Showing posts with label ambetkar. Show all posts
Showing posts with label ambetkar. Show all posts

Monday, July 22, 2024

தாமரையைக் களவாடிய தாமரை!

வாட்ஸ்அப் வருவதற்கு முன்பு நேரில் பார்க்கிற ஒரு சிலருக்கு காலை வணக்கம் சொல்வது வழக்கம். இன்று குறுஞ்செய்தியாகவே அனுப்பி வருகிறோம். ஒரிருநாள் காலை வணக்கம் குறுஞ்செய்தி வரவில்லை என்றால் நண்பர்களுக்குள் ஐயம் எழுகிறது.

'என்ன ஆச்சு, அவரிடமிருந்து காலை வணக்கமே வரவில்லையே' என்று? குறிப்பாக மூத்த குடிமக்களிடம் இந்தக் கவலை உண்டு. 

1950 ஆம் ஆண்டு மே மாதத்தில் மனங்கவரும் ஒரு மாலைப் பொழுதில், பம்பாய் காபி பேரேடில் உள்ள பெஞ்ச் ஒன்றின் மீது அமர்ந்துகொண்டு இரண்டு பேர் உரையாடுகின்றனர். ஒருவர் பிரபல பத்திரிகையாளர் முல்க்ராஜ் ஆனந்த். மற்றொருவர் அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கர்.



அம்பேத்கரைப் பார்த்து, 'நமஸ்காரம்' என்கிறார் முல்க்ராஜ் ஆனந்த். அதற்கு 'ஓம் மனி பத்மாயி', அதாவது 'தாமரைகள் மலரட்டும்' என்று புத்த சமய வாழ்த்து சொல்கிறார் அம்பேத்கர்.

சில சொற்களை அதன் பொருள் புரியாமலேயே அப்படியே எடுத்துக் கொண்டு நாம் பயன்படுத்துகிறோம். நமஸ்காரம் என்றால் வணக்கம் என்று பொருள் என்கிறார் முல்க்ராஜ் ஆனந்த்.

அதற்கு, நமஸ்காரம் என்றால் சரண் அடைவதைக் குறிக்கிறது, தாமரைகள் மலரட்டும் என்றால் விழிப்புணர்வுக்கான பிரார்த்தனை என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

உண்மைதான் பழைய வழக்கங்கள் அவ்வளவு எளிதில் மறைவதில்லை. எந்த விதமான சிந்தனையும் செய்யாமல் அவற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்கிறார் முல்க்ராஜ் ஆனந்த். இதில் மட்டுமல்ல எல்லா விசயங்களிலும்தான் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். 

இப்படி நீள்கிறது அவர்களுடைய உரையாடல்.

அன்று ஒடுக்கப்பட்ட சாதியினர், உயர் சாதியினரைப் பார்க்கும்போது "கும்பிடறேன் சாமி" என்பார்கள். அது அடிமைத்தனத்தை நேரடியாக வெளிப்படுத்துவதால் மெல்ல மெல்ல அது மாறி வணக்கம் என்றானது. 'நமஸ்காரம்' என்று சொல்வதற்கும் 'கும்பிடுறேன் சாமி' என்று சொல்வதற்கும் பாரிய வேறுபாடு இல்லை என்றே தெரிகிறது. 

'தாமரை மலர்ந்தே தீரும்!' என்று கூப்பாடு போடுபவர்கள், தாமரையை எங்கிருந்து களவாடினார்கள் என்பதும் இந்த உரையாடலின் ஊடே புரிந்து கொள்ள முடிகிறது.

ஊரான்

செய்தி ஆதாரம்: அம்பேத்கர் நூல் தொகுப்பு: 35

Sunday, July 21, 2024

கருப்பு ராமனும் தீண்டாமையும்!

நாட்டில் சோத்துக்குப் பஞ்சம் வந்தாலும் ராமன்களுக்குப் பஞ்சமில்லை. உயிரற்ற இந்த ராமன்கள் அவ்வப்பொழுது உயிர்த்தெழுகிறார்கள். அப்படி அயோத்தியில் பாலராமன் உயிர்த்தெழுந்ததை சமீபத்தில் நாடே பார்த்தது.

ராமன் என்றாலே அவன் பிரச்சனைக்கு உரியவன்தான் என்பதாலோ என்னவோ
ராமன் எத்தனை ராமனடி!” என்ற பெயரில் தமிழ்நாட்டுக்காரன் படமே எடுத்திருக்கிறான்.
 
காலாராம்
 
இவன் ஒரு கருப்பு ராமன். புராணங்களின் கூற்றுப்படி, நாசிக் பகுதியில் இவன் தலைமறைவாக வாழ்ந்தானாம். அதன் நினைவாக இவனுக்கு 1782 இல் காலாராம் என்ற பெயரில் ஒரு கோவிலை எழுப்பி இருக்கிறார்கள்.

 
காலா என்றால் கருப்பாம். அதனால்தானோ என்னவோ பா.ரஞ்சித் கூட, காலா என்ற பெயரில் மும்பையை மையமாகக் கொண்டு ரஜினியை வைத்துப் படம் எடுத்தாரோ?
 
இந்துக்களின் கடவுளாக போற்றப்படும் இந்த கருப்பு ராமனின் காலாராம் கோவிலில் வழிபாடு செய்ய, தீண்டாமையைக் காரணம் காட்டி இந்து மதத்தைச் சேர்ந்த மகர் சாதி மக்களை சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை. இந்த இழிவுக்கு எதிராக, இதே மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த கருப்பு ராமன் கோவிலில் நுழைய வேண்டும் என்று 1930 இல் 15000 பேர் கலந்து கொண்ட ஒரு மாநாட்டைக் கூட்டி தனது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.

கோவிலில் நுழைவதற்கான பேரணி ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்க 8000 பேர் பதிவு செய்திருந்தனர்.  500 பெண்கள் உட்பட 3000 பேர் திரண்டனர். இதைக் கண்டு பீதியுற்ற சனாதனிகள், கோவில் வாசல்களை இழுத்து மூடுகின்றனர்.
 
இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்க நாசிக் நகரில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் அதிக அளவில் கலந்து கொண்ட சனாதனிகள், கூட்டத்தில் ரௌவுடித்தனம் செய்கின்றனர். கற்களையும் செருப்புகளையும் வீசி எறிந்தனர். அந்த ராமனே நேரில் வந்து கோவிலைத் திறந்து விடுங்கள் என்று சொல்லி இருந்தால்கூட ராமனையும் அவர்கள் அப்புறப்படுத்தி இருப்பார்கள் என்று அந்த சம்பவத்தை வருணிக்கிறார் அம்பேத்கர்.
 
ஒரு மாத காலத்திற்கு இந்த சத்தியாகிரகப் போராட்டம் தொடர்கிறது. சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மகர்களுக்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டு அனைவரும் சேர்ந்து தேரை இழுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எங்கே தீண்டத்தகாத மக்கள் தேரைப் பிடித்து இழுத்து விடுவார்களோ என்று அஞ்சிய சாதி இந்துக்கள், முண்டியடித்துக் கொண்டு தேரை தாறுமாறாக இழுத்துக் கொண்டு ஓடினர்.
 
தீண்டத்தகாத மக்கள் மேற்கொண்ட இந்தப் போராட்டம் சனாதன இந்துக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தீண்டத்தகாதவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்; அவர்களுக்கான சாலைகள் மூடப்பட்டன; சந்தையில் இருந்து பொருள்களை வாங்குவதற்கு மறுக்கப்பட்டனர்.
 
இத்தனைத் துன்பங்களுக்கு இடையேயும், நாசிக்கில் போராட்டம் தொடர்ந்தது.
நீதிமன்றத்திற்குச் சென்றால் நீதி கிடைக்கும் என்று தீண்டத்தகாத மக்கள் நீதி மன்றத்தை நாடுகின்றனர். ஆனால் கோவிலில் நுழைய நீதிமன்றம் தடை விதிக்கிறது. மாகாண சட்டசபையில் மசோதா நிறைவேற்ற முயன்ற போதும் மசோதா நிறைவேற மறுக்கப்படுகிறது.
 
தீண்டாமையின் ஆணி வேர்

சாதி மற்றும் தீண்டாமைக்கான அடிப்படை நால்வர்ணத்தில் இருக்கிறது. அதுதான் ஆணிவேர். எனவே, நால்வர்ணத்தை சாஸ்திரங்களிலிருந்து அகற்றி, அதைக் கைவிட வேண்டும்; இதற்குக் குறைவான எதையும் ஏற்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.
 
கோவில் நுழைவைவிட, அரசியல் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படையான விசயங்கள்தான் தீண்டத்தகாத மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்றாலும்கூட, பூனைகளும் நாய்களும்  நுழையும் ஒரு கோவிலில் இந்து மதத்தைச் சார்ந்த மகர் சாதி மக்கள் நுழையக் கூடாதா? மனிதன் என்ற உரிமையை மகர்களுக்கு சாதி இந்துக்கள் அளிக்கிறார்களா? மனிதனை மனிதனாக நடத்த இந்து மதம் விரும்புகிறதா?” என்று சோதிப்பதற்காகவும், தீண்டத்தகாத சாதி மக்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ளவும், இந்து சமுதாயத்தில் அவர்களது உண்மை நிலை என்ன என்பதை உணர வைப்பதற்காகவுமே இந்தக் கோவில் நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்டதாகத் தனது குறிக்கோளைத் தெளிவுபடுத்துகிறார் அம்பேத்கர்.
 
ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தீண்டத்தகாத மகர் சாதி மக்களை, இந்து மதத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் அனுமதிக்காததை உணர்ந்து கொண்ட அம்பேத்கர் அவர்கள் 1935 இல் இந்தப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்து மதத்தில் இருப்பதனால் பயன் ஏதும் இல்லை; எனவே, இந்து மதத்திலிருந்து விடுபடுவது ஒன்றுதான் இதற்கு ஒரே தீர்வு என்கிற முடிவுக்கு இந்தப போராட்டம் அவரை இட்டுச் செல்கிறது.
 
பட்டியல் சாதி மக்களுக்கான இயக்கம்

சுதந்திர தொழிலாளர் கட்சி. இதுதான் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் சாதி மக்களுக்காக நடத்தி வந்த இயக்கம்.
 
இன்றும்கூட பட்டியல் சாதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற கட்சிகள் செயல்படுகின்றன. சில கட்சிகளில் சாதி இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கூட அங்கம் வகிக்கின்றனர்.
 
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் பட்டியல் சாதி மக்களில் கணிசமானோர் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் தீண்டாமை என்னும் விசயத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடந்து விடவில்லை.
 
இன்றும் கூட இந்தியாவின் பல்வேறு கோவில்களில் தீண்டத்தகாத சாதி மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோவில் நுழைவு உரிமை கேட்டுப் போராடினால், நிலைமையைப் பொறுத்து, ஒன்று கோவிலை இழுத்து மூடுகிறார்கள் அல்லது தாக்கி விரட்டுகிறார்கள் அல்லது எங்களுக்கு இனி இந்தக் கோவிலே வேண்டாம், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சாதி இந்துக்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
 
தொடரும் தீண்டாமை

இதன் மூலம் அவர்கள் உணர்த்துவது ஒன்றுதான். தீண்டாமையை நாங்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்பதைத்தான். தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் தீண்டாமையே நாடெங்கிலும் கோலோச்சுகிறது.
 
காலாராம் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்து முடிந்து நூறாம் ஆண்டு நெருங்கவிருக்கிறது. தீண்டாமை எனும் அநீதிக்கு எதிராக, சாதி இந்துக்களில் உள்ள முற்போக்காளர்களையும் ஜனநாயகச் சக்திகளையும் இணைத்துக் கொண்டு போராடுகின்ற, பட்டியல் சாதி மக்களுக்கான தலைவர்கள் தேவைப்படுகின்ற காலகட்டத்தில்தான் பட்டியல் சாதி மக்களிடையே பிழைப்புவாதிகளும் காரியவாதிகளும் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு முடிவு கட்டவில்லை என்றால் தீண்டாமை ஒருக்காலும் முடிவுக்கு வராது.
 
ஊரான்

ஆதாரம்: அம்பேத்கர் நூல் தொகுப்பு: 35
 

Thursday, July 11, 2024

தலித்துகளுக்குள் ஆணவப் படுகொலை எனும் அவலம்!

பட்டியல் சாதி மக்களை 'அழுத்தப்பட்டவர்கள்' (suppressed) எனக் குறிக்கும் வகையில் முதன் முதலில் இவர்களை தலித் என்று மராத்தியில் அழைத்தவர் ஜோதிராவ் புலே. 

இந்து மதத்தில் நால்வர்ண அமைப்புக்குள் வராதவர்களை அவர்ணர்கள் என்று அழைப்பதுண்டு. இவர்கள் சனாதன தர்மத்தை ஏற்காதவர்கள்; இந்தியா முழுக்க விரவிக் கிடக்கும் இவர்களை மண்ணின் மைந்தர்கள் என்கிற பொருளில் தலித்துகள் என்று அம்பேத்கர் குறிப்பிட்டார் என்று சொல்வதுண்டு. 

தமிழில் இடத்தைக் குறிக்கும் சொல் தளம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள். தளம் என்கிற சொல்தான் மராத்தியில் தலித் என்று மருவியது. எனவே தலித் என்றால் மண்ணின் மைந்தர்கள் என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுவதோடு இச்சொல் பொருந்தினாலும், வர்ணசாதி அமைப்புக்குள் வரும் பல்வேறு இதர சாதியினரும் மண்ணின் மைந்தர்கள்தானே? எனவே மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளில் பட்டியலின மக்களை தலித்துகள் என்று அழைப்பது பொருத்தமானதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. 

ஆனால், அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் தலித் என்று புலே பயன்படுத்தியதும், சனாதனத்தை ஏற்காத அவர்ணர்கள் என்ற பொருளில் தலித் என்று பயன்படுத்துவதும் இன்றைய சூழலில் தலித் என்ற சொல் பொருந்துமா என்றும் தெரியவில்லை.


பள்ளர், பறையர், அருந்ததியர் உள்ளிட்ட தீண்டத்தகாத சாதியினர் உள்ளிட்ட அவர்ணர்கள், தலித்துகள் என்று அழைக்கப்பட்டாலும் இந்து மதம் அவர்களை உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கிடையில் படிநிலை சாதிய ஏற்றத்தாழ்வுகளை கடைபிடிக்க வைத்துவிட்டது. அதனால்தான், தலித்துகள் என்று அடையாளப்படுத்தப்படும் அருந்ததியர் போராட்டங்களில் பிற தலித்துகள் பங்கேற்பதில்லை. பட்டியல் பிரிவு மக்கள் அனைவரும்  தங்களுக்குள் சமமாக நடத்தப்படுவதில்லை. இதுதான் இன்றைய கள எதார்த்தம். 

பட்டியல் சாதியில் உள்ள அனைவருமே சாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டாலும்,
படிநிலை சாதி அமைப்பு முறையில் பட்டியல் சாதிகளுக்குள்ளும் உயர்வு தாழ்வு பார்க்கும் சனாதனமே கோலோச்சுகிறது.  அதனால்தான் பள்ளர் சாதிப் பெண்ணை காதலித்து மணம் முடித்தால் அருந்ததிய இளைஞன் பள்ளர்களால் ஆணவப் படுகொலை செய்யப்படுகிறான். 

கிராம கட்டமைப்பில்கூட சாதி இந்துக்கள் ஊர் என்கிற இடத்தில் தனியாகவும், பட்டியல் சாதி மக்கள் சேரி என்கிற இடத்தில் தனியாகவும் வாழ்கின்றனர். 

சாதி இந்துக்கள்கூட அருகருகே ஒன்று கலந்து வாழ்வதில்லை. சாதி வாரியாக அவர்கள் தனித்தனி தெருக்களில்தான் வாழ்கின்றனர். 

பார்ப்பனர்கள் அக்கிகாரம் எனத் தனியாகவும், பிற சாதியினர் தனித்தனி தெருக்களிலும் வாழ்வது இன்றும்கூட தொடர்கிறது. வெள்ளாளர்கள் மேலத்தெருவிலும், அவர்களுக்குக் கீழானவர்கள் கீழவீதிகளிலும் வாழ்வதை சனாதனம்தான் உறுதி செய்கிறது. 

சேரிகளிலும் இதே கட்டமைப்புதான். பள்ளர்களும், பறையர்களும், அருந்ததியர்களும் ஒரே தெருவில் இரண்டறக் கலந்து வாழ்வதில்லை. அவர்கள் தனித்தனி தெருக்களில்தான் வாழ்கின்றனர். இங்கேயும் மேல் பகுதியில் பள்ளர்களும், அதற்குக் கீழே பறையர்களும், அதற்கும் கீழே அல்லது சேரிக்கு வெளியே அருந்ததியர்களும் வாழ்கின்றனர். இந்தக் கட்டமைப்பும் சனாதனத்தை உள்ளடக்கியதுதான். பள்ளர்களும், பறையர்களும் அருந்ததியரை வையும் போது 'அவன் கெடக்கிறான் சங்கிலிப் பய' என்றுதான் சொல்கிறார்கள்.

கள எதார்த்தம் இப்படி இருக்க, பட்டியல் சாதி பிரிவு மக்களை தலித்துகள் என்று அழைப்பதற்கான அடிப்படை எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அம்பேத்கர் மொழியில் வேண்டுமானால் இவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கலாம். அம்பேத்கர் தனது எழுத்துக்களில் அப்படித்தான் அழைக்கிறார். இல்லையேல் பட்டியல் சாதியினர் என அழைக்கலாம். இவர்களுக்குள் பிரச்சனை எழும் போது குறிப்பிட்ட சாதிகளைத்தான் குறிப்பாகச் சொல்ல வேண்டும். இங்கேயும் அனைவரையும் தலித்துகள் என்று அழைத்தால் அது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். அருந்ததியரை, பள்ளர் படுகொலை செய்தால் அதை தலித்துகளின் ஆணவம் படுகொலை என்று அழைத்தால் அது கேலிக்கூத்துதானே?

தங்களுக்கும் கீழானவர்கள்தான் என பள்ளர்-பறையர்களால் கருதப்படும் பழங்குடியினர் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்பதும் இங்கே நினைவுகூறத் தக்கது.

பட்டியல் சாதிகளுக்குள்ளும், அதாவது தலித்துகளுக்குள்ளும் சனாதனம் கோலோச்சும் பொழுது, அவர்களுக்குள்ளும் சாதியப் படிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிக்கப்படும் பொழுது, அவர்களை, அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளிளோ அல்லது சனாதனத்தை ஏற்காத அவர்ணர்கள் என்ற பொருளிளோ இனியும் அவர்களை தலித்துகள் என்று அழைப்பது பொருத்தமானதுதானா? மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளில் அழைப்பது பொருத்தமானதல்ல என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

எனவே, கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் அவர்களை, பட்டியல் சாதியினர் என்று அழைப்பதும், சமூக வாழ்வியல் முறைகளில் அந்தந்த சாதிகளாகவே அழைப்பதும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதலாமா?

அருந்ததியர் சாதியைச் சார்ந்த அழகேந்திரன் என்பவர், பள்ளர் சாதிப் பெண்ணை காதலித்து மணம் முடித்ததற்காக,
பள்ளர் சாதியைச் சார்ந்த பிரபாகரன் என்பவரால்  அண்மையில் அரங்கேறிய ஆணவப் படுகொலை உணர்த்தும் பாடம் இதுதானோ?

ஊரான்