Showing posts with label அர்ச்சகர். Show all posts
Showing posts with label அர்ச்சகர். Show all posts

Wednesday, September 20, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-10

கர்ப்ப தோஷம், மாதவிலக்கு போன்றவற்றில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது சனாதனம் என்பது குறித்து ஏற்கனவே பார்த்துள்ளோம்.

பெண் அர்ச்சகர்கள்: சனாதானத்திற்கு சம்மட்டி அடி

பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களை ஒரு இழி பிறவியாகவே நடத்துகிறது சனாதனம். பார்ப்பன-சத்திரிய-வைசியப் பெண்களாக இருந்தாலும், அவர்களுக்குப் பூணூல் அணியும் உரிமையை மறுத்து சூத்திர நிலைக்குத் தள்ளிவிடுகிறான் மனு (மனு 2:66). 

வேத-மந்திரம் ஓதுகின்ற உரிமை சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டதால்தான், ஆகமக் கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள், அதாவது சூத்திரர்கள் அர்ச்சகர் ஆவதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது பார்ப்பன சனாதனக் கும்பல். மனுவின்படி பெண்களும் சூத்திரர்கள் என்பதால் அவர்களுக்கும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது.

மாதவிடாய்க்கு ஆட்பட்ட பெண்கள் கோவிலுக்கே வரக்கூடாது என சபரிமலையில் சண்டமாருதம் செய்யும் சனாதனத்தை, அதன் பிடறியிலேயே அடித்து மாதவிடாய் காலத்திற்குட்பட்ட இளம் வயதுப் பெண்களை அர்ச்சகராக்கி, சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் அரசு. சனாதன எதிர்ப்புப் போராட்டத்தில் இது ஒரு மைல்கல்.

பெண் அர்ச்சகர்கள்

குழந்தைத் திருமணம்

கூப்பிடுவதற்கு சுகமாய் இருக்கும்படி பெண்களுக்குப் பெயர் வைக்க வேண்டும் (மன 2: 33) என்று சொல்லியும், அன்ன நடை நடக்க வேண்டும், சிறு குரல் உடையவர்களாக இருக்க வேண்டும் (மனு 3: 10), கணவனை விட அதிக உயரமாக இருக்கக் கூடாது (மனு 3: 8) என இலக்கணம் வகுத்துப் பெண்களை கீழே தள்ளுகிறான் மனு. பெண் பார்க்கச் செல்லுகையில் இவை எல்லாம் இன்றும் சோதிக்கப்படுகிறதுதானே?

ருது காலத்திற்கு முன்பே, அதாவது எட்டு வயதுக்கு முன்பே, (மனு 9-88), தந்தையின் அனுமதி பெற்று (மனு 3: 4), தந்தை யாரைக் காட்டுகிறானோ அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் (மனு 5-151).

ஏப்ரல் 1, 1930 அன்று ஆங்கிலேயன் கொண்டு வந்த குழந்தைத் திருமண தடைச் சட்டம் சனாதனத்திற்கு சாவுமணி அடித்தது. ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்பது இன்று விதியாயிற்று. இல்லையேல் இன்று கம்ப்யூட்டரைப் கையாலும் கைகள் கரண்டியை மட்டும்தான் பிடித்துக் கொண்டிருக்கும்.

ஒரு பெண்ணை ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக நிச்சயம் செய்த பிறகு அத்திருமணம் நின்று போனால், அவனது தம்பிக்கோ அல்லது அண்ணனுக்கோ அந்தப் பெண்ணைக் கட்டி வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது சனாதனம் (மனு 9: 69).

அப்பப்பா! சனாதனத்தை நினைத்தாலே படு பயங்கரமாக இருக்கிறது பெண்களின் நிலை.

கேடுகெட்டவனானாலும், கணவனே கண்கண்ட தெய்வம்

கணவன் எவ்வளவுதான் கேடு கெட்டவனாக இருந்தாலும், (அண்ணன் சீமானைப் போல பொம்பள) பொறுக்கியாக இருந்தாலும், அவனிடம் நற்குணங்கள் ஏதும் இல்லை என்றாலும், (அண்ணி கயல்விழி போல) கணவனை தெய்வமாகப் பூசிக்க வேண்டும் என்கிறது சனாதனம் (மனு 5-154).

கணவன் ஒரு சூதாடியாக, குடிகாரனாக, நோயாளியாக இருந்தாலும் அவனுக்கு மனைவியானவள் பணிவிடை செய்ய வேண்டும்; பணிவிடை செய்ய மறுத்தால் மூன்று மாத காலத்திற்கு அவளுக்கான அலங்காரத்தையும் உடைகளையும் படுக்கையையும் பறித்துக் கொள்ளச் சொல்கிறான் மனு (மனு 9-78).

கூட்டிக் கொடுக்கும் சனாதனம்

குழந்தை இல்லை என்றால், கணவன் மற்றும் மாமனாரின் ஒப்புதலோடு,  கணவனுடைய அண்ணனுடனோ அல்லது தம்பியுடனோ அல்லது ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகளிடமோ படுத்து, பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது சனாதனம் (மனு 9: 59). நல்ல வேளை, இன்று டெஸ்ட் டியூப் பேபிகள் வந்துவிட்டதால் பெண்கள் தப்பித்தார்கள்.

படுக்கையும், காமமும், அலங்காரமும் பெண்களுக்கானது (மனு 9: 17). பெண்கள் பெரும்பாலும் விபச்சாரத் தன்மையுடையவர்கள் (மனு 9-19), என்பதனால் அவர்கள் தனியாக இருக்கக் கூடாது (மனு 5: 149) என்கிறது சனாதனம்.

மனைவி மலடியாக இருந்தால் அல்லது நோஞ்சான் குழந்தையைப் பெற்றெடுத்தால் அல்லது தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அத்தகைய மனைவியை ஓரங்கட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணை கணவன் திருமணம் செய்து கொள்ளலாம் (மனு 9: 81). இன்றும் தொடரும் சனாதன அவலம் அல்லவா இது!

பெண்களுக்குச் சொத்துரிமை

சிறுவயதில் தகப்பன் பாதுகாப்பிலும், திருமணத்திற்குப் பிறகு கணவன் பாதுகாப்பிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளையின் பாதுகாப்பிலும்தான் ஒரு பெண் இருக்க வேண்டும் (மனு 5: 148). இப்படி தந்தை-கணவன்-மகன் பாதுகாப்பில் இருப்பதனால் அவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்கிறான் மனு (மனு 9: 3).

பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்றால், அவர்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென 1929,  செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை, 1989 இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனிச் சட்டமாகக் கொண்டு வந்து, சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உத்தரவாதம் செய்தார்.

விதவைக் கோலமும் உடன்கட்டையும்

கணவனை இழுந்த ஒரு பெண் விதவையான பிறகு, நல்ல உடை உடுத்தக் கூடாது, மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளை உடைதான் உடுத்த வேண்டும். கிழங்கு, பழம், பூ தவிர வேறு நல்ல உணவை உண்ணக் கூடாது, சொற்பமான அளவே சாப்பிட வேண்டும் (மனு 5: 157), மறுமணம் செய்து கொள்ளக் கூடாது (மனு 5: 162) என கட்டுப்பாடு விதிக்கிறது சனாதனம். ஆனால் மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என ஆணுக்கு மட்டும் சலுகை அளிக்கிறது (மனு 5: 169).

விதவைப் பெண்கள் இந்த விதிகளை மீறிவிட்டால், சாஸ்திரம் அழிந்து போகும் என்பதனால்தான் இறந்துபோன கணவன் எரிக்கப்படும் போது அந்தத் தீயில் அவனது மனைவியும் தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உடன் கட்டை ஏறுதல் வழக்கத்தைக் கொண்டு வந்தனர். இதுவும் வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் முடிவுக்கு வந்தது.

1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விதவைகள் மறுமண உதவித்தொகைத் திட்டம், விதவைப் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது.


அடுப்பங்கரையிலிருந்து சந்திரயானை நோக்கி...

வீட்டை சுத்தம் செய்தல் (மனு 5: 150), பிள்ளைகளைப் பெறுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல், விருந்தினர் வந்தால் உபசரித்தல் இவைதான் பெண்களுக்கான வேலை என்கிறது சனாதனம் (மனு 9-27), 

கலைஞர் கருணாநிதி அவர்கள் 1989 ஆம் ஆண்டு அரசு வேலைகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால், ஏராளமான பெண்கள் வெளியில் வேலைக்குச் சென்று சம்பாதித்து, சொந்தக் காலில் நிற்பதைக் கண்டதால்தான், தமிழ்நாட்டில் பெண் கல்வி மிகத் தீவிரமாக முன்னேற்றம் அடைந்தது. அதன் விளைவாகத்தான் இன்று மருத்துவம், பொறியியல், கல்வி, ஐடி உள்ளிட்ட துறைகளில் பெண்கள் கோலோச்சுகின்றனர். சனாதனத்தை அடுப்பில் போட்டுப் பொசுக்கிவிட்டு சந்திரயானில் பறக்கின்றனர் பெண்கள்.

பார்ப்பன சனாதனவாதிகள் கூச்சலிடுவததைப் போல சனாதனத்தைப் பாதுகாத்தால் பெண்களின் கதி என்னவாகும் என்று எண்ணி பாருங்கள்.

*****

சாதிய ஏற்றத்தாழ்வு, பார்ப்பனிய மேலாதிக்கம் குறித்து இனி பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Thursday, December 31, 2015

எனது புத்தாண்டு கோரிக்கையை ஆதரிப்போர் மட்டும் வாழ்த்து கூறலாம்!

இந்து மதத்தில் நான்கு வர்ணங்களும் பல்வேறு சாதிப்பிரிவுகளும் இருந்தாலும் இந்த மொத்தப்பிரிவு மக்களும் உயர்சாதியினர் தீண்டத்தக்கவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் இரு பிரிவுகளாகப் பகுப்படுகின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடு இந்து மதமும் அதன் உயிர்மூச்சான தீண்டாமையும்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. உயர்சாதியினரால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போதெல்லாம் உயர்சாதியினரை ‘சாதி இந்துக்கள்’ என்தான் குறிப்பிடுகின்றனர். 'சாதி இந்துக்கள்' என்றால் அவர்கள் உயர்சாதியினர்; தீண்டத்தக்கவர்கள் என்பதும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான் அதன் பொருள்.

தீண்டத்தக்கவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை தீண்டிக் கொள்ளலாம். ஆனால் தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தக்க சாதி இந்துக்களை தீண்டிவிடவும் கூடாது; சாதி இந்துக்கள் தங்களை தீண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை.

அதனால்தான் பார்ப்பனப் பெண்ணை படையாச்சி பையன் காதலித்தால் கடுமையாக எதிர்க்கப்படுவதில்லை. ஆனால் படையாச்சிப் பெண்ணை பறையன் காதலித்துவிட்டால் கடித்துக்குதறுகிறார்கள். இந்த நடைமுறைதான் தீண்டாமை நிலவுவதை பறைசாற்றுகிறது.

சாதி ஒழிந்தால் தீண்டாமையும் ஒழிந்துவிடும் என்று எளிமையாகச் சொன்னாலும் அது அவ்வளவு விரைவில் நடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

தீண்டாமை ஒழிப்பில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டுமானால் ஐயங்காரை மலம் அள்ளவும் அருந்ததியரை அர்ச்சகராகவும் ஆக்குவதற்கான கோரிக்கை முதலில் வெற்றி பெற வேண்டும்.

சாதிப்படிநிலையில் அருந்ததியருக்கு மேலே உள்ள அனைவரும் மலம் அள்ள வேண்டும். அதேபோல ஐயங்காருக்குக் கீழே உள்ள அனைவரும் அர்ச்சகராக வேண்டும்.

எனது இந்த புத்தாண்டு கோரிக்கையை ஆதரிப்போர் மட்டும் வாழ்த்து கூறலாம்!

தொடர்புடைய பதிவுகள்:
மலத்தால் திருப்பி அடி! துடைப்பத்தைக் கைமாற்று!

Sunday, April 21, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் - 2

ஒரு வயதிலிருந்து இன்று வரையிலும் அவளுக்குப் பெரும்பாலும் மாலை நேரத் தேநீர் எங்களது வீட்டில்தான். தேநீரோடு பிஸ்கட்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பிஸ்கட் இல்லை என்றால் “ஆண்ட்டி! அறிவிருக்கா? பிஸ்கட்கூட வாங்கி வைக்காம இருக்க! பிஸ்கட் இல்லாம எப்படி டீ குடிக்கறது?” என எனது துணைவியாரிடம் கடிந்து கொள்வாள்.

“அடியேய்! உங்கள மாதிரி எங்களுக்கு வசதி கிடையாது! நாங்க வாடகை வீட்லதானே குடி இருக்கோம். நாங்க என்ன உங்கள மாதிரி காரு வச்சிருக்கோமா? நீ போய் உங்க வீட்ல இருந்து எடுத்துட்டு வா!” என செல்லமாக பதில் கூறும் போது “எங்க அப்பா மாதிரி அங்க்கிள கோயிலுக்குப் போகச் சொல்லு. நெறய காசு வரும். எங்கள மாதிரி நீங்களும் காரு வாங்கலாம். சொந்தமா வீடு வாங்கிக்கலாம்” என ஆலோசனை கூறுவாள்.

நாங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதையும், அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் அதே வீட்டை ஓரிரு ஆண்டுகளில் விலை கொடுத்து வாங்கி சொந்த வீடாக்கிக் கொண்டதையும், அடுத்த ஆண்டிலேயே அவர்கள் புதிதாகச் சொந்தக் கார் வாங்கியதையும் புரிந்து கொண்டுதான் அவள் அவ்வாறு கூறினாள். கோவிலுக்குச் சென்று பூசை செய்தால் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு இவற்றை எல்லாம் பெறலாம் என்பது அவளது புரிதல்.

அவளது அப்பா ஆகமவிதிகளின் கீழ் வரும் கோவிலுக்கும் செல்கிறார்; சாதாரணக் கோவிலுக்கும் செல்கிறார். இது அன்றாடம் அவர் செய்யும் அர்ச்சகர்த் தொழில். இது தவிர திருமணம், புதுமனைப் புகுவிழா, காரியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார். அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை முடக்கித் தங்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகராகக் கூடாது என்பதற்காக உச்சநீதி மன்றம் வரை சென்று இன்று வரை தங்களது ஆதிக்கத்தை பார்ப்பனர்கள் நிலைநாட்டி வருகிறார்கள் என்பது தெரியாத வயது அவளுக்கு. அதனால்தான் வெள்ளந்திரியாய் அவள் என்னிடம் அர்ச்சகர் வேலைக்குச் செல்லச் சொல்கிறாள்.

நாட்கள் வேகமாக உருண்டோடுகின்றன. மழலையர் பள்ளிப்படிப்பை முடித்து, முதல் வகுப்பிற்குச் செல்கிறாள். அவள் வளர வளர, அவளது பேச்சில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு நாள் எங்களது வீட்டில் இரவு உணவின் போது குழந்தை என்பதால் அவளுக்கு கொஞ்சமாகச் சோறு போடுகிறார் எனது துணைவியார். தட்டில் உள்ள சோறு தீர்ந்தவுடன் “ஆண்ட்டி சாதம் போடு” என்கிறாள். “சாதம் இல்லடி, சோறுனு கேளு!” என்ற போது “சோறுனு சொல்லக்கூடாது, சாதம்னுதான் சொல்லனும்” என பதில் கூறினாள்.

“நாங்கள்லாம் உங்கள மாதிரி பேசமாட்டோம். வீட்டை ‘ஆத்து’னுதான் சொல்லுவோம். தண்ணிய ‘ஜலம்’னுதான் சொல்லுவோம்.” என மேலும் சில உதாரணங்களை எடுத்தியம்புகிறாள்.

“ஏய்!‘ஆத்து’னா தண்ணி போற ஆறு! நீங்க என்ன அங்கேயா குடியிருக்கீங்க?” என கிண்டல் செய்த போதும் “அய்யோ ஆண்ட்டி! தண்ணி போறதுக்குப் பேரு ஆறு! இது ‘ஆத்து!’...‘ஆத்து!’ வீட்டை நாங்க அப்படித்தான் சொல்லுவோம்” என மிகப் பொருமையாக ஒரு ஆசிரியரைப் போல விளக்கமளித்தாள்.

“நாங்க பிராமிண். இப்படித்தான் பேசுவோம். எங்க லேங்குவேஜ் இதுதான்” என பெருமைவேறு பட்டுக்கொண்டாள்.

எங்களது உறவினர்கள் பலரும் இவளுக்கு உற்ற நண்பர்கள். எல்லோரும் இவளோடு கிண்டலும் கேலியுமாய் இருக்கும் போது, அவளும் எங்களை கிண்டலும் கேலியும் செய்வாள். சென்ற வாரம் இவளது குடும்பம் சென்னைக்குக் குடிமாறிச் செல்ல ஆயத்தமாகிக்  கொண்டிருந்தபோது ஒரு நாள் நானும் எனது துணைவியாரின் அக்கா பேத்தியும் “என்ன ஆத்த காலிபண்ணிட்டு சென்னைக்குப் போறீங்களாமே?” எனக் கிண்டலாய் கேட்டபோது “எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்றுவிட்டாள். "டீ போட்டாச்சு, குடிச்சிட்டுப் போ" என வலியுருத்திய போதும் அன்றைய மாலை நேரத் தேநீரை அவள் புறக்கணித்துவிட்டாள்.

தொடரும்.....

தொடர்புடைய பதிவு: 

பார்ப்பனியம் பிறவிக் குணமா? ... பகுதி-1