Tuesday, January 21, 2020

சென்னை புத்தகக் காட்சி: அப்படி என்னதான் இருக்கிறது அங்கே?


படிக்காத ஒருவன் ஒரு புதிய விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மற்றொருவன் சொல்வதைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும். அந்த மற்றொருவனும் படிக்காதவனாக இருந்தால் அவன் ஒரு மூன்றாம் நபரிடம் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மூன்றாம் நபர் நான்காம் நபரிடமிருந்தும், நான்காம் நபர் ஐந்தாம் நபரிடமிருந்துதான் தெரிந்து கொள்ள முடியும். இப்படி யாரோ ஒருவரிடமிருந்துதான் குறிப்பிட்ட விசயம் பற்றிய புரிதல் தொடங்க முடியும். இப்படி வாய்வழியாகத் தெரிந்து கொண்டு அறிவை வளர்த்துக் கொள்வது ஒரு வகை. இதில் யாருமே படித்திருக்க வேண்டியதில்லை. மொழி எழுத்து வடிவம் பெறாதவரை இப்படித்தானே இருந்திருக்க முடியும். மொழிகள் வளர்ச்சி அடைந்த இன்றைய காலத்திலும் இத்தகைய முறையில் செய்திகள் பரிமாறிக் கொள்வது நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த முறையில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் பொழுது கடைசி நபரிடம் வந்து சேரும் போது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்து விடுவதும் உண்டு.

ஒரு புதிய விசயத்தைத் தெரிந்து கொள்வதற்கான மற்றொரு வழி எழுத்து வடிவம். ஒரு புதிய எழுத்து வடிவக் கருத்து ஒன்று மற்றொரு எழுத்து வடிவக் கருத்திலிருந்து தொகுக்கப்பட்டிருக்கலாம் அல்லது மேலே சொன்னது போல படிக்காதவர்கள் பரிமாறிக் கொண்ட கருத்துக்களே எழுத்து வடிவம் பெற்றிருக்கலாம். எழுத்து வடிவம் நேற்றுவரை அச்சு வடிவத்தில் இருந்தது. இன்று மின்னணு வடிவமாக வளர்ச்சி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் அச்சு வடிவும் முற்றிலுமாகக் காணாமல்கூட போகலாம். நாம் மின்னணு வடிவத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகவும் மாறலாம். எனினும் பேச்சு வடிவம் போல எழுத்து வடிவம் மாறக் கூடியதல்ல. எனவே இதில் நம்பகத் தன்மை அதிகம்.

கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் முன்பு ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் பெரும் பங்காற்றின. இன்று புத்தகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நாளை மின்னணு முக்கியப் பங்காற்றலாம். விசயங்களைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல பல்வேறு ஆய்வுகளுக்கும் புத்தகங்களே ஆதாரமாய் விளங்குகின்றன. வாய்வழிச் செய்தியாகவோ அல்லது ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகளில் மட்டுமே இருந்த கருத்துக்கள் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அச்சு வடிவம் பெற்றதனால் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்பிறகே அவற்றின் உண்மைத் தன்மை குறித்த விவாதங்கள் தொடங்கின. அதுவரை சொல்லப்பட்டு வந்த கருத்துக்களை அப்படியே தலையாட்டி ஏற்றுக் கொண்ட மக்கள், அச்சு வடிவில் படித்த பிறகு ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினர். வரலாறு, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், பண்பாடு என சகல துறைகளிலும் மனிதனின் சிந்தனை விரிவடைந்தது. அச்சிந்தனை எழுத்து வடிவம் பெற்று நம் கைகளிலே நூல்களாகத் தவழ்கின்றன. எழுத்து வடிவம் வருவதற்கு முன்பு யாரும் சிந்திக்கவில்லை என்று இதற்குப் பொருள் அல்ல. அன்றைய சிந்தனையாளர்கள் தங்களது கருத்துக்களை வாழ்வழியாக மட்டுமே பிறருக்குக் கடத்தினர்.

பழையன காக்க, புதியன படைக்க, பொழுது போக்க, பணம் ஈட்ட என எழுத்துக்கு நோக்கங்கள் பல உண்டு. சிந்தனை எழுத்தாகி, எழுத்து அச்சாகி, பின் அதுவே நூலாகி தன் கைகளில் விழும் போது படைப்பாளி பரவசமடைகிறான். ஆனால் அது அனைவரது கைகளிலும் தவழ்ந்தால்தான் அவன் அடுத்தப் படைப்பை ஆக்க முடியும். அச்சகமும் அச்சமின்றி அடுத்த நூலைக் கோர்க்க முடியும். இல்லையேல் படைப்புகள் பரணியில் துயில் கொள்ள நேரிடும்.

‘நூலோரே’ நூட்கள் ஆக்கிய காலம் போய் ‘கீழோரும்’ ஆக்கும் காலம் இது. அதனால் நூல்களுக்குப் பஞ்சமில்லை. நூல்கள் எதுவானாலும் அவற்றை வஞ்சமின்றி வாரி வழங்குவதில் சென்னைக்கு மிஞ்சி யாரும் இல்லை என்பதைதான் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் மெய்ப்பித்து வருகிறது. சென்னை மெரினாவில் கால் நனைக்கிறோமோ இல்லையோ புத்தகக் காட்சியில் கட்டாயம் கால் பதித்தாக வேண்டும். அப்படி என்ன அங்கே இருக்கிறது?

அது ஒரு பெருங்கடல். அங்கே விலை மலிவு மத்தி முதல் விலை மதிப்பற்ற சிங்கி வரை அள்ளிவர ஏராளம் உண்டு. சில ஆண்டுகளாக நான் தவறாது நீந்தும் கடல் இது. இந்த ஆண்டு காட்சி முடியும் முதல் நாள் அன்று ஓடினேன் கடலை நோக்கி. நீந்தி இளைப்பார நேரம் இல்லை என்றாலும் கால் நனைத்து கீழைக்காற்றின் ஸ்பரிசத்தோடு கரையேறினேன்.

ஊரான் 

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சி: எதற்காக?



No comments:

Post a Comment