Saturday, May 11, 2024

நான் கடவுளைக் கண்டேன்! --- இறுதிப் பகுதி

ஆபத்துக் காலங்களில் உதவி செய்வோரை 'ஆபத்தாண்டவன் மாதிரி வந்து காப்பாத்தனாம்பா' என்றுதான் சொல்கிறோம். அத்தகையோரை ஆண்டவனின் மாதிரியாகப் பார்க்கிறோம். அப்படியானால் ஆபத்துக் காலங்களில் உதவுவதற்கு ஒரிஜினல் ஆண்டவன் இருக்க வேண்டும் அல்லவா?

தெரு நாய் மோதி நான் கீழே விழுந்து அடிபட்டேனே, அதற்கு எதிரில்தான் ஸ்ரீ செல்வ விநாயகன் வீற்றிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் விநாயகனுக்கு எதிர் வீடுதான் என்னுடையது. அன்றாடம்  அவனுக்கு ஐயர் செய்யும் சேவையை நான் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல, எனது செயல்களையும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் எனக்கு நேர்ந்த விபத்தை  அவன் தடுக்கவும் இல்லை; அடிபட்ட பிறகு எழுந்து ஓடி வரவும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டவனின் மற்றொரு அவதாரமான பைரவன்தான் என் மீது மோதியவன்? 

நடைபயிற்சியின் போது தடுக்கி விழுந்து கருங்கல்லில் மோதி மண்டை உடைந்ததையும், எதிரில் இருந்த ஐயப்பனும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். மற்ற மூன்று இடங்களிலும் விபத்து நடந்த போது அங்கிருந்த தெய்வங்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தன.

நான் கடவுள் மறுப்பாளன் என்பதனால்கூட இந்தக் கடவுளர்கள் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஒரு சிலர் எண்ணக்கூடும். ஆனால் அன்றாடம் நடைபெறும் எண்ணற்ற விபத்துகளில் பாதிக்கப்படுவோர், பலியாவோர்  ஆண்டவனை அனுதினமும் ஆராதிக்கும் அப்பாவிகள்தானே? வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டுத்தானே செல்கின்றனர்.  விபத்துகளைத் தடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், விபத்து நடந்த பிறகு ஓடோடி வந்து உலகின் எந்த மூலையிலாவது எந்த ஆண்டவனாவது பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டி இருக்கிறானா?

ஆனால் விபத்து நடக்கின்ற இடங்களில் எல்லாம் ஓடோடி வந்து உதவிக்தரம் நீட்டுபவர்கள் சக மனிதர்களே. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதல் உதவி செய்கிறார்கள். ஆம்புலன்சையோ ஆட்டோவையோ வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். மருத்துவமனைக்கு வருவோரை அரவணைத்து உடனடியாக செவிலியர்களும், மருத்துவர்களும் உரிய சிகிச்சை அளித்து உயிரைக் காக்கின்றனர்.

எனக்கு நடந்த ஐந்து சம்பவங்களும் ஒப்பிட்டளவில் சிறியவைதான் என்றாலும்கூட, சக மனிதர்கள் உரியநேரத்தில் எனக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? 

ஐந்து முறையும் நான் அடிபட்ட போது எனக்கு மயக்கம் வரவில்லை, வாந்தி வரவில்லை, மூக்கில் இரத்தம் வரவில்லை; அதனால் அதிகம் அச்சப்பட வேண்டியதில்லை என்றாலும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும் அது ஆபத்துக்குரியதாகத்தான் பார்க்கப்படும். இதைத்தான் மருத்துவர்களும் முதலில் கேட்கிறார்கள். 


தெய்வங்களை சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்கள் என்கிறார்கள். பெருந்தெய்வங்கள் நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு யாருக்கோ படி ஆளந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுவோர் வீதி ஓரங்களில் கேட்பாரற்ற கிடக்கின்றனர். இவர்களை நம் மூதாதையர்கள் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். முந்தைய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகரம் நீட்டி இன்றும் நினைவு கூறப்பட்டு வணங்கப்படுபவர்கள். அன்றைய சகமனிதர்களே அவர்கள்.

எனக்கு நடந்த ஐந்து சம்பவங்களில் மட்டுமல்ல, எனது உறவினர்கள், நண்பர்கள் என‌ப்பலரும் பாதிக்கப்பட்ட போது இத்தகைய சிறு தெய்வங்களை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். 

ஆபத்துக் காலங்களில் வேடிக்கை பார்க்காமல் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவோம். மனிதநேயம் காப்போம். கடவுள் வேறு யாருமல்ல, நாமே கடவுள்!

நன்றி!

முற்றும்

No comments:

Post a Comment