Tuesday, May 21, 2024

வங்கமே பங்கமாகும்பொழுது இனி வானரப் படைகளுக்கு சங்குதானோ?

ஒரு அவசர வேலையாக கோவையை நோக்கிப் பயணம்.‌
தொலைதூரப் பயணம், பேருந்தில் பயணிப்பது அவ்வளவு உசிதமல்ல என்பதால் தொடர் வண்டியில் பயணிக்க, தத்கல் முறையில் முதல் நாளே முயற்சித்தேன். காலை 11 மணிக்கு கைபேசியுடன் காத்திருந்தேன்.  419 இருக்கைகள் இருப்பதாகக் காட்டியது. இவ்வளவு இருக்கைகளா, கண்டிப்பாக கிடைக்கும் என நம்பி ஒரு சில நிமிடங்களில் விவரங்களை உள்ளீடு செய்து கட்டணமாக ரூபாய் 383 செலுத்தி வெளியே வந்தேன், 46, 47 என காத்திருப்போர் பட்டியலைக் காட்டியது.
 
வழமையான முறையில்தான் காத்திருப்போர் பட்டியல் என்றால் இதிலுமா? சரி, இது கதைக்குதவாது, வேறு வழியில்லை, முன்பதிவில்லாத பெட்டியில்தான் நமது பயணம் என‌ எண்ணியவாறு இன்று பிற்பகல் 300 ரூபாய் செலுத்தி இருவருக்கும் 
பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு நடைமேடையில் காத்திருந்தேன்.
 
பசியாற ஏதாவது கிடைக்குமா என அங்கே உலாவிய குரங்கு ஒன்று பயணிகளின் பைகளை நோட்டமிட, எச்சரிக்கையான பயணிகள் தங்களது பைகளைப் பாதுகாக்க, அங்கே இருந்த குப்பைத் தொட்டியைக் கவிழ்த்து ஒரு டப்பாவில் ஒட்டியிருந்த எச்சில் மிச்சத்தை மோர்ந்து பார்த்து, அது உண்பதற்கு உகந்ததல்ல என ஒதுக்கிவிட்டு அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தது அந்தக் குரங்கு. பிளாட்பாரத்தில் இருந்து நிரந்தரமாக அந்தக் குரங்கை அப்புறப்படுத்திவிட்டால் பயணிகளின் பைகளுக்கு பாதுகாப்புதானே?
 
நாங்கள் இருவரும் மூத்த குடிமக்களாக இருந்த போதும், 150 ரூபாய்க்குப் பதிலாக கூடுதலாக ஒரு 150 ரூபாயை டெல்லி வானரக் கூட்டம்  பிடுங்கிக் கொண்டதே? பிளாட்பாரக் 
குரங்கிடமிருந்து நமது பைகளைக் காக்க முடிந்த 
நம்மால்டெல்லி வானரக் கூட்டத்திடமிருந்து காக்க முடியவில்லையே என்கிற 
ஆதங்கத்தைச் சுமந்தவாறு வந்த வண்டியில் தொற்றிக் கொண்டேன்.

இங்கே 150 ரூபாயை லவட்டியது போதாது என்று தத்கல்லின் போது செலுத்திய 380 ரூபாயில் 240 ரூபாயைத்தான் திருப்பித் தருவோம் என‌குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். இது டெல்லி வானரக் கூட்டத்தின் வழிப்பறி அல்லவா? தத்கல் கதவைத் தட்டியதற்கு தண்டனையாடா இது? நான் என்ன உன்னை மாதிரி ஓசிச்சோறா? ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நகர்த்துபவன். ஏண்டா இப்படி வதைக்கிற?

முன்பதிவு பெட்டியில் ஏறி, டிடிஆர் ஐப் பார்த்து இடம் கேட்கலாம் என்றாலும் முன்பதிவில்லா பெட்டிகளில் நுழைவது என்பது ஏதோ சேரிக்காரன் ஊர் தெருவுக்குள் நுழைவதைப் போலத்தான் பல்வேறு சமயங்களில் பார்த்திருக்கிறேன். சுயமரியாதை கருதி முன் பதிவில்லா பெட்டியில் நுழைந்தேன்.

தத்கலில் முயன்று இடம் கிடைக்காதவர்கள், திடீரென பயணத்தைத் தொடங்கியவர்கள் என பலரும் முன்பதிவில்லா பெட்டியைத்தானே நாடமுடியும். பெட்டிக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நான்கு பேர் உட்கார வேண்டிய இருக்கையில் ஐந்து பேர் ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். ஒரு சில இருக்கைகளில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் அவர்களுக்கு அது இறுக்கமாகத்தான் இருந்தது. உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் உடல் உழைப்புக் குறைந்து போய் உடல் பருத்ததனாலும் வந்த விளைவு இது.

 
நீண்ட நேரம் நின்று கொண்டே பயணிக்க இயலாது என்பதால் இருக்கையின் விளிம்பிலாவது இடம் கிடைத்தால் போதும் என்றெண்ணி, ஏற்கனவே அமர்ந்திருப்பவர்களை
பரிதாபமாகப் பார்த்தால் சிலர் இறக்கப்பட்டு சற்றே நகருவார்கள். இங்கே அமர்ந்திருப்பவன் ஆண்டை போலவும், இடம் கேட்பவன் அடிமை போலவும்தான் கருதப்படுகிறான். எப்படியோ அரை மணி நேரப் பயணத்திற்கு பின் நானும் ஒரு விளிம்பில் ஒட்டிக் கொண்டேன்.

சோலையார்பேட்டையில் வட இந்திய இளைஞர்கள் சிலர் ஏறினர். என் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞனிடம் பேச்சுக் கொடுத்தேன். தான் திருப்பூரில் தையல் வேலை செய்வதாகவும், 
சோலையார்பேட்டை வரை வேறு ஒரு வண்டியில் முன்பதிவு பெட்டியில் வந்ததாகவும், அதன் பிறகு இந்த வண்டியில் முன்பதிவின்றி பயணிப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து விட்டீர்களா என்று கேட்டபோது, ஆம் என்றார். யார் வருவார்கள் என்று கேட்டபோது காங்கிரஸ் என்று கட்டைவிலை உயர்த்தினார். ஏன் மம்தா என்னவாயிற்று என்ற போது அவரது செல்வாக்கு குறைந்து வருவதாகக் கூறினார். பாஜக என்றபோது கட்டை விரலைக் கவிழ்த்துக் காட்டினார். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என வினவியபோது இனி எல்லாமே இராகுல்தான் என்றார். வங்கமே பங்கமாகும் பொழுது இனி வானரப் படைகளுக்கு சங்குதானோ?

எப்படியோ டெல்லியில் இருந்து வானரப் படைகள் விரட்டப்பட்டு நமது பைகளுக்கு  பாதுகாப்பு கிடைத்தால் சரி என்ற ஏக்கத்தோடு பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஊரான்

No comments:

Post a Comment