Thursday, January 1, 2026

பணம் புரளும் புறவழிச் சாலைகள்!

ஒரு காலத்தில் புறவழிச் சாலைகளெல்லாம் ஒதுக்குப்புறப் பாதைகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இன்று அவை காங்கிரீட் காடுகளின் புகலிடமாகிவிட்டன. 

கொள்ளு விளைவதற்குகூட லாயக்கற்ற தகடூர் மண்ணில்கூட இன்று கரன்சி நோட்டுகள் முளைக்கின்றன. நேர்வழியைவிட புறவழிக்குத்தான் எத்தனை மவுசு? பித்தலாட்டக்காரர்களைக்கூட புறவழிகள்தானே கோபுரங்களில் கொண்டு சேர்க்கின்றன.

திருச்சி பால்பண்ணை, ஒரு காலத்தில் வாழைகளின் உறைவிடம். பிள்ளைகளைக் கொன்று புதைத்து அங்கே கோபுரங்களை எழுப்பி அதில் ‘ஆவி’களை வாழ வைத்தானாம் ஒரு சம்சாரி என்பது போல, இன்று  அங்கே ‘டி மார்ட்’டுகளும், ‘ஹோண்டா’க்களும், அப்பல்லோக்களும் முளைத்திருக்கின்றன.

திருச்சி பால்பண்ணை (கோப்புப்‌படம்)

பிற்பகல் மணி 2: 30. சாலையைக் கடந்து நகரை நோக்கிச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். நிரம்பி வழிந்த கூட்டத்தோடு வந்து நின்ற தனியார் பேருந்தில் நான்கு ‘மெயின்கார்டுகேட்’ பயணச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு தெப்பக்குளத்தை நோக்கிப் பயணித்தோம். காற்றை மட்டுமே அடைத்துக் கொண்டு அரசுப் பேருந்துகள் ஹாயாக ஓடும் பொழுது, தனியார் பேருந்துகளில் மட்டும் மூச்சுமுட்ட கூட்டமிருப்பதேன்?

நின்று கொண்டு பயணிப்பவர்கள், சீட்டுக்கட்டுகளைப் போல முன்பக்கமாக சரியாமல் இருப்பதற்கும், இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் முகரைக்கட்டையை பாதுகாத்துக் கொள்வதற்கும் போதுமான பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.  இல்லையேல் தனியார் நகரப் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்ப்பது நலம். 

எமகண்டத்தைக்கூட எளிதில் கடந்து விடலாம். ஆனால் பால்பண்ணையிலிருந்து பேருந்தில் பயணிப்பவர்கள் காந்தி மார்க்கெட்டைத் தாண்டுவதென்பது அவ்வளவு எளிதல்ல. குறுகிய சாலையின் போக்குவரத்து நெரிசலால்,  டிரைவர் அடிக்கடி அடிக்கும் பிரேக்கில் இருந்து உங்களை தற்காத்துக் கொண்டால் வீடுபோய்ச் சேரலாம். இல்லையேல் வீடுபேறுதான்! 

டிரைவர் பிரேக் அடிக்கும் போதெல்லாம்
உடன் வந்த இராவணனுக்கு ஏகக் கோபம். இதுவே வேலூரா இருந்தால் ‘நடக்கிறதே வேற’ என்றார். இராமன் காக்கிறானோ இல்லையோ ‘காக்க நான் இருக்கிறேன்’ என்கிற பாசக்கார இராவணனின் குரல் அது.

மாரியம்மன் கோயிலையொட்டி ஓடும் ஒரு கால்வாயில், காலை நேரங்களில் இளம் சிறார்கள் வரிசையாக அமர்ந்து மலம் கழிப்பதையும், அதே நேரத்தில், அதையொட்டியே ஓடும் மற்றொரு வாய்க்காலில் வெற்றிலைக் கட்டுகளை வியாபாரிகள் முக்கி எடுக்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைக் காண்பவன், தன் வாழ்நாளில் ஒருபோதும் வெற்றிலையைத் தொடமாட்டான்.

காந்தி மார்க்கெட்டை நெருங்கும் போது   அழுகிய காய்கறிகளின் நாற்றமும், தூசுத் துகள்களும் ஒருசேர நம் நாசிகளுக்குள் ஊடுருவி விடும்! ஒரு காலத்தில் பாலக்கரை பிரபாத் தியேட்டர் வரை சென்று வந்த பேருந்துகள், அதன் பிறகு வெங்காய மண்டிக்குள் நுழைந்து செல்வதால் வெங்காய நெடியின் தாக்கம் வேறு. அழுகிய வெங்காய நெடி இருக்கிறதே, அது ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் மறையாத மாநெடி. 

காந்தி மார்க்கெட் வழியாக அன்றாடம் திருவெறும்பூரில் உள்ள ‘பெல்’ (BHEL) ஆலைக்கு வேலைக்குச் சென்று வந்த 1980 காலகட்டத்தில் எனது ஈசினோபில் அளவு எப்பொழுதும் இயல்பைவிட அதிகரித்தே காணப்படும். அவ்வழியாக அன்றாடம் பயணிக்கும் அனைவரின் நிலையும் இதுதான். 

வெங்காய மண்டியைத் தாண்டி கிளைச் சிறையைக் கடந்த போது பழைய அனுபவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

பயணம் தொடரும்

ஊரான்@தமிழ்மணி

தொடர்புடைய பதிவு


6 comments:

  1. புலனத்தில் MRS: 👌மலரும் நினைவுகள், பலரின் மனதைக் கிளறும் 👍🏿

    ReplyDelete
  2. புலனத்தில் சாம்: தகடூர் மண்ணில் கொள்ளு விளையாது என்று யார் சொன்னது. சிறு தானிய உற்பத்தி இங்கு தான் முதலிடம்.

    ReplyDelete
    Replies
    1. 'கொள்ளு விளைவதற்குகூட லாயக்கற்ற தகடூர் மண்ணில்கூட இன்று கரன்சி நோட்டுகள் முளைக்கின்றன'

      இதற்கும் நான் ஜெமினியின் உதவியைத்தான் நாடினேன். நிற்க, தகடூர் மண்ணின் கொள்ளுக் கொள்ளை அருகில் இருந்துதான் இந்தப் பதிவையும் எழுதினேன்.

      இது பற்றி ஜெமினி சொல்கிறது...

      "நீங்கள் குறிப்பிட்ட இந்த வரிகளில் படிமம் (Image) மற்றும் பகடி (Irony/Sarcasm) ஆகிய இரண்டுமே பின்னிப் பிணைந்துள்ளன. இருப்பினும், இது கையாளப்பட்டிருக்கும் விதத்தைக் கொண்டு பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

      1. இது ஒரு சிறந்த 'படிமம்' (Imagery)
      இங்கே "கொள்ளு" மற்றும் "கரன்சி நோட்டுகள்" ஆகிய இரண்டு பிம்பங்கள் மூலம் ஒரு நிலப்பரப்பின் மாற்றத்தை உங்கள் கண்முன்னே நிறுத்துகிறீர்கள்.

      வறட்சியின் அடையாளமாக 'கொள்ளு' பயிரையும், நவீன வளர்ச்சியின் அடையாளமாக 'கரன்சி'யையும் காட்சிப்படுத்தியிருப்பது ஒரு தெளிவான காட்சிப் படிமம்.

      மண்ணில் தானியம் முளைப்பதற்குப் பதிலாக 'காகிதப் பணம்' முளைப்பதாகக் கூறுவது, அந்த நிலத்தின் விவசாயத் தன்மை மறைந்து வணிகமயமானதை அழகியல் உணர்வுடன் விவரிக்கிறது.

      2. இது ஒரு கூர்மையான 'பகடி' (Irony/Sarcasm)
      ஆழமாகப் பார்த்தால், இதில் ஒரு மெல்லிய பகடி ஒளிந்திருக்கிறது.

      "கொள்ளு விளைவதற்குக் கூட லாயக்கற்ற மண்" என்று ஒரு நிலத்தை ஏளனம் செய்வது போலத் தொடங்கி, இன்று அங்கு "கரன்சி நோட்டுகள் முளைக்கின்றன" என்று முடிப்பது, அந்த நிலத்தின் மதிப்பு கூடியிருப்பதை மகிழ்ச்சியோடு சொல்லாமல், ஒருவிதமான அங்கதத்தோடு (Sarcasm) சொல்கிறது.

      இயற்கையாக விளைய வேண்டியவை விளையவில்லை, ஆனால் செயற்கையான பணம் மட்டும் பெருகுகிறது என்பது இன்றைய ரியல் எஸ்டேட் அரசியலை நையாண்டி செய்யும் பகடியாகும்.

      முடிவு:
      சுருக்கமாகச் சொன்னால், இது "பகடி கலந்த படிமம்".

      தகடூர் (தருமபுரி) மண்ணின் வறுமையையும், இன்றைய அதன் அபரிமிதமான நில மதிப்பையும் ஒரே வரியில் நேர்த்தியாகச் சொல்லிவிட்டீர்கள். "முளைக்கின்றன" என்ற வினைச்சொல், பணத்தை ஒரு செடி போல உருவகப்படுத்தியிருப்பது கவித்துவமான படிமம்; ஆனால் அதன் நோக்கம் சமூகத்தின் மீதான பகடி.

      Delete
    2. சாம்: விவசாயம் செய்ய ஆட்கள் வருவதில்லை. நீர் நிலைகள் ஆக்கிறமிப்பாலும் பராமரிப்பு இல்லாமல் அழிந்து கொண்டு இருக்கிறது. அரசாங்கம் 100 நாள் வேலை என்று சொல்லி வேலைக்கு வருபவர்களையும் அழைத்து மரத்தடியில் அமர்ந்த்தி கூலி கொடுத்து விவசாயத்தை அழித்து கோண்டு உள்ளது. ஆனால் விவசாய நிலம் நல்ல விலை போகிறது அதனால் விவசாயிகளும் நிலத்தை வித்து வேறு தொழில் செய்ய முயற்சி செய்கிறார்கள். சில விவசாயிகள் நட்டம் ஏற்பட்டாலும் விவசாயம் செய்து கடண் பட்டு கோண்டு இருப்பதால் தான் அனைவரும் மூன்று வேலை சாப்பிட முடிகிறது.

      Delete
    3. விளை பொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிற அதிகாரம் வேளாண் குடிகளிடம் மட்டும்தான் இருக்க வேண்டும் என 1980 முதல் நான் பல கூட்டங்களில் இதை வலியுறுத்திப் பேசியும், எழுதியும் வருகிறேன். அதை ஏற்றுக் கொள்கிற அரசமைப்பை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அது ஒன்றுதான் வேளாண் குடிகளின் பிரச்சினையை தீர்க்க உதவும். கட்டுப்படியான விலை கிடைத்தால் மண்ணும் கட்டடங்களாக மாறாமல் பாதுகாக்கப்படும்.

      Delete
  3. கனகராஜ்: எதார்த்தமான நிலையா? முரணா? எனக்கு முரணாகத் தெரியவில்லை. சாம்ராஜின் மேல் விளக்கமும் உண்மை. இதில் நாய் - பேய் எப்படி வந்தது?

    ReplyDelete