Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Sunday, September 3, 2023

சிதைந்து வரும் அரசு கட்டமைப்பும் சீற்றம் கொள்ளும் மக்களும்!

மயக்கம் தரும் படிப்பினைகள்

2023, ஆகஸ்டு 29 அன்று சென்னைக்கு ஒரு அவசர‌ பயணம். இரவு போதிய தூக்கமில்லை. அலாரம் ஏமாற்றிவிட்டதால் காலை நான்கு மணிக்கு எழவேண்டிய நான், ஐந்து மணிக்கு எழுந்து அவசர அவசரமாகப் புறப்பட நேர்ந்தது. ஐந்தரை மணிக்கு வாலாஜா டோல்கேட்டை அடைந்த போது லேசான தூரல். சென்னை செல்லும் பேருந்துகளில் உட்கார இடம் கிடைக்குமா எனக் காத்திருந்து, கடைசியில் வேறு வழியின்றி நின்று கொண்டே பயணிக்க நேர்ந்தது.

முன்பக்க படிக்கட்டு அருகே கம்பியைப் பிடித்துக் கொண்டே ஒரு அரை மணி நேரம் பயணித்திருப்பேன். காஞ்சி மீனாட்சிக் கல்லூரியில் இருவர் இறங்குவார்கள் என்பதை அறிந்து, இடம் பிடிப்பதற்காகத்தான் படிக்கட்டு ஓரம் நின்று பயணித்தேன். சிறிது நேரத்தில் தாகம் எடுத்து, நா வறண்டு விட்டது. மயக்கம் வரும் போலத் தோன்றியது. பேருந்தின் நடுவில் கூட்டத்தோடு நின்றிருந்த எனது துணைவியாரிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த போதே நான் பேருந்தின் மேல் படிக்கட்டில் விழுந்து கிடந்தேன். அருகிலிருந்த இளைஞர் ஒருவர்தான், நான் பேருந்திலிருந்து கீழே விழாமல் தடுத்து என்னைக் காப்பாற்றி உள்ளார். இல்லையேல் என் கதை அன்றே முடிந்திருக்கும். 
 
ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது தண்ணீர் குடித்த பிறகு சற்றே மயக்கம் தெளிய, வலது பக்க பின்மண்டையில் காதருகே வலி தெரிந்தது. கைவைத்து பார்த்த போது லேசான வீக்கம். நான் மயங்கி விழுந்தபோது ஏதோ ஒரு கம்பியில் எனது தலை மோதி அடிபட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. காலை உணவிற்காக சாலையோர ஓட்டல் ஒன்றில் பேருந்து நின்றபோது கொஞ்சம் பிஸ்கட்டையும், ஒரு கப் காபியையும் எடுத்துக் கொண்ட பிறகு உடலில் ஓரளவு தெம்பு ஏற்பட்டதால் பயணத்தைத் தொடர்ந்தேன்.
 
அகவை அறுபத்தைந்தில் மூன்று மணி நேரம் எடுக்கும் ஒரு பயணத்தில் நின்று கொண்டு பயணிக்கலாமா? கூடாது என்பது தெரிந்தாலும் அவசரத்திற்குப் போய்த்தானே ஆகவேண்டி உள்ளது. காலையில் எடுக்க வேண்டிய எல்ட்ராக்சினை எடுத்திருந்தாலோ, நா வறண்ட போது உடனடியாகத் தண்ணீரைப் பருகி இருந்தாலோ, நிற்க முடியாத போது கவுரவம் பார்க்காமல் யாரிடமாவது உட்கார இடம் கேட்டோ அல்லது கீழே உட்கார்ந்து கொண்டோ பயணித்திருந்தாலோ இதெல்லாம் நடந்திருக்காதுதானே? இதை எல்லாம் செய்யத் தயங்கியது ஏன்? அல்லது தடுத்தது எது? கேள்விகள் மட்டுமே எஞ்சி நிற்கிறது. எது நடந்தாலும், பயணங்களின் போதான எனது தேடல் மட்டும் தொடர்கின்றன.

வெறித்து நிற்கும் பறக்கும் சாலை

பூந்தமல்லியில் ஒருசிலர் இறங்கிக் கொள்ள, மதுரவாயல் வழியாக கோயம்பேட்டை நோக்கிப் பயணித்தபோது, சாலையின் நடுவே உள்ள பறக்கும் சாலைக்காக அமைக்கப்பட்ட ஓங்கி உயர்ந்து நிற்கும் மொட்டைத் தூண்கள் எண்ணற்ற கேள்விகளை என்னுள் எழுப்பின. மதுரவாயிலையும் துறைமுகத்தையும் இணைப்பதற்கான பறக்கும் சாலை அமைப்பதற்கானத் திட்டம் 2009 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ரூ.1815 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு அதற்காக எழுப்பப்பட்ட தூண்கள்தான் இவை. கடந்த பதினைந்து ஆண்டுகளில் வாகனங்களைச் சுமக்க வேண்டிய இந்தத் தூண்கள், இசைக் கச்சேரி விளம்பரங்கள், தலைவர்களின் பிறந்த நாள் வாழ்த்து உள்ளிட்ட எண்ணற்ற சுவரொட்டிகளை மட்டுமே சுமந்து நிற்கின்றன. 


இது கலைஞர் மூளையில் உதித்தத் திட்டம் என்பதால், அடுத்து 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவால் இத்திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அன்றே உலவினாலும், அது கூவம் நதிநீர் ஓட்டத்திற்குத் தடையாக இருக்கும் என்பதால் கைவிடப்பட்டதாக அதிமுக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 இல் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்றப் போவதாக அறிவித்தது. 

மிகக்குறுகிய காலத்திலேயே துருப்பிடித்து இத்தும் போகும் தன்மை கொண்டவை இரும்புக் கம்பிகள். துருப்பிடித்தல் என்பது சேன்சரைப் போன்றது. ஒருமுறை துருப்பிடித்து விட்டால் அது மொத்தத்தையும் அரித்துக் தின்றுவிடும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக கடும் மழையிலும், பனியிலும், வெயிலிலும் தூண்களுக்கு மேலே துருத்திக் கொண்டிருக்கும் இரும்புக் கம்பிகளை அப்படியே பயன்படுத்தினால் என்னவாகும் என்பதுதான் எனது கேள்வி. 

ஆனால், எனது கேள்விக்கு இனி இங்கே இடமில்லை. ஏற்கனவே 15% வேலைகள் முடிவடைந்து சுமார் ரூ.270 கோடியை விழுங்கிய இத்திட்டம் முற்றிலுமாக புதிய வகையில் ரூ.5855 கோடி மதிப்பில், இரண்டு அடுக்கு பறக்கும் சாலையாக மாற்றி அமைக்கப்படவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து, மதுரை எய்ம்ஸ் ஒற்றைக்கல் புகழ் மோடி அவர்களால் கடந்த ஆண்டு, மே 16 இல் அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. 

புதிய பாதை அமைக்கும் போது, பழையத் தூண்களை அப்படியே விடப்போகிறார்களா அல்லது அகற்றப் போகிறார்களா? அப்படியே விட்டால் போக்குவரத்துக்கு இடையூறு; அதனால் அகற்றுவதைத்தவிர வேறு வழி இல்லை. பழைய திட்டத்தை முடக்கியதால் ஏற்பட்ட இந்த மொத்த இழப்பிற்கும், சனாதனப் பேர்வழி, செத்தும் கெடுத்த சீதக்காதி சென்டிமெண்ட் ஜெயலலிதாதானே காரணம்? இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என சிந்தனையில் ஆழ்ந்த போது, மதுரவாயில் சாலையிலிருந்து கோயம்பேடு மார்க்கெட் சாலைக்குள் பேருந்து நுழைந்தது. 

தியோடலைட்டுகளை மறந்த பொறியாளர்கள்

கோயம்பேடு மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலைய நிறுத்தத்தில் ஒரு சிலர் இறங்கிக் கொள்ள, முன்னோக்கிச் செல்ல பேருந்து திணறியது. முதல் நாள் பெய்த 4 செ.மீ மழைக்கே சாலையில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி, செல்லும் வாகனங்களால் அலை எழுப்பிக் கொண்டிருக்க, ஒரு ஐம்பது எருமை மாடுகள் மார்க்கெட்டுக்கு உள்ளே இருந்து மழைநீரில் தவழ்ந்து எதிரே வர, இதன் ஊடே பேருந்தை லாவகமாக நகர்த்திச் சென்றார் ஓட்டுநர்.

இது பெரு மழை அல்ல; மழை பெய்து பல மணி நேரம் ஆன பிறகும் நீர் வடியவில்லையே? ஏன்? சாலை மற்றும் வடிகால் அமைப்பு அந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பொருள். இதற்குப் பிரியாவை நொந்து கொள்வதா, இல்லை மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு தியோடலைட்டுகளைக் கையாளத் தெரியவில்லை என்று புரிந்து கொள்வதா?

தெருவில் சுற்றித் திரியும் பசுமாடு, ஒரு பச்சிளங் குழந்தையை மிகக் கொடூரமாக தாக்கியக் காட்சியை ஊடகங்களில் கண்டு மக்கள் பதறிய போதும் எருமை மாடுகள் எப்படி சென்னை நகரில் சுதந்திரமாக உலாவர முடிகிறது? சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுதான் நிலைமை. எருமைத் தோல் அதிகாரிகள் மாறாதவரை மாடுகளுக்குக் கொண்டாட்டம்; நமக்கோ திண்டாட்டம்தான்.

சிதைந்து வரும் அரசு கட்டமைப்பும் சீற்றம் கொள்ளும் மக்களும்

கோயம்பேடு பேருந்து நிலைய பின்பக்க நுழைவு வாயில் வழியாக நுழைந்து போது சாலையின் இருபுறங்களிலும் ஒவ்வொரு மரத்தடியின் கீழும் முளைத்திருந்த கண்ணாடிக் காடுகளைப் பார்க்கையில், இம்மரத்தடிகள் எல்லாம் முந்தைய இரவில் குடிமகன்களின் உல்லாசபுரிகளாக இருந்துள்ளன என்பதை உணர முடிந்தது.

தமிழ்நாட்டில் செயல்படும் போராளிக் குழுக்கள் வன்முறை எதிலும் ஈடுபடாத இன்றைய சூழலில், அவர்களைக் கண்காணிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட Q பிரிவு உளவுத்துறையினரை ஏவினாலாவது அவர்களுக்கும் வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும், கண்ணாடிக் காடுகள் விதைப்போரை கட்டுப்படுத்தின மாதிரியும் இருக்கும். செய்வார்களா? மாட்டார்கள்; காரணம், குடியே சட்டபூர்வமானபிறகு அதன் பின்விளைவுகள் மட்டும் சட்டவிரோதமாகிவிடுமா என்ன? வள்ளுவனுக்குக் கோட்டங்களையும், சிலைகளையும் அமைத்து என்ன பயன்? அவன் சொல்லிச் சென்ற கள்ளுண்ணாமையை உண்மையாகக்கினால் மட்டுமே அவனுக்கும் மரியாதை; ஆள்வோருக்கும் மரியாதை. 


கண்ணாடிக் காடுகளைக் கடந்து சென்று பேருந்திலிருந்து இறங்கி கோயம்பேடு பேருந்து நிலைய முன்பதிவு ஆட்டோ மையத்தை அனுகினோம். காக்கிச் சட்டையில் அமர்ந்திருந்த ஒருவரிடம், நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லி முன்பதிவு செய்யச் சொன்னபோது அவர் வெளியே வந்து ரூ.200 ஆகும் என்றார். அவர் ஆட்டோ ஓட்டுநர். வழக்கமாக ரூ.120 க்குப் பதிலாக ரூ.200 கேட்டால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்?
ரூ.200 வாங்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஓகோவென்று வாழ்ந்துவிடப் போவதுமில்லை, ரூ.200 கொடுக்கும் அளவுக்கு பலரும் ஓகோவென்று வாழ்வதும் இல்லை. கடைசியில் ரூ.160 க்கு எமது பயணத்தைத் தொடர்ந்தோம். 

மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசின் கட்டமைப்பு சிதையும் போது, அது ஆளும் அரசுக்கு எதிரான சீற்றமாக மாறும் என்பதைத்தான் முடங்கிப் போன முன்பதிவு மையங்கள் உணர்த்துகின்றன. 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி

Wednesday, January 6, 2021

கோமாதாக்களின் கழிசலில் பூவிருந்தவல்லி!

பூவிருந்தவல்லிக்கு திடீரென இன்று ஒரு குறும் பயணம். பேருந்து நிலையத்தில் கால் பதித்த போது சென்ற ஆண்டு ஜனவரியை நினைவு படுத்தியது. ஆங்காங்கே தேங்கி நின்ற மழை நீரும், கோமாதாக்களின் கழிவுகளும் எச்சரிக்கை மணி எழுப்ப, சேர்ந்திருந்த சிறுநீரை இறக்கிவிட்டு, நான் சந்திக்க வேண்டியவர் வர தாமதமாகும் என்றதனால் சற்றே இளைப்பாற அவர் சொன்ன இடம் சென்றேன். அவ்விடம் பேருந்துகள் நிற்குமிடம் மட்டுமல்ல வாழ வழியற்றோரின் வாசஸ்தலம் என்பதையும் புரிந்து கோண்டேன்.

பூவிருந்தவல்லியிலே கோரைப் புல்லும் தாராக்கட்டைகளுமா முளைத்திருக்கு, கோமாதாக்கள் நற்சாணம் தள்ள? நாம் வீசியெறியும் மிச்சங்களும் கூழ் படிந்த காகிதங்களும் அவைகளின் அன்றாட உணவாய் இருக்கும் போது மனிதக் கழிவை விட மட்டமாய்த்தானே வெளியே தள்ளும், கழிசலாய். துப்புரவுப் பணியாளர்களுக்கு இது பெரும் சுமையன்றோ?  கோமாதாக்களை போற்றுவோர் ஒரு நாள் 'டூட்டி' பார்த்தால் தெரியும் வேதனை என்னவென்று?


மணி பத்தைத் தொட்டது. பசி வயிற்றைக் கிள்ள, பேருந்துகள் வெளியே வரும் 'கார்னர்' கடையில் இட்டிலி நான்கு, வடை ஒன்றை வடகறியோடு உள்ளே இறக்கினேன். எவ்வளவு என்றேன்? கம்மிதான், இருபத்தைந்து என்றனர். ஏழைகள் நுழையும் இடமல்லவா? அதற்கு மேல் என்றால் அங்கெல்லாம் யார்தான் நுழைவர்?

பக்கத்துக் கடையின் தேநீர் தொண்டைக்குள் இதமாய் இறங்க, டைம்ஸ் ஆஃப் இன்டியாவை லேசாய்ப் புரட்டினேன். "What caused downpour?" என வினா எழுப்பி அது லா நினோவின் நர்த்தனம் என்றது.

லா நினோவும், எல் நினோவும் வழக்கமானவைதான், 'டவுன் போர்' ஒன்றும் அதிசயமல்லவே? "What caused stagnation?" எனத் தலைப்பிட்டிருந்தால், வடிகால் இன்றி சிறு மழைக்கே சென்னை மிதக்கும் அவலம் ஒருவேளை உரைப்பவர்களுக்கு உரைத்திருக்குமோ என எண்ணியவாறு தாள்களைப் புரட்டினேன்.

இரண்டாம் உலகப் போரின் இரண்டாயிரம் தியாகிகளுக்கு இரண்டு ஆண்டுகளாய் மோடியின் மெத்தனத்தால் ஓய்வூதியம் கிடைக்கப் பெறாமல் கடந்த ஆண்டில் மட்டும் 176 பேர் மரணித்த செய்தி கண்டு, மாடுகளுக்கான அரசில் இது ஒன்றும் அதிசயமல்லவே என மேலும் புரட்டினேன்.

பசுவை வதைத்தால் ஏழு ஆண்டு வரை சிறை எனும் காவிகளின் கட்டளைக்கு கர்நாடகக் கவர்னர் கண்ணசைத்தச் சேதியைக் கண்டு இங்கே கோமாதாக் கழிசலில் கால் வைத்தால் பரலோகம் நிச்சயமாச்சே? இதைத் தடுக்க இங்கு சட்டம் ஏதும் உணடோ? என எண்ணியவாறு வந்த வேலை முடிந்து ஊர் திரும்பினேன்.

ஊரான் 

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, January 21, 2020

சென்னை புத்தகக் காட்சி: அப்படி என்னதான் இருக்கிறது அங்கே?


படிக்காத ஒருவன் ஒரு புதிய விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மற்றொருவன் சொல்வதைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும். அந்த மற்றொருவனும் படிக்காதவனாக இருந்தால் அவன் ஒரு மூன்றாம் நபரிடம் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மூன்றாம் நபர் நான்காம் நபரிடமிருந்தும், நான்காம் நபர் ஐந்தாம் நபரிடமிருந்துதான் தெரிந்து கொள்ள முடியும். இப்படி யாரோ ஒருவரிடமிருந்துதான் குறிப்பிட்ட விசயம் பற்றிய புரிதல் தொடங்க முடியும். இப்படி வாய்வழியாகத் தெரிந்து கொண்டு அறிவை வளர்த்துக் கொள்வது ஒரு வகை. இதில் யாருமே படித்திருக்க வேண்டியதில்லை. மொழி எழுத்து வடிவம் பெறாதவரை இப்படித்தானே இருந்திருக்க முடியும். மொழிகள் வளர்ச்சி அடைந்த இன்றைய காலத்திலும் இத்தகைய முறையில் செய்திகள் பரிமாறிக் கொள்வது நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த முறையில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் பொழுது கடைசி நபரிடம் வந்து சேரும் போது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்து விடுவதும் உண்டு.

ஒரு புதிய விசயத்தைத் தெரிந்து கொள்வதற்கான மற்றொரு வழி எழுத்து வடிவம். ஒரு புதிய எழுத்து வடிவக் கருத்து ஒன்று மற்றொரு எழுத்து வடிவக் கருத்திலிருந்து தொகுக்கப்பட்டிருக்கலாம் அல்லது மேலே சொன்னது போல படிக்காதவர்கள் பரிமாறிக் கொண்ட கருத்துக்களே எழுத்து வடிவம் பெற்றிருக்கலாம். எழுத்து வடிவம் நேற்றுவரை அச்சு வடிவத்தில் இருந்தது. இன்று மின்னணு வடிவமாக வளர்ச்சி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் அச்சு வடிவும் முற்றிலுமாகக் காணாமல்கூட போகலாம். நாம் மின்னணு வடிவத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகவும் மாறலாம். எனினும் பேச்சு வடிவம் போல எழுத்து வடிவம் மாறக் கூடியதல்ல. எனவே இதில் நம்பகத் தன்மை அதிகம்.

கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் முன்பு ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் பெரும் பங்காற்றின. இன்று புத்தகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நாளை மின்னணு முக்கியப் பங்காற்றலாம். விசயங்களைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல பல்வேறு ஆய்வுகளுக்கும் புத்தகங்களே ஆதாரமாய் விளங்குகின்றன. வாய்வழிச் செய்தியாகவோ அல்லது ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகளில் மட்டுமே இருந்த கருத்துக்கள் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அச்சு வடிவம் பெற்றதனால் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்பிறகே அவற்றின் உண்மைத் தன்மை குறித்த விவாதங்கள் தொடங்கின. அதுவரை சொல்லப்பட்டு வந்த கருத்துக்களை அப்படியே தலையாட்டி ஏற்றுக் கொண்ட மக்கள், அச்சு வடிவில் படித்த பிறகு ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினர். வரலாறு, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், பண்பாடு என சகல துறைகளிலும் மனிதனின் சிந்தனை விரிவடைந்தது. அச்சிந்தனை எழுத்து வடிவம் பெற்று நம் கைகளிலே நூல்களாகத் தவழ்கின்றன. எழுத்து வடிவம் வருவதற்கு முன்பு யாரும் சிந்திக்கவில்லை என்று இதற்குப் பொருள் அல்ல. அன்றைய சிந்தனையாளர்கள் தங்களது கருத்துக்களை வாழ்வழியாக மட்டுமே பிறருக்குக் கடத்தினர்.

பழையன காக்க, புதியன படைக்க, பொழுது போக்க, பணம் ஈட்ட என எழுத்துக்கு நோக்கங்கள் பல உண்டு. சிந்தனை எழுத்தாகி, எழுத்து அச்சாகி, பின் அதுவே நூலாகி தன் கைகளில் விழும் போது படைப்பாளி பரவசமடைகிறான். ஆனால் அது அனைவரது கைகளிலும் தவழ்ந்தால்தான் அவன் அடுத்தப் படைப்பை ஆக்க முடியும். அச்சகமும் அச்சமின்றி அடுத்த நூலைக் கோர்க்க முடியும். இல்லையேல் படைப்புகள் பரணியில் துயில் கொள்ள நேரிடும்.

‘நூலோரே’ நூட்கள் ஆக்கிய காலம் போய் ‘கீழோரும்’ ஆக்கும் காலம் இது. அதனால் நூல்களுக்குப் பஞ்சமில்லை. நூல்கள் எதுவானாலும் அவற்றை வஞ்சமின்றி வாரி வழங்குவதில் சென்னைக்கு மிஞ்சி யாரும் இல்லை என்பதைதான் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் மெய்ப்பித்து வருகிறது. சென்னை மெரினாவில் கால் நனைக்கிறோமோ இல்லையோ புத்தகக் காட்சியில் கட்டாயம் கால் பதித்தாக வேண்டும். அப்படி என்ன அங்கே இருக்கிறது?

அது ஒரு பெருங்கடல். அங்கே விலை மலிவு மத்தி முதல் விலை மதிப்பற்ற சிங்கி வரை அள்ளிவர ஏராளம் உண்டு. சில ஆண்டுகளாக நான் தவறாது நீந்தும் கடல் இது. இந்த ஆண்டு காட்சி முடியும் முதல் நாள் அன்று ஓடினேன் கடலை நோக்கி. நீந்தி இளைப்பார நேரம் இல்லை என்றாலும் கால் நனைத்து கீழைக்காற்றின் ஸ்பரிசத்தோடு கரையேறினேன்.

ஊரான் 

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சி: எதற்காக?



Saturday, September 17, 2011

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாமா?

"திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது, இறை வழிபாட்டின் ஓர் அங்கம்.

இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர். மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.

எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்ரகத்துடன் வாழவைக்கும். தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கும்.  திலகத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும்போது "இதன் மூலம் நான் கடவுளை எப்போதும் மனத்தில் இருத்துகிறேன். இறைத் தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவிப் பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும் நேர்மையும் உண்மையும் நிறையட்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றித் திலகம் லட்சுமிகரமானது என்பர். எனவே குங்குமம் வைக்கும்போது, "ஸ்ரீயை நமஹ' என்றோ, "மகாலட்சுமியே போற்றி' என்றோ சொல்லியபடி வைத்துக்கொள்வது நலம் பயக்கும்."

17.09.2011 தினமணி வெள்ளிமணியில் குமரன் என்பவர் "பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்? என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இது.


"திலகம்,பொட்டு,குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது,  இறை வழிபாட்டின் ஓர் அங்கம்"


மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை என்பது மட்டுமே இங்கே முழு உண்மையாக இருக்க முடியும். இறை வழிபாட்டின் ஓர் அங்கம் என்பதுகூட முழு உண்மை அல்ல.  பொட்டு இல்லாமல் இருந்தால் அமங்கலி என இழிவாகப் பார்ப்பதால்தான் சமூகத்திற்குப் பயந்து பல பெண்கள் ஏதாவது ஒரு பொட்டை வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்ளும் போதுகூட தன்னுடைய முகத்திற்கும், நிறத்திற்கும், அன்று உடுத்தியிருக்கின்ற உடைக்கும், காலில் அணிந்திருக்கும் செருப்புக்கும் பொருத்தமான ஒரு பொட்டைத்தான் பலரும் தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் 'ஸ்டிக்கர்' பொட்டுகளே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இது பொட்டில் பொதிந்திருக்கும் இன்றைய அழகியலின் உளவியல்.
அதனால்தான் முகங்களிற்கு ஏற்ற பொட்டு, எந்த வடிவமான முகத்திற்கு எந்த வடிவ பொட்டு அதாவது சதுர முகம், வட்ட வடிவ முகம், முக்கோண வடிவ முகம், இதய வடிவ முகம் என முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டை தேர்வு செய்யச் சொல்கிறார்கள்.


நெற்றியில் எட்டனாவை ஒட்டியதைப் போல வைக்கப்படும் குங்குமப் பொட்டுகள் பட்டிக்காட்டின் அடையாளங்கள். உற்றுப்பார்த்தாலும் தெரியாத 'ஸ்டிக்கர்' பொட்டுகள் நவீன காலப் பெண்களின் அடையாளங்கள். இன்றையப் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டுமா என்ன?

நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் நெற்றிப் பொட்டை குளிர்விப்பதற்கும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுப்பதற்கும் தீய சக்திகள் நம்மை அணுகாமல் இருப்பதற்கும்  தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காப்பதற்கும் பொட்டு பயன்படுகிறது என்பது உண்மையானால் இத்தகைய நன்மைகள் கிடைப்பது நல்லதுதானே. பிறகு ஏன் விதவைகள் பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது என இச்சமூகம் தடை போடுகிறது. விதவைகள் மட்டும் இத்தகையப் பயன்களைப் பெறக்கூடாதா?

வெள்ளிமணி கட்டுரை பற்றி " விதவைகளை ஏன் குங்குமம் இடக்கூடாது என்று அவர்களை ஓரங்கட்டுகின்றோம்?"  என்று கார்த்தி என்ற வாசகர் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

பொட்டு வைத்துக் கொள்ளாதவர்கள் சாதனைகள் எதையும் செய்வதில்லையா? அல்லது பொட்டு வைத்தப் பெண்கள் மட்டும்தான் சாதனைகள் புரிகிறார்களா? எதற்காகப் பொட்டுக்கு இத்தனை அறிவியல் சாயம் பூசுகிறார்கள்? நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் பொட்டு முக்கியப் பங்காற்றுகிறது என்பது உண்மையானால் இந்துப் பெண்கள்தானே, அதுவும் பொட்டு வைத்துக் கொள்கிற இந்துப் பெண்கள்தானே அறிவின் உச்சாணியில் இருக்க வேண்டும். 

பொட்டு வைப்பதால் இவ்வளவு பயன் என்றால் ஆண்களும் அதுபோல வைத்துக் கொள்வதில்லையே ஏன்? இந்து மதத்தின் 'பெருமையை' மேலை நாடுகளில் பறைசாற்றிய விவேகானந்தர்கூட பொட்டோடு இருக்கும் படத்தைக் காணமுடியவில்லை. அவர் நெற்றியில் பொட்டு இல்லை என்பதால் அவரிடம் பக்தி இல்லை என்று பொருளாகிவிடுமா?
தீய எண்ணங்கள் எழாமல் பொட்டு பாதுகாக்கிறதாம்.இதை ரஞ்சிதாக்களிடமும் நித்தியாநந்தாக்களிடமும்தான் கேட்க வேண்டும்.

இந்து மதத்தின் அடையாளமாக மட்டுமே தோன்றிய பொட்டு இன்று அழகியலின் ஒரு கூறாக மாறிவிட்டது. பொட்டு வைத்துக் கொண்டால் நீ அழகாய் இருக்கிறாய் என்று ஒருவர் சொல்லிவிட்டால் அந்தப் பொட்டை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். பொட்டு உனக்கு நல்லா இல்லை என்று சொல்லிவிட்டால் அடுத்த கணமே அந்தப் பொட்டு குப்பைத் தொட்டியில் ஒட்டிக் கொள்கிறது. இதற்கு மேலே பொட்டில் ஒரு வெங்காயமும் இல்லை.

மதம் மாறிய கிருத்தவர்களிடம் இந்து மதத்தின் எச்சங்கள் இருப்பதால்தான் அவர்களிடமும் பொட்டு இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

பொட்டு கலைந்துவிட்டால் தாலிக்கு ஆபத்து என்று சொல்லித்தான் பொட்டைப் பாதுகாத்து வருகிறார்களே தவிர பொட்டில் இருக்கும் அதி உயர்ந்த 'அறிவியல் உண்மைகளால்' அல்ல. பேருந்துகளில் ஏற்படும் நெரிசலும், சென்னைப் புழுக்கமும் சேரும் போது கெட்டியாய் ஒட்டிய 'ஸ்டிக்கர்' போட்டுகளே காணாமல் போகும் போது குங்குமப் பொட்டின் கதி என்ன என்பதை எண்ணிப் பாருங்கள்! சென்னையில் ஆகப் பெரும்பான்மையான பெண்கள் பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் விதவையாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாறி வரும் சமூகச் சூழலில் பண்பாட்டு விழுமியங்கள் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது. "அய்யய்யோ பொட்டு போச்சே" என ஒப்பாரி வைப்பதாலோ அல்லது அதற்கு அறிவியல் சாயம் பூசுவதாலோ அவற்றை பாதுகாக்க முடியாது. பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை. அமங்கலி - சுமங்கலி என மாதர்தம்மை இழிவு செய்யும் பொட்டு இருக்க வேண்டிய இடம் நெற்றியல்ல,  குப்பைத் தொட்டி.