Wednesday, August 2, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "விவசாயிகளுக்கு விடிவே இல்லையா?" இறுதிப் பகுதி!

வேளாண்மையில் இன்று உழவுக்கும், சில இடங்களில் விதைப்புக்கும், அறுவடைக்கும் டிராக்டர்கள் மற்றும் எந்திரங்கள்  பயன்படுத்தப்படுகின்றன. மற்ற வேலைகள் பெரும்பாலும் இன்னமும் மனிதர்களைத்தான் நம்பி இருக்கின்றன. 

விவசாய வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் 100 நாள் வேலைக்குச் சென்று விடுவதால் விவசாயம் அழிந்து வருவதாக ஒரு பக்கம் அறியாமையில் சிலர் பிதற்றி வருகின்றனர். 100 நாள் வேலை வருவதற்கு முன்பு ஏதோ விவசாயம் செழித்தோங்கி இருந்தது போலவும் இவர்கள் கதைக்கின்றனர். ஓராண்டில் 100 நாள் போக மீதி 265 நாட்கள் மனித சக்தியை வேளாண்மையில் ஈடுபடுத்தினால் விவசாயம் வளர்ச்சி அடைந்து விடுமா?

தற்போதைய சூழலில் அரசு அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டே விவசாயம் செய்பவர்கள், ஆயிரக் கணக்கில் அரசிடமிருந்து மாதஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வேளாண்மையில் ஈடுபடுபவர்கள், கள்ளச்சாராயம்-கந்துவட்டி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு விவசாயம் செய்பவர்கள் என விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் தங்களுடைய வசதிகளை பெருக்கிக் கொள்ள முடியும். ஏனைய பெரும்பான்மை வேளாண் குடிகளின் வாழ்க்கையில் கடந்த ஆண்டுகளில் பாரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவுமில்லை; இனி நிகழப் போவதுமில்லை.

உலக அளவில் வேளாண் உற்பத்திக் கருவிகள் பெருமளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் பங்கு-பாகப்பிரிவினைகளால் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலங்கள் துண்டு துண்டாக விரவிக் கிடப்பதனால்  ஒரே நேரத்தில் ஒரே வகையான பயிர்களை நவீனக் கருவிகளைக் கொண்டு சாகுபடி செய்யவதில் சிரமங்கள் இருக்கின்றன. 

சிறுவீத உற்பத்தியிலிருந்து பெருவீத உற்பத்திக்கு வேளாண்மை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்குத் துண்டு துக்காணி நிலங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சமன்படுத்தி பெரும் பண்ணைகளாகக் கட்டமைக்கப்பட வேண்டும். உற்பத்திக் கருவிகள் மற்றும் வேளாண் இடு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வேளாண்மை ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு அதில் பணிபுரிபவர்கள் தொழிலாளர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். இன்றைய கிராமப்புற குடியிருப்புகள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் வரவு செலவு, இலாப-நட்டக் கணக்குப் பார்க்கப்படுவதைப் போல வேளாண்மையிலும் பார்க்கப்பட வேண்டும். இலாபம் இல்லாத வேளாண் பண்ணைகளை மேம்படுத்துவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். 

அனைத்து வகை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உள்ள சம்பள வேறுபாட்டைக் குறைத்து, கிட்டத்தட்ட உழைப்புக்கேற்ற ஊதியம் அல்லது சமமான ஊதியம் பெறுகின்ற வகையில் ஊதியக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். 

இத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்கவும் அதற்கு இசைவான ஒரு அரசை நிறுவவும் முயற்சிப்பது ஒன்றுதான் வேளாண் குடிகளின் விடுதலைக்கு வழி வகுக்கும்.

*****

வாலாஜாவில் அடுத்த சில வேலைகள்  எனக்காகக் காத்திருந்ததால், நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பனம்பழத்தை ருசி பார்க்கும் ஆசை என்னைத் துரத்தியதால், தொடர் சாரல் மழை காரணமாக இரண்டு நாள் முயற்சித்து பழத்தைச் சுடமுடியாமல்,  கடைசி நாளில் அது கைகூடியதால் ஒரே நேரத்தில் மூன்று கொட்டைகளைக் கொண்ட ஒரு முழு பழத்தையும் சுவைத்து முடித்தேன்.

இத்தனை நாள் இருந்தும் காட்டுக்குள் போகாமலா ஊர் திரும்புவது என உள்ளம் துள்ளியதால், கணுக்காலில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்திக் கொண்டு மாலை வேளையில் மெல்ல நடந்து காட்டுக்குள் சென்றேன். கலாக்காயைத் தேடிச் சென்ற போது, எலந்தை, சூரை, காரை, பூலாச் செடிகள் கண்ணில் பட்டன. பழங்கள் கிடைக்கும் பருவம் இது இல்லை என்றாலும் ஒரு பூலாச்செடியில் மட்டும் சில பழங்கள் பளிச்சிட்டன. இனிப்பு கசப்பும் புளிப்பும் துவர்ப்பும் கொண்ட சில பூலாப்பழங்களை வாயில் போட்டு அதக்கியவாறு காட்டுக்குள் நீண்ட தூரம் சென்றேன். கலாச்செடி மட்டும் கண்ணில் படவேயில்லை. ஆனால் கண்ணில் பட்டவையோ காலி பாட்டில்களே!

கண்ணாடிக் காடுகளை வளர்க்கும் அரசை நம்பினால் வேளாண் குடிகளுக்கு இனி விடுதலை இல்லை; வேறு வழியைத்தான் நாடு வேண்டும் என எண்ணியவாறு காட்டை விட்டு வெளியேறினேன்.

எட்டி நின்று பார்த்தால் கிராமங்கள் பசுமையாகத்தான் தெரியும். நெருங்கினால்தான் அதன் துயரம் புரியும். 

பச்சை வேர்க்கடலைகளை கொஞ்சம் பையிலே திணித்ததனால் முதுகுப் பாரம் சற்று கூடியதே ஒழிய, இந்த ஒரு வாரத்தில் மனசு லேசாகி உறவுகளிடம் விடைபெற்றுக் கொண்டு மறுநாள் ஊர் திரும்பினேன்.

முற்றும்.

ஊரான்

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உழைத்துப் பார்! தெரியும் களைப்பு!" தொடர் - 5



7 comments:

  1. ரவிக்குமார் ப: எட்டி நின்று பார்த்தால் கிராமங்கள் பசுமையாகத்தான் தெரியும். நெருங்கினால்தான் அதன் துயரம் புரியும்.

    👌👌 நெத்தியடி

    ReplyDelete
  2. பழனி.கே: தங்கள் பதிவுகள் என்னுடைய சிறுவயது கிராம வாழ்க்கையை நினைவூட்டியது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வைத்தியநாதன்: அரசு நூறு நாள் வேலைவாய்ப்பு விரயம்.
    வசதியானவர்களும் பெயரை பதிவு செய்து விட்டு மேம்போக்க வந்துட்டு போவது...
    செய்த வேலையையே மீண்டும் ஒப்புக்கு செய்வது..
    பாலூரிலிருந்து பெரிய ஏரிக்கு வரும் கால்வாயை தூர்வாருவதில்லை.
    சும்மாவே ஏரிக்கரையை பலப்படுத்துவது.
    பெயரளவில் பெருமையா பேசினாலும் பயனற்றது.

    ReplyDelete
    Replies
    1. 100 நாள் வேலை திட்டத்தில் நிறைய குளறுபடிகள், குறைபாடுகள் உண்டு. அதில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே பெரும் பங்கு வகிக்கிறது.

      Delete
  4. சாம்: 100 நாள் வேலையால் விவசாயம் அழிந்து கொண்டு இருப்பது உண்மைதான். 5 ஏக்கர் வைத்துள்ள சிறு விவசாயி உள்பட அனைத்து விவசாயிகளும் பாதிகிக்கபடுகிறார்கள். மேலும் விவசாய வேலை செய்வதை கேவலமாகப் பார்க்கிறார்கள். அடுத்த தலைமுறையில் விவசாயம் முழவதும் அழியும் ஆபத்து உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நவீன பெருவீத உற்பத்திக்கு மாறாமல் வேளாண்மையைக் காக்க முடியாது. அதற்கான காரணிகளையும் நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

      Delete
  5. ரவிக்குமார்.ப: டாஸ்மாக் ஆல் ஏற்பட்டுள்ள அவல நிலையை ' காலி பாட்டில்கள் ' சொற்றொடர் பொட்டில் அறைந்தால் போல் பறைகிறது 👌👌

    ReplyDelete