Monday, January 13, 2020

மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி


சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்ற போது பறக்கும் ரெயில் மேம்பாலத்தருகில் எங்கு திரும்பினாலும் காக்கிச் சட்டைகளாகவே காட்சி அளித்தன. போதாக்குறைக்கு ஐப்பதுக்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் வேறு. வாலாசா சாலை என்றாலே M.A.சிதம்பரம் ஸ்டேடியமும் கிரிக்கெட்டும் நினைவுக்கு வராமல் போகாது. வாலாசா சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. நடந்து செல்பவர்களைக்கூட அனுமதிக்கவில்லை. வரப்போகும் மிகப் பெரிய கலவரத்தைத் தடுப்பதற்கு காவல்துறை தயாராய் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.

அப்படி ஒன்றும் அங்கு நிகழப் போவதில்லை என்பது போலீசாருக்கும் தெரியும். பிறகு எதற்கு இத்தனை கெடுபிடிகள்? பொதுமக்களை அச்சமூட்டுவதற்காக காவல்துறை கையாளும் யுக்தி இது. இன்று தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைளை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்ப்பில் கோட்டையை நோக்கிப் பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். அதற்குத்தான் இத்தனை கெடுபிடி.

நூற்றுக்கணக்கான மக்கள் அதிகார அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுத்தி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. நான் அங்கிருந்த வழக்கறிஞர் அணியோடு இணைந்து கொண்டேன். போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டால் அதில் தலையிடுவதற்கும், போராடும் மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிப்பதற்கும், போராட்டக் களத்தில் வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காகத்தான் நானும் சென்னை சென்றேன்.

காலையில் பெய்த கனமழையின் சுவடுகள் எதுவும் தெரியவில்லை. கதிரவன் உக்கிரமாக மேலேறிக் கொண்டிருந்தான். உச்சிவெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இளம் பெண் காவலர்கள் வெயில் கொடுமையால் சற்றே களைப்புற்றனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வெயில் ஒரு பொருட்டாகவேத் தெரியவில்லை. விருப்பத்தோடு ஒரு வேலையில் ஈடுபட்டால் எதிர்வரும் இடர்கள் எதுவாயினும் அது ஒரு பொருட்டே அல்ல என்பதை உணர்த்தியது அவர்கள் எழுப்பிய முழக்கம்.

இடையிடையே போராட்டத்தின் அவசியம் குறித்து பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் உரையாற்றினர். “Say No CAA, Say No NRC, Say No. NPR” என்ற பாடலை ம.க.இ.க பாடகர் கோவன் பாடியபோது ஆர்ப்பாட்டம் கலை கட்டியது. பிற்பகல் 1.30 மணி அளவில் அர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு கோட்டையை நோக்கிப் பேரணியாக புறப்பட்டவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை.

கைது செய்யப்பட்டவர்கள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அங்கு சென்றோம். மறு உத்தரவு வரும்வரை அவர்களை மண்பத்தில் பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறையினுடையது என்பதால் அங்கும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கைதிகளை முறையாக நடத்துகிறார்களா? உணவு உள்ளிட்ட தேவைகள் மற்றும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்கும், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதற்காக முறையிடுவதற்கும்தான் வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

நகராட்சி சமுதாயக் கூடம் என்பதால் பராமறிப்பு ஏதுமின்றி பூத்பங்களாவாய்க் காட்சி அளித்தது. சும்மா கொடுத்தால்கூட யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுக்கேறி கிடந்தது. கழிப்பறைகளோ கவனிப்பாரற்றுக் கிடந்தது.

போராட்டக்காரர்களுக்கு உணவு ஏற்பாடு உறுதி செய்யப்பட்ட பிறகு  பகல் உணவைத் தேடினேன். புதுப்பேட்டை இன்னொரு பேரணாம்பட்டு போல இருந்தது. இங்கு சைவ உணவைத் தேடுவது, ஹரித்துவாரில் அசைவ உணவைத் தேடுவது போலாகிவிட்டது. புதுப்பேட்டையில் எங்கு திரும்பினாலும் பீப் பிரியாணிதான். பீப் இல்லாமல் சாப்பாடா? இதுதான் புதுப்பேட்டையின் புறநிலை. மாட்டுக்கறிக்கு எதிராகக் களமாடும் வடநாட்டு சங்கிகள் இங்கு வந்தால் அவர்களது சங்கும் பிரியாணி ஆகிவிடும் போல.

மீண்டும் மண்டபத்திற்கு வந்தேன். ஆயிரம் பேர் ஓரிடத்தில் அடைக்கப்பட்டிருந்தாலும் அங்கு கூச்சல் குழப்பம் இல்லை. உணவு வாங்கும்போது தள்ளுமுள்ளு இல்லை. சும்மா இருந்தாலே நேரத்தைக் கொல்வது என்பார்கள். ஆனால் இங்கே பேச்சு, பாட்டு என அறிவார்ந்த விசயங்களைப் பகிர்ந்து கொண்டதால் நேரம் போனதே தெரியவில்லை.

அனுமதியின்றி பேரணி சென்ற குற்றத்திற்காக போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் மாலை 7 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். காலையில் பெய்த மழையால் கர்ப்பம் கலைந்ததா என்பதை ‘நம் முன்னோர்கள்தான்’ உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய மழையால் சென்னையின் தூசு மாசிலிருந்து எனக்கும் விடுதலைதான். இல்லையேல் ஈஸ்னோபில் என்னை சிறைபடுத்தி இருக்கும்.

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

No comments:

Post a Comment