சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் போது வெளியிடுவதற்காக இந்தக் கட்டுரையை எழுதினேன். ஸ்பெக்ட்ரம் ஊழலையொட்டி மத்திய புலனாய்வுத் துறையினரால் தமிழ் மைய அலுவலகம் சோதனையிடப்பட்டதாலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக்கூடாது என்பதாலும் இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி பிசுபிசுத்துப் போனது.
சில காரணங்களால் அப்போது இக்கட்டுரையை வெளியிட முடியவில்லை. பொழுது போக்குக்கான ஒன்றாக நாட்டுப்புற கலைகள் மாற்றப்பட்டு வரும் இன்றைய சூழலில் அது குறித்த ஒரு விவாதம் வலைப்பூ வாசகர்களிடையே நடத்தப்பட வேண்டும் என்பதற்காகக இக்கட்டுரையை வெளியிடுகிறேன்.
***
கலைகளும் இலக்கியங்களும் ஒரு சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார்கள். மனித இனம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய காலம் வரை எண்ணற்ற கலைகளும், இலக்கியங்களும் தோன்றியுள்ளன. அந்தந்த கால கட்டத்தில் நிலவிய அரசியல் பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்ட மக்களின் போராட்டத்தினூடாக அவைகள் தோன்றின. சில திட்டமிட்டே உருவாக்கப்படன. சில மறைந்து போயின. சில மறைக்கப்பட்டன.
ஆதி கால மனிதன், தான் வாழ்வதற்காக இயற்கையை எதிர்த்துப் போராடினான். இயற்கையை முழுதுமாக புரிந்து கொள்ளாத காரணத்தால் பல தோல்விகளை சந்தித்தான். தோல்வியிலிருந்து மீள்வதற்கும், இயற்கையை எதிர்கொண்டு வெல்வதற்கும் அவனுக்கு தெம்பு தேவைப்பட்டது. இயற்கைச் சக்திகளை முழுக்க முழுக்க கற்பனையிலேயே கீழ்படுத்தியும், கட்டுப் படுத்தியும் அவற்றை மாற்றியமைக்கவும் எண்ணினான். இவை கதைகளாகவும் பாடல்களாகவும் உருப்பெற்றன. இயற்கை சக்திகள் மீது உண்மையிலேயே கட்டுப்பாடு ஏற்பட்டவுடன் அவை மறைந்து விடுகின்றன.
இத்தகைய கதைகள், மக்களை உண்மையிலேயே மகிழ்வித்தன. அதற்குக் காரணம் இயற்கைச் சக்திகள் மீது மனிதன் வெற்றி கொள்வதைப் பற்றிய கற்பனைச் சித்திரங்களாக அவை இருப்பதுதான்.
கலைகள் சமூக எதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.அதே நேரத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இடையூறுகளை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்கும், இடையூறுகளை வெல்வதற்கும் பயன்பட வேண்டும். அதற்காகவே கலைகள் படைக்கப்பட வேண்டும். இதுவே சமுகத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் செல்லும்.
கலை இரசனைக்கானது, அதற்காகத்தான் கலைகள் படைக்கப்பட வேண்டும் என ஒருசாரார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான கலைகளை உருவாக்கியும் வருகின்றனர். இதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.
இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் பல இடையூறுகளை எதிர் கொண்ட மனித சமூகம் அறிவியலின் துணைகொண்டு அவைகளை தகர்த்தெறிந்து மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூகச் சீரழிவுகளால் நமது அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற இடையூறுகளை எதிர்கொள்கிறோம்.இன்றோ இத்தகைய இடையூறுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை இழந்து மனச்சோர்வுக்கும் கவலைகளுக்கும் உள்ளாகிறோம். மனச்சோர்விலிருந்து மனிதனை மீட்பதற்குப் பதிலாக, கன நேரம் தனது கவலைகளை மறப்பதற்காக இன்று கலைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இக்கலைகளில் திட்டமிட்டே சீரழிவுகளை புகுத்தி வருகின்றனர். இறுதியில் கலையை வியாபாரமாக்கி காசாக்கி வருகின்றனர்.
இன்றைய கதைகள், நாடகங்கள், தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் இதைத்தான் செய்கின்றன. தங்களின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள மக்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் கதைகளையும், அநீதிக்கு எதிராகப் போராடும் கதாநாயகர்களையும் அவ்வப்போது உருவாக்கவும் செய்கின்றனர்.
இந்தப் புரிதலோடு இன்றைய 'நாட்டுப்புற' கலைகளைப் பார்ப்போம். தப்பாட்டம், ஒயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், தேவராட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், தெருக்கூத்து போன்ற பல்வேறு வடிவங்களிலான கலைகள் கிராமப்புற மக்களால் நிகழ்த்தப்படுகின்றன. கிராப்புற மக்களால் நிகழ்த்தப்படுவதால் இவை நாட்டுப்புற கலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாட்டுப்புற கலைகள் என அழைக்கக்கூடாது, மக்கள் கலைகள் என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இன்று பலமாக எழுந்துள்ளது. நாட்டுப்புறம் என்றால் அது தங்களை இழிவுபடுத்தவதாக உள்ளது என்பதால் இக்கோரிக்கை எழுந்திருக்கலாம்.
பழைய சமுதாயத்தில் தோன்றிய இதுபோன்ற எண்ணற்ற கலைககள் அன்றைய சமூக உற்பத்தி முறையிலிருந்தும் உற்பத்தி உறவுகளிலிருந்தும் தோன்றியவை. மாறிய, முன்னேறிய இன்றைய உற்பத்தி முறை - உறவுகளில் பழைய கலை வடிவங்கள் மற்றும் அதன் உள்ளடக்கம் பொருந்துவதாயில்லை. அதனாலேயே அக்கலைகள் மக்களிடையே செல்வாக்கிழப்பதும், மறைவதும், அழிவதுமான சூழல் ஏற்படுகிறது.
இன்றை உற்பத்தி முறை மற்றும் உறவுகளுக்கேற்ற கலை வடிவங்களே இன்றைய சமூகத்தில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எடுபடுகிறது. வரவேற்பைப் பெறுகிறது. இன்றைய சூழலுக்கேற்ப உள்ளடக்கத்தை மாற்றியமைத்து வடிவத்தை வளர்த்தெடுத்தால் மட்டுமே நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க முடியும். மீட்டெடுக்கமுடியும்.
இன்றைய உலகமயமும், தாராளமயமும் அனைத்தையும் நுகர்வுக்கானதாக மாற்றிவருகின்றன. கலைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நாட்டுப்புற கலைகளை நுகர்வுக்கானதாக மாற்றும் அதேவேளையில் அவற்றை வணிகமயமாக்கும் வேலையையும் சென்னை சங்கமம் செய்கிறது. கலை வணிகமயமானால் என்னவாகும்? வைரமுத்துக்களும், இளையராஜாக்கள் - கங்கை அமரன்களும் இன்றைய சின்னப்பொண்ணுகளும் என்னவானார்கள் என்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
நாட்டுப்புற பாடல்களால் நவநீதகிருஷ்ணன்களும் புஷ்பவனம் குப்புசாமிகளும் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டார்கள். தலித் மக்களின் உள்ளக்குமுறல்களை பாடிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணு இன்று குத்துப்பாட்டுக்கு கும்மாளம் போடுகிறார். எனக்குத் தெரிந்து கே.ஏ. குணசேகரன் அவர்களும் கோவன் அவர்களும் நாட்டுப்புற பாடல் வடிவங்களை தற்கால நிலைமைகளுக்கேற்ப ஒழுங்கமைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மிகச்சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள்.
கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜெகத் கஸ்பார் போன்றவர்கள் தங்கள் கோடிகளை வெள்ளையாக்கிக் கொள்ளலாம் அதற்காக நாட்டுப்புற கலைஞர்கள் பயன்படலாம். ஆண்டுக்கு ஒருமுறை கை நிறைய பணம் கிடைக்கும் என்ற ஏக்கத்தை இக்கலைஞர்களிடையே ஏற்படுத்தலாம். பற்களை இறுக்கும் மார்கழிக் குளிரில் சென்னை நகர மக்களுக்கு ஒரு மாலை நேர நொறுக்குத் தீனியாக அமையலாம். இதற்கும் அப்பால் தமிழ் பாரம்பரியக் கலைகளை சங்கமம் ஒருக்காலும் மீட்டெடுக்கமுடியாது.
அறிவியல் வளர்ச்சியால் உற்பத்தி சக்திகள் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளன. அதே நேரத்தில் உலக மயம், தாராள மயம், தனியார் மயத்தினால் மக்களின் துன்பங்களும் துயரங்களும் அதிகரித்து வருகின்றன. இதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். தங்களது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்த முடியாமல் மனதுக்குள்ளேயே உள்ளமுக்கி வைப்பதால் மனச்சோர்வுக்குள்ளாகி போராடும் ஆற்றலை இழந்து வருகின்றனர்.
அன்று இயற்கையை எதிர்த்துப் போராட கலைகள் படைக்கப்பட்டன. இன்று பொழுது போக்கிற்காக, இரசனைக்காக கலைகள் படைக்கப்படுகின்றன. ஆனால் நமக்குத் தேவையோ சுரண்டலுக்கெதிராய் போராடும் ஆற்றலை வளர்க்கும் கலைகளே!
விலங்கினத்திற்கே (animal kingdom) உரிய "உயிர் வாழ்வதற்காகப் போராடும்" (struggle for survival) ஆற்றலை வளர்ப்பதற்காக வேண்டி இன்றைய சமூக உள்ளடக்கத்திற்கேற்ப புதிய கலைகளை உருவாக்க வேண்டும். இதற்காகப் பழைய கலை வடிவங்களையும் - நாட்டுப்புற கலைகள் உட்பட-பயன் படுத்திக் கொள்ளலாம்.
ஒரு சமூகவியல் பேராசியர் பாடம் நடத்துவது போல் என்னவொரு அற்புதம். நன்றிங்க.
ReplyDelete