Thursday, July 11, 2024

தலித்துகளுக்குள் ஆணவப் படுகொலை எனும் அவலம்!

பட்டியல் சாதி மக்களை 'அழுத்தப்பட்டவர்கள்' (suppressed) எனக் குறிக்கும் வகையில் முதன் முதலில் இவர்களை தலித் என்று மராத்தியில் அழைத்தவர் ஜோதிராவ் புலே. 

இந்து மதத்தில் நால்வர்ண அமைப்புக்குள் வராதவர்களை அவர்ணர்கள் என்று அழைப்பதுண்டு. இவர்கள் சனாதன தர்மத்தை ஏற்காதவர்கள்; இந்தியா முழுக்க விரவிக் கிடக்கும் இவர்களை மண்ணின் மைந்தர்கள் என்கிற பொருளில் தலித்துகள் என்று அம்பேத்கர் குறிப்பிட்டார் என்று சொல்வதுண்டு. 

தமிழில் இடத்தைக் குறிக்கும் சொல் தளம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள். தளம் என்கிற சொல்தான் மராத்தியில் தலித் என்று மருவியது. எனவே தலித் என்றால் மண்ணின் மைந்தர்கள் என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுவதோடு இச்சொல் பொருந்தினாலும், வர்ணசாதி அமைப்புக்குள் வரும் பல்வேறு இதர சாதியினரும் மண்ணின் மைந்தர்கள்தானே? எனவே மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளில் பட்டியலின மக்களை தலித்துகள் என்று அழைப்பது பொருத்தமானதுதானா என்று எனக்குத் தெரியவில்லை. 

ஆனால், அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் தலித் என்று புலே பயன்படுத்தியதும், சனாதனத்தை ஏற்காத அவர்ணர்கள் என்ற பொருளில் தலித் என்று பயன்படுத்துவதும் இன்றைய சூழலில் தலித் என்ற சொல் பொருந்துமா என்றும் தெரியவில்லை.


பள்ளர், பறையர், அருந்ததியர் உள்ளிட்ட தீண்டத்தகாத சாதியினர் உள்ளிட்ட அவர்ணர்கள், தலித்துகள் என்று அழைக்கப்பட்டாலும் இந்து மதம் அவர்களை உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கிடையில் படிநிலை சாதிய ஏற்றத்தாழ்வுகளை கடைபிடிக்க வைத்துவிட்டது. அதனால்தான், தலித்துகள் என்று அடையாளப்படுத்தப்படும் அருந்ததியர் போராட்டங்களில் பிற தலித்துகள் பங்கேற்பதில்லை. பட்டியல் பிரிவு மக்கள் அனைவரும்  தங்களுக்குள் சமமாக நடத்தப்படுவதில்லை. இதுதான் இன்றைய கள எதார்த்தம். 

பட்டியல் சாதியில் உள்ள அனைவருமே சாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டாலும்,
படிநிலை சாதி அமைப்பு முறையில் பட்டியல் சாதிகளுக்குள்ளும் உயர்வு தாழ்வு பார்க்கும் சனாதனமே கோலோச்சுகிறது.  அதனால்தான் பள்ளர் சாதிப் பெண்ணை காதலித்து மணம் முடித்தால் அருந்ததிய இளைஞன் பள்ளர்களால் ஆணவப் படுகொலை செய்யப்படுகிறான். 

கிராம கட்டமைப்பில்கூட சாதி இந்துக்கள் ஊர் என்கிற இடத்தில் தனியாகவும், பட்டியல் சாதி மக்கள் சேரி என்கிற இடத்தில் தனியாகவும் வாழ்கின்றனர். 

சாதி இந்துக்கள்கூட அருகருகே ஒன்று கலந்து வாழ்வதில்லை. சாதி வாரியாக அவர்கள் தனித்தனி தெருக்களில்தான் வாழ்கின்றனர். 

பார்ப்பனர்கள் அக்கிகாரம் எனத் தனியாகவும், பிற சாதியினர் தனித்தனி தெருக்களிலும் வாழ்வது இன்றும்கூட தொடர்கிறது. வெள்ளாளர்கள் மேலத்தெருவிலும், அவர்களுக்குக் கீழானவர்கள் கீழவீதிகளிலும் வாழ்வதை சனாதனம்தான் உறுதி செய்கிறது. 

சேரிகளிலும் இதே கட்டமைப்புதான். பள்ளர்களும், பறையர்களும், அருந்ததியர்களும் ஒரே தெருவில் இரண்டறக் கலந்து வாழ்வதில்லை. அவர்கள் தனித்தனி தெருக்களில்தான் வாழ்கின்றனர். இங்கேயும் மேல் பகுதியில் பள்ளர்களும், அதற்குக் கீழே பறையர்களும், அதற்கும் கீழே அல்லது சேரிக்கு வெளியே அருந்ததியர்களும் வாழ்கின்றனர். இந்தக் கட்டமைப்பும் சனாதனத்தை உள்ளடக்கியதுதான். பள்ளர்களும், பறையர்களும் அருந்ததியரை வையும் போது 'அவன் கெடக்கிறான் சங்கிலிப் பய' என்றுதான் சொல்கிறார்கள்.

கள எதார்த்தம் இப்படி இருக்க, பட்டியல் சாதி பிரிவு மக்களை தலித்துகள் என்று அழைப்பதற்கான அடிப்படை எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அம்பேத்கர் மொழியில் வேண்டுமானால் இவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கலாம். அம்பேத்கர் தனது எழுத்துக்களில் அப்படித்தான் அழைக்கிறார். இல்லையேல் பட்டியல் சாதியினர் என அழைக்கலாம். இவர்களுக்குள் பிரச்சனை எழும் போது குறிப்பிட்ட சாதிகளைத்தான் குறிப்பாகச் சொல்ல வேண்டும். இங்கேயும் அனைவரையும் தலித்துகள் என்று அழைத்தால் அது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். அருந்ததியரை, பள்ளர் படுகொலை செய்தால் அதை தலித்துகளின் ஆணவம் படுகொலை என்று அழைத்தால் அது கேலிக்கூத்துதானே?

தங்களுக்கும் கீழானவர்கள்தான் என பள்ளர்-பறையர்களால் கருதப்படும் பழங்குடியினர் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்பதும் இங்கே நினைவுகூறத் தக்கது.

பட்டியல் சாதிகளுக்குள்ளும், அதாவது தலித்துகளுக்குள்ளும் சனாதனம் கோலோச்சும் பொழுது, அவர்களுக்குள்ளும் சாதியப் படிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிக்கப்படும் பொழுது, அவர்களை, அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளிளோ அல்லது சனாதனத்தை ஏற்காத அவர்ணர்கள் என்ற பொருளிளோ இனியும் அவர்களை தலித்துகள் என்று அழைப்பது பொருத்தமானதுதானா? மண்ணின் மைந்தர்கள் என்ற பொருளில் அழைப்பது பொருத்தமானதல்ல என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

எனவே, கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் அவர்களை, பட்டியல் சாதியினர் என்று அழைப்பதும், சமூக வாழ்வியல் முறைகளில் அந்தந்த சாதிகளாகவே அழைப்பதும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதலாமா?

அருந்ததியர் சாதியைச் சார்ந்த அழகேந்திரன் என்பவர், பள்ளர் சாதிப் பெண்ணை காதலித்து மணம் முடித்ததற்காக,
பள்ளர் சாதியைச் சார்ந்த பிரபாகரன் என்பவரால்  அண்மையில் அரங்கேறிய ஆணவப் படுகொலை உணர்த்தும் பாடம் இதுதானோ?

ஊரான்

No comments:

Post a Comment