Friday, July 26, 2024

அம்மனின் தயவால் கறி விருந்து!

ஆத்தா பச்சையம்மன் தயவில்
இன்றைக்கும் ஒரு கறி விருந்து. உறவுகளை ஒன்று சேர்க்கும் உழைக்கும் மக்களின் ஆன்மீக விழா.

சித்திரையில் பொன் ஏர் கட்டி கடலை, கம்பு, சோளம் என, கோடை மழையின் கருணையால் மானாவாரியில் களங்கள் நிறைந்த காலம் மலையேறி காலங்கள் பல ஆச்சு. பருவநிலை மாற்றங்களால் கிராமங்கள் காய்ந்தன, நகரங்கள் செழித்தன.


ஆனாலும், அம்மனின் அருளாளே அனைவரும் வாழ வேண்டி, ஆடியிலே அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள் கிராம மக்கள். 

நச்சுக் கழிவுகளால் ஓசோனும் ஓடைகளும்  பாழ்பட்டுப் போன பிறகு அம்மன்தான் என்ன செய்வாள் பாவம்? பருவம் தவறிப் போனால் கன்னிகளும் காளைகளும் மலடாகிப் போவதைப் போல, பருவநிலை தவறியதால் மண்ணும் அல்லவா மலடாகிப் போகிறது. 

அம்மனின் அருளால் ஆறுதல் அடையலாமே ஒழிய, மானுட ஆற்றல் மட்டுமே  மண்ணைக் காக்க முடியும் என்பதை உணராத வரை வேண்டுதல்களும் நிற்கப் போவதில்லை. 

பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் அம்மன்களை அப்புறப்படுத்த முடியாது. ஏக்கப் பெருமூச்சு ஏதுமின்றி, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு சமூகம் உருவாகும் பொழுது, ஆன்மீக அம்மன்கள் அவர்களாகவே வானில் கரைந்து போவார்கள். 

அதுவரை நமக்கும் கறி விருந்துகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். 

ஊரான்
*****
விருந்தினராக,
பெரியகரம், திருப்பத்தூர் மாவட்டம்

****

வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த போது நண்பர்களின் கருத்துக்கள்: 

ராமு: நிறுவன மயமாக்காத பச்சையம்மன் மாரியம்மன் பேச்சியம்மன் கோயில்கள் திருவிழாக்கள்தான் இன்னும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை கொஞ்சமாவது இந்த நவீன மயமான காலத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையை காட்டிக் கொண்டு இருக்கிறது. இது போன்ற அம்மன்களை தங்களின் மூதாதையர்களாகத் தான் நினைத்து வழிபட்டு கொண்டு வருகின்றனர். நேரில் பார்க்க முடியாத கடவுள்களை இது போன்ற அம்மன்களின் மூலமாக கொஞ்ச நேரமாவது நிம்மதியாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment