டாமை தொடர்வதற்கான காரணம் என்ன? இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்கள் இவ்வாறு நடத்தப்படுவதற்கு யார் காரணம்? சாதி இந்துக்களில் உள்ள ஒருசிலரின் தூண்டுதலினால் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதா? அப்படியானால் அந்த ஒரு சிலர் தவிர பிற சாதாரண சாதி இந்துக்களிடம் தீண்டாமை எண்ணம் இருப்பதில்லையா?

சாதி இந்துக்களிடம் தீண்டாமை என்பது ஒரு வாழ்க்கை முறையாக – ஒரு பண்பாடாக நிலை பெற்றது எப்படி? தீண்டாமையை கடைபிடிப்பது குற்றமா அல்லது பாவமா என்பது பற்றியெல்லாம் ஒரு சாதி இந்து சிந்தித்துப் பார்ப்பதில்லையே.! ஏன்?. தீண்டாமை ஒரு அநிச்சை செயலாகவல்லவா அவனிடம் குடிகொண்டுள்ளது.

தொடரும்… 
தொடர்புடைய பதிவுகள்:

Saturday, June 13, 2015

தாலியைத் துறப்பதே தமிழனின் அடையாளம்!

”தாலி இல்லைன்னா ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்கிற கற்பு என்னாகுறது” என்று கேட்கிறீர்களே! மகாபாரதத்தில் துரௌபதி என்றொருத்தி இருப்பது தெரிந்துதான் கேட்கிறீர்களா?
கட்டிய புருஷனின் உயிருக்கு ஆதாரம் – தாலி. “விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி!” இதெல்லாம் தெரியாதா மாப்ள?
தாலி– இந்துக்களின் கலாச்சாரமா?- எனக்குத் தெரிந்து மனுதர்ம சட்டத்தில் தாலிகட்டுவது பற்றி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்து மதத்தின் அத்தாரிட்டி மனுவே தாலி பற்றி பேசாத போது நீங்க ஏய்யா முந்திரி கொட்டை மாதிரி?
தாலியை முதலில் அணிந்தது தேவரடியார்கள் எனில் தாலி தேவதாசிகளின் அடையாளமாகத்தானே இருக்க முடியும். அதே ஏன் நம் குலப்பெண்கள் சுமக்க வேண்டும்?
தாலி தமிழனின் பாரம்பரிய அடையாளம் எனில் கணவன் இறந்த பிறகு தாலி அறுக்கும் நிகழ்வு எந்த ஒரு பழந்தமிழ் இலக்கியத்திலும் ஏன் இடம் பெறவில்லை?
பல்லாண்டுகால தமிழனின் வரலாற்றில் எப்போதும் இல்லாது – இடையில் புகுந்த தாலியை பிடித்துத் தாங்கிக் கொண்டிருப்பது தமிழனின் அடையாளத்தையே அழிக்கும் கயமைத்தனம் அல்லவா?
தாலியைத் துறப்பதே தமிழனின் அடையாளம்!

நான் தமிழன். நீங்க?

வினவு தளத்தில் வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை என்கிற கட்டுரைக்கு நான் எழுதிய மறுமொழி இது. தாலி குறித்த பல புதிய தகவல்களைத் தருகிறது இக்கட்டுரை.

Saturday, June 14, 2014

எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!



எச்சில் துப்புவதால் கங்கை போன்ற நதிகள் மட்டுமல்ல சிறு ஓடைகள்கூட ஒருபோதும் மாசடையாது. எச்சில் துப்புவதற்கேன்றே யாரும் நதிகளை நாடிச் செல்வதில்லை. பல் துலக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோதான் வாயைக் கொப்பளித்து துப்புவார்கள். இத்தகையச் செயல்களை கோவில் குளங்களிலும் கிணறுகளிலும்கூட நாம் பார்க்க முடியும்.

எச்சில் துப்புவதனால் கங்கை அசுத்தமாகிவிடும் என்பதைவிட எச்சில் துப்புவதனால் கங்கையின் புனிதம் கெட்டுவிடும் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பொருளில்தான் கங்கையில் எச்சில் துப்புவதைப் பார்க்கிறது பா.ஜ.க நடுவண் அரசு. கங்கையை சுத்தப்படுத்துவது அல்லது தூய்மைப்படுத்துவது என்பதைவிட புனிதப்படுத்துவதே இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் ஆலைக்கழிவுகளையும், நகராட்சிக் கழிவுகளையும் கொட்டி நதிகளை நாசப்படுத்துவோர் மீது பாய்வதற்குப் பதில் எச்சில் துப்புவோர் மீது பாயத் தயாராகிக் கொண்டிருக்கிறது அரசு.

செரிமானத்திற்கு அவசியத் தேவையாகக் கருதப்படும் உமிழ்நீரைத்தானே  எச்சில் என்கிறோம். உணவு உண்ணும் போது வாயை நன்றாக மூடிக்கொண்டு மென்றால்தான் அதிக உமிழ்நீர் சுரக்கும்; இந்த உமிழ்நீரே செரிமானத்தை ஒழுங்கு படுத்தி நமது உடல் நலத்தைக் காக்கும். நமது உடலைப் பேணும். இந்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீர் எப்படி எச்சிலானது?

பணக்காரன் ஏழையின் உமிழ்நீரை எச்சிலாகப் பார்ப்பதைப் போல தாழ்த்தப்பட்டவனின் உமிழ்நீரை உயர்சாதிக்காரன்  எச்சிலாகப் பார்க்கிறான். வர்க்கமும் சாதியுமே இங்க உமிழ்நீரை எச்சிலாக மாற்றியிருக்கிறதோ!

எச்சில் வெறும் உமிழ்நீரோடு மட்டும் தொடர்புடையதல்ல. சாப்பிட்ட பிறகு வீசி எறியப்படும் இலையை எச்சி இலை என்கிறோம். தண்ணீர் குவளையோ அல்லது தேனீர்க் குவளையோ வாயில் பட்டுவிட்டால் எச்சில் குவளை என்கிறோம். சொந்த சாதிக்காரன் எச்சில் படுத்திவிட்டால் கழுவினாலே போதும். எச்சில்பட்ட குவளை பரிசுத்தமாகிவிடும். ஆனால் தாழ்த்தப்பட்டவன் எச்சில் படுத்திவிட்டால் கழுவினாலும் எச்சில் போகாது. அது எச்சிகரை படிந்ததாகவே கருதப்படும். அதனால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேனீர்க்கடைகளில் தனிக்குவளை வைக்கப்படுகிறது.

கிளி கடித்த மாங்காயும், குரங்கு கடித்த கொய்யாவும் இனிப்பைத் தருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவன் எச்சில் மட்டும் அருவெறுப்பைத் தருகிறது. ‘காக்கா கடி’யில்கூட சாதி இருக்கிறது.

ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுவிட்டால் அவள்  கடைசி வரை கரைபடிந்தவாளகவே கருதப்படுகிறாள். வேறு வார்த்தையில் சொன்னால் அவள் புனிதமற்றவள். அதே போலத்தான் எச்சிக்கரை படிந்த குவளையும் புனிதத் தன்மையை இழந்து விட்டதாக பார்க்கப்படுகிறது.
  
புனிதம் மதத்தோடு தொடர்புடையது. இந்து – இஸ்லாம் - கிருஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் புனிதம் பொருந்தும் என்றாலும். இங்கே கங்கை இந்து மதத்தின் புனிதமாக கருதப்படுகிறது. மினரல் வாட்டரில் நீங்கள் முங்கி எழுந்தாலும் அது புனித நீராடல் ஆகிவிடாது. ஆனால் கூவத்தைவிடக் கேவலமான நிலையில் கங்கை இருந்தாலும் அந்தக்  கங்கையில் முங்கி எழுந்தால் அது புனித நீராடலாகிவிடும். புனிதமே இங்குப் பிரதானமானது; காக்கப்பட வேண்டியது. அதனால்தான் எச்சில் துப்பினால் கங்கையின் புனிதம் கெட்டுவிடும் என்பதால் அபராதம் - சிறை பற்றி பேசுகிறது அரசு.

எச்சில் மதத்தோடு மட்டுமல்ல இந்து மதத்தைப் பொருத்தவரை அது தீண்டாமையோடும் தொடர்புடையது. எச்சிலும் – புனிதமும் - தீண்டாமையும் இந்து மத நெறிமுறைகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. தீண்டாமையும் புனிதமும் நீடிக்கும் வரை எச்சில்தான் நமக்குப் புனிதமானது. புனிதம் பேசும் இடங்களிலெல்லாம் கங்கையாய் பெருகட்டும் நமது எச்சில்!