Friday, June 21, 2024

கள்ளக்குறிச்சி சாராயம்: மரணமா? படுகொலையா?

முழு மதுவிலக்கு சாத்தியமா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் மாண்டு போனார்கள். இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு சிலரை பணியிட மாற்றம் செய்தும், ஒரு சிலரை தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

இந்தச் சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவர் இராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். இந்தச் சாராய மரணங்களைக் காரணம் காட்டி, ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்கின்றனர்.


தற்போது மட்டுமா கள்ளச் சாராய சாவுகள் நடக்கின்றன? எடப்பாடி ஆட்சியில் நடக்கவில்லையா? ஜெயலலிதா ஆட்சியில் நடக்கவில்லையா? கர்நாடகாவில் நடக்கவில்லையா? முழு மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் குஜராத்தில் நடக்கவில்லையா? எங்குதான் சாராயச் சாவுகள் நடக்கவில்லை என்று அகில இந்திய அளவிலான புள்ளி விவரங்களை எடுத்துப் போட்டு, இது ஒன்றும் புதியதல்ல என்கிற கோணத்திலும் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இனியும் தாமதிக்கக் கூடாது; உடனடியாக முழுமையான மதுவிலக்கு வேண்டுமென வைகோ, தொல்.திருமா உள்ளிட்ட பல தலைவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

'திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போல குடிகாரனாய்ப் பார்த்துக்
குடியை நிறுத்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது என்று வாதிடுவோரும் உண்டு.

டாஸ்மாக் கடைகளில் சாராயத்தின் விலை கூடுதலாக இருப்பதனால்தான் மலிவு விலை பாக்கெட் சாராயத்தை ஏழைகள் நாடுகிறார்கள்; எனவே குறைந்த விலையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்தால் மரணங்களைத் தடுக்க முடியும் என்று கோருவோரும் உண்டு.

சாராயத்தில் எத்தனாலுக்குப் பதிலாக மெத்தனால் அதிகமாக இருந்ததுதான் தற்போதைய மரணங்களுக்குக் காரணம்; 
எனவே மெத்தனால் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினாலே மரணங்கள் குறையும் என்று வாதிடுவோரும் உண்டு.

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு மேல் அன்றாடம் சாராயம் குடிக்கிறார்கள், எனவே முழு மதுவிலக்கு எல்லாம் இனி சாத்தியமில்லை, கள்ளுக்கடைகளைத் திறப்பதுதான் ஒரே வழி; இதனால் கள்ளச்சாராய மரணங்களையும் ஒழிக்க முடியும், விவசாயிகளுக்கும் வாழ்வளிப்பதாக இருக்கும் என்று ஒரு சிலர் ஆலோசனைகளை முன்வைக்கின்றனர்.

சாலை விபத்துகளில் இறந்து போனால் நிவாரணம் ஒரு லட்சம், ஆனால், சாராயம் குடித்து மாண்டு போனால் 10 லட்சமா? யார் அப்பன் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குக் கொடுப்பது? என ஆவேசப்படுவோரும் உண்டு.

'மாதா மாதம் பிரீமியம் செலுத்தி இன்ஷூரன்ஸ் பெறுவதைவிட 30 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் சாராயத்தைக் குடித்தால் பத்து லட்சம் சொலையா கிடைக்குமே?' என்று இந்த மரணத்தை எள்ளி நகையாடும் மீம்சுகளும் ஒரு பக்கம் உலவுகின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் 'ஊத்திக் கொடுத்த உத்தமி!' என பொங்கி எழுந்த போராளிகள், இன்று எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பி பாடகர் கோவன் உள்ளிட்ட போராளிகளை எள்ளி நகையாடி இழிவுபடுத்தி, சமூகத்திற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடாத சில திண்ணைத் தூங்கிகள் சமூகவலைதளங்களில் முனகி வருகின்றனர். 

உபதேசங்கள் ஊறுகாயாக..

எத்தனாலும் மெத்தனாலும்
கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களைக் கொண்ட மூலக்கூறுகள்தான். அணுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் வேதியல் பண்புகள் வேறுபடுகின்றன. வேதியியல் பண்புகள் வேறுபடுகின்றபோது அதனுடைய வினையாற்றலும் மாறுபடுகின்றன. அதனால்தான் மெத்தனால் குடித்தால் மாண்டு போகிறான். எத்தனால் குடித்தால் போதையில் ஆழ்கிறான். மெத்தனால் அதிகம் உள்ள சாராயத்தைக் குடித்தவனைக் காப்பாற்ற வேண்டுமானால் எத்தனால் அதிகம் உள்ள சாராயத்தைக் கொடுத்தால் அவன் பிழைத்துக் கொள்வான் என்கிறார் ஒரு மருத்துவர்.

அன்னியச் சரக்கோ, அரசின் டாஸ்மாக் சரக்கோ அல்லது கள்ளச்சரக்கோ எல்லா சரக்கிலும் எத்தனால் உண்டு. அது சரி எதற்காக எத்தனால் குடிக்க வேண்டும்? 

வேதகாலத்தில் சோம பானத்தில் தொடங்கிய குடி, சங்க காலத்தில் கள் குடியாக மாறி, இன்று கட்டிங் சரக்சாக வடிவம் எடுத்துள்ளது. பிறந்தநாள் விழாக்கள், திருமணங்கள், எழவு வீடுகள் என்று எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது குடி. இந்தக் குடி ஒட்டுமொத்தக் குடிகளையே ஆட்கொண்டுவிட்டது. அலுப்புக்காக குடிப்பது என்பதெல்லாம் அனர்த்தமானது, எல்லாம் அனுபவிப்பதற்காகத்தான் என்பதே நிதர்சனமானது!

'திரிகடுகத்தில் தீட்டினார்கள்‌. கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் கதறினான். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனதுதான் மிச்சம். உபதேசங்களையே ஊறுகாயாகத் தொட்டுக் கொள்பவன்தானே நம் குடிமகன். 'குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்' என்பதெல்லாம் எம்மாத்திரம்?


எதுவாயினும், முழு மதுவிலக்கு ஒன்றுதான் மனித சமூகத்தை காப்பதற்கான ஒரே வழி. இதனால் ஏற்படும் இதர இன்னல்களை நாம் தற்காலிகமாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு ஆளுகின்ற அரசு ஆவண செய்யவில்லை என்றால் அவர்களது ஆட்சியும் வரும் காலத்தில் மரக்கட்டைகளுக்குள் அடுக்கப்படும்.‌!

மதுவிலக்குத் தடைச் சட்டம்!

வேள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அவன் நாட்டு சரக்கை விற்க உள் நாட்டுச் சரக்குகளைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்தான். அரசாங்கத்தைத் தவிர வேறு யாரும் சரக்கு தயாரிக்கக் கூடாது. அதுதான் இன்றைக்கும் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டமாக (Tamil Nadu Prohibition Act 1937) இருக்கிறது. அரசாங்கமே தயாரித்து விற்றால் அது நல்ல சரக்கு. அதையே வேறு நபர்கள் தயாரித்து விற்றால் அது கெட்ட சரக்கு. எத்தனாலை எவன் தயாரித்தால் என்ன? மெத்தனால் உடனே கொல்லும். எத்தனால் மெல்லக் கொல்லும்‌. எத்தனாலை யார் தயாரித்தாலும் மரணம் நிச்சயம். எனவே மரணத்தை விளைவிக்கக் கூடிய பொருளை தயாரித்து விற்பவன் எவனாயினும் அவன் கொலைகாரனே! கொலைகளைத் தடுக்க ஒரே வழி, முழு மதுவிலக்குதான். வேறு தீர்வே கிடையாது!

சரி! இவர்கள் எழுதி வைத்த சட்டத்தையாவது இவர்கள் மதித்து நடைமுறைப்படுத்தினார்களா? 

போதைதரும் மது வகைகளைத் தயாரிப்பது, மது தயாரிப்பதற்குரிய சாதனங்களை வைத்திருப்பது, தயாரித்த மது வகைகளை புட்டிகளில் அடைப்பது, அவற்றை விற்பனை செய்வது, வாங்கிக் குடிப்பது, மேற்கண்ட சரக்கு தயாரிக்கும் வேலைகளுக்கு உதவி செய்வது, உடந்தையாக இருப்பது இவை அனைத்துமே மேற்கண்ட சட்டப்படி (பிரிவு: 4) குற்றங்களாக வரையறுக்கப்பட்டு, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் முதல் பத்யிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. 

அத்தகைய மது வகைகளால் மரணம் ஏற்படுமாயின் கடுங்காவல் ஆயுள் தண்டனையும், மற்ற பிற குற்றங்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், இது தவிர 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உண்டு. 

மேற்கண்ட சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க இதற்கென்று உருவாக்கப்பட்ட மதுவிலக்கு காவல் துறையும் அதாவது கலால் துறையும், உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல்துறையும், வருவாய்த் துறையும் செயல்பட வேண்டும் என்றும் அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தவர்களும் உதவிட வேண்டும் என்றும் சொல்கிறது சட்டம் (பிரிவு: 32, 35). ஏதேனும் சட்டமீறல்கள் நடைபெற்றால், அது குறித்த விவரம் தெரிந்தவர்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது இச்சட்டம் (பிரிவு: 36).

இவை போதாதென்று, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நஞ்சு கலந்த போதைப் பொருளை வைத்திருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 328 இன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். இதற்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர முடியும். 

மேலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவோரை எந்தவித விசாரணையும் இன்றி தொடர்ந்து அத்தொழிலை செய்வதிலிருந்து தடுக்கும் வகையில் குண்டர்சட்டத்தின் கீழ் (Tamil Nadu Prevention of Dangerous Activities of , .....Drug Offenders, .... Act,1982), ஓராண்டுக்கு சிறையில் அடைக்க முடியும். 

கொலைக் குற்றம்!

நடந்திருப்பவை வெறும் மரணங்கள் அல்ல; தெரிந்தே மெத்தனாலை கலந்து விற்பனை செய்திருப்பதனால்
அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்பட்டு தொடர்புடையவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (IPC) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட விதிமீறலில் யார் யாருக்கெல்லாம் என்ன பங்கோ அதற்கு ஏற்ப அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இடமாற்றமும் தற்காலிக பணி நீக்கமும் வெறும் கண்துடைப்பே!
இந்த சட்டப் பின்னணியோடு கள்ளக்குறிச்சி சாராய மரணங்களைப் பரிசீலித்தால், 

காவல்துறை மட்டுமல்ல மொத்த அரசு கட்டமைப்பும்தான் இதற்குப் பொறுப்பு. கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை என்கிற அதிகார வர்க்கமும், 

வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், ஒன்றிய மாவட்டக் கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பினும்- மற்றும் மந்திரிகள், முதலமைச்சர் உள்ளிட்ட ஆளும் வர்க்கமும், 

அந்தந்த ஊர்களில் உள்ள உள்ளூர் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள் என ஒரு பெரும் கூட்டமுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இவர்களில் ஒருவருக்குக்கூடத் தெரியாமல் உள்ளுர் அளவில் யாரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முடியாது. அனைவருக்கும் தெரிந்தே நடக்கிற இந்த குற்றச் செயல்களுக்கு காவல்துறையை மட்டும் பொறுப்பாக்கினால் போதுமா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் ஒருவருக்குத் தெரிந்த பிறகு அதை உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருப்பதும் குற்றம் என்றுதானே மதுவிலக்குச் சட்டம் சொல்கிறது. 

நாம் எங்கே தவறினோம்? 

கள்ளச் சாராய விற்பனை நடக்கிறது என்பது தெரிந்தும் கண்டும் காணாமலோ அல்லது அச்சப்பட்டோ மௌனம் காக்கும் பொதுமக்களுக்கு இதில் பொறுப்பில்லையா?

கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபடுபவோர் மீது புகார் கொடுக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு ஏற்ப, இதற்கென தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் உள்ளீடு செய்பவர் யார் என்கிற இரகசியத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு ஏற்ப அது அமைய வேண்டும். இந்த இணையதளத்தை உள்ளூர் காவல்துறையிலிருந்து தலைமைச் செயலகம் வரை பார்வையிடவும், நடவடிக்கை எடுக்கவும், சோதித்தறிவும் வழிவகை செய்ய வேண்டும். புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வகையிலும் அது வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும், சமூகக் கட்டமைப்பும் சீரழிந்து, நிலைகுலைந்து போய் உள்ளதால், உள்ளூர் அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அரசு கட்டமைப்பை மட்டுமே நம்பி இருந்தால் அது ஒருபோதும் கதைக்கு உதவாது. 'பழைய குருடி கதவைத் திறடி' என்கிற கதையாகத்தான் அது இருக்கும். 

தமிழ்மணி

4 comments:

  1. இனிமேலாவது இரும்பு கைகொண்டு ஒழிக்க வேண்டும்

    ReplyDelete
  2. இந்த கட்டுரையைப் படித்துவிட்டு, எனது நெருங்கிய நண்பரும் தோழருமாகிய சீனு அவர்கள் எழுதிய பதில்.

    ****
    சார் வணக்கம்,

    என்னுடைய கருத்து என்னவென்றால் நான் 22 வருடங்களாக கட்டிடத் தொழிலில் மிகவும் வலியும் வேதனையும் நிறைந்த கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் உடல் ரீதியாக. இதுவரை எந்த மதுபானங்களையும் நான் குடித்ததில்லை, ஆகையால் என்னால் குடிக்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் என்னுடைய தந்தை அவர் நான் நான்கு வயது இருக்கும் பொழுதே அவர் குடியால் ஏற்பட்ட பாதிப்புகளால் அவர் உயிரிழந்து விட்டார். ஆகையால் அவரை என்னுடைய நான்கு வயதில் பார்த்தது எனக்கு ஏதோ கனவு போலதான் இருக்கிறது. ஆகையால் அவர் முகம் கூட எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அப்படி இருக்கும் போது என்னுடைய தாய் எனக்கு சொல்லி வளர்த்ததெல்லாம் உங்கள் அப்பா இப்படித்தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நம் வாழ்க்கையே நாசம் ஆகிவிட்டது என்று, அவ்வப்போது அழுது கொண்டே இருப்பார். நானும் சிறு வயதில் இருந்து என்னுடைய அம்மா அழும்போதெல்லாம் கண்ணீரை துடைத்துக் கொண்டே, 'அழாத அம்மா' என்று சொல்லி ஆறுதல் சொல்லுவேன். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

    இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் என்னுடைய திருமணத்தின் போது உறவினர்களிடம் நண்பர்களிடம் எல்லோரிடமும் பத்திரிக்கையை, நான் கொடுக்கும்போது கல்யாணத்திற்கு வாங்க என்று அழைத்த போது, ஒரு சிலர் என்னிடம் சரக்கு பாட்டில் ஏற்பாடு பண்ணிட்டியா? அப்படி என்று கேட்பார். அதற்கு நான் சரக்கு பாட்டில் நான் கொடுத்தால்தான் நீங்கள் கல்யாணத்திற்கு வருவீர்கள் என்று இருந்தால், அந்த கல்யாணத்திற்கு நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லிதான் பத்திரிக்கையைக் கொடுத்து விட்டு வந்தேன். இதில் நான் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் என் அம்மா என் தந்தையின் குடிப்பழக்கத்தை பற்றி விவரமாக என்னிடம் சிறுவயதில் இருந்தே சொல்லி என்னை வளர்ப்பதினால் அந்தக் கஷ்டங்களை சொல்லி வளர்த்ததினால், நான் அந்த விவரங்களை அறிந்து கொண்டு என் மனதை திடப்படுத்திக் கொண்டேன். ஆகையால் எனக்கு இன்று வரை குடி பழக்கம் உள்ளவர்கள் பக்கத்தில் சென்று அவருடைய துர்நாற்றம் அதை நான் உணர விலகி விடுவேன். இன்றுவரை என்னை யாரும் குடிக்கச் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் நான் குடிப்பவன் அல்ல என்று. அப்படி இருக்கையில் தனிமனிதனாக மட்டுமே இந்த உலகத்தில் நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் குடிப்பழக்கம் இல்லாமலும் வளர முடியுமே தவிர எந்த அரசாங்கம் வந்தாலும் நாம் நம்முடைய குடும்பம் பிள்ளைகள் அவற்றினுடைய அக்கறையின் மேல் நாம் கொண்டுள்ள நேசமும் பாசமும்தான் நம்மைக் குடிப்பழக்கத்திற்கு போக விடாமல் தடுக்கும். அதை மீறிப் போகிறவர்கள் இதற்கான எதிரிகளாகத்தான் இன்று வரை இருக்கிறார்கள். தனிமனிதனாக மட்டுமே அவரவர் வாழ்க்கையில் அவரவர் தீய பழக்கங்களை விட்டு ஒழிக்க முடியுமே தவிர, யார் என்ன சொன்னாலும் நம் புத்திக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே செயல்படுத்துவார். ஏனென்றால் இவர்கள் அந்த எண்ண ஓட்டத்துக்கு ஏற்றார் போல தங்களை வடிவமைத்து கொண்டிருக்கிறார்கள். மற்றும் அவரவர் ஆசைகளை கட்டுப்படுத்துவதில்லை. அதுவும் உயிர்போகும் என்று ஒரு செயலை செய்ய துடிப்பவர்கள், அவர்கள் பின் இருக்கும் குடும்பங்களை மறந்து விடுகின்றனர். மறப்பவர்க்கு ஏன் அந்தக் குடும்பத்தினர் அழ வேண்டும்? குடும்பத்தை மறந்து விட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பவரை நாம் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும்? நம்மை அவர்கள் வேண்டாம் எனதான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்? இதற்கு எந்த காரணம் அவர்கள் சொன்னாலும் அது ஏற்கத்தக்கது அல்ல.

    ஏனென்றால் பெண்களுக்கும் வீட்டில் சுமைகள் அதிகம் உள்ளன? பெண்கள் நினைத்தால் இந்த நாடே சுடுகாடாகிவிடும். அவர்கள் ஏன் ஆண்களைப் போல குடிப்பதில்லை? பெரும்பாலானவர்கள் பெண்கள் அந்த மன அடக்கத்திற்கு அவர்கள் உள்ளாகும் போது , நம் குடும்பம் முக்கியம், நம் கணவர் முக்கியம் என்று பெண்கள் நினைக்கும் போது, அந்த அக்கறை ஏன் ஆண்களிடம் இல்லை? இது அலட்சியத்தின் குறியீடு? அகம்பாவத்தின் குறியீடு? ஆணவத்தின் குறியீடு? ஆம்பளை நான் செய்தால் நியாயம் பெண்கள் செய்தால் தவறு, என்று இருக்கும் இந்த சமூகம் ஒரு கேடுகெட்ட சமூகம். நான் இதுவரையில் யோசனை செய்து பார்த்ததில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் குடித்தால் அப்போது இந்த நாடு என்ன ஆகும்? அந்த பிள்ளைகள் என்ன ஆகும் அப்போது இந்த கணவன்மார்கள் எல்லாரும் பெண்களை தாறுமாறாக பேச மாட்டார்களா?

    அப்படித்தான் இப்போதும் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து இந்த ஆண்கள் இறந்ததற்கும் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் அவர்களை தாறுமாறாக திட்ட வேண்டுமே தவிர, அந்த உடலை வைத்து அழுவதோ கவலைப்படுவதோ எந்த வகையிலும் என்னைப் பொருத்தவரை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல?

    சீனு

    ReplyDelete
  3. வேலுமணி: உண்மை தான்.
    கள்ளச்சாராயம் காய்ச்சுதல்,உபகரணங்கள் வாங்குதல் முதல் உற்பத்தி மற்றும் விற்பனை , வாங்குபவர் என எல்லா இடத்திலும் தகவல் சொல்லப் பட்டு இருக்க வேண்டும்.
    தொடர்புடைய அனைவரும் சாவுக்கு பொருப்பானவர்களே.

    ReplyDelete