எனது குடும்பத்தில் உயர்நிலைப்பள்ளியை எட்டிய முதல் தலைமுறை நான்தான். அப்பா அந்தக் காலத்து திண்ணைக் கல்வி மூலம் தமிழில் படிக்கவும் ஓரளவுக்கு எழுதவும் தெரிந்திருந்தார் என்றாலும் நான் அன்றாடம் படிக்கிறேனா இல்லையா என்பதை எல்லாம் சோதிக்கின்ற அளவுக்கு பெற்றோர்களுக்குத் தெரியாது.
நான் எனது வகுப்பில் இரண்டாவது குள்ளன் என்பதனால் உயர வரிசைப்படி எனக்கு முதல் பெஞ்சில் இரண்டாவது இடம். அதனால் பிற மாணவர்களோடு சீண்டலில் ஈடுபடவோ கவனத்தை சிதறடிக்கவோ வாய்ப்பு கிடையாது. நேரடியாக பாடத்தைக் கவனிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதனால்தானோ என்னவோ நான் ஒப்பீட்டளவில் மற்ற மாணவர்களைவிட படிப்பில் சற்று முன்னிலையில் இருந்தேன்.
ஆசிரியர்கள் திறமையானவர்கள்தான். என்றாலும் அவர்களில் ஒரு சிலர் முழு பாடத்தையும் நடத்துவதில்லை. ஆனால் நடத்துகின்ற பாடங்களை பசுமரத்தானியில் பதிவது போல நடத்துவார்கள். ஆனாலும் இறுதித் தேர்வில் 10 - 15 பேர் தேர்ச்சி பெறுவதே குதிரைக்கொம்பாக இருந்தது. அதனால் எப்படியாவது தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அனைத்துப் பாடங்களிலும் ஓரளவுக்கு தேர்ச்சி பெறக் கூடும் என்று கருதிய சுமார் 30 மாணவர்களை மூன்று மாத காலத்திற்கு பள்ளியிலேயே தங்க வைத்து விட்டார்கள். அதில் நானும் ஒருவன்.
மூன்று வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? மூன்றடுக்கு அலுமினியம் கேரியர் ஒன்றில் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய புளிச்சக்கீரை சோறு, புளி சோறு மூன்று வேலைக்கும் கட்டுபடியாகும்படி வீட்டிலிருந்து வரும். எனது தங்கைகள் இருவர் மாறி மாறி அந்தக் கேரியரை ஒரு கிலோமீட்டர் தூரம் எடுத்து வந்து எனது ஜூனியரான பக்கத்து கிராமத்து மாணவன் இராஜேந்திரனிடம் கொடுத்து அனுப்புவார்கள். அவ்வாறே மாலையில் காலி கேரியரும் வீடு சென்றடையும்.
தொலைவில் இருந்து சைக்கிளில் வரும் மாணவர்களின் டிரவுசரின் பின்பக்கம் பெரும்பாலும் வட்டமாக ஓட்டை விழுந்து விடும். ஆண்டுக்கு இரண்டு செட் சீருடை, அதை வைத்தே சமாளித்தாக வேண்டும். டிரவுசரில் ஓட்டைகள் இருந்தாலும் அது இல்லாமையின் அடையாளம் என்று கடந்து செல்வார்களே ஒழிய யாரும் ஏளனம் செய்யமாட்டார்கள். இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆண்டு விழாவின்போது வகுப்புத் தோழன் தங்கவேல் எனக்கு ஒரு நாள் மாற்றாகக் கொடுத்த டிரவுசர் மட்டும் என் நினைவில் அடிக்கடி வந்து போவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.
எப்படியோ பழைய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டன. மிதிவண்டியிலேயே சென்று தேர்வு எழுதக்கூடிய தூரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் மூன்று பள்ளிக்கூடங்கள் இருந்தும் 25 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள செங்கத்தில்தான் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்து விட்டார்கள்.
இவ்வளவு தூரம் அன்றாடம் சென்று வரமுடியாது. செங்கத்தில் உறவினர்கள் யாரும் கிடையாது. அதனால் செங்கத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எனது சித்தி வீட்டிலிருந்து தேர்வு எழுதச் செல்வது என முடிவு செய்து மிதிவண்டியோடு அங்கு சென்று விட்டேன்.
தமிழ் முதல் தாள் தேர்வு எழுதிவிட்டு எனது சித்தி வீட்டுக்குத் திரும்பிய போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் மேலும் அங்கு நான் தங்க முடியாத சூழ்நிலையில், அதே ஊரில் எனது சித்தி மகளின் வீட்டிலிருந்து அன்றாடும் செங்கம் சென்று தேர்வுகளை எழுதி முடித்தேன்.
எனது வீட்டில் மின்சாரம் இல்லாததால் முதல் வகுப்பு முதல் பள்ளி இறுதித் தேர்வு வரை சிமினி விளக்கும் லாந்தர் விளக்குகளும்தான் இரவில் படிக்க வெளிச்சம் கொடுத்தன. பள்ளி இறுதித் தேர்வு எழுதும் பொழுது நான் தங்கி இருந்த வீட்டிலும் மின் விளக்குகள் கிடையாது. பள்ளிக்கூடத்தில் மூன்று மாதம் தங்கி இருந்த போதுதான் மின்விளக்கு ஒளியில் படித்திருக்கிறேன்.
தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி....
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment