Showing posts with label பிஸ்கட். Show all posts
Showing posts with label பிஸ்கட். Show all posts

Sunday, April 21, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் - 2

ஒரு வயதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்குப் பெரும்பாலும் மாலை நேரத் தேநீர் எங்களது வீட்டில்தான். தேநீரோடு பிஸ்கட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பிஸ்கட் இல்லை என்றால் “ஆண்ட்டி! அறிவிருக்கா? பிஸ்கட்கூட வாங்கி வைக்காம இருக்க! பிஸ்கட் இல்லாம எப்படி டீ குடிக்கறது?” என எனது துணைவியாரிடம் கடிந்து கொள்வாள்.

“அடியேய்! உங்கள மாதிரி எங்களுக்கு வசதி கிடையாது! நாங்க வாடகை வீட்லதானே குடி இருக்கோம். நாங்க என்ன உங்கள மாதிரி காரு வச்சிருக்கோமா? நீ போய் உங்க வீட்ல இருந்து எடுத்துட்டு வா!” என செல்லமாக பதில் கூறும் போது “எங்க அப்பா மாதிரி அங்க்கிள கோயிலுக்குப் போகச் சொல்லு. நெறய காசு வரும். எங்கள மாதிரி நீங்களும் காரு வாங்கலாம். சொந்தமா வீடு வாங்கிக்கலாம்” என ஆலோசனை கூறுவாள்.

நாங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதையும், அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் அதே வீட்டை ஓரிரு ஆண்டுகளில் விலை கொடுத்து வாங்கி சொந்த வீடாக்கிக் கொண்டதையும், அடுத்த ஆண்டிலேயே அவர்கள் புதிதாகச் சொந்தக் கார் வாங்கியதையும் புரிந்து கொண்டுதான் அவள் அவ்வாறு கூறினாள். கோவிலுக்குச் சென்று பூசை செய்தால் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு இவற்றை எல்லாம் பெறலாம் என்பது அவளது புரிதல்.

அவளது அப்பா ஆகமவிதிகளின் கீழ் வரும் கோவிலுக்கும் செல்கிறார்; சாதாரணக் கோவிலுக்கும் செல்கிறார். இது அன்றாடம் அவர் செய்யும் அர்ச்சகர்த் தொழில். இது தவிர திருமணம், புதுமனைப் புகுவிழா, காரியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார். அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை முடக்கித் தங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகராகக் கூடாது என்பதற்காக உச்சநீதி மன்றம் வரை சென்று இன்று வரை தங்களது ஆதிக்கத்தை பார்ப்பனர்கள் நிலைநாட்டி வருகிறார்கள் என்பது தெரியாத வயது அவளுக்கு. அதனால்தான் வெள்ளந்திரியாய் அவள் என்னிடம் அர்ச்சகர் வேலைக்குச் செல்லச் சொல்கிறாள்.

நாட்கள் வேகமாக உருண்டோடுகின்றன. மழலையர் பள்ளிப்படிப்பை முடித்து, முதல் வகுப்பிற்குச் செல்கிறாள். அவள் வளர வளர, அவளது பேச்சில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு நாள் எங்களது வீட்டில் இரவு உணவின் போது குழந்தை என்பதால் அவளுக்கு கொஞ்சமாகச் சோறு போடுகிறார் எனது துணைவியார். தட்டில் உள்ள சோறு தீர்ந்தவுடன் “ஆண்ட்டி சாதம் போடு” என்கிறாள். “சாதம் இல்லடி, சோறுனு கேளு!” என்ற போது “சோறுனு சொல்லக்கூடாது, சாதம்னுதான் சொல்லனும்” என பதில் கூறினாள்.

“நாங்கள்லாம் உங்கள மாதிரி பேசமாட்டோம். வீட்டை ‘ஆத்து’னுதான் சொல்லுவோம். தண்ணிய ‘ஜலம்’னுதான் சொல்லுவோம்.” என மேலும் சில உதாரணங்களை எடுத்தியம்புகிறாள்.

“ஏய்!‘ஆத்து’னா தண்ணி போற ஆறு! நீங்க என்ன அங்கேயா குடியிருக்கீங்க?” என கிண்டல் செய்த போதும் “அய்யோ ஆண்ட்டி! தண்ணி போறதுக்குப் பேரு ஆறு! இது ‘ஆத்து!’...‘ஆத்து!’ வீட்டை நாங்க அப்படித்தான் சொல்லுவோம்” என மிகப் பொருமையாக ஒரு ஆசிரியரைப் போல விளக்கமளித்தாள்.

“நாங்க பிராமிண். இப்படித்தான் பேசுவோம். எங்க லேங்குவேஜ் இதுதான்” என பெருமைவேறு பட்டுக்கொண்டாள்.

எங்களது உறவினர்கள் பலரும் இவளுக்கு உற்ற நண்பர்கள். எல்லோரும் இவளோடு கிண்டலும் கேலியுமாய் இருக்கும் போது, அவளும் எங்களை கிண்டலும் கேலியும் செய்வாள். சென்ற வாரம் இவளது குடும்பம் சென்னைக்குக் குடிமாறிச் செல்ல ஆயத்தமாகிக்  கொண்டிருந்தபோது ஒரு நாள் நானும் எனது துணைவியாரின் அக்கா பேத்தியும் “என்ன ஆத்த காலிபண்ணிட்டு சென்னைக்குப் போறீங்களாமே?” எனக் கிண்டலாய் கேட்டபோது “எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்றுவிட்டாள். "டீ போட்டாச்சு, குடிச்சிட்டுப் போ" என வலியுருத்திய போதும் அன்றைய மாலை நேரத் தேநீரை அவள் புறக்கணித்துவிட்டாள்.

தொடரும்.....

தொடர்புடைய பதிவு: 

பார்ப்பனியம் பிறவிக் குணமா? ... பகுதி-1