Sunday, June 9, 2024

அறுபதாம் கல்யாணத்தின் சூட்சமம் தெரியுமா?

திருப்பத்தூர் மாவட்டம், ஒரு கிராமத்தில் பச்சையம்மன் கோவிலில் இன்று அம்மனுக்குக் கல்யாணமாம். எதற்காக அம்மனுக்குக் கல்யாணம் என்பதை விளக்கி புரோகிதர் ஒருவர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்

ஒரு நாள் இவரது திருமண புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தனது மகள் எங்கே ஒரு போட்டோவில்கூட என்னைக் காணோம், என்னை மட்டும் விட்டுவிட்டு நீங்க மட்டும் ஃபோட்டோ எடுத்தீர்களா?” என்று கடிந்து கொண்டாளாம்.  

பெற்றோர்களின் திருமணத்தை பிள்ளைகள் நேரில் பார்த்திருக்க முடியாதல்லவா? அதனால் தங்களது பெற்றோர்களுக்கு திருமணம் செய்து வைத்து அதை நேரில் பார்க்க வேண்டுமாம். அதற்காக ஐம்பது வயதில் ஒரு கல்யாணம்,  அறுபது வயதில் ஒரு கல்யாணம், எண்பது வயதில் ஒரு கல்யாணம் என பெற்றோர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தால் ஒரிஜினல் கல்யாணத்தை நேரில் பார்க்காத குறை நிவர்த்தி அடையுமாம். இப்படி பெற்றோர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதன் சூட்சுமத்தை அந்தப் புரோகிதர் விளக்கிக் கொண்டிருந்தார்.

 
புகைப்படம் எல்லாம் அறிமுகத்திற்கு வராத காலகட்டத்தில் என்னென்ன கதை அளந்தார்களோ?
இப்படிச் சொன்னால்தானே பெற்றோர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைப்பார்கள். அறுபதாம் கல்யாணத்தை சும்மா செய்து வைத்துவிட முடியுமா? கல்யாணம் என்றாலே ஐயர் இல்லாமலா? எனவே அறுபதாம் கல்யாணத்திற்கு கண்டிப்பாக புரோகிதரை அழைக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விடுகிறதுல்லவா? இதில் அறுபதாம் கல்யாணம் மட்டும் விதிவிலக்கா என்ன?
 
அறுபது வயது வரை நல்லபடியாக குடும்ப வாழ்க்கையைக் கடந்ததற்காககத்தான்  அறுபதாம் கல்யாணம் என்று இதுவரை பலர் எண்ணிக் கொண்டிருப்பர்.
 
கல்யாணம் செய்துகொண்ட பிறகு இதுவரை அவர்கள் துன்பத்தையே சந்திக்காமல் இன்ப வாழ்க்கை வாழ்ந்து விட்டார்கள் என்று பொருளா? இல்லை இனி வரும் காலங்களில் அவர்களைத் துன்பம் அண்டாது என்று பொருளா? இன்ப துன்பங்கள் நிறைந்ததுதானே குடும்ப வாழ்க்கை. உழைப்பாளிகள் யாரும் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்வதாக எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் மட்டுமே அறுபதாம் கல்யாணம் நடப்பதாகத் தெரிகிறது. பசை உள்ள இடத்தில்தானே பக்குவமாய் கரக்க முடியும்.
 
இப்படிப்பட்ட கதைகளும் கல்யாணங்களும் தங்களது வரும்படிக்காக புரோகிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாகிறது.
 
நூற்றுக்கும் மேற்பட்ட இப்படியான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் இந்துக்களிடையே புகுத்தி, தங்கள் வருவாய்க்கு உத்திரவாதம் செய்து கொண்டனர் பார்ப்பனர்கள் என்று அம்பேத்கர் விரிவான பட்டியல் ஒன்றை தொகுத்திருக்கிறார்.
 
ஏமாளிகள் இருக்கும் வரை ஏய்க்கத் தெரிந்தவன் உன்னை ஏய்த்துக் கொண்டுதான் இருப்பான். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாறப் போகிறாயோ?
 
அறுபதாம் கல்யாணம் செய்து வைத்து ஐயருக்குப் படி அளந்தால் ஐயரைத்தான் நீ வாழ வைக்கிறாய். மாறாக ஆயுள் வரை பெற்றவர்களை கண்கலங்காமல் பார்த்துக் கொள். அதுவே உனது வாழ்க்கைக்குப் பெருமை சேர்க்கும்.
 
ஊரான்

No comments:

Post a Comment