Saturday, January 22, 2011

பார்த்திபன் கனவு!

பார்த்திபனுக்கோ பக்தியில் அதிக ஈடுபாடு. அவர் பார்ப்பனர் இல்லை என்றாலும் மீசையை வழித்துக் கொண்டு பூணூலை மாட்டிக்கொண்டு நெற்றியில் ஒற்றை நாமத்தோடு எப்பொழுதும் காட்சியளிப்பார். மார்கழி மாதத்தில் ஐந்து மணிக்கெல்லாம் குளித்து முடித்து காலைக் குளிரையும் பொருட்படுத்தாமல் வெற்றுடம்போடு பூணூல் தெரிய அவர் கோயிலுக்குச் செல்லும் காட்சி பார்ப்பனர்களையே அசர வைக்கும். பொறாமை கொள்ளச் செய்யும். புரோகிதம் செய்யும் ஒரு சில பார்ப்பனர்கள்கூட காலையில் எழுந்து குளிக்காமலேயே பட்டையை மட்டும் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்று பூசை செய்யும் கண்றாவிகளையும் நான் பார்ப்பதுண்டு. என்னைக் கேட்டால் பார்த்திபன்தான் 'அக்மார்க்' அய்யர் என்பேன்.

பார்த்திபனுக்கு சுமார் 45 வயது. மகளை எப்படியாவது மருத்துவராக்கிவிட வேண்டும் என்பது அவரது கனவு. அதற்காக தனது மகளைத் தயார் படுத்தினார். அன்று மருத்தவக் கல்லூரியில் யார் யாருக்கு இடம் என்கிற முடிவு சொல்லப்படும் தேதி. காலை எட்டு மணிக்குத்தான் அலுவலகம் என்றாலும் ஏழரை மணக்கெல்லாம் அலுவலகத்திற்குச் சென்று கணிப் பொறி முன் காத்திருக்கிறார் முடிவை அறிய. ஒன்பது மணிக்கு முடிவு வெளியாகிறது. அவரது செல்ல மகளுக்கு மருத்தவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. ஆனந்தக் கண்ணீர். அவரால் இருக்கையிலிருந்து எழ முடியவில்லை. ஐந்து நிமிடம் அசைவற்று இருந்துவிட்டு அலுவலகம் என்பதையும் மறந்து உற்சாக மிகுதியில் துள்ளிக் குதிக்கிறார். முதலில் தனது மகளுக்கு செய்தியை சொல்லிவிட்டு பிறகு மகிழ்ச்சியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறார். இந்த மகிழ்ச்சி கிட்டத்தட்ட அவரை ஒரு பரவச நிலையில் ஆழ்த்துகிறது.

கல்லூரியில் சேர்ப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய திட்டமிடுகிறார். மத்தியக் கல்வித் திட்டத்தில் படித்தவர்கள் மாநில அரசின் கீழ வரும் கல்வலூரிகளில் சேர வேண்டும் எனில் அதற்கு ஒரு பத்திரத்தாளில் தடையில்லாச் சான்று பெறவேண்டும். அதற்கான பத்திரத்தாளை வாங்குவதற்கு அருகில் உள்ள நகரத்திற்கு காலை பத்து மணிக்கு தனது ஸ்கூட்டரில் செல்கிறார்.

அது ஒரு தேசிய நெடுஞ்சாலை. காலை நேரமானதால் போக்குவரத்து அதிகம். குறிப்பாக லாரிகள். சுமார் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் அவர் சென்று கொண்டிருக்கிறார். மகளுக்கு மருத்துக் கல்லூரியில் இடம் கிடைத்த அதீத மகிழ்ச்சியிலேயே அவர் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இடதுபக்கம் ஒரு கிளைச் சாலை பிரியும் இடத்தை நெருங்குகிறார். அது ஒரு குறுக்குச் சாலை. பிரதான சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த ஒரு ட்ரெயிலர் லாரி குறுக்கச் சாலையில் திரும்புவது இவரது கண்களில் பட்டாலும் அச்செய்தி இவரது மூளைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. ஸ்கூட்டர் நேராக லாரிக்கு அடியில் புகுந்து சிதைந்து நொருங்குகிறது... அவரது கனவுகளோடு...

இது கற்பனையல்ல. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம்.

பரவச (ecstasy) நிலையில் ஒரு மனிதன் இருக்கும் போது உணர்ச்சியற்ற நிலையில்தான் இருப்பான். அதாவது தன்னை மறந்த நிலையில் (absorbed) இருப்பான். அவனுக்கு மெய்யுணர்வு மறத்துப் போயிருக்கும். மூளைக்கும் மெய்யுக்குமான தொடர்பு சரிவர இருக்காது.புலனறிவு முளைக்கு முழுமையாக எடுத்துச் செல்லப்படாது. அப்பொழுது அவனை தொட்டாலும், தீண்டினாலும், கிள்ளினாலும், அடித்தாலும், உதைத்தாலும், ஏன் சூடு வைத்தாலும்கூட எதுவும் தெரியாது; உரைக்காது.  

இந்த பரவச நிலை மன ரீதியாக ஏற்படும் ஒரு வகை மன உலைவு (distraction). எளிமையாகச் சொன்னால் இது ஒரு பித்துப் பிடித்த நிலை. ஒரு வகை மன நோய். அதனால்தான் ஆவியை விரட்டுகிறேன், சைத்தானைத் துரத்துகிறேன், பேயை ஓட்டுகிறேன் என்ற பெயரில் மனநோயாளிகளை மிக மோசமாக துன்புறுத்துகிறார்கள்.  

இத்தகைய பரவச நிலைக்கு ஆட்படுத்தித்தான் பெண்களை தங்கள் விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் காம வெறிபிடித்த சாமியார்கள். சாமியார்களை நாடிச் சென்றால் பக்தர்கள் மட்டும் பரவசமடைவார்கள். ஆனால் சாமியார்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள். பக்தர்களோ பரவசத்தில், சாமியார்களோ பேரானந்தத்தில். அதாவது பக்தை பரவசத்தில் இருப்பாள். சாமியார் ஆனந்தத்தில் இருப்பார். இதைத்தான் ஆனந்தப் பரவசம் அல்லது பேரானந்தம் என்கிறார்களோ!.

மூளை தெளிவாக இருக்கும் போது மட்டுமே நம் உடலில் நிகழும் மாற்றங்களை தெளிவாக உணர முடியும்.  மனம் என்பது மூளையின் வெளிப்பாடு. (mind is the product of brain).  மனமானது பரவச நிலையை அடையும் போது உங்களது முளையின் இரசாயனக் கலவையில் (brain chemistry) மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பொருள். இத்தகைய மன நிலையில்தான் மெய்யுணர்வு குறைந்துபோகும் அல்லது அற்றுப்போகும். இது ஒரு மாறுபட்ட, இயற்கைக்கு மாறான மனநிலை.

மெய்யுக்கும் மூளைக்குமான தொடர்பு முழுமையாக இல்லை என்றால் உங்களால் எதையும் சரியாக கணிக்க முடியாது. உணர முடியாது. அப்படிப்பட்ட சூழலில்தான் பார்த்திபன்கள் மாண்டு போகிறார்கள். சாமியார்கள் மகளிரைச் சூரையாடுகிறார்கள். 

No comments:

Post a Comment

There was an error in this gadget