Saturday, August 5, 2023

'அக்கா'வின் ஆட்டுக் குட்டி தலையாட்டுமா?

ஆடு வளர்த்தாவது பெரியாளாகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் அந்தத் தாடிக்காரன். சீமைக்குட்டியே சிறந்த குட்டி என்று கணக்குப் போட்டு தேடிப் பிடித்து ஓட்டி வந்தான். இலை கிடைக்கும் இடமாய்ப் பார்த்து வளர்க்கத் தொடங்கினான். 

ஆடு குட்டியாய் இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாய்த்தானே இருக்கும். அதனால் போவோர் வருவோரெல்லாம் குட்டியை கொஞ்சத் தொடங்கினர். 

பலமுறை, பிடறியால் தன்மொகரையைப் பேர்த்தபோதும்,  பாவம் குட்டிதானே' என்று பொறுத்துக் கொண்டான் இலை கொடுத்தவன்.

கொங்கக்காவின் பராமரிப்பில் பக்குவமாய் வளர்ந்து வந்தது ஆட்டுக் குட்டி. குட்டிக்குப் பசி எடுக்கும் போதெல்லாம், அது வேலி தாண்டக்கூடத் தயங்கியதில்லை. அக்கம் பக்கம் சண்டைக்கு வந்த போதும், அவள் பொருமை காத்தாள். எப்படியாவது எதையாவது தின்று குட்டி பெருத்தால் சரி என்பது அவள் கணக்கு.

குட்டி இப்பொழுது கொழுகொழுவென வளர்ந்து கிடாவாகி விட்டது. கோவிலுக்கு நேர்ந்து விட்டாற்போல அது ஊரெங்கும் திரியத் தொடங்கியது. 

தூர விரட்ட நினைத்தோரை அது முன்னங்கால்களால் எட்டி உதைத்தும், குட்டைக் கொம்புகளால் முட்டப்பார்த்தும் துரத்த முனைந்தது. அது பாவ்லாதான் எனப் புரிந்து கொண்டோர் துரத்தி விரட்டினர்; பயந்து நடுங்கியோர் ஒதுங்கிச் சென்றனர்.

மாதங்கள் உருண்டோடின. ஆடியும் வந்தது. சீமையிலே மழை சரியாய்ப் பொழியாததால் ஆற்றிலும் நீர் பெருக்கெடுக்கவில்லை. இருந்தாலும் என்ன? கசியும் நீரிலாவது கடமையை முடிக்க வேண்டுமல்லவா?

இதோ பதினெட்டும் வந்து விட்டது. கிடாவைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, பூ மாலையிட்டு, வீதி வழியாக ஆற்றை நோக்கி ஓட்டலானாள் கொங்கக்கா. போகும் வழி நெடுக, மாலைநேர கறிவிருந்தை நினைத்து நாக்கில் எச்சில் ஊற, ஆட்டுக்குக் கட்டுக் கட்டாய் புல்' கொடுத்து குதூகலித்தது உடன் சென்ற கூட்டம்.

ஆறும் நெருங்கியது. அங்கேயும் ஒரு பெருங்கூட்டம் ஆட்டுக்காகக் காத்திருந்தது. பூஜைகள் கனஜோராய் நடக்கத் தொடங்கின. பூஜை முடிந்து மேடைநோக்கி ஆட்டை ஓட்டிச் சென்றனர். பூசாரி தீர்த்தச் செம்போடு மேடையை நெருங்கினான். 

உள்ளூர் கிடாவென்றால் தீர்த்தம் தலையில் பட்டவுடன் தலையாட்டிவிடும். ஆனால், இது சீமைக்காய் கிடாவாச்சே! தலையை ஆட்டுமா ஆட்டாதா என்ற பதட்டத்தில்  கொங்கக்கா!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

1 comment:

  1. கறிவிருந்து தின்னும் வெறியில் எப்படியும் தண்ணீர் தெளித்துத் தலையாட்ட வைப்பார்கள்.

    சாமி பெயரைச் சொல்லிச் செய்யும் படுகொலை!

    ReplyDelete