Friday, July 5, 2024

ஆம்ஸ்ட்ராங் படுகொலை உணர்த்தும் பாடம் என்ன?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த லால்குடி நவீன் என்கிற நவீன்குமார் சக ரவுடிக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே திருச்சி காட்டூர் ரவுடிக் கும்பலில் செயல்பட்டபோது இவருடன் இருந்த ராஜா என்பவர்தான் இந்தக் கொலையை செய்திருப்பார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது”.
(இந்து தமிழ் திசை 06.06.2024)

வழிப்பறி, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த ரவுடி ராஜா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நான்கு பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்”.
(இந்து தமிழ் திசை 03.06.2024)
 
சேலம் தாதகம்பட்டியைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் சண்முகம் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சேலம் மாநகராட்சி 55 வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ் உள்ளிட்ட 10 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனைகளில் சதீஷ் ஈடுபட்டதாகவும், அதற்கு எதிராக அதிமுக பிரமுகர் செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது
(இந்து தமிழ் திசை 05.06.2024).
 
ஒன்றிய பொது நிதியிலிருந்து செய்யப்படும் எந்த ஒரு வேலையும் அதிமுக கவுன்சிலர்கள் எடுத்து செய்ய அனுமதிப்பதில்லை. வேண்டுமென்றால் 10 முதல் 15% வரை கமிஷன் தருகிறோம். நாங்கள் பணி செய்ய வேலை வழங்க வேண்டும். திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஆட்களுக்கு மட்டுமே வேலைகள் வழங்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இது நல்ல நடைமுறை இல்லை என்று சொல்லி,  எங்களைத் தகுதி நீக்கம் செய்து விடுங்கள் என்று திருப்பத்தூர் ஒன்றியக் குழு கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் ஆவேசப்பட்டிருக்கிறார்”.
(இந்து தமிழ் திசை 06.06.2024)
 
மேற்கண்ட சம்பவங்களுக்கெல்லாம் என்ன காரணம் என்று அறிந்து கொள்ளும் அவாவில், பிரபல அரசியல் பிரமுகர் ஒருவரிடம் பேசிபோது அவர் சொன்னார், 

பாரம்பரியமான காங்கிரசில் தொடங்கி நேற்று தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் வரை, அதில் அரசியல் பிரமுகர்களாக இருப்பவர்கள், குறைந்தபட்சம் கவுன்சிலராகவாவது வந்துவிட வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறார்கள். அப்பொழுதுதான் தடை செய்யப்பட்ட கஞ்சா, மூணாம் நம்பர் லாட்டரி, காட்டன் சூராட்டம், கள்ளச்சாராயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுதல், மணல் கொள்ளை, குவாரி கொள்ளைகளில் ஈடுபடுதல், நகராட்சிக் கடைகளை குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்து அதிக உள்வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது, ரியல் எஸ்டேட் பிசினஸ் என்ற பெயரில் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்களை அபகரிப்பது, பஸ் ஸ்டாண்டு கக்கூஸ், சாக்கடை, சாலை வசதி மற்றும் துப்புரவுப் பணி உள்ளிட்ட வேலைகளைக் காண்டிராக்ட் எடுத்து கொள்ளையடிப்பது என்பதுதான் அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்களின் அன்றாட வேலையாக இருக்கிறது, வருவாய்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அந்தந்த அரசியல் கட்சிகளின் உயர் மட்ட தலைவர்கள் உள்ளிட்டோரின் ஒப்புதலோடுதான் இவையெல்லாம் நடந்து வருகிறது என்றார்
 
இத்தகைய தொழில்களில் ஏற்படும் போட்டி மற்றும் பகைமையின் காரணமாகத்தான் சில நேரங்களில் மேற்கண்ட கொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வருகின்றன.
 
இத்தகைம அரசியல் சூழலில்தான், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

 ஆம்ஸ்ட்ராங்

ஒரு சிலருக்கு வேண்டுமானால் இவை அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதுதான் அன்றாட அரசியல் நடைமுறை. ஒப்பீட்டளவில் நேர்மையாக செயல்படக்கூடிய பொதுவுடமை இயக்கத்தினர் இத்தகைய இடங்களில் அதிகமாக நுழைய முடிவதில்லை. ஒரு சிலர் நுழைந்து உண்மைகளை வெளிக்கொணரும் பொழுது மதுரை லீலாதியைப் போல படுகொலை செய்யப்படுகிறார்கள். போர்க்குணமிக்க அரசியல் பின்னணியைக் கொண்ட தீவிர இடதுசாரி அரசியல் பேசக்கூடிய நக்சல்பாரி பாரம்பரியத்தைக் கொண்ட மார்க்சிய-லெனினிய இயக்கத்தினர் இத்தகைய உள்ளாட்சி அமைப்புகளை இதுவரை புறக்கணித்தே வந்துள்ளனர்.  
 
உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்துகின்றன. அவற்றில் பிழைப்புவாதிகளும் கொள்ளைக்காரர்களுமே நிறைந்து இருக்கும்வரை இதற்கு முடிவே கிடையாது. உள்ளாட்சி அமைப்புகளை என்றைக்கு நக்சல்பாரிகள் கைப்பற்றுகிறார்களோ அன்றைக்குதான் குறைந்தபட்சம் உண்மைகளாவது வெளிவரும், மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும், படுகொலைகளும் முடிவுக்கு வரும்!
 
ஊரான்

No comments:

Post a Comment