Saturday, June 8, 2024

தள்ளாத வயதில் அல்லாடும் பெற்றோர்கள்! : தொடர்-1

கிராமங்களில்….

1970 களின் தொடக்க காலத்தில், கிராமங்களில் படித்தவர்கள் மிகச் சொற்பமே. அந்தச் சொற்பமான ஒரு சிலரில், சிலர் தினத்தந்தியை எழுத்துக்கூட்டிப் படிக்கும் அளவுக்கு கல்வி அறிவு பெற்றவர்கள். அவர்களே நாட்டு நடப்புகளையும், அரசியல் நிலைமைகளையும் அசைபோட்டு மக்களிடம் கடத்துபவர்கள்.
 
படித்த மிகச் சொற்பமானோரில், எட்டாவதில் தேறவில்லை என்றாலும், எடுப்பான உடல் அமைப்பால் இராணுவ வீரர்களானவர்கள் சிலர். எஞ்சிய சிலரோ எஸ்.எஸ்.எல் சியை (11 ஆண்டுகள் கொண்ட பழைய SSLC)  எட்டிப் பிடித்து, அதில் தேறாதவர்கள் அரசு அலுவலகங்களில் கீழ்மட்ட ஊழியர்களானார்கள். மற்ற சிலரோ கல்லூரிகளில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்று அரசு பதவிகளில் அமர்ந்தவர்கள்.
 
1970 களின் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சியை முடித்த பிறகு, சிலர் டிப்ளமோ (Diplamo) படிக்க பாலிடெக்னிக்குளை நாடினார்கள். எஸ்.எஸ்.எல் சியில் தேறாத மற்றும் தேறிய சிலர் .டி. யை நாடினார்கள்

மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில் என டிப்ளமோ முடித்தவர்கள் சூப்பர்வைசர்களாகவும். மெஷினிஸ்ட், ஃபிட்டர், எலக்ட்ரீசியன் என .டி.(ITI) முடித்தவர்கள் தொழிலாளர்களாகவும் அரசு மற்றும் தனியார் ஆலைகளில் வேலைகளில் அமர்ந்தனர்.

டிப்ளமோ படிப்பில்கூட முதலாம் ஆண்டு படிப்பான பி.டி.சி (PTC - Pre Technical Course)யில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மெக்கானிக்கல், அதற்கு அடுத்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எலக்ட்ரிகல், அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிவில் பாடப் பிரிவுகளும் ஒதுக்கப்பட்டன. அதிக வேலை வாய்ப்புகளுக்கான உத்திரவாதம் இருந்ததால் மெக்கானிக்கல் படிப்பு மற்றவைகளை விட உயர்வானதாகக் கருதப்பட்டது. 

அதேபோல எஸ்.எஸ்.எல்.சி யில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மெஷினிஸ்ட் படிப்பும், அதற்கு அடுத்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஃபிட்டர் படிப்பும், அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு எலக்ட்ரீசியன் படிப்புகளும் ஒதுக்கப்பட்டன. அதிக வேலை வாய்ப்புக்கான உத்திரவாதம் இருந்ததால் மெஷினிஸ்ட் படிப்பு மற்றவைகளை விட உயர்வானதாகக் கருதப்பட்டது.
டிப்ளமோ மற்றும் ஐடிஐ களில், தாங்கள் விரும்பியப். பாடப் பிரிவுகளை தேர்வு செய்தவர்களும் உண்டு.


டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிக்க
நகரங்களைத்தான் நாடவேண்டும் என்பதால் கிராமப்புற மாணவர்கள் விடுதிக்கும் (Hostel) கூடுதலாக செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பத்துக்கான உணவுக்கும், உடைக்கும், வசிப்பிடத்திற்கும் போக ஏதோ ஒரு வகையில் உபரி உள்ளவர்கள் அல்லது சமாளிக்க முடியும் என்ற வசதி உள்ளவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் படிப்புக்காக நகரங்களில் கால் பதிக்க முடியும்.

ஓரளவுக்கு சொந்தமாக நிலம் வைத்திருப்போர் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோரால்தான் இதைச் செய்ய முடிந்ததுபின்தங்கிய மாணவர்களுக்கான சாதி ரீதியிலான இட ஒதுக்கீடும், ஸ்காலர்ஷிப்பும் இருந்ததால் இவர்களால் படிப்பில் கரைசேர முடிந்தது‌.

அன்று பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள், அரசுக்குச் சொந்தமாகவோ அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்களாகவோ இருந்ததால் கல்விக் கட்டணங்களும் கட்டுக்குள் இருந்தன.
 
இடையிடையே படிப்பை விட்டவர்கள் தட்டச்சும், ஷார்ட் ஹாண்டும் பயின்று அலுவலகங்களில் டைப்பிஸ்டாக, ஸ்டெனோவாக மாறினார்கள்.
 
கிராமங்களில் இத்தகையோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலான குடும்பங்களில் இவர்களே கிராமங்களின் முதல் தலைமுறை படிப்பாளிகள்.
 
நகரங்களில்
 
ஆனால், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம் போன்ற நகரங்களில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. ஏற்கனவே அரசு அலுவலகங்களிலும், ஆலைகளிலும் பணியாற்றவர்களின் பிள்ளைகள், வியாபாரிகளின் பிள்ளைகள் என பலரும் கல்விப் பின்புலம் கொண்டவர்கள் என்பதாலும், பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியும் என்பதாலும், வீட்டிலிருந்தே அன்றாடம் படிக்கச் சென்று வரக்கூடிய வாய்ப்பு இருந்ததால் விடுதிச் செலவுகள் கூடுதலாக இல்லை என்பதாலும் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக படிப்பு ஒரு சுமையாக இருக்கவில்லை.

இவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறை படிப்பாளிகள். இத்தகைய வாய்ப்புகளைப் பெற்றவர்கள் பெரும்பாலும் உயர்சாதி வீட்டுப் பிள்ளைகளாகவே இருந்தனர்!
 
இதுதான் அன்றைய காலகட்ட படிப்பும் வேலை வாய்ப்பும்.
 
தொடரும்
 
ஊரான்

No comments:

Post a Comment