Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts

Saturday, July 20, 2024

நாளேடுகளில் நாட்டு நடப்பு!

"வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட சில துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடம் என பெருமைபட்டுக் கொள்கிறது திராவிட மாடல் அரசு".

ஆனால், அதேவேளையில், பாலின சமத்துவம், தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், பசிப்பிணி அகற்றுதல் உள்ளிட்ட சில துறைகளில் உள்ள வளர்ச்சி பாதியைக்தானே தாண்டி உள்ளது.

வட இந்திய நோஞ்சான்களோடு ஒப்பிட்டு, நான்தான் பயில்வான் என பெருமிதம் கொள்வதால் என்ன பெருமை இருக்கு? மேற்கண்டத் துறைகளிலும் 100க்கு 100 சாதனை புரிந்தால் பெருமைபட்டுக் கொள்ளலாம். அதை நோக்கிப் பயணக்குமா திமுக அரசு?

*****

"இட ஒதுக்கீடு பிரச்சனை. வங்கதேசத்தில் கலவரம்! கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி. பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் சுமார் 1000 மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்".

வடஇந்தியாவின் கல்வித் தரத்தைவிட வங்கதேசக் கல்வித்தரம் உயர்ந்தது என்பதனால்தானே வங்கதேசத்திற்குப் படிக்கச் செல்கிறார்கள்.

வடக்கு இன்னும் வளரவில்லை என்பதற்கு இது ஒன்று போதாதா?

*****

"கள்ளச்சாரய விற்பனையைத் தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டி ஆரணி மற்றும் கண்ணமங்கலம் பகுதிகளில் அதிமுக-வினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்".

ஆட்சிகள் மாறும்போது கள்ளச்சாராய வியாபாரமும் கைமாறும் என்பதுதானே இங்கு எழுதப்படாத சட்டம்?

கள்ளச்சாராயத் தொழில் தங்களிடமிருந்து கைமீறிப் போனதால் வந்த கோபமோ இது என்றுதானே மக்கள் கேட்கிறார்கள்.

*****

"திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம்! மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்!"

கோவில்களில் கூட்டம் கூடுவது மக்களின் ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடு.  தங்களுடைய குறைகள் நீங்கத்தானே கோவில்களை நாடி ஓடுகிறார்கள். கோவில்கள் என்றைக்கு ஈ ஓட்டுகிறதோ அன்றுதான் நாட்டு மக்களின் நனவுகளும் கனவுகளும் நிறைவேறி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று பொருள். அப்பொழுது மக்கள் கோவில்களை நாடி ஓட மாட்டார்கள். சுற்றுலாத் தளங்களில் முட்டி மோதுவார்கள். 

வெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரங்களால் மட்டுமே கோவில்களில் கூடும் கூட்டத்தை குறைத்துவிட முடியாது. மாறாக மக்களின் வாழ்க்கையின் ஏக்கப் பெருமூச்சுகளை நீக்கவல்ல ஒரு அரசு அமைந்தால் மட்டுமே இதிலிருந்து மக்களை மீட்க முடியும்.

*****

"வேதாரண்யம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த வேதாரண்யம் ஒன்றியக் குழுத் தலைவர் அறிவழகனுக்குத் தொடர்பு!"

இதற்குத்தானே உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் கடும் போட்டி நிலவுகிறதோ? இதில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்று கண்ணமங்கலத்தில் அதிமுக-வினர் பிரசுர விநியோகம் எனும் கேலிக்கூத்து!

ஊரான்

செய்தி ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளேடு. 21.07.2024

Tuesday, May 16, 2023

கள்ளச்சாராய மரணங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்!

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறுகின்ற ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கள்ளச்சாராயம்-கஞ்சா விற்பனை, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல் முறைகேடுகள், ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இவை அனைத்தும் அந்தந்த ஊரில் உள்ள திமுக, அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தெரியும்.

கள்ளச்சாராய மரணங்கள் போன்று தீவிரமான பிரச்சனைகள் நிகழாதவரை அனைவரும் மௌனம் சாதிப்பர். காரணம் மேற்கண்ட விசயங்களில் கட்சி வேறுபாடு இன்றி உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெறுகின்ற ஆதாயம்தான். உள்ளூர் மக்களுக்கு இவை எல்லாம் ஓரளவு தெரிந்திருந்த போதிலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் அவர்களை ஒருங்கிணைக்கின்ற ஆற்றல்மிக்க உள்ளூர் தலைவர்கள் மேற்கண்ட விசயங்களில் ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளோடு வைத்திருக்கின்ற கள்ளக் கூட்டுதான்.

ஆதாயம் கிடைக்காதவர்கள் மட்டுமே இதற்கு எதிராகக் குரல் கொடுக்க முன் வருகின்றனர். கவனிக்க வேண்டிய விதத்தில் அவர்களை கவனித்தால் அவர்களும் அதன் பிறகு மௌனம் காக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் இதுதான் அன்றாட நடைமுறை. 

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கின்ற பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்கள் பலவீனமாக இருப்பதினால் அவர்களும் கையறு நிலையில்தான் உள்ளனர். புரட்சிகர இயக்கங்கள் பலம் பெறாத வரையில் மேற்கண்ட சீர்கேடுகள் தொடரவே செய்யும். நடப்பு அரசியல் விவரங்கள் அவதானிப்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால்  இவர்களும் பல்வேறு குழுக்களாக பிளவுப்பட்டு சிதறுண்டு கிடப்பது மற்றுமொரு அவலம்.

மேலும் இது ஒரு அரசியல் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்க வேண்டி உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற உரிமையைத் தவிர வேறு எந்த உரிமையும் உள்ளூர் மக்களுக்குக் கிடையாது. மாறாக அதிகாரம் அனைத்தும் அரசு அதிகாரிகளிடம் குவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். தீர்மானங்களைக் கொண்டு வருகின்ற அதிகாரம் மட்டுமே மக்கள் பிரதிகளுக்கு இருக்கிறது. அதிகாரிகள் மனசு வைத்தால் மட்டுமே தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இல்லையென்றால் அவை எல்லாம் குப்பை தொட்டியில் வீசப்படும். 

தீர்மானங்கள் கூட மக்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்படுவதில்லை. மாறாக அந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் அதனால் எவ்வளவு ஆதாயம் பெற முடியும் என்று அரசியல்வாதிகள் முன்கூட்டியே கணக்குப் போட்டுதான் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.

கிராம வார்டு உறுப்பினர் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையான அதிகாரம் அதிகாரிகளிடமே குவிந்து கிடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட பிரதிநிதிகள் அதிகாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. மாறாக தவறிழைக்கின்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கின்ற அதிகாரம் மக்களுக்குக் கிடையாது. அடுத்த தேர்தல் வரை அமைதி காப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை.

உள்ளூர் அளவில் அனைத்து அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தீட்டுகின்ற திட்டங்களை நிறைவேற்றுகின்றவர்களாக மட்டுமே அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாக திரும்பப் பெறுகின்ற வகையில் மக்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.  இத்தகைய புதிய கட்டமைப்பு மட்டுமே ஒரு ஒழுங்கமைந்த சமுதாயத்தை உருவாக்கப் பயன்படும். அதற்காக சிந்திப்பதும் குரல் கொடுப்பதும் ஒன்றிணைவதும் இன்றைய காலத்தின் கட்டாயம். நீண்ட கால அடிப்படையில் இது ஒன்றே தீர்வு. 

அதுவரை சும்மா இருப்பதா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது அல்லவா? முடிந்த வரையில் உள்ளூர் அளவில் மக்கள் குழுக்களை கட்டி அமைத்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த வேலையை பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும். அதுவரை கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட அவலங்கள், துயரங்கள் தொடரவே செய்யும்.

நேர்மையான அதிகாரிகளும் சில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் அரிதாக இருக்கவே செய்கின்றனர். விதிவிலக்காக இவர்கள் மிகச் சொற்பமானவர்களே. கட்டமைப்பு சரியில்லாத போது இந்த ஒரு சிலராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் கள நிலவரம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


Sunday, October 16, 2011

மீண்டும் பன்றிகளின் படையெடுப்பு!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடைசி நேரத்தில் இந்த இடுகையை எழுதுகிறேன். மிக விரிவாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு தேர்தல். உறவினரின் உடல் நலக் குறைவு; அதற்காக கடந்த பத்து நாட்களாக மருத்துவமனையிலேயே உழன்று கொண்டிருந்ததால் இத்தேர்தல் குறித்து மக்களின் கருத்துக்களையும் வேட்பாளர்களின் வாக்குறுதி மற்றும் நடவடிக்கைகளையும் அதிகமாக கவனிக்க முடியவில்லை. எனினும் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.
**********************************************************************************
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது நடைபெற்ற எமது கிராமத் தலைவருக்கான தேர்தல்தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது இரண்டு கிராமங்களும் ஒரே ஊராட்சியின் கீழ் இருந்ததால் ஒரே தலைவர்தான். முதன் முதலில் இருவேறு சாதிகள் மோதிக்கொண்ட அந்த நிகழ்வு எனது நினைவிலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை. வாக்கு எண்ணிய கிராமத்திலிருந்த தோற்றுப்போன வேட்பாளரின் சாதியினர் வெற்றிபெற்ற வேட்பாளரின் சாதியினரை விரட்டி விரட்டி அடித்தனர். சாதி பலத்தை நிறுவுவதற்கான ஒரு தேர்தல்தான் உள்ளாட்சித் தேர்தல் என்றால் அது மிகையாகாது என்றே கருதுகிறேன். இன்றும் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. அதே சாதி வெறியோடுதான் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும் களம் காண்கிறார்கள் வேட்பாளர்கள்.

ஒரு ஊரில், ஒரேசாதியினர் இருந்தாலும் அங்கேயும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதற்குக் காரணம் 'நீயா? நானா?' என்கிற பதவிப் போட்டிதான். இருநூறு வாக்குகளை மட்டுமே கொண்ட ஒரு ஊராட்சி உறுப்பினருக்கானத் தேர்தலில் எனது தங்கை மகள் போட்டியிடுகிறார். அதே பதவிக்கு அவருடைய பங்காளி ஒருவரும் நிற்கிறார். வெற்றி பெறமுடியாது எனத் தெரிந்த பிறகு எனது தங்கை மகளிடம் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்லி அழுது மன்றாடுகிறார்களாம் அவரது பங்காளிகள். எனது தங்கை மருமகனோ வசதி குறைவு என்றாலும் தனது மனைவியை வார்டு உறுப்பினராக்கியேத் தீரவேண்டும் என்பதற்காக தலைக்கு ரூபாய் ஐம்பது வீதம் ரூபாய் பத்தாயிரம் வரை செலவு செய்யவும் தயாராய் இருக்கிறாராம். இப்படித் தங்களது கௌரவத்தை நிலைநாட்டுவதற்காகவும் சிலர் களத்தில் நிற்கின்றனர்.

சாதிபலம் மற்றும் கௌரவத்தை நிலைநாட்டத்தான் போட்டியிடுகிறோம் என்று எந்த வேட்பாளரும் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வதில்லை. மாறாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எதைச் சொன்னார்களோ அதைத்தான் இப்பொழுதும் சொல்கிறார்கள். குடிநீர், சுகாதாரம், சாலை- போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்; குடும்ப அட்டை, முதியோர் பென்சன், சாதி - பிறப்பு - இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட வசதிகளை சுலபமாகப் பெறவும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிக்கின்றர்.

எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் நானே நிர்வாகம் செய்வேன். எனது கணவர் எனது நிர்வாகத்தில் தலையிட மாட்டார் என சில பெண் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். பெண்களுக்கென இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் ஆண்களின் ஆதிக்கம்தான் நிலவுகிறது என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

புரட்டாசியில் 'பொன் உருகக்காயும் மண் உருகப் பெய்யும்' என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பொன் உருகக் காய்கிறது. ஆனால் மண் உருகப் பெய்யத்தான் காணோம். வார்டு உறுப்பினர், ஊராட்சித்தலைவர், ஒன்றியக்கவுன்சிலர், மாவட்டக்கவுன்சிலர், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினர்கள், மேயர்கள் என பதவிகளோ ஏராளம். கட்சிகள் தனித்தனியாக நிற்பதால் வேட்பாளர்களும் ஏராளம். எனவே மக்கள் காட்டில் ஒரே பண மழையும் பரிசு மழையும் மாறி மாறிப் பொழிகிறதே. பிறகு புரட்டாசியில் பெய்தால் என்ன? பொய்த்தால் என்ன?

இந்த உள்ளாட்சித் தேர்தல்களால் பெரிதாக எதுவும் மாறிவிடப்போவதில்லை என்பதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால்தான் கொடுப்பதை வாங்கிக் கொள்வோம் என தாங்கள் கறைபடிகிறோம் என்பதை அறிந்தே கூசாமல் கை நீட்டுகிறார்கள். அனைவரையும் ஊழல்படுத்துவதைத் தவிர இந்தத் தேர்தல் வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.

வாசகர்கள் அவசியம் மறுவாசிப்புச் செய்ய வேண்டிய பதிவுகள்:

Saturday, May 14, 2011

தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?


தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக வினர் ஆங்காங்கே பட்டாசுகளைக் கொளுத்தினர். இன்று காலை பல அலுவலக வாயில்களில் பட்டாசு கொளுத்தியதோடு 'சாக்லெட்' உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர். ஒரு சிலர் மிகவும் நெருங்கிய தங்கள் நண்பர்களுக்கு, அவர்கள் மாற்றுக் கட்சியினராய் இருந்தாலும்கூட இலட்டு, மக்கன் பேடா, ஜிலேபி, மைசூர்பாகு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இப்படி இனிப்பு வழங்கியவர்களுக்கு அரசியலால் சொந்த ஆதாயம் எதுவும் இல்லை என்றாலும் தங்கள் சொந்தக் காசிலேயே இவற்றைச் செய்கின்றனர்.

எதற்காக இதெல்லாம் என்று கேட்ட போது "குடும்ப ஆதிக்கம், குடும்ப அரசியல் ஒழிஞ்சிச்சில்ல" இதுதான் அவர்களின் பதில். கருணாநிதி குடும்பம் நுழையாத இடமே கிடையாது. எல்லா இடங்களிலும் நுழைந்து கொள்ளையடித்தார்கள். "குடும்பமே கொள்ளையடிப்பதை எப்படி சகித்துக் கொள்ள முடியும?" இதுதான் இவர்களிடம் கோபமாக வெளிப்பட்ட பதில். இதே உணர்வுதான் மக்களிடமும் இருந்துள்ளது என்பது தேர்தல் முடிவுகளில் பிரதி பலித்தது.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, இலங்கை பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, அலைக்கற்றை ஊழல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதில் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் குடும்ப அரசியல்தான். 

எல்லை பிரித்துக் கொள்ளையடிப்பார்கள்:

கருணாநிதி குடும்பம் இலட்சம் கோடிகளில் கொள்ளையடித்தால் மந்திரிகள், மாவட்டங்கள் சில கோடிகளையும் வட்டங்கள், கவுன்சிலர்கள், அல்லக்கைகள் சில இலட்சங்களையும் வாரிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் அலைக்கற்றையில் அள்ளினால் இவர்கள் மணற் கொள்ளையில் வாரினார்கள். அள்ளுவதற்கும் வாருவதற்கும் வாய்ப்பு ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் என்பதுதானே நமது நாட்டு நடைமுறை. பொருளாசை கொண்ட எவர்க்கும் இதைப் பார்க்கின்ற போது பொறாமையும் கோபமும் வருவது சொத்துடைமைச் சிந்தனையின் இயல்புதானே.

நேர்மையான முறையில் பொருள் ஈட்டி, ஒரு நிலம் வீடு மனை வாங்கினாலோ, பிள்ளைகளை படிக்க வைத்தாலோ, சற்றே ஆடம்பரமாக திருமணம் செய்தாலோ அங்காளிக்கும் - பங்காளிக்கும், எதிர் வீட்டுக்காரனுக்கும் - அக்கம் பக்கத்து வீட்டுக் காரனுக்கும் பொருத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையால் பொருமுகிறான். இதுதானே சொத்துடைமைச் சமுதாயம் நம்மிடம் தோற்றுவித்துள்ள மன நிலை. அப்படி இருக்கும் போது கருணாநிதி குடும்பத்தைப் பார்த்து யாருக்குத்தான கோபம் வராது. 

தற்போதைய ஆட்சி மாற்றத்தால் ஒரே ஒரு மாற்றம்தான் நடக்கும். கருணாநிதி குடும்பம் தொடர்ந்து ஏகபோகமாக எல்லாத் தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஏற்கனவே அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் நடுத் தெருவுக்கு வரப்போவதில்லை. அல்லது எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் திவாலாகவும் போவதில்லை. கருணாநிதி குடும்பம் ஒன்றும் சாதாரணக் குடும்பம் இல்லை நடுத் தெருவில் வந்து நிற்பதற்கு. அவர்கள் பெரு முதலாளிகளாக வளர்ந்திருப்பவர்கள்.  முதலாளித்துவ ஆட்சி அமைப்பில் முதலாளிகளுக்கிடையில் போட்டி நிலவும், ஒருவரை ஒருவர் காலை வாரிவிட முயற்சிப்பார்கள். முடியாத போது கைகோர்த்துக் கொண்டு எல்லை பிரித்துக் கொள்ளையடிப்பார்கள்.

தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா?:

தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா? இது அண்ணா கால திமுக வினர் ஊழலுக்கு போட்ட சப்பைக் கட்டு. முன்பெல்லாம் புறங்கையை நக்கியதற்கே வீட்டிற்கு அனுப்பினார்கள். இன்று தேன் கூடு கட்டும் மரத்தையே பேர்த்து எடுத்துச் சென்றால் அடுத்து தேன் எடுக்கக் காத்துக் கிடக்கும் எதிர்கோஷ்டியினர் சும்மா விடுவார்களா? கூட்டணி அமைத்தார்கள் கூச்சல் போட்டார்கள் எதிரியை விரட்டியடித்து விட்டார்கள். எதிரிகள் ஓடினாலும் தேன் கூடு கட்டுவதற்கு ஒரு சில மரங்களை விட்டுவைத்துதான் சென்றுள்ளார்கள். ஒரு சில இடங்களில் மரங்கள் இல்லை என்றாலும் ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் கூடு கட்டும் வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன.  தேன் எடுக்க புதிய ஆட்கள் தெம்போடு, இளமைத் துடிப்போடு, கைகளில் தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வரத்தான் போகிறார்கள். சற்று வலுவான முகமூடியோடு வருவார்கள். எல்லாம் ஒரு எச்சரிக்கைக்குத்தான் தேனீக்கள் கொட்டிவிடக்கூடாதல்லவா!.

ஆற்றுப் படுகையில் கிடைக்கும் தேனுக்குத்தான் அதிக மவுசாம். பாலாறு, தென்பெண்ணை, காவிரி, தாமிரவருணி ஆற்றுப்படுகைகளில் ஏராளமாக தேன் கிடைக்கிறது. சென்னை மட்டுமல்ல. கேரளாவுக்கும் போகிறதாம். கடல் கடந்து மொரிசியசுக்கும் ஏற்றுமதியாகிறதாம் அதுவும் சென்னை துறைமுகம் வழியாகத்தான் போகிறதாம்.

ஆற்று மணற்கொள்ளை:

கட்டடத் தொழில் வளர வேண்டுமானால் மணல் தேவை. மணலை ஆற்றிலிருந்துதான் எடுத்தாக வேண்டும். மணல் கொள்ளையை தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலுக்கு மூடுவிழாதான் நடத்தவேண்டும். ஆறா? கட்டடமா? எதைப்பாதுகாப்பது? வீடு கட்டுபவருக்கு ஆற்றைப்பற்றி கவலையில்லை. வீடுதான் முக்கியம். விவசாயிக்கு வீடு கட்டுபவனைப்பற்றிக் கவலையில்லை. அவருக்கு நீர்தான் முக்கியம். இருவரையும் காக்க வேண்டுமானால் கட்டடம் கட்ட மணலுக்குப் பதிலாக மாற்று தொழில் நுட்பம் தேவை. அது இப்போதைக்கு யாரிடமும் இல்லை. இந்தச் சூழலில் ஆளும் கட்சியின் மணல் கொள்ளை பற்றி எதிர்கட்சிகள் பேசுவது 'அவன் மட்டும் சம்பாதிக்கிறானே' என்கிற ஆதங்கம் தானோயொழிய ஆற்றைப் பாதுகாக்க அல்ல.

வெற்றியைக் கொண்டாடிய அதிமுகவினரிடம் இது பற்றி பேசிய போது திரு திருவென முழித்தார்கள். வேறென்ன செய்வார்கள் அவர்கள்? அதற்கு மேல் அவர்களுக்கு சிந்திக்கத் தெரியாது. இதுதான் ஜெயா - விஜயகாந்த் போன்ற அரசியலவாதிகளின் பலம்.

இதுவரை மணல் கொள்ளை பற்றி கூப்பாடு போட்ட அதிமுக இனி மணல் கொள்ளையை தடுத்துவிடப் போகிறதா? திமுக காரன் கொள்ளையடிப்பதை வேண்டுமானால் தடுக்கலாம். மணல் கொள்ளையையே முழுவதுமாக தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலை இழுத்து மூடவேண்டியதுதான். இது நடக்கப் போவதில்லை. மணலுக்கு மாற்று காணாத வரை மணல் கொள்ளை தொடரத்தான் போகிறது. ஆற்று நீர் வளம் வற்றத்தான் போகிறது. மணல் கொள்ளை கைமாறுமேயொழிய அது ஒருக்காலும் நிற்கப் போவதில்லை.

ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் எடுக்க வருவார்கள். முடிந்த மட்டும் குடிப்பார்கள். தேன் குடித்தவன் புரை ஏறித் தும்மும் போது தெறிக்கும் எச்சில் துளிகள் காற்றில் மிதந்து வந்து வாய் பிளந்து நிற்கும் மக்கள் நாவில் பட்டு இனிக்கும் போது எல்லாம் மறந்து போகும். என்ன இருந்தாலும் இலவசத்திற்கு மயங்காதோர் உண்டோ?

Saturday, April 9, 2011

ஒரு தரம்... ரெண்டு தரம்...!

ஏலம் விடும் அதிகாரி டாம்பீகத்தோடு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் அவரது பணியாட்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். 

ஏலம் எடுப்பதற்கான போட்டி தொடங்குகிறது. ஏல நிபந்தனைப்படி முன்பணம் (deposit) கட்ட வேண்டும். யார் யார் முன்பணம் கட்டி, ஏல நிபந்தகைளின்படி தகுதி பெற்றிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும் என ஏல அதிகாரி அறிவிக்கிறார்.

ஏலத்தை வேடிக்கை பார்க்கவும், ஏலத் தொகையை அள்ளிச் செல்லவும் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஏலம் தொடங்குகிறது. குறைந்தபட்ச ஏலத் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படாததால் முதன் முறையாக ஏலத்தில் பங்கேற்கும் ஒருவர் எழுந்து... 

"பத்து ரூபாய்" என்கிறார். 

எல்லோரும் கொல்லென சிரிக்கிறார்கள். பாவம் இன்றைய ஏல நிலவரம் இவருக்குத் தெரியாது போல.

ஏலம் தொடர்கிறது.

"நூறு" 

"ஐநூறு"

"ஆயிரம்"

"வேட்டி" 

"சேலை"

"ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி"

"முதியோர்களுக்கு ஆயிரம்" 

"கல்யாணத்திற்கு இருபதாயிரம்"

"கற்பிணிகளுக்கு பத்தாயிரம்"

ஒருதரம்

ரெண்ட தரம்....

கூட்டத்தில் மௌனம்.

"மூக்குத்தி"

"சைக்கிள்"

"கேஸ் ஸ்டவ்"

"கலர் டி.வி"

"ரெண்டு ஏக்கர் நிலம்"

"வீட்டு மனை"

"வீடு"

"பம்பு செட்"

ஒருதரம்...

ரெண்ட தரம்...

இதெல்லாம் பழைய ஏலத்தில் கேட்டதுதானே என கூட்டத்தில் ஒரு வித சலிப்பு.


"முப்பத்தைந்து கிலோ அரிசி"

"மூணு பவுன்"

"மிக்சி"

"கிரைண்டர்"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

கூட்டத்தில் ஆரவாரம் ஏதும் இல்லை. இன்னும் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள் போல.

"ஆட்டுக் குட்டி"

"கன்னுக் குட்டி"

"பன்னிக் குட்டி"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

விவசாயிகள் நெளிகிறார்கள். சற்றே சலசலப்பு. 

"செல்போன்"

"லேப்டாப்"

கூட்டத்தில் உற்சாகம் ஏறுகிறது

"மோட்டார் பைக்"

"ஹீண்டாய் கார்"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

ஏலம் சூடுபிடிக்கிறது. இன்னும் முடியவில்லை.

ஏலத் தொகை ஏற ஏற மக்கள் எகிறிக் குதிக்கிறார்கள். எல்லாம் இவர்களுக்குத்தானே. ஏல நிபந்தனையே அதுதானே!

ஏலம் விடுவது ஏப்ரல் 13 ந் தேதி வரை நீடிக்கும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்டல் வசூல் மற்றும் தோப்பு மகசூலை எடுத்துக் கொள்வதற்கான ஏலம். அதற்காக தமிழகத்தை 234 கூப்புகளாகப் பிரித்து ஏலம் விடுகிறார்கள். ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.

சாதாரண ஏலத்தில் இரகசிய கூட்டணி அமைத்துதான் எதிரிகளை ஓரங்கட்டிவிட்டு ஏலம் எடுப்பார்கள். ஆனால் எப்படியாவது ஏலத்தை எடுத்தாக வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தல் ஏலத்தில் பகிரங்கமாகவே கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.  கூட்டணிக்குள் நுழைய முடியாதவர்கள் 'சீச்..சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற கதையாக பாவம் ஏலத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். 

புளியந்தோப்பு, மாந்தோட்டம், தென்னந்தோப்பு, நாள் சந்தை, வாரச்சந்தை, வண்டி நிறுத்தம் (வண்டி ஸ்டாண்டு), பேருந்து நிலைய, இரயில் நிலைய கழிவறைகள் என ஏலத்தில் பல வகைகள் உண்டு. ஏலத் தொழில் என்பது 'லாரி புக்கிங் ஆபிஸ்' போல; ஒரு நாற்காலியும், ஒரு மேசையும் இருந்தால் போதுமானது. உட்கார்ந்த இடத்திலேயே காசு பார்க்கலாம். எனவே கடுமையானப் போட்டி இருக்கும் இத்தொழிலில் வெட்டு, குத்து, கொலைகள் எல்லாம் சர்வ சாதாரணம்.

உள்ளுர் அளவில் இந்தத் தொழிலில் கொட்டை போட்டவர்கள் படிப்படியாக முன்னேறி, மாநில அளவில் நடக்கும் ஏலத்தொழிலில் நுழைந்து, பிறகு அனைத்து இந்திய அளவில் ஏலம் எடுக்கும் அளவுக்கு உயருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏலம் என்பதால் சற்று நிதானத்துடன்தான் ஏலத்தில் பங்கு கொள்ள வேண்டும். ஏலம் தொடங்கிய பிறகு இத்தொழில் அணல் பறக்கும் போட்டியாக மாறிவிடும்.

ஏலம் எடுப்பவனுக்கு ஏலத் தொகையை சொல்லிச் சொல்லியே தொண்டை கம்மிப் போவதால் ஏலத் தொகையை பிரபலப் படுத்த இந்த முறை ஏராளமான அல்லக்கைகளை இறக்கியிருக்கிறார்கள். அவர்களுக்குக்கூட இப்பொழுதே தொண்டை கம்மி விட்டது. இருந்தாலும் இதில் வடிவேலு எல்லோரையும் முந்திக் கொண்டு சக்கை போடு போடுகிறாராம்.

உள்ளுர் அளவில் ஏலம் எடுப்பவனுக்கு ரூபாய் நோட்டுகளை எண்ணத் தெரிந்திருந்தால் போதும். அதற்கும் மேலே ஒரு 'பாக்கெட் நோட்டில்' அதைக் குறித்துக் கொள்ளுகின்ற அளவுக்கு 1, 2, 3 ..... என எழுதத் தெரிந்திருந்தால் போதும். இது இந்தத் தொழிலுக்குப் போதுமான தகுதிகள். இந்தத் தகுதிகளை வைத்துக் கோண்டே சில இலட்சங்களை ஏன் கோடிகளைக்கூட எடுத்து விடலாம். எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது தொழில் இரகசியம். 

இலட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்குச் சென்று எம்.பி.எ (MBA) படிக்கிறார்கள். ஐ.ஐ.டி (IIT) போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்து மிக உயர்ந்த பட்டங்களைப் பெறுகிறார்கள்.  வேண்டுமானால் இவர்களால் சில இலட்சங்களை சம்பளமாகப் பெறமுடியும். ஆனால் அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். சுறுக்கமாகச் சொன்னால் இந்த சில இலட்சங்களுக்காக இவர்களை 'பெண்டு' எடுத்தவிடுகிறார்கள் முதலாளிகள்.

ஆனால், தேர்தல் ஏலத்தில் பத்தாம் வகுப்பு தேறினாலும், தேறாவிட்டாலும் பரவாயில்லை. உங்களால் கோடிகளை சுலபமாக ஈட்டமுடியும். ஐ.ஐ.டி படித்து இலட்சங்களில் சம்பாதிப்பவனைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஏலத்தில் கோடிகளைக் கண்டவனை ஊர் ஊருக்குக் காண முடியும். நம்ப முடியவில்லை என்றால் இதோ சில 'சாம்பில்கள்'.

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.வளர்மதி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 3.35 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் சமூக சேவை.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.தனசேகரன் பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 7.39 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் அரசியல் மற்றும் சமூக சேவை.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 64.45 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் 'ரியல் எஸ்டேட்' மற்றும் விவசாயம்.

சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 5.77 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் அரசியல் மற்றும் சமூக சேவை.

ஏலச் சந்தையில் ஏலம் எடுக்கப் போட்டியிடும் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட இந்த வகையைச் சார்ந்தவர்களே.

படித்தவர்கள், விவரமானவர்கள், முன்அனுபவம் உள்ளவர்கள் இந்தத் தேர்தல் ஏலத்தில் கில்லாடிகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் படிக்காமலேயே கோடிகளைச் சம்மாதிக்கும் திறமை ஒரு 'பெஞ்ச் மார்க்கிங்தானே!'

இது நவீன கால ஏலம். ஏலத் தொகையை உயர்த்தினால் மட்டும் போதாது. ஏலத் தொகையில் திருப்தியடைந்து,யாருடைய ஏலத்தொகையை அதிகமானோர் விரும்பிப் பெறுகிறார்களோ அவரே ஏலத்தை எடுத்தவர் என அறிவிக்கப்படுவார்.

ஏலச்சீட்டில் நம்பி பணம் கட்டிவிட்டு ஏமாற்றிவிட்டான் என்று "குய்யோ முறையோ" எனக் கூச்சலிடுவதைப் போல இங்கே கூச்சலிட முடியாது. ஏலம் எடுத்தவன் நிபந்தனைப்படி ஏலத் தொகையை ஏமாற்றாமல் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறானே.

ஏலம் எடுத்தவன் கோடிகளில் புரள்கிறானே என பிறகு ஒப்பாரி வைக்கக் முடியாது. ஏலத்தில் ஏய்ப்பவன் மற்றும் ஏமாறுபவன்,  இருவரின் நோக்கமும் ஒன்றுதான்.அவனுக்கு அதிகம் என்பதைத் தவிர ஆதாயம் இருவருக்கும்தானே. பிறகு ஏன் ஆதங்கம்?

நீங்கள் தோட்டத்துக்குச் சொந்தக்காரனாக இருக்கலாம்.மண்ணின் மைந்தனாகக்கூட இருக்கலாம். அதெல்லாம் ஏலம் முடியும் வரைதான். ஏலம் முடிந்து ஏலத் தொகையையும் நீங்கள் பெற்றுவிட்டால் அதன் பிறகு உங்கள் தோட்டத்தில் நுழைய உங்களுக்கே அனுமதி கிடையாது. ஏலம் எடுத்தவனிடம் மண்டியிட்டால்தான் வீணாய்ப் போகும் முருங்கைக் கீரையைக்கூட கொஞ்சம் கிள்ளி வரமுடியும். அதுவும் சும்மா கிடைக்காது. ஐந்தோ பத்தோ வெட்ட வேண்டும்.

சொந்தத் தோட்டத்தை ஏலத்தில் பறிகொடுத்துவிட்டு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஏலம் எடுத்தவனிடம் இப்படி கை ஏந்தப் போகிறார்களோ நம் மண்ணின் மைந்தர்கள்?

-------------------------------------------------------------------------------------------------------------தொடர்புடைய பதிவு:

ஏலச் சீட்டு மோசடி! ஏய்ப்பவர்கள் யார்?

http://hooraan.blogspot.com/2011/01/blog-post_19.html

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_19.html

கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா? தெக்கத்தியானா?


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_29.html

எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

கேப்டன் கேடட் ஆன கதை!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html

யாருக்கும் வெட்கமில்லை!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_24.html