Sunday, June 2, 2024

மெய்ஞானம் என்றால் என்ன?

மெய்ஞானம் என்றால் என்ன?

மெய்ஞானம் என்றால் புறநிலைமைகளை மனிதன் தன் ஐம்புலன்களால் உணர்ந்து அவ்வாறு உணர்ந்தவற்றைத் தொகுத்து அதில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து ஒரு கருத்தை உருவாக்குவது. இதைத்தான் தத்துவம் என்கிறார்கள். 

புற உலகில் நடக்கின்ற பல்வேறு விசயங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கங்கள் சாதகமானதாகவோ பாதகமானதாகவோகூட இருக்கலாம். பாதகமான தாக்கங்கள் ஏற்படும் போது அது குறித்தக் காரணங்களைக் கண்டறிந்து அதிலிருந்து மீள்வதற்கு ஒரு பொதுவான வழிகாட்டுதலை கொடுக்கிறான். அதையே முழு முற்றான உண்மையாக ஏற்றுக் கொண்டு அதை கடைபிடிக்க முயற்சிக்கிறான் மனிதன். 

சாதகமான விசயங்கள்கூட பரிசீலிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு அதுவும் தத்துவத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது.

இங்கே முதன்மையானது புற உலகில் உள்ள பொருள்கள்தான். புறவுலகில் பொருள்கள் இல்லை என்றால் ஐம்புலன்களுக்கு உள்ளீடுகள் ஏதுமில்லை. ஐம்புலன்களுக்கு உள்ளீடுகள் ஏதுமில்லை என்றால் மூளையில் எதுவும் பதிவாகப் போவதில்லை. மூளையில் எதுவும் பதிவாகவில்லை என்றால் மனம் என்ற ஒன்றுக்கு வேலையே இல்லை. மனம் என்பது மூளையின் ஒரு வெளிப்பாடுதானே ஒழிய மனம் என்று ஒன்று தனியாக இல்லை. mind is the product of brain. 

சமூக வாழ்க்கையும் இங்கே புறவுலகைச் சார்ந்ததுதான். புற உலகில் உள்ள பொருள்களோடு மனிதன் கொண்டுள்ள தொடர்பு, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பு- தனியாகவோ அல்லது கூட்டாகவோ-இவை எல்லாமே மனித மூளைக்கான உள்ளீடுகள்.

ஐம்புலன்களின் ஆரோக்கிய நிலையைப் பொறுத்து பதிவாகின்ற உள்ளீடுகள் வேறுபடுகின்றன. உள்ளீடுகள் வேறுபடும் பொழுது மனமும் வேறுபடுகிறது. இவை எல்லாம் வேறுபடுவதனால்தான் மாறுபட்ட கருத்துக்கள் வருகின்றன. அதனால்தான் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து எல்லோரும் ஒரே மாதிரியான கருத்துக்களை முன் வைப்பதில்லை. தத்துவஞானிகளுக்கும் இது பொருந்தும்தானே? எனவே முழு முற்றான உண்மை / அறிவு என்று எதுவும் இல்லை.  நேற்றைய உண்மை இன்றைய பொய்யாகிறது. இன்றைய பொய் நாளைய உண்மையாகக்கூட ஆகலாம். அது புறஉலகைச் சார்ந்தது. 

மனித சமூகம் முதன் முதலில் கூட்டம் கூட்டமாக தனித்தனி இனக் குழுக்களாகத்தான் இருந்தன. அப்பொழுதெல்லாம் தத்துவங்கள் இருந்தனவா என்று தெரியவில்லை. எழுத்தறிவில்லா காலகட்டமல்லவா அது. 

அதன் பிறகு அடிமைச் சமூகம் வந்த பொழுது அடக்கு முறையும் சேர்ந்து வந்ததனால் அவற்றிலிருந்து மீள்வதற்கான தத்துவங்கள் தோன்றின.

அதன் பிறகான நில உடமைச் சமூகம் வந்த பொழுது சொத்துடமை பிரதானமாக இருந்தது. அதற்கேற்ப குடும்ப அமைப்புகளும் தோன்றின. 

அந்த காலகட்டத்தில்தான் போட்டி, மோதல், பொறாமை, களவு, காமம், போதை உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகள் அதிகரித்து, அவற்றிலிருந்து மக்களை மீட்பதற்கான வழியைத் தேட முயன்றனர்.  அப்பொழுதுதான் திருவள்ளுவரைப் போன்ற மெய்ஞானிகள் தோன்றினார்கள். 


சொத்துடைமைச் சமூகமும் குடும்ப அமைப்பும் இன்னும் மாறிவிடவில்லை. அதனால்தான் வள்ளுவர் காலத்திய பல்வேறு சீர்கேடுகளும் இன்றும் தொடர்கின்றன.

அறிவியல் வளர்ச்சி, அதை ஒட்டிய புதிய கருவிகளின் கண்டுபிடிப்புகள், அதைத் தொடர்ந்து கருவிகளுக்குச் சொந்தக்காரர்களான முதலாளிகள், லாபம், சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்றைய சமூகத்தில் கூடுதலாக வந்து சேர்ந்தன. 

இவற்றையெல்லாம் தொகுத்து பார்த்துதான் இவற்றிலிருந்து மக்களை எப்படி மீட்பது என்று சிந்திக்கும்போது காரல் மார்க்ஸ் போன்ற தத்துவஞானிகள் தோன்றுகிறார்கள். 

மெய் என்றால் உண்மை. இது குறித்த அறிவைத்தான் தத்துவம் என்கிறார்கள். எனவே காரல் மார்க்ஸ் போன்றவர்களும் மெய்ஞானிகள்தான். 

மெய்ஞானமோ தத்துவஞானமோ அது என்றென்றைக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. 

உற்பத்தி முறை மாறும் பொழுது உற்பத்தி உறவுகளும் மாறும். உற்பத்தி உறவுகள் மாறும் பொழுது பண்பாடு பழக்க வழக்கங்களும் மாறும். இவை எல்லாம் மாறும் பொழுது பிரச்சனைகளும் மாறும். பிரச்சனைகள் மாறும் பொழுது அதற்கான தத்துவ விளக்கங்களும் மாறும். 

எனவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் ஒரே மாதிரியான தத்துவங்கள் இருக்க முடியாது. 

சுரண்டலற்ற ஒரு பொதுவுடமைச் சமூக சமுதாயம் அமையும் பொழுது அங்கே வேறு விதமான பிரச்சினைகள் தோன்றும். அப்பொழுது காரல் மார்க்சின் தத்துவஞானம் தேவையற்றதாகி, வேறு ஒரு தத்துவஞானம் தோன்றும். இதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி போக்காக இருக்கும். இருக்க முடியும்.

மனித சமுதாயத்தின் வளர்ச்சியினூடே அறிவியலும் சேர்ந்தே வளர்கின்றது. எனவே அறிவியலை உள்ளடக்கியதுதான் மனித சமூகமும். அறிவியலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் மனித சமூகத்தில் விளைவுகளை ஏற்படுகின்றன என்பதை நாம் ஒதுக்கிவிட முடியாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனின் தேவைக்காகத்தான். ஆனால் அது யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து அதனுடைய பயன்பாடு அமையும். சோசலிச காலகட்ட ருசியாவை ஒப்பிட்டுப் பாருங்கள். இதன் உண்மை புரியும்.

தத்துவஞானம் என்பது தமிழ் இனத்திற்கானது மட்டுமல்ல அது உலக மனித இனத்திற்கானது. ஒவ்வொரு இனமும் அவர்களுக்கான தத்துவஞானத்தை கொண்டவர்கள்தான். இதில் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்த இனத்தின் சூழலுக்கு ஏற்ப அந்தந்த காலகட்டத்தில் தோன்றிய தத்துவஞானங்களில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். தமிழ் மரபிலும் எண்ணற்ற தத்துவஞான கருத்துக்கள் உள்ளன என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

ஊரான்

(ஒரு வாட்ஸ்அப் குழுவில் எழுதிய பதில்)

No comments:

Post a Comment