Friday, May 10, 2024

நான் கடவுளைக் கண்டேன்! ---1

நடைபயிற்சி

அலுவலக வேலைக்குச் செல்லும் போது இருந்த அன்றாட வாழ்க்கை ஒழுங்கு முறை, பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு சில காரணங்களால் சிதைகிறது. அதில் ஒன்று அவ்வப்பொழுது விடுபட்டுப் போகும் காலை நேர நடை பயிற்சி. 

நடை பயிற்சி விடுபட்டு போய் மூன்று மாத காலத்திற்கு மேலானதனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி காலை 6 மணி அளவில் வழக்கமான பாதையில் நடை பயிற்சியை மீண்டும் மேற்கொண்டேன். மகளிர் கல்லூரி பின் பக்கமாக உள்ள சாலையைக் கடந்து பிரதான சாலையில் நுழையும்போது சற்று எச்சரிக்கையாகத்தான் நடந்து வர வேண்டும். காரணம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை பகுதிகளுக்கு தொழிலாளர்களை அள்ளிச் செல்லும் கம்பெனிப் பேருந்துகள் எதிர் திசையில் சர் சர் என விரைந்து வந்து கொண்டிருக்கும். 

தார் சாலையில் நடந்து வர முடியாது என்பதால் மண் தரையில்தான் ஓரமாக நடந்து வர வேண்டும். இது போன்ற சாலைகளில் தரையை மட்டுமே பார்த்து நடந்தாலோ அல்லது சாலையை மட்டுமே பார்த்து நடந்தாலோ, பெராக்குப் பார்த்துக் கொண்டு நடந்தாலோ அசம்பாவிதம் நடப்பதைத் தவிர்க்க முடியாது. 

கருங்கல்

வீட்டு வசதி வாரிய வளாக குடியிருப்புப் பேருந்து நிறுத்தும் அருகே வந்த பொழுது, எனது கவனக் குறைவால், ஏதோ தடுக்கி விட, தடால் என குப்புற விழுகிறேன். மூக்கிலிருந்து மேல்நெற்றிவரை பலத்த அடி.  


வேலைக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளைஞர் ஒருவர் ஓடி வந்து என்னைத் தூக்கி பேருந்து நிறுத்த நிழற்கூரையின் கீழ் அமர வைக்கிறார். 

முன் மண்டையில் இருந்து இரத்தம்
பொளபொளவென கொட்டுகிறது. அணிந்திருந்த டி சட்டையைக் கழற்றி அடிபட்ட இடத்தில் அழுத்திப் பிடித்து இரத்தப்பெருக்கை நிறுத்த முயல்கிறேன். அதற்குள் டி சட்டை முழுவதும் நனைந்து விடுகிறது. 

அன்று பார்த்து கைபேசியை வேறு கொண்டு வரவில்லை. உடனே என்னுடைய கைபேசி எண்ணைச் சொல்ல, அந்த இளைஞர் 'கால்' செய்கிறார். 'ரிங்' போய்க்கொண்டிருக்கும் போதே அவருடைய 'கம்பெனி பஸ்' வந்து விடுகிறது. 'சார் எனக்கு பஸ் வந்து வந்துவிட்டது' என்கிறார். என்னால் சமாளித்துக் கொள்ள முடியும் என்பதால் அவரை அனுப்பி வைத்தேன். பிறகு டி சட்டைத் துணியால் அடிபட்ட இடத்தை அழுத்தியவாறு வேற்றுடம்புடன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்தேன். என்ன இவன் இப்படிச் செல்கிறானே என்று கூட வழியில் பார்த்த சிலர் நினைத்திருக்கக் கூடும். 

அதன் பிறகு ஒரு வாடகைக் காரைப் பிடித்து பெல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மண்டையில் எந்த பாதிப்பும் இல்லை என்று சொன்ன பிறகு தெம்போடு வீடு திரும்பினேன். ஆனால் மூக்கிலிருந்து மேல்நெற்றி வரை கருங்கல்லில் மோதி அடிபட்டதனால் திருப்பதி வெங்கடாஜலபதிக்குப் போடப்பட்ட நாமத்தைப் போல நெற்றி பட்டையாக நெடுக்குவாக்கில் வீங்கி இருந்தது. ஓய்வுக்குப் பிறகு ஒரு வாரத்தில் எல்லாம் சரியானது.

அடிபட்டுக் கிடந்தவரைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்து விட்டோமே என்று அந்த இளைஞருக்கு மனம் பதபதைத்திருக்கும் போல. அதன் பிறகு அவர் என்னைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முன் பின் முகம் தெரியாதவர்களுக்கு இருக்கும் அக்கறைகூட சில நேரங்களில் முரண்பட்டுபோன சில உறவுகளுக்கு இருப்பதில்லை. இதைவிட பெரிய விபத்துக்கள் நடக்கும் தருணத்தில், அதுகுறித்து அறிந்த பிறகும்கூட 'அவனுக்கு என்ன கல்லு மாதிரிதானே இருக்கான்,  செத்தா போயிட்டான்?' என்போரும் இருக்கத்தானே செய்கின்றனர்.

வேகத்தடை

இந்த ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் ஒரு நாள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் மாலை நேர நடை பயிற்சியை முடித்துக் கொண்டு தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருக்கிறேன். இரவு ஏழு மணி வாக்கில் தெருவில் போதிய வெளிச்சம் இல்லாததால் அங்கிருந்த வேகத்தடையில் தடுக்கி தடாலென குப்புற விழுகிறேன். முகம் தரையில் மோதி அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியின் ஒரு பக்கம் உடைந்து நொறுங்குகிறது. அப்பொழுது எதேச்சையாக அவ்வழியே வந்த இரண்டு இளைஞர்கள் என்னைத் தூக்கி நிறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் கவனக் குறைவினால் ஏப்ரல் 20 இல் நடந்ததைப் போன்றதொரு விபத்துதான் இது.

பொதுவாகவே நாம் நடக்கும்போது கால்களை நன்றாகத் தூக்கிதான் அடியெடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு முடியவில்லை, தரையோடு கால் தவழுகிறது என்றால் தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகிய இரண்டும் இரத்தத்தில் குறைந்து போனால் உடல் சோர்வும், கால்களில் அசதியும் ஏற்படும் என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. மேற்கண்ட இரண்டும் மிகவும் குறைந்து இருந்ததை பின்னாளில் நான் கண்டபோது, நான் தடுக்கி விழுந்ததற்கான காரணம் இதுவாகக்கூட இருக்கலாமோ என்று எண்ணத்தான் தோன்றுகிறது. 

அடுத்து பைரவன் குறுக்கே வந்த கதையைப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்


No comments:

Post a Comment