Friday, May 31, 2024

குமரிக் கொட்டம் முடிவுக்கு வருமா?

மாலைநேர மறைவிடமாய் தமிழ்நாடு

சிறு பிள்ளைகளுக்கு போரடிக்கும் பள்ளிகளின் விடுமுறைக் காலம் இது. வெளியே போகலாம் என அடம் பிடிக்க மாலை ஐந்து மணி வாக்கில் அருகில் உள்ள ஜலகாம்பாறைக்குப் பயணமானோம்.  

கேரளாவில் பருவமழை தொடங்கி விட்டது, அதன் தாக்கம் திருப்பத்தூர் வரை எட்டிவிட்டதால் தூரலில் குழந்தைகள் குதூகலிக்க வெளியே அழைத்து வந்தது வீண் போகவில்லை.

ஜலகாம்பாறை வரத்தின்றி வற்றியிருந்தது. அடர்ந்த காடுகளும் நெடிதுயர்ந்த மரங்களும் நம் கண்களைக் கவர்ந்தாலும் சற்றே அச்சமூட்டும் மெல் இரவு நேரம் அது. படிகளில் ஏறி உலாவலாம் என்றால், பாட்டில்களோடு சில இளைஞர்கள் நமக்கு முன்னே மரங்களின் பின்னே ஒதுங்கினர். தமிழ்நாடே இன்று மாலை நேர மறைவிடமாய் மாறியபின் ஜலகாம்பாறை மட்டும் விதிவிலக்கா என்ன?

காடுகளையும் மலைகளையும் வயல்களையும் தோப்புகளையும் எத்தனைமுறை கண்டாலும் புதியவற்றைக் காணும் பொழுது அவை நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

குமரிக் கொட்டம் முடிவுக்கு வருமா?

நேற்று பெய்த மழையில் பூமித்தாய் நனைந்து குளிர்ந்து மலர்ந்திருந்ததால், தோட்டத்தில் சில நேரம் களை எடுத்து,  பின் களைப்புக்கு சற்றே இளைப்பாரி மாலையில் தொடர் வண்டியில் வாலாஜா நோக்கிப் பயணமானேன்.

படுகளக் காட்சிபோல வலப்புறமாய் ஏலகிரி நீண்டிருக்க, கோடை மழையால் உழவு கண்ட  புழுதி மண்ணின் வாசத்தில் நாசிகள் சங்கமிக்க, வலப்புறமும் இடப்புறமும் வரிசைகட்டி நிற்கும் தென்னைகள்  கேரளத்தை நினைவூட்ட

சேலம்-அரக்கோணம் MEMU விரைவு வண்டியில் அறுபது ரூபாய்க்கு அலுப்பின்றி பயணிக்க ஏற்ற வண்டி அது. இதில் முப்பது ரூபாயை ஆட்டயப் போட்டவன் குமரியிலே கொண்டமடிக்க, நானோ பயணத்தில் லயித்திருந்தேன்.

முடியாதவர்கள் காலை நீட்டிப் பயணிக்கவும், பதின்ம வயதினர் சன்னல் ஓர இருக்கைகளில் அரட்டை அடிக்கவும், முதுகு வலிப்போர் சற்றே எழுந்து நடக்க, நிற்க, இளைப்பாற, இருக்கைகள் ஏற்றதல்ல எனக் கருதும் உழைப்பாளிகள் தரையில அமர்ந்து இயல்பாய் பயணிக்க ஏற்ற வண்டி.

எளியோர்கள் பயணிக்கும் இந்த வண்டியின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்ச உணர்வோடு ஜூன் நான்கை எதிர்நோக்கி தூரலின் சாரல்களினூடே வாலாஜா ரோடில் இறங்கி ஒரு தானி மூலம் இல்லம் சேர்ந்தேன்.

ஊரான்

No comments:

Post a Comment