Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Sunday, May 3, 2020

கரோனா ஊழல் முறைகேடு! வாலாசாப்பேட்டையில் போராட்டம்!

கரோனா காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம்வாலாசாபேட்டை நகரப் பகுதியில் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பிரமுகர்களும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தனக்குப் புகார்கள் வருவதாகக் கூறி, அவற்றைக் கண்டித்து இன்று 03.05.2020 ஞாயிறு காலை 9 மணிக்கு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ  வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் அறிவித்திருந்தார். இதுகுறித்த முகநூல் பதிவு ஒன்றை நேற்று நான் வெளியிட்டிருந்தேன். இன்று காலை அவரது வீட்டருகே வாலாசாப்பேட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் தலைமையில் சில காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்

நகராட்சி நிர்வாகமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ அசேன் அவர்களின் கோரிக்கை குறித்து பேசுவதற்குப் பதிலாக போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே அவரைக் கைது செய்வதில் குறியாக இருந்தனர். அப்பொழுது நானும் அங்கு இருந்தேன். அசேன் அவர்கள் கைது செய்யப்படும் போது புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தயாராக இருந்தேன். அதற்கு முன்னர் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்திருந்தேன். உடனே அங்கிருந்த வாலாசா நகரக் காவல் நிலைய ஆய்வாளர் கடும் கோபத்தோடு என்னை அணுகி, நான் வழக்குரைஞர் என்று கூறியும் என்னுடையக் கைப்பேசியை வலுக்கட்டாயமாகப் பறித்து புகைப்படத்தை அழித்துவிட்டார். இந்தக் காட்சியை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பதிவில் காணமுடியும். ஒரு கிரிமினலை நடத்துவது போல எனது வழக்குரைஞர் அடையாள அட்டையையும் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதை வைத்துக் கொண்டு அவர்களால் நாக்குகூட வழிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். நான் அங்கு இருக்கவே கூடாது என்று சொல்லி துணை ஆய்வாளர் என்னை வலுக்கட்டாயமாக 100 மீட்டர் தூரம் வரை தள்ளிக் கொண்டே வந்து என்னை வெளியேற்ற முனைந்தார். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல இந்த போராட்டத்தைப் பலரும் அறியும் வண்ணம் அவர்களே செய்து விட்டனர். இது அவர்களின் வழமையான நடைமுறை என்றாலும் அதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
போராட்டத்தைத் துவக்குவதற்காக அசேன் அவர்கள் தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்தார். அதுவரை கைது செய்வதற்குத் தயாராக இருந்த காவல்துறையினர் திடீரென, அவரது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறி போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அசேன் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டார். தனது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தைத் தொடருவேன் என்ற நிபந்தனையோடு அசேன் அவர்களின் இன்றையப் போராட்டம் முடிவுக்கு வந்ததுஅதன் பிறகு ஊடகங்களுக்கு அவர் பேட்டி அளித்தார். போராட்டம் குறித்து அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி.

“இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சிப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வாலாஜா நகரத்தில் உள்ள காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் முடி உள்ளன. இதனால் வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்னாள் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான வாலாஜா ஜெ.அசேன், வாலாஜா நகரத்தில் கரோனா தொற்று காரணமாக தன்னார்வகளுக்கு டி-ஷர்ட் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தின் விலை 750 ரூபாய் தான், ஆனால் நகராட்சியில் அதிக விலைக்கு வாங்கியதாகவும், கறிக் கடைகள் திறப்பதிலும்  முறைகேடு இருப்பதாகவும் கூறி முன்னாள் எம்எல்ஏ அசேன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக துண்டுப் பிரசுரத்தை நேற்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் முன்னாள் எம்எல்ஏ அசேன் வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆவன செய்வோம் என்று உறுதி அளித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரினார்கள். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு உண்ணாவிரதம் இருப்பதை அசேன் கைவிட்டார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை  எடுக்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்

வாலாசா நகராட்சியில் நடப்பது தமிழகத்தின் ஒருவகை மாதிரிதான். ஊழல் புரையோடிப் போன அதிகாரிகள், ஆளும் கட்சி அரசியல்வாதிகள் குறித்து நான் நேற்று ஊரான் வலைப்பூவில் எழுதிய "நாய் வாலை நிமிர்த்த முடியுமா?" என்ற பதிவுதான் என் நினைவுக்கு வருகிறது.

செய்தித் தொகுப்பு
பொன்.சேகர், வழக்குரைஞர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

வாலாசாப்பேட்டை

வாலாஜா அசேன் அவர்களின் கவிதை:
தொடர்புடைய பதிவுகள்

கரோனா: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?