Wednesday, April 27, 2011

மனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா?

சமீபத்தில் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள பிரபல மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் ஸ்டெதஸ்கோப்பைக் கொண்டு எனது இதயத்துடிப்பை பார்த்தார்கள். இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியைக் கொண்டு இரத்த அழுத்தத்தையும் அளந்தார்கள். வெப்பமானியைக் (thermometer) கொண்டு உடல் வெப்பத்தை அளந்தார்கள். இந்தக் கருவிகளே அனைத்து மருத்துவ மனைகளிலும் நோயாளிகளை பரிசோதிப்பதில் முதற்கட்டமாக மிக முக்கியப் பங்காற்றுகின்றன. 

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ அது மிகவும் ஆபத்தானது. அதே போல உடலின் வெப்பம் குறைந்து ஜில்லிட்டுப்போனாலோ அல்லது அனல் போல உடல் கொதித்தாலோ அதுவும் மிகவும் ஆபத்தானது. எனவே இரத்த அழுத்தத்தையும் உடல் வெப்பத்தையும் கண்டிப்பாக துள்ளியமாக மதிப்பிட வேண்டும். 

சென்னையில் உள்ள மற்றோரு பிரபல மருத்துவமனையில் என்னைப் பரிசோதித்த மருத்துவர் எனக்கு இரத்த அழுத்தம் 140/100 mm Hg இருப்பதாகச் சொன்னார். ஆனால் 2000 ம் ஆண்டு முதல் சமீப காலம் வரை உள்ளுர் மருத்துவர்கள் பரிசோதித்த போது சராசரி அளவிலேயே அதாவது 130-120/90-80 mm Hg என்கிற அளவிலேயே இருப்பதாகச் சொல்லி வந்தார்கள். இரத்த அழுத்தத்தைக் கணிப்பதில் இவ்வளவு மாறுபாடுகள் இருந்தால் ஒருவரின் உடல் நிலை சரியாகத்தான் உள்ளதா அல்லது மேலும் நலிவடைந்துள்ளதா என்பதை எப்படி அறியமுடியும்?.

 மதிப்பாராய்தல் (Calibration): 

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கின்ற ஒரு பொருளின் அளவைச் சரிபார்க்க வெர்னியர் காலிப்பர், மைக்ரோமீட்டர் போன்ற பல்வேறு அளவீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். தொடர் பயன்பாட்டின் காரணமாக இக்கருவிகள் பழுதடைந்தாலோ அல்லது தேய்ந்து போனாலோ தவறான அளவைக் காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பழுதான கருவிகளைக் கொண்டு ஒரு பொருளை தயாரித்தால் அப்பொருள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது. எனவேதான் அளவீட்டுக் கருவிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ள குறிப்பிட்ட கால இடைவெளியில் (periodically) அக்கருவிகளின் செயல்திறனை (capability / performance) பரிசோதிக்கிறார்கள். இதற்கு மதிப்பாராய்தல் (calibration) என்று பெயர்.

தயாரிப்பு முதல் பயன்பாடு வரை ஒவ்வொரு கருவியையும் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல்வேறு தர அளவுகள் (Standards - like IS & ISO) உருவாக்கப்பட்டுள்ளன. கருவிகளை மதிப்பாராய்வு செய்வதெற்கென்றே மதிப்பாராய்வுக் கூடங்கள் (Calibration Laboratories) செயல்பட்டுவருகின்றன.  இவ்வாய்வுக் கூடங்களை தணிக்கை (audit) செய்வதற்கு தேர்வாய்வு மற்றும் மதிப்பாராய்வு ஆய்வுக்கூடங்களுக்கு தரச்சான்றளிக்கும் தேசியக் குழுமம் (NABL-National Accreditation Board for testing  and calibration Laboratories) ஒன்று செயல்பட்டு வருகிறது.

சொந்தமாக மதிப்பாராய்வுக் கூட வசதி இல்லாதவர்கள் NABL அங்கீகாரம் பெற்றுள்ள ஆய்வுக்கூடங்களில் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளை மதிப்பாராய்வு செய்து கொள்ள வேண்டும். எங்கே மதிப்பாராய்வு செய்யப்பட்டது, அடுத்த மதிப்பாராய்வு எப்பொழுது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டை (calibration stickers) ஒன்று அந்தக் கருவியில் ஒட்டப்பட்டிருக்கவேண்டும. 

பொறியியல் பொருளுற்பத்தி (Engineering Products)  சார்ந்த துறையில் பெரும்பாலான ஆய்வுக்கூடங்கள் தர அளவுகளை கடைபிடிப்பதோடு NABL - ன் தணிக்கைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. NABL - ன் தணிக்கைக்கு உட்படாத நிறுவனங்கள்கூட சர்வதேச மற்றும் தேசிய தர அளவுகளை (National and International standards) கடைபிடிக்கின்றன. இல்லை என்றால் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவது கடினம். அதனால்தான் நமது மிதி வண்டியிலோ அல்லது வாகனங்கள் மற்றும் பல்வேறு இயந்திரங்களிலோ பயன்படுத்தப்படும் பாகங்கள் பழுதடைந்தால் வெளிச்சந்தையில் சுலபமாக வாங்கி மாற்றிக் கொள்ளமுடிகிறது. 

கருவிகளை மதிப்பாராய்வு செய்யும் ஊழியர்கள் மற்றும் கையாளும் ஊழியர்கள் திறமையானவர்களாக இல்லை என்றால் தவறுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுக்கு போதிய படிப்பும் பயிற்சியும் உள்ளதா என்பதை தர அளவுகள் (standards) வலியுறுத்தும் அதே வேளையில் அவற்றை ஆய்வு செய்வதற்கான அதிகாரமும் NABL  க்கு உண்டு.

பொறியியல் துறை மட்டுமல்ல உணவுப் பொருட்கள், குடிநீர், சுற்றுச்சூழல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் மேற்கண்ட வரைமுறைகள் பொருந்தும். ஆனால் நடைமுறையில் எல்லாத்துறைகளிலும் இவை கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதே நமது கவலை.

மருத்துவக் கருவிகளுக்கு  மதிப்பாராய்வு (Calibration) செய்யப்படுகிறதா?:

இப்பொழுது எனது மருத்துவ மனை அனுபவத்துக்கு வருவோம். இரத்த அழுத்தத்தை MD படித்த மருத்துவரால் மட்டுமே சரியாக் கணிக்க முடியும் என 140/100 mm Hg எனக் கணக்கிட்ட மருத்துவர் கூறினார். MBBS படித்தவரால் சரியாக கணிக்க முடியாது என்றும் அமுத்தம் திருத்தமாகக் கூறினார். MBBS  மருத்துவராலேயே முடியாது என்றால் பெரும்பாலும் செவிலியர்கள்தானே இரத்த அழுத்தம் பார்க்கிறார்கள். எது சரி, எது தவறு என்று எப்படி கணிப்பது? எதை நம்புவது? நமக்கு குழப்பம் வரத்தானே செய்கிறது.

இரத்த அழுத்தம் பார்க்கப் பயன்படுத்தப்படும் கருவியும், இதயத் துடிப்பை பரிசோதிக்கும் ஸ்டெதாஸ்கோப்பும் கொடுக்கும் முடிவுகள் சரியானவைதானா? இவற்றில் பயன்படுத்தப்படும் இரப்பர்க் குழாய்களின் ஆயுள் எவ்வளவு? காலப்போக்கில் இந்த இரப்பர்க் குழாய்கள் அதன் செயல்திறனை இழக்காதா? காய்ச்சலை அளவிடும் தெர்மாமீட்டர் காட்டும் அளவு சரியானதுதானா? குறிப்பிட்ட கால இடைவெளியில் அவைகள் மதிப்பாராய்வுக்கு (calibration) உட்படுத்தப்படுகின்றனவா? உற்பத்தியாளர்கள் உத்தரவாதம் (guarantee) கொடுத்தாலும் அதைமட்டுமே நம்பி நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது சரிதானா? இப்படி மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய ஐயம் எழுவது இயல்புதானே!

கேள்வி கேளுங்கள்!:

"நாம் (Metrologist - இத்துறை சார்ந்த விஞ்ஞானிகள்) எல்லோரும் ஒரு நாள் குற்றத்தின் பகுதியாக இருக்கப் போகிறோம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிட ஒரு இரத்தமாதிரியை பத்து பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பினால் பத்துவிதமான முடிவுகள் வருகின்றனவே. நம்பகத்தன்மை இல்லாமல் போகிறதே. பிற பரிசோதனைக் கூடங்களைக் கட்டுப்படுத்தும் நமது கடப்பாடு இங்கு மட்டும் இல்லாமல் போனதேன்?"

"உலோகங்களின் அளவை மைக்ரோகிராம் அளவில் அளக்கிறோம். தலை முடிக்கு அடிக்கும் டையில் காரீய அமிலம் (lead acetate) எவ்வளவு இருக்கிறது என்று தெரியுமா? 1.5 மைக்ரோகிராம் அளவுக்குத்தான் இருக்க வேண்டும். ஆண்கள் கருப்பு வண்ணத்தில் டை அடித்துக் கொண்டால் பெண்கள் பல வண்ணங்களில் டை அடித்துக் கொள்கிறார்கள். வண்ணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டையில் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவும் மாறுபடும். டை அடிக்கும் இளைஞன் ஒருவன் இறந்த போனான். ஏன் தெரியுமா? அவனது இரத்தத்தில் 60 மைக்ரோ கிராம் ஈயம் கலந்திருந்தது. இது எத்தனை பேருக்குத் தெரியும்?"

"நோய் எதுவாக இருந்தாலும் எல்லா வகையான பரிசோதனைகளையும் செய்த பிறகுதானே மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன்வருகிறார்கள்.  மருத்துவ மனைகளில் உள்ள கருவிகள் அனைத்தும் மதிப்பாராய்வுக்கு (calibration) உள்ளாகின்றனவா? "

"மருத்துவக் கருவிகளின் வடிவமைப்பு, நிர்மானம், செயல்திறன் மற்றும் அவைகள் செயல்பாட்டுக்கு உகந்தவைகளா என்பது பரிசோதிக்கப் படுகின்றனவா? இந்தக் கருவிகளின் முடிவுகள் (results) தேசிய மற்றும் சர்வதேச தர அளவுகளுடன் (standards) தொடர்புடையவைகளா (traceability)?"

"உலோகங்கள், எடுத்துக்காட்டாக வெள்ளி, அதன் உள்ளீடு மாறக்கூடியதல்ல. ஆனால் உயிரி மாதிரிகள் (bio samples) மாற்றத்துக்கு உள்ளாகுபவை. இந்த மாதிரிகளை பத்து ஆய்வுக்கூடங்களில் பரிசோதித்தால் அதன் முடிவுகள் எந்த அளவுக்கு ஒத்துப் போகின்றன?"

"உடல் வெப்பத்தை அளக்கும் வெப்பமானி (thermometer) மதிப்பாராய்வு (calibration) செய்யப்பட்டதா என ஒரு மருத்துவ மனையில் கேட்டேன். வெப்பமானியின் வில ரூ.80,  ஆனால்  மதிப்பாராய்வுக் (calibration) கட்டணம் ரூ.800. அதனால் மதிப்பாராய்வு செய்வதில்லை. உடைந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது புதிதாய் ஒன்றை வாங்கி உடைந்து போனதில் இருந்த ஸ்டிக்கரை எடுத்து புதியதில் ஒட்டிக் கொள்வோம், இல்லை என்றால் அங்கீகாரம் கிடைக்காதே என்று மிகச்சாதாரனமாக பதில் அளித்தார்கள்."

"கண்களை பரிசோதிக்கிறோம். பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் குறிப்பிட்ட தரத்தில்தான் உள்ளனவா? இக்கருவிகளின் முடிவுகள் ஏற்புடையவைதானா? இதற்கெல்லாம் என்ன கட்டுப்பாடு? இவற்றை எல்லாம் கட்டுப் படுத்த வேண்டாமா?"

"உயற்கூறியலின் (physiological range) அளவு குறித்து உயிரியல் வேதியியலாளர்கள் (biochemist), நுண் உயிரியியலாளர்கள் (microbiologist) மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் (clinical analyst) ஆகிய இவர்களுக்கிடையில் பரிசோதனை முடிவுகளில் 'ஏற்கத்தக்க அளவு' குறித்த புரிதலும் ஒற்றுமையும் இருக்கிறதா?"

"பரிசோதனைக் கூடங்களுக்கு தர அங்கீகாரம் வழங்கும் NABL  அமைப்பு நெருக்குதல் கொடுத்ததன் விளைவாக தற்போது சுமார் 800 கூடங்கள் மட்டுமே தணிக்கைக்கு (audit) உட்படுத்தப்பட்டுள்ளன. "

"நாடெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மருத்துவ பரிசோதனைக் கூடங்களில் உள்ள கருவிகள் கொடுக்கும் முடிவுகள் நம்பகத் தன்மை உள்ளவைதானா? இந்த சோதனைக் கூடங்களில் உள்ளவர்களுக்கு முறையான் பயிற்சி அளிப்பது நமது கடமை அல்லவா?"

"அளவீட்டியலாளர்களுக்கு (Metrologist) உயிரி மருத்துவ அறிவியல் (Bio Medical Science) இன்று சவாலான ஒன்றுதான்."

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற "அளவீட்டியலின் இன்றைய முன்னேறிய நிலை" (National Conference on Advances in Metrology) என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் ஒரு அறிவிலாளர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. அவர் ஒரு விஞ்ஞானியைப் போல இதை முன்வைக்கவில்லை. ஒரு போராளியைப் போல பொங்கி எழுந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவரது உரையில் கோபம் கொப்பளித்தது.

அவரது கோபம் நியாயமானது. விவரம் தெரிந்ததால் அவருக்குக் கோபம் வருகிறது. மக்களுக்கு இதெல்லாம் தெரியாது என்பதால் மருத்துவத்துறை மக்களின் உயிரோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. மனித உயிர் என்ன உலோகத்தைவிட மலிவானதா?

தொடர்புடைய பதிவு:

கால் செருப்பு ஏ.சி.யிலே! கத்தரிக்காய் சாலையிலே!4 comments:

 1. நல்ல பதிவு.
  மனித உயிருடன் விளையாடுகிறார்கள்.

  ReplyDelete
 2. என்னத்த சொல்றது,ஒரு சில மருத்துவர்களைத் தவிர மற்ற மருத்துவர்களெல்லாம் நடமாடும் எமன் தான் நமக்கு

  ReplyDelete
 3. என்னத்த சொல்றது,ஒரு சில மருத்துவர்களைத் தவிர மற்ற மருத்துவர்களெல்லாம் நடமாடும் எமன்கள்தான் நமக்கு

  ReplyDelete
 4. அருமையான பதிவு ...
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete

There was an error in this gadget