Showing posts with label corona. Show all posts
Showing posts with label corona. Show all posts

Friday, October 23, 2020

எனக்குக் கோவிட்-19 இருக்குமோ?

மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து உலகையே முடக்கிய கரோனாவால் நானும் முடங்கிப் போனேன். அகவை 62 ஐக் கடந்துவிட்ட நிலையில் சர்க்கரைக்கு ஆட்படவில்லை என்றாலும் இதயம், சிறுநீர் கழித்தல், தைராய்டு பிரச்சனைகள் இருப்பதால்  கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக் கவசம், அடிக்கடி சோப்புப் போட்டுக் கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை சரியாகவேக் கடைபிடித்து வந்தேன். கடைவீதிக்குச் செல்லும் பொழுது சில நபர்களுடன் முகக்கவசத்திற்கும், சமூக இடைவெளிக்கும் மல்லுக் கட்ட வேண்டியிருந்தது. "என்ன உயிருக்குப் பயமா?" என முறைத்தவர்களும் உண்டு. அவ்வப்பொழுது ஆர்சனிகம் ஆல்பமும், இஞ்சி-சுக்கு-டீயும், ஆவி பிடித்தலும், சில வேலைகள் ஆங்கில மாத்திரைகளும் எடுத்துக்கொள்வது இயல்பாய் மாறின. சும்மாவா பின்னே! உயிர் வாழ்வது ஒரு முறைதானே!

இடைப்பட்டக் காலத்தில் நெருங்கிய உறவினர்களின் திருமணங்கள், நேசித்த உறவுகளின் மரணங்கள் நிகழ்ந்தபோதும் நேரில் செல்லவியலாத நிலைக்குத் தள்ளப்பட்டது நான் மட்டுமல்ல நீங்களும்தான். நிலைமையைப் புரிந்து கொள்ளாதவர்களிடையே உறவுகளும் நட்புகளும்கூட முறிந்து போய் இருக்கலாம். முறிவுகள் முடிவுக்கு வர சில காலங்கள்கூட ஆகலாம். காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் சில நேரங்களில் உயிருக்கும் மேலான பிரச்சனைகள் சிலருக்கு மேலெழக்கூடும். அந்த வகையில் இந்த மாதத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் 'வேன்' மற்றும் மகிழுந்துகளில் வெளியூர் பயணங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ளூர் பயணங்களை நான் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய நபர்கள் மற்றும் புதியச் சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.  பழைய ஒழுங்கே நமக்கு எட்டிக்காயாய் இருக்கும்பொழுது புதிய ஒழுங்கு மட்டும் கட்டுக்குள் வந்து விடுமா என்ன? ஆதங்கத்தை உள்அமுக்கிக் கொண்டுதான் சிலரோடு பழகவும் பேசவும் நேர்கிறது.

கோப்புப் படம் (நானல்ல)

சளித்தொல்லை எனக்கு இயல்பானதுதான் என்றாலும் இந்த ஒரு மாதத்தில் சற்றே கூடுதல் ஆனதால் 'சுவாப்' சோதனை எடுத்துக் கொள்ளச் சென்ற மாதமே மருத்துவர்கள் பரிந்துரைத்தும்,  முக்கிய வேலைகள் காரணமாகத் தள்ளிப் போட்டேன். நாட்கள் ஓடின. சளியும் குறைந்த பாடில்லை. கோவிட்-19 க்கான வேறு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் தள்ளிப்போடுவது சிலநேரங்களில்  தலைப்பாகைக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் 22.10.2020 அன்று வாலாசாப்பேட்டையில் உள்ள இராணிப்பேட்டை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சளி மாதிரிகளைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அரசு மருத்துவமனை என்றாலே எப்படி இருக்குமோ என்ற அச்சம் உள்ளூர நமக்கு இருக்கம்தானே? வாலாசாப்பேட்டை அரசு மருத்துவமனையில் செயல்படும் கோவிட்-19 பரிசோதனை மையம் பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்தாலும், சோதனை மாதிரிகள் எடுக்கின்ற இடத்தின் சுத்தம், பாதி அச்சத்தைப் போக்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் நேர்த்தியான சேவை மீதி அச்சத்தையும் போக்கி விட்டது. கோவிட்-19 பரிசோதனைக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை நேரடியாக உணர்ந்து கொண்டேன்.

வீட்டுக்கு வந்தேன். முடிவு வரும்வரை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தி வந்தது. ஏற்கனவே சில நாட்களாக இருந்த மூச்சிரைப்பு 'கோவிட்டி'னால் இருக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டது. ஆனால் 'சுவாப்' எடுத்த போது, HR-106/mt, SPO2-99%  இருந்ததால் அச்சம் என்கிற மடமையை மட்டுப்படுத்தியது.  ஒரு வேளை எனக்கு 'பாசிட்டிவ்' என வந்து விட்டால், வீட்டில் உள்ளவர்களையும் அள்ளிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் துரத்த, நான் தனிமரமாய் வீட்டில். 'பாஸிட்டிவ்' ஆனாலும் அதற்கும் தயாராகிக் கொண்டேன். 

இன்று (23.10.2020) மாலை குறுஞ்செய்தியில் முடிவு வந்தது 'நெகட்டிவ்' என்று. நிம்மதிப் பெருமூச்சு! பைசா செலவு இன்றி!

பொன்.சேகர்

தொடர்புடைய பதிவுகள்


Tuesday, May 12, 2020

அருளற்ற ஆட்சியாளர்கள்! தொடரும் துன்ப துயரங்கள்…..

நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படும் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு நிலையில் உள்ள சாம்பல் துகல்களை ஈர்த்து வெளியேற்றுவதற்காக எலக்ட்ரோ ஸ்டாடிக் பிரசிபிடேட்டர் (ESP) என்ற அமைப்பு செயல்படுகிறது. உயர் மின் அழுத்தத்தில் சாம்பல் துகல்கள் எதிர்மறை அயனிகளாக மாற்றப்பட்டு நேர்மறை தகடுகளில் ஈர்க்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இத்தகைய நிகழ்வுக்குப் பெயர் கரோனா விளைவு. (Corona effect). சாம்பல் துகல்கள் அயனிகளாக மாற்றப்படும் போது சூரியனைப் போன்று தீப்பிழம்பாய் காட்சியளிக்கும். இதில் ஒரு மனிதன் மாட்டிக் கொண்டால் சாம்பலாகத்தான் வெளியே வரமுடியும். மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய ஒரு தொழில் நுட்பம் இந்தக் கரோனா விளைவு.

இதற்குச் சற்றும் சளைத்ததல்ல இன்று உலகையே அச்சுறுத்தும் கரோனா நோய்க் கிருமி. கரோனாவைக் காரணம் காட்டி ஆட்சியாளர்கள் அறிவித்த ஊரடங்கால் மக்கள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது கருணையற்ற இந்த ஆட்சியாளர்கள் கரோனாவைவிடக் கொடியோர் அல்லவோ!

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

“மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ; அத்தகையதே அரசின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்கும் துன்பமும் ஆகும்” என்கிறான் வள்ளுவன்.

துன்ப – துயரங்கள் காட்சிகளாய்…..































ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

கரோனா ஊழல் முறைகேடு! வாலாசாப்பேட்டையில் போராட்டம்!

கரோனா: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

Saturday, May 2, 2020

கரோனா: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

ஊரடங்கு தொடங்கி ஒன்றரை மாதம் ஓடிவிட்டது. மார்ச் கடைசி மற்றும் ஏப்ரல் முதல் வாரங்களில் காலையில் மளிகைக் கடைகளும் காய்கறிக் கடைகளும் திறந்திருந்தன. தேவையானவற்றைப் பெற முடிந்தது. வழக்கமான உணவையே எடுத்துக் கொண்டதால் உடல் பலகீனம் எதுவும் தெரியவில்லை.

அதன் பிறகு, “காய்கறிகள் வீடு தேடி வரும்; மளிகைப் பொருட்களை ‘டெலிவர் மி’ ‘ஆப்பை’ பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளுங்கள். யாரும் வெளியே வரக்கூடாது” என்றார்கள். காய்கறிகள் வந்தன. ஆனால் மளிகைப் பொருட்கள் பெறுவதில் ஆப்புதான் கிடைத்தது.

ஒரு பக்கம் கரோனாவை எதிர் கொள்ள ஊட்டமான உணவு உட்கொண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள் என உபதேசம். ஆனால், அரசின் நடைமுறையால் பொருளும் கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும் விக்கிற விலையில் ஊட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் அளவுக்கு வாங்கித் திங்கவும் முடியவில்லை.

வாழைப் பழம்கூட கிலோ எண்பதைத் தொட்டது. பின் யார்தான் தொடமுடியும் அதை? தொன்னூறில் இருந்த துவரம்பருப்புகூட இருமடங்காய் ஆனதால் சாம்பார் எல்லாம் ரசமாய் மாறிப்போனது. காய்கறிக்கே வழி இல்லாத போது கறி மட்டும் கிடைக்குமா என்ன? கிடைத்தது ஒரு சில இடங்களில். கோழி முன்னூறுக்கும், ஆடு ஆயிரத்திற்கும்; அதுவும் கமுக்கமாய்.

கரோனா காலத்தில் ‘ரிலயன்ஸ் ஃபிரஷூம்’, ‘மோரும்’ ஓய்வெடுத்துக் கொள்ள அண்டை வீட்டு அண்ணாச்சிகளும் சிறு வியாபாரிகளுமே நம்மைக் காக்க கரோனாவையும் எதிர் கொண்டார்கள். “நமக்கேன் வம்பு?” என ‘ரிலயன்ஸ்’ போல அண்ணாச்சிகள் ஒதுங்கி இருந்தால் இந்த அரசால் என்ன செய்திருக்க முடியும்? சவப் பெட்டிகள் தயாரிப்பதைத் தவிர?

உயிரைப் பணயம் வைத்து நமக்காக உழைக்கும் அண்ணாச்சிகள் மீதும், சிறு வியாபாரிகள் மீதும் பலருக்குக் கோபம்தான். பல மடங்கு விலை வைக்கிறார்களே என்று? “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!” என்பது போல அண்ணாச்சிகள் அள்ளுகிறார்களோ என்றுதான் பலருக்கும் எண்ணத் தோன்றும். ஆனால் கள நிலவரம் வேறு.

கடையில் இருந்த ஆட்டுக்கறி மொத்தத்தையும் பார்சல் செய்த காவல் துணை ஆய்வாலரை மட்டும்தான் நமக்குத் தெரியும். கடை திறப்பதற்கும், வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி பெறுவதற்கும் ஆயிரம் இரண்டாயிரம் என அபகரிக்கும் அரசு அதிகாரிகளை நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏழைகளுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்ற பெயரில் ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் பெருமானமுள்ள பொருட்களை இலவயமாய் மிரட்டிப் பெற்று ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கிள்ளிப் போட்டுவிட்டு மற்றொரு பகுதியை தங்களுக்கான நிவாரணமாய்ச் சுருட்டும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதில் சங்கிகள் முன்னணியில் இருப்பதாகக் கேள்வி. இவை எல்லாம் நம் தலையில்தானே விழுகிறது.
வாழ்விடத்திலேயே பொருட்கள் கிடைத்தால் வெளியே போக வேண்டிய அவசியம் ஏது? அதற்கு வழி செய்ய வக்கில்லை. ஆனால் வெளியே வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதில் மட்டும் குறியாய் உள்ளனர். இப்படி கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நூற்றுக் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. “ஆமை புகுந்த வீடும் அமினா நுழைந்த வீடும் உறுப்படாது” என்பது போல, காவல் நிலையம் நுழைந்த வாகனம் மட்டும் முழுசாய் திரும்புமா என்ன? அதனால் எப்படியாவது பிடிபட்ட வண்டியை உடனே மீட்டுவிட வேண்டும், இல்லை என்றால் கரோனா நம்மைக் கரைப்பது போல காவல் நிலையத்திலேயே நமது வண்டியும் கரைந்து போகும். வண்டி கரையாமல் காக்க அங்கே கரன்சி நோட்டுகள் கைமாறுகின்றன. இதற்குக்கூட இடைத்தரகர்களாம். பலரின் வாழ்வைப் பறிக்கும் கரோனா சிலரின் வாழ்வை வளப்படுத்துகிறது.
.
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!