Wednesday, August 28, 2024

புள்ள புடிக்கிறவனும் புள்ளையார் சதுர்த்தியும்!

நமக்கு, புள்ள புடிக்கறவனப் பார்த்தாலும் பயம். புள்ளையாருப் புடிக்கறவனப் பார்த்தாலும் பயம். புள்ள புடிக்கிறவன் எங்கிட்டிருந்து வரானே தெரியாது. அவன் நம்ம ஆளு கிடையாது. இப்பல்லாம் புள்ளப் புடிக்கிறவனப் பார்த்து நாம உஷாராயிட்டதனால அது ரொம்பவே கொறைஞ்சு போச்சு.

புள்ளையாருப் புடிக்கிறவனும் நம்ம ஆளு கிடையாதுதான். ஆனா நம்ம ஆளுங்ககூடவே சேர்ந்து அவனுங்களும் வர்றதுனால கொஞ்சம் ஏமாந்துகிட்டு இருக்கோம்.


எது எப்பிடியோ, இன்னும் ஒரு வாரத்துல புள்ளையாரு சதுர்த்தி வரப்போவுதுஒரு காலத்துல புள்ளையாருக்குப் பதிலா கொழுக்கட்டையதான் புடிச்சோம். ஆனா, இப்ப எல்லாம் கொழுக்கட்டையப் புடிக்கிறோமோ இல்லையோ, வீட்டுக்கு வீடு புள்ளையாரப் புடிச்சு வாசல்ல குந்த வச்சிட்றோம். இப்பதான் எல்லாம் ஃபேஷனாகிப் போச்சே! நாம மட்டும் விதிவிலக்கா என்ன?
 
என்னென்னமோ டக்கால்ட்டி வேலையெல்லாம் செஞ்சு பார்க்குறானுங்க. வழிக்கி விழுந்ததுதான் மிச்சம். ஆனாலும் அசர மாட்றானுங்க. பழைய டெக்னிக்கல்லாம் எடுபடலன்னா, எப்புடி புள்ள புடிக்கிறவனுங்க புது புது டெக்னிக்கோட வருவானுங்களோ, அதுபோல, புள்ளையாருப் புடிக்கிறவனுங்களும் வருவானுங்க.
 
தமிழ்நாட்டு பள்ளிக்கூடத்துக்குக் கொடுக்க வேண்டிய காச கொடுக்கிறானோ இல்லையோ, புள்ளையாருப் புடிக்க டெல்லியிலேயிருந்து காச எறக்குவானுங்க.
 
அதனால களிமண்ணுக்கு ஏக கிராக்கி வரும். காசு இருந்தா போதுமா? களிமண்ணு வேணாமா? கவலய விடுங்க. களிமண்ணத் தேடி எங்கேயும் அலைய வேணாம்.
 
"தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதிய ஏன் தர்ல?" என்ற தலைப்புல தொலைக்காட்சிகள்ல விவாதம் ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு நாலஞ்சு நாளைக்கு தொலைக்காட்சி விவாதங்கள விடாமப் பாருங்க.

வலதுசாரி பேர்ல கலந்துக்கிறவனுங்க ண்டைய லேசா தட்டித் தூங்குங்க.  ஆள இல்ல, மண்டைய மட்டும். உள்ள பார்த்தீங்கன்னா அசந்துடுவீங்க. டன் கணக்குல களிமண்ணு உருண்டு கிடக்கும். அள்ளி எடுங்க. ஆயிரம் புள்ளையாரு ரெடி.
 
களிமண் எடுத்த எடத்த, எம்ட்டியா வுட்டுடாதீங்க. எதுக்கும்  கொஞ்சம் கோமியத்த ஊத்தி வைங்க. பின்னாடி தேவைப்படலாமில்ல?
 
ஊரான்
 
(குறிப்பு: கல்விக்குத் தர வேண்டிய நிதியைத் தமிழ்நாட்டிற்குத் தரமறுக்கும் ஒன்றிய அரசு குறித்து சில தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற வலதுசாரி பிரமுர்களின் மண்டையில இருந்து வெளியே வந்து விழுந்த உருட்டுகளைக் கேட்ட போது என் மண்டையிலே உதித்தது.

விவாதத்தின் போது, நெறியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல், சங்கிகளின் மூக்குகள் போன கோணலைப் பார்த்த போது, எனக்கு புள்ளையரின் தும்பிக்கைதான் நினைவுக்கு வந்தது)

Monday, August 26, 2024

'ஜாதகம்' எனும் புதை சேற்றில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு!

மழலைகளை மகிழ்விக்க பால்வாடிகள் இலவசம்,

மாணவர்களுக்கு பள்ளிப் பாடப் நூல்கள் இலவசம்.
 
முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கல்லூரிப் படிப்பு இலவசம்.
 
அரசுப் பள்ளியில் பயின்று அயல்நாடு சென்று உயர்கல்வி பெறுவோருக்கு வான் பயணக் கட்டணம் இலவசம்.
 
மாதம் தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம்,‌
 
பிங்க் கலர் பேருந்துகளில் பைசா நீட்டாமல் முக மலர்ச்சியோடு பயணச்சீட்டு பெறும் மகளிர் கூட்டம்.
 
அரசு மருத்துவ மனைகளில் அனைவருக்கும் இலவச சிகிச்சை.
 
தனியார் மருத்துவ மனைகளில் சிக்கிக் கொண்டாலும் மீண்டுவர கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
 
நியாய விலைக் கடைகளில் இருபது கிலோ இலவச அரிசி, சலுகை விலையில் சீனி-பருப்பு-பாமாயில்.
 
பொங்கலுக்கு பொங்கல் பானைகள் பொங்க, பச்சரிசித் தொகுப்போடு இலவச வேட்டி சேலை.
 
சொந்த வீட்டில் சோறு மறுக்கப்பட்டாலும் நாலனாவில் கை நனைக்க அம்மா உணவகங்கள்

தமிழ்நாடே சொர்க்கத்தில் மிதக்கிறதோ
என ஒரு பக்கம் எண்ணத் தோன்றினாலும்,
 
சொர்க்கம் மதுவிலேஎன கால்கள் தள்ளாட, கைகளில் குவாட்டர்களோடு மறுபக்கம் முக்கால்வாசி பேர் டாஸ்மாக்கில் நீந்தினாலும்,

இலட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சூரியனும்-சனியும்,
ராகு-கேது-செவ்வாயும் என நவக்கிரகங்கள் அனைத்தும் தாயின் கருவறைக்குள்ளிருந்து பிறப்புறுப்பு வழியாக நீ வெளிவரும் போது துரத்தத் தொடங்கி,  நீ கவிழ்ந்து  தவழ்ந்து நிமிர்ந்து வளர்ந்து வாழ்க்கைப் பயணத்தில் நடக்கையிலே எத்தனை எத்தனை தடைக் கற்கள்?
 
மேஷம் முதல் மீனம் வரை உள்ள சில கொடிய விலங்குகள் உரையும் கொடுங் காடுகளையும்,
பூரம்-பூரட்டாதி
உத்திரம்-உத்திரட்டாதி
பூசம்-புனர்பூசம்
கேட்டை-அவிட்டம் என எண்ணற்ற பாழுங்கிணறுகளையும்-புதை குழி-சேறு-சகதிகளையும் கடக்க வேண்டிய உள்ளது.
 
அங்கே அகோரப் பசியோடு அலையும் சிங்கம் புலி ஓநாய்களும், அருவெறுப்பாய் நெளியும் பாம்புகளும்-பல்லிகளும், தேள்களும்-பூரான்களும் என எண்ணற்ற கொடிய ஜந்துக்கள் நம்மைச் சுற்றி வட்டமடிக்கின்றன.

வாழ்க்கைப் பயணத்தில், அடுத்த அடி எடுத்து வைத்தால் என்ன நேரிடுமோ என எண்ணி ஆசுவாசப்படுத்துவதற்குள், இவை நம்மைக் கொத்திக் குதறுகின்றன.
குதறப்பட்ட தசைகள் தாறுமாறாய் கிழிந்து தொங்க, ரத்தம் சொட்டச் சொட்ட நாமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இவைகள் நம்மை விடுவதாக இல்லை. இறுதியில் நாம் சுடுகாட்டில் போய் தஞ்சம் அடைந்தாலும், அதன் பிறகு நமது சந்ததியைத் துரத்துகின்றன.

செவ்வாயாலும், நாகத்தாலும், ராகுவாலும், கேதுவாலும் கெட்டழுகிப் போனவர்களின் பட்டியலை நீட்டினாலே அது செவ்வாயைத் தொட்டுவிடும்.

சிந்துபாத் கதைகூட ஒரு நாள் முடிவுக்கு வரலாம். ஆனால் இந்த ராசி எனும் கொடிய காடுகளும் நட்சத்திரங்கள் எனும் பாழுங்கிணறுகளும் அழிக்கப்படாத வரை ரத்தம் சொட்டச் சொட்ட நாமும் ஓடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
 
ஆயிரம் கலைஞர்கள் வந்து 'நிஜ சொர்க்கத்தை' உருவாக்க முனைந்தாலும், ஒரு சில புரோகிதன்கள் உருவாக்கும் கொடிய காடுகளும், பாழும் கிணறுகளும் நம்மை காராகிரகத்தில் அல்லவா தள்ளிக் கொண்டிருக்கின்றன.
 
ஊரான்

Sunday, August 25, 2024

இளங்கோவன் மரணம்: மேலும் ஒரு பெருந்துயரம்!

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை, சென்னையிலிருந்து கோவை வரை, என 1978 ஆம் ஆண்டில் பாலிடெக்னிக் படிப்பு முடித்த, தமிழ்நாடு பட்டயப் பொறியாளர்களின் (Diplamo in Engineering) குவி மையமாக விளங்கியது திருச்சி பெல் (BHEL) நிறுவனம்.
 
பன்முகப் பண்புகளைக் கொண்டவர்களோடு பழக, உறவாட பாலம் அமைத்துக் கொடுத்தது அந்நிறுவனம்.  


நடுவண் அரசின் நிறுவனம் ஒன்றில், நிரந்தரப் பணியில் சேர்ந்தோம், இனி தன் வீடு, தன் குடும்பம்மட்டும் என்றில்லாமல், சமூகத்தில், தாங்கள் கற்ற பாடங்களையும் ஒரு படிப்பாக எடுத்துக் கொண்டு, சமூக அவலங்களையும் அலசும் ஆவல் கொண்டவர்களில் தோழர் எஸ்.இளங்கோவனும் ஒருவர்.
 
பணி நிரந்தரம் ஆகுமா என்பது உறுதி ஆவதற்கு முன்பாகவே, பயிற்சிக் காலத்தில், மகத்தான தமிழறிஞர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்ச் சாற்றைக் பருகபெல் பயிற்சி விடுதி வளாகத்திலேயே ஏற்பாடு செய்தவர் நண்பர் இளங்கோவன் அவர்கள். ‘தென் மொழியும், ‘தமிச்சிட்டும் எம்மைந் பற்றிக்கொள்ள பாலம் அமைத்தவரும் இவரே.
 
இவர் திராவிட இயக்க அரசியலில் தீவிரமாகப் பயணித்தபோதும், நான் தீவிர இடதுசாரி அரசியலில் பயணித்த போதும், அரசியலில் ஆயிரம் கருத்து முரண் இருந்தாலும், முகம் காட்டாமல், முறுக்கிக் கொண்டு செல்லாமல் புன்முறுவலோடுப் பழகும் பண்பாளர் இவர்.
 
திராவிட இயக்கப் போராளிகளும், தீவிர இடதுசாரிகளும் கரம்கோர்த்து பயணிக்கின்ற அவசியம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், திருச்சியில்  மகஇக மேடைகளில்கூட அவர் 
முழங்கி உள்ளார்.
 
சமூகப் பணிகளுக்கு அவர் அதிக முன்னுரிமை கொடுத்து, அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டதால், அவர் எந்தப் பதவியில் (chargeman) பணிக்குச் சேர்ந்தாரோ அதே பதவியிலேயே  அவர் பணி ஓய்வும் பெற்றார். பெல் வரலாற்றில் அதிசயங்களிலும் அதிசயமான ஒரு அசாதாரணமான  நிகழ்வு இது. அதனால், அவர் உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பை மட்டும் இழக்கவில்லை; ஊதிய இழப்பாக பணமதிப்பில் பல இலட்சங்களையும் இழந்து, தான் ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்ந்தவர் அவர்.
 
தன்னை ஆட்டிப்படைத்த சோரியாசிஸ் எனும் நோய்கு எதிரானப் போராட்டமும் அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. ஹோமியோபதி கற்றுத் தேறி தனது இறுதி காலத்தில் பிறருக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருவதாக என்னிடம் அவர் கூறுவார். இறை மறுப்பு, தமிழ்ப் பற்று, சோரியாஸிஸ், ஹோமியோபதி என எண்ணற்றவற்றில் என்னோடு ஒப்புமை உள்ளவர்.
 
சோரியாசிஸ் ஒரு நோய் அல்ல; அது ஆரோக்கியமானவர்களின் பிணி’ (healthy man disease) என்பார்கள். ஆனாலும் அவர் அறுபத்தி ஐந்திலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
வாழ்வின் மிக முக்கிய நண்பரை, தோழரை இழந்துவிட்டேன். அவரது இழப்பின் துயரங்கள் எம்மைத் துரத்திய போதும், அவரது லட்சியங்களைச் சுமப்பதே அவருக்கு யாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
 
ஊரான்.