நான் பள்ளிப் படிப்பு படிக்கிற காலத்தில் (1975 பழைய SSLC) தேர்ச்சி பெறுவது என்பதே பெரிய சாதனை. அதிலும் 400 க்கு மேல் (தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு புவியியல், ஒரு விருப்பப் பாடம் என ஆறு பாடங்கள், மொத்தம் 600 மதிப்பெண்கள்) எடுப்பது இமாலய சாதனை. எனது விருப்பப் பாடம்: அல்ஜிப்ரா & ஜியாமெண்ட்ரி.
தேர்வு முடிவுகள் வெளியாகின. எனது நண்பன் சண்முகம் 420 மதிப்பெண்கள் முதலிடம், இரண்டாம் இடம் நான் 398. நான் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள மூன்று பெரிய கிராமங்களில் ஆண் பெண் என பலர் படித்தும் நான் ஒருவன் மட்டுமே தேர்ச்சி பெற்றவன்.
கணிதத்தில் முதல் கேள்வியில் இருந்து கடைசி கேள்வி வரை எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் எழுதி விட்டேன். சரியான பதிலை மட்டும் கணக்கில் கொண்டால் 100 மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரிசைக்கிரமப்படிதான் கணக்கில் கொள்வார்கள் என பின்னர் தெரிய வந்தது. அதனால் இடையில் சில கேள்விகளுக்கான தவறான பதிலால் எனது 100 மதிப்பெண்கள் என்கிற கனவு சிதைந்து போனது. நிறைவேறியிருந்தால் எனக்கு மட்டுமல்ல அது பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கும். அடுத்த ஆண்டே பாலிடெக்னிக் முதலாம் ஆண்டில் இரண்டு கணிதப் பாடங்களிலும் எனது கனவு நிறேவேறியது.
இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் இரு இடங்களைப் பெற்ற நாங்கள் இருவருமே அன்றே கடவுள் மறுப்பாளர்கள். கடவுளிடம் வேண்டுவதைவிட கல்வியில் கவனம் செலுத்தி ஊன்றிப் படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை பள்ளிப் பருவத்திலேயே அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். கல்லூரி வரையிலும் இதுவே தொடர்ந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் நாங்கள் இருவருமே சில நேரங்களில் காஞ்சி குன்னு மோடு முருகன் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் பாறைகளின் மீது அமர்ந்துதான் பாடம் படிப்போம்.
நான் பெற்ற மதிப்பெண்கள்
தமிழ். 63
ஆங்கிலம். 38
கணிதம். 87
அறிவியல். 77
வரலாறு, புவியியல் 77
அல்ஜிப்ரா,ஜியோமெண்ட்ரி 56
மொத்தம். : 398 / 600
எமது பள்ளியின் அன்றைய தேர்ச்சி சதவீதம் (தோராயமாக 30% இருக்கும்) மிகச் சொற்பமே. ஆனால், இன்று அனைத்துப் பள்ளிகளுமே 100 ஐ எட்டிப்பிடிக்க போட்டி போடுகின்றன. இந்தப் போட்டியை வரவேற்கக்கூடிய அதே வேளையில், பள்ளிப் படிப்பை முடித்து வெளியில் வரக்கூடிய மாணவர்களின் மொழிப் புலமை மற்றும் கணித அறிவு கவலை அளிக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஆசிரியர் பணியில் இருக்கக்கூடிய அனைவரும், ஆசிரியர் பணியை மட்டுமே செய்தால் தமிழ்நாடு உலகத்திற்கே வழிகாட்டும்.
முற்றும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
நினைவில் நிழலாடும் பள்ளிப் பருவம்! ---1
No comments:
Post a Comment