கர்ப்ப தோஷம், மாதவிலக்கு போன்றவற்றில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது சனாதனம் என்பது குறித்து ஏற்கனவே பார்த்துள்ளோம்.
பெண் அர்ச்சகர்கள்: சனாதானத்திற்கு சம்மட்டி அடி
பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களை ஒரு இழி பிறவியாகவே நடத்துகிறது சனாதனம். பார்ப்பன-சத்திரிய-வைசியப் பெண்களாக இருந்தாலும், அவர்களுக்குப் பூணூல் அணியும் உரிமையை மறுத்து சூத்திர நிலைக்குத் தள்ளிவிடுகிறான் மனு (மனு 2:66).
வேத-மந்திரம் ஓதுகின்ற உரிமை சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டதால்தான், ஆகமக் கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள், அதாவது சூத்திரர்கள் அர்ச்சகர் ஆவதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது பார்ப்பன சனாதனக் கும்பல். மனுவின்படி பெண்களும் சூத்திரர்கள் என்பதால் அவர்களுக்கும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது.
மாதவிடாய்க்கு ஆட்பட்ட பெண்கள் கோவிலுக்கே வரக்கூடாது என சபரிமலையில் சண்டமாருதம் செய்யும் சனாதனத்தை, அதன் பிடறியிலேயே அடித்து மாதவிடாய் காலத்திற்குட்பட்ட இளம் வயதுப் பெண்களை அர்ச்சகராக்கி, சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் அரசு. சனாதன எதிர்ப்புப் போராட்டத்தில் இது ஒரு மைல்கல்.
பெண் அர்ச்சகர்கள்
குழந்தைத் திருமணம்
கூப்பிடுவதற்கு சுகமாய் இருக்கும்படி பெண்களுக்குப் பெயர் வைக்க வேண்டும் (மன 2: 33) என்று சொல்லியும், அன்ன நடை நடக்க வேண்டும், சிறு குரல் உடையவர்களாக இருக்க வேண்டும் (மனு 3: 10), கணவனை விட அதிக உயரமாக இருக்கக் கூடாது (மனு 3: 8) என இலக்கணம் வகுத்துப் பெண்களை கீழே தள்ளுகிறான் மனு. பெண் பார்க்கச் செல்லுகையில் இவை எல்லாம் இன்றும் சோதிக்கப்படுகிறதுதானே?
ருது காலத்திற்கு முன்பே, அதாவது எட்டு வயதுக்கு முன்பே, (மனு 9-88), தந்தையின் அனுமதி பெற்று (மனு 3: 4), தந்தை யாரைக் காட்டுகிறானோ அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் (மனு 5-151).
ஏப்ரல் 1, 1930 அன்று ஆங்கிலேயன் கொண்டு வந்த குழந்தைத் திருமண தடைச் சட்டம் சனாதனத்திற்கு சாவுமணி அடித்தது. ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்பது இன்று விதியாயிற்று. இல்லையேல் இன்று கம்ப்யூட்டரைப் கையாலும் கைகள் கரண்டியை மட்டும்தான் பிடித்துக் கொண்டிருக்கும்.
ஒரு பெண்ணை ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக நிச்சயம் செய்த பிறகு அத்திருமணம் நின்று போனால், அவனது தம்பிக்கோ அல்லது அண்ணனுக்கோ அந்தப் பெண்ணைக் கட்டி வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது சனாதனம் (மனு 9: 69).
அப்பப்பா! சனாதனத்தை நினைத்தாலே படு பயங்கரமாக இருக்கிறது பெண்களின் நிலை.
கேடுகெட்டவனானாலும், கணவனே கண்கண்ட தெய்வம்
கணவன் எவ்வளவுதான் கேடு கெட்டவனாக இருந்தாலும், (அண்ணன் சீமானைப் போல பொம்பள) பொறுக்கியாக இருந்தாலும், அவனிடம் நற்குணங்கள் ஏதும் இல்லை என்றாலும், (அண்ணி கயல்விழி போல) கணவனை தெய்வமாகப் பூசிக்க வேண்டும் என்கிறது சனாதனம் (மனு 5-154).
கணவன் ஒரு சூதாடியாக, குடிகாரனாக, நோயாளியாக இருந்தாலும் அவனுக்கு மனைவியானவள் பணிவிடை செய்ய வேண்டும்; பணிவிடை செய்ய மறுத்தால் மூன்று மாத காலத்திற்கு அவளுக்கான அலங்காரத்தையும் உடைகளையும் படுக்கையையும் பறித்துக் கொள்ளச் சொல்கிறான் மனு (மனு 9-78).
கூட்டிக் கொடுக்கும் சனாதனம்
குழந்தை இல்லை என்றால், கணவன் மற்றும் மாமனாரின் ஒப்புதலோடு, கணவனுடைய அண்ணனுடனோ அல்லது தம்பியுடனோ அல்லது ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகளிடமோ படுத்து, பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது சனாதனம் (மனு 9: 59). நல்ல வேளை, இன்று டெஸ்ட் டியூப் பேபிகள் வந்துவிட்டதால் பெண்கள் தப்பித்தார்கள்.
படுக்கையும், காமமும், அலங்காரமும் பெண்களுக்கானது (மனு 9: 17). பெண்கள் பெரும்பாலும் விபச்சாரத் தன்மையுடையவர்கள் (மனு 9-19), என்பதனால் அவர்கள் தனியாக இருக்கக் கூடாது (மனு 5: 149) என்கிறது சனாதனம்.
மனைவி மலடியாக இருந்தால் அல்லது நோஞ்சான் குழந்தையைப் பெற்றெடுத்தால் அல்லது தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அத்தகைய மனைவியை ஓரங்கட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணை கணவன் திருமணம் செய்து கொள்ளலாம் (மனு 9: 81). இன்றும் தொடரும் சனாதன அவலம் அல்லவா இது!
பெண்களுக்குச் சொத்துரிமை
சிறுவயதில் தகப்பன் பாதுகாப்பிலும், திருமணத்திற்குப் பிறகு கணவன் பாதுகாப்பிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளையின் பாதுகாப்பிலும்தான் ஒரு பெண் இருக்க வேண்டும் (மனு 5: 148). இப்படி தந்தை-கணவன்-மகன் பாதுகாப்பில் இருப்பதனால் அவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்கிறான் மனு (மனு 9: 3).
பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்றால், அவர்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென 1929, செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை, 1989 இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனிச் சட்டமாகக் கொண்டு வந்து, சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உத்தரவாதம் செய்தார்.
விதவைக் கோலமும் உடன்கட்டையும்
கணவனை இழுந்த ஒரு பெண் விதவையான பிறகு, நல்ல உடை உடுத்தக் கூடாது, மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளை உடைதான் உடுத்த வேண்டும். கிழங்கு, பழம், பூ தவிர வேறு நல்ல உணவை உண்ணக் கூடாது, சொற்பமான அளவே சாப்பிட வேண்டும் (மனு 5: 157), மறுமணம் செய்து கொள்ளக் கூடாது (மனு 5: 162) என கட்டுப்பாடு விதிக்கிறது சனாதனம். ஆனால் மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என ஆணுக்கு மட்டும் சலுகை அளிக்கிறது (மனு 5: 169).
விதவைப் பெண்கள் இந்த விதிகளை மீறிவிட்டால், சாஸ்திரம் அழிந்து போகும் என்பதனால்தான் இறந்துபோன கணவன் எரிக்கப்படும் போது அந்தத் தீயில் அவனது மனைவியும் தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உடன் கட்டை ஏறுதல் வழக்கத்தைக் கொண்டு வந்தனர். இதுவும் வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் முடிவுக்கு வந்தது.
1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விதவைகள் மறுமண உதவித்தொகைத் திட்டம், விதவைப் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது.
அடுப்பங்கரையிலிருந்து சந்திரயானை நோக்கி...
வீட்டை சுத்தம் செய்தல் (மனு 5: 150), பிள்ளைகளைப் பெறுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல், விருந்தினர் வந்தால் உபசரித்தல் இவைதான் பெண்களுக்கான வேலை என்கிறது சனாதனம் (மனு 9-27),
கலைஞர் கருணாநிதி அவர்கள் 1989 ஆம் ஆண்டு அரசு வேலைகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால், ஏராளமான பெண்கள் வெளியில் வேலைக்குச் சென்று சம்பாதித்து, சொந்தக் காலில் நிற்பதைக் கண்டதால்தான், தமிழ்நாட்டில் பெண் கல்வி மிகத் தீவிரமாக முன்னேற்றம் அடைந்தது. அதன் விளைவாகத்தான் இன்று மருத்துவம், பொறியியல், கல்வி, ஐடி உள்ளிட்ட துறைகளில் பெண்கள் கோலோச்சுகின்றனர். சனாதனத்தை அடுப்பில் போட்டுப் பொசுக்கிவிட்டு சந்திரயானில் பறக்கின்றனர் பெண்கள்.
பார்ப்பன சனாதனவாதிகள் கூச்சலிடுவததைப் போல சனாதனத்தைப் பாதுகாத்தால் பெண்களின் கதி என்னவாகும் என்று எண்ணி பாருங்கள்.
*****
சாதிய ஏற்றத்தாழ்வு, பார்ப்பனிய மேலாதிக்கம் குறித்து இனி பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment