Sunday, July 28, 2024

ஆசாரக் கோவையும் ஆரிய ஒழுக்கமும்!

நெருங்கிய நண்பர்கள் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் குழுவில், பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவையிலிருந்து, அன்றாடம் ஒரு பாடலை ஒரு நண்பர் பகிர்வது வழக்கம். ஆசாரக்கோவை ஒரு நீதிநூல் என்பதனால் அந்த நண்பரும் நல்லெண்ணம் கருதியே அவற்றைப் பதிவிட்டு வருகிறார்.
உணவு உண்ணும் முறை குறித்து ஆசாரக்கோவையின் பாடல் 18 ஒரு முறை பகிர்ந்திருந்தார்.

 ஆசாரக்கோவை

அதன் மீது நண்பர் ஒருவர்,
"உண்கலத்தைச் சுற்றி நீர் இறைத்து..." ஏன்? (காரியத்திற்கான காரணம் என்ன?). அப்படி செய்யாவிட்டால் எப்படி அது ஒழுக்கக் கேடாகும்?
 
அப்படி செய்யாவிட்டால் "அரக்கர் வெறுத்து எடுத்துக்  கொண்டு நீங்குவார்." இதன் பொருள் என்ன?
 
புரியவில்லையே... தெரிந்தவர்கள்/புரிந்தவர்கள் விளக்கவும். நன்றி.
என்று வினா எழுப்பி,
 
அரக்கர் என்று கூறப்பட்டிருப்பது எறும்புகளைக் குறிக்கலாம்என்றும் அவர் கருதினார்.
 
அதன் மீதான எனது பதில்,
 
ஆசாரக்கோவை என்பது அந்தணர்களின் ஒழுக்கம் குறித்த ஒரு நூல். அது அனைவருக்குமானது அல்ல; மேலும் ஆசாரம் என்பது தமிழ் சொல் அல்ல. வடமொழியில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை, ஆசாரக்கோவை என்ற பெயரில் தமிழில் கோர்த்து சொல்லியிருக்கிறார்கள்.
 
பாடல் பதினெட்டில் வரும் கலத்தையோ அல்லது இலையையோ சுற்றி நீர் விடுவது என்பது வெறுமனே நீர் விடுவது மட்டுமல்ல, மந்திரம் சொல்லி நீரை விட வேண்டும். அவ்வாறு விட்டால் அரக்கர்கள் அணுக மாட்டார்கள் என்பதே அதன் பொருள்.
 
வீட்டில், சாப்பாடு தட்டாக இருந்தாலும், திருமண விருந்தில், டைனிங் டேபிளில் பேப்பர் விரித்து இலை போட்டாலும், இன்றும்கூட இப்படிச் செய்பவவர்களைக் காண முடியும். பொருள் புரியாமலேயே அதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

வடமொழி ஒழுக்க நெறிமுறைகள் பதினெண்கீழ் கணக்கு நூல்களின் காலகட்டத்திலேயே நிறைவே தமிழில் புகுந்து விட்டன என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று. ஆசாரக் கோவை குறித்து இணையத்தில் ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை 100 ஆண்டுகள் அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு அச்சில் ஏற்றும் பொழுது, அச்சேற்றிவர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் நமக்கு வழங்கினார்கள்.
 
அதன் பிறகு, காலப்போக்கில், ஒவ்வொரு முறையும் அதன் மீதான விமர்சனங்கள் வரும்போதோ அல்லது தங்களின் தேவைக்கு ஏற்பவோ கருத்துக்களை மாற்றி அமைக்கின்றனர். அதற்கான சமீபத்திய உதாரணம் வள்ளுவரும் திருக்குறளும்.
 
ஒழுக்கம் என்பது இன்றைய உற்பத்தி முறைக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் ஏற்ப இன்றைய சமூக கட்டமைப்புக்குத் தகுந்தவாறு நாம் உருவாக்கிக் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
 
எட்டாம் வகுப்புவரை அறியாப் பருவத்தில், விபூதிப் பட்டையோடு பள்ளிக்குச் சென்ற நான், ஒன்பதாம் வகுப்பிலிருந்து கடவுள் மறுப்பாளனாக மாறிவிட்டேன். அப்பொழுது எனக்கு பெரியாரையும் தெரியாது, பகுத்தறிவு என்பதைக் கேள்பட்டதுமில்லை. நான் நானாகவே, தானாகவே மாறிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளியில் என்னுடன் பயின்ற இன்னொரு மாணவனும் கடவுள் மறுப்பாளன்தான். பழைய எஸ்எஸ்எல்சி இறுதித் தேர்வில் அவன் முதல் மாணவன், நான் இரண்டாம் மாணவன்.
 
அப்பொழுதெல்லாம் நான் கருப்பாக குண்டாக இருப்பேன். பள்ளி வகுப்பறையில்கூட முதல் வரிசையில் இரண்டாவது மாணவனாக அமர வைக்கப்பட்டேன். என்னைச் செல்லமாக கரிபால்டி என்றுகூட நண்பர்கள் அழைப்பதுண்டு.
 
அன்றுமுதல், எனக்கென்று சில ஒழுக்க முறைகளை வகுத்து, அதற்கு ஏற்ப வாழ்ந்து வருகிறேன். நான் பள்ளி இறுதித்தேர்வில் இரண்டாம் மாணவனாக வந்தும், தமிழகத்தின் முன்னிலை முதல் பாலிடெக்னிக்கான சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக்கில், நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த பொழுது இரண்டாம் ஆண்டில் முதலாவதாகவும், மூன்றாம் ஆண்டில் மூன்றாவதாகவும் வந்தும், கடவுளை வேண்டினால் படிப்பு வரும் என்பதெல்லாம் கட்டுக்கதை என்பதை நிறுவி உள்ளேன்.
 
புகைப்பது, மது அருந்துவது, பொய் சொல்வது, பித்தலாட்டம் செய்வது, பிறரை ஏமாற்றுவது, வட்டிக்கு விடுவது, லஞ்சம் பெறுவது, அலுவலக வேலையாக வெளியூர் செல்லும் பொழுது ஆட்டோவில் செல்லாமலேயே சென்றதாகவும், குறைந்த கட்டணத்தில் விடுதியில் தங்கிவிட்டு அதிக கட்டணத்துக்கு ரசீது பெற்று பொய் கணக்கெழுதுவது, வருமான வரி தாக்கலின்போது சேமிக்காமலேயே சேமித்ததாக கணக்குக் காட்டுவது என்கிற ஒழுங்கீனங்கள் என்னிடம் அறவே கிடையாது.
 
நான் திருச்சி பெல்நிறுவனத்தில் உணவக நிர்வாகக் குழுவில் பணியாற்றிய காலத்தில், உணவகத்தில் உணவக ஊழியர்கள் சிலர் செய்த ரூபாய் நாலரைகோடி ஊழல் வெளிக்கொணர நான் காரணமாய் இருந்ததையும் அங்குள்ள பலரும் அறிவர். 

ஒரு முறை திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற போனஸ் போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்களில் என்னைத் தொடர்பு படுத்தி, நான், “ED ஒழிக என முழக்கமிட்டதாகவும், செக்யூரிட்டி பாதுகாவலர்களைத் தள்ளிவிட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட சில தொழிலாளர்களை உள்ளே அழைத்துச் சென்றதாகவும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பெல் நிறுவனத்தை விட்டே என்னை வெளியேற்றினார்கள்.
 
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் அதே நிறுவனத்தில் 15 ஆண்டுகால பணிக்காலத்தை பறிகொடுத்து, பாதி ஊதியத்தில் மீண்டும் புதிய ஊழியராக பணியில் சேர்ந்தேன். அதனால் எனக்கு ஏற்பட்ட ஊதிய இழுப்பு, பண இழப்பு கோடியைத் தாண்டும். இன்றும்கூட ஓய்வூதியத்தில் அந்த இழப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
ஒரு சிறு இழப்பு என்றாலே செய்கின்ற வேலையை குறைத்துக் கொள்ளும் ஊழியர்கள் மத்தியிலே நான் எப்பொழுதும் போல உற்சாகமாகவே பணியாற்றினேன். ‘நக்சலைட் தீவிரவாதி என்கிற பார்வை நிர்வாகத்திற்கு என் மீது இறந்தபோதிலும், வேலையில் நான் காட்டிய முனைப்பும், தொழில்நுட்ப அறிவில் எனது ஆளுமையையும் மறுக்க முடியாமல் மேற்பார்வையாளராக இருந்த என்னை அதிகாரியாக்கினார்கள். அதிலும் கூட ஓராண்டு மறுத்த பிறகுதான் கொடுத்தார்கள்.
 
எனது திருமணத்தின் போது ஒரு கிராம் நகைகூட நான் வரதட்சணையாக பெற்றது கிடையாது. வேறு எந்தச் சீரையும் கேட்டதும் பெற்றதும் கிடையாது. இன்றும்கூட எனது மகனுக்கு அப்படித்தான் வரன் தேடிக்கொண்டிருக்கிறேன். 
 
ஆசாரக்கோவை போன்ற நீதிநூல்களா எனக்கு வழிகாட்டின? பகுத்தறிவு பேசுகின்ற சிலரிடமும், ஏன் பொதுவுடைமை பேசுகின்ற சிலரிடம்கூட ஒழுக்கக் கேடுகள் மலிந்து கிடக்கும் சூழலில்,  எனக்கான ஒழுக்க நெறிகளை நானே வகுத்துக் கொண்டேன். இவற்றை நான் பாட்டாளி வர்க்கப் ஒழுக்கம் அல்லது பண்பாடு என்று வகைப்படுத்துகிறேன். இத்தகைய வாழ்வியல் முறைக்கு மக்கள் மாறவேண்டும் என்பதே எனது அவா

ஆனாலும், இன்றைய சமூகம் ஒரு சொத்துடமைச் சமூகமாகும். சந்ததிகளின் எதிர்காலம் வளமாக இருக்க வேண்டி, சொத்து சேர்ப்பதற்காகத்தான் பலவகையான ஒழுங்கீனங்களையும் பலரும் செய்கின்றனர். இத்தகைய ஒழுங்கீனங்கள், சொத்துடமைச் சமூகத்தின் ஒரு அவல நிலை.

சொத்துடமைச் சமூகம் ஒழிக்கப்பட்டு, ஒரு பொதுவுடைமைச் சமூகம் மலரும் பொழுது, இன்றைய ஒழுங்கீனங்கள் கண்டிப்பாக காணாமல் போகும். ஆனாலும் புதிய வகையான ஒழுங்கீனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, ஒழுங்கீங்களுக்கு எதிரான ஒரு தொடர் போராட்டம் தவிர்க்க முடியாதது.
 
ஊரான்

whatsapp குழுவில் நண்பர்களினா கருத்துக்கள்:

பாஸ்கரன்: அருமையான கருத்து சேகர் 👏

ராஜசேகரன்தனி மனிதன் ஒழுக்கமே எந்த ஒரு நாட்டையும் உயர்த்தும். சேகர் கொள்கைப் பிடிப்பு மிக்கவர் என நான் நன்கறிவேன். ஒழுக்கம் என்னும் அளவீட்டில் எனக்கு குறைந்த அளவே மதிப்பெண் கிடைக்குமென்றாலும் சேகரைப் போன்றவர்களைப் பார்க்கும் போது ஒரு மரியாதை ஏற்படும்.

LNR

சக்திவேல்: தனிமனித ஒழுக்கம் நூல்கள் படிப்பதால் மட்டும் வருவதல்ல. அது அந்த தனி நபரின் மனசாட்சி மற்றும் நன்னடத்தையால் வருவது . படித்தவர்கள் தான் பெருந் தவறுகளை பயமின்றி செய்பவர்கள் என நிறைய சூழ் நிலைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளேன்.

ஞானசேகரன்: ஆசாரக்கோவை ஒரு பிரிவினருக்கான ஒழுக்கத்தைப் பற்றிய நூல் எனில், அது எப்படி பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாக தமிழறிஞர்களால் ஏற்கப்பட்டது என்று புரியவில்லை...🤔
சேகர்,

நீ கடைபிடிக்கும் ஒழுக்கங்களை யாராவது கற்றுக் கொடுத்தார்களா? அல்லது பிறந்து, வளர்ந்த சூழ்நிலை பயிற்றுவித்ததா?  ஏன் அவற்றை கடைபிடிக்கவேண்டும் என்று தோன்றியது?

இப்படி ஒருவர், தானே உணர்வது, கடைபிடிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாவது, நல்ல ஒழுக்கம் என்று அறிவது, இப்படி சிலருக்கே, எந்த சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து கல்வி பெற்றாலும் தோன்றுவதைத்தான் இயற்கையான அறிவு அல்லது பிறவி குணம் என்று நம் முன்னோர்கள் கண்டார்களோ?

இயற்கையான அறிவு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கிறது; ஒரேவிதமான உள்ளீடுகள் இருந்தாலும் ஏற்கும் திறன், சிந்திக்கும் திறன், பகுக்கும் திறன் ஒருவரைப் போல எல்லாருக்கும் ஒருங்கே இருப்பதில்லை.
மிகமிக குறைவான உள்ளீடுகள், வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சிலர் அதிக உள்ளீடுகள், வசதி வாய்ப்புகள் கிடைத்தவர்களை விட சிறந்தவர்களாகவும், அறிவாளர்களாகவும், திறமையானவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.  இவற்றிற்கு காரணம்?

கனகராஜ்: நம் தாய் தந்தையரின் ஒழுக்க உணர்வு, நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள், உற்றார் உறவினர்களின் சொற்கள் மற்றும் செயல்கள், நம் ஆசிரியர்களின் போதனை, நம் பாட நூல்கள் மற்றும் பிற நூல்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை நமது அறிவு சிந்தித்து இவை நல்லவைகள் என்று ஏற்றுக் கொண்ட பின்பே அவ்வழியை பின்பற்றுகிறோம். ஆசாரக்கோவை என்ற நூல் ஆசாரத்தை(ஒழுக்கத்தை, நம் அன்றாடம் பின்பற்றும் செயல்களை) விவரிக்கும் நூல். இது ஆசாரிகளுக்கோ, பிராமணர்களுக்கோ ஏற்பட்டது அன்று. அப்படியே அவைகள் இருந்தால் கூட நல்லவைகளை எடுத்துக் கொண்டு பின்பற்றுதல் நல்லதுதானே. ஒருவர் ஒரு நூலை எழுதுகிறார் என்றால் அவருடைய சம காலத்தில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் அவருக்கு சரி என்று படுகிற கருத்தைத்தான் நூலாக படைக்கிறார் என்பது எனது கருத்து. எப்படி இருப்பினும் நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை கைவிடுவோம். "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்"- குறள்.

ஜெயராமகிருஷ்ணன்: ஒவ்வொரு மனிதனும் துணிச்சல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் கண்ணியம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் அப்படி ஒருவன் இருந்தால் தான் நல்லவைகள் எங்கு இருந்தாலும் யார் சொன்னாலும் அதையே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் மனப்பக்குவமும் உண்டாகும்.

ராமு: அற்புதமான பதிவு.பல நேரங்களில் நினைக்கும் போது மிக சிறிய கிராமங்களில் கூட எதற்காக போலீஸ் ஸ்டேஷன்?மிகச் சிறிய நகரங்களில் கூட நீதிமன்றங்கள் எதற்காக?என்ற எண்ணம் இன்னமும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.அவ்வளவு குற்றங்களா நாட்டில் நடக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.தங்களின் உணவக ஊழல் தடுப்பில் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.நல்ல செயலுக்கு பொய் குற்றச்சாட்டுகளை அபாண்டமாக நிர்வாகமே உண்டாக்கி விடும் போது யாரை குற்றம் சொல்வது என்றே தெரியவில்லை.இது போன்ற பொய்வழக்குகளுக்காகவே  நிர்வாகம் காவல்துறை நீதித்துறை என்று இருக்கிறது என்பது புரிகிறது.நிர்வாகத்தில் நேர்மையாக ஒருவர் கூடவா இருக்க மாட்டார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.நிர்வாகத்தில் இருப்பவர்கள் 95% எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்களாகவே இருக்கும் போது அவர்களும் இதற்கு துணை போவது வேதனையை தருகிறது. நன்றி சார்.

வேலுமணி: நேர்மையான வாழ்க்கை ஆணித்தரமான கருத்து
யதார்த்தமான அணுகுமுறை.
என்றுமே தேவையான வாழ்க்கைமுறையை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

No comments:

Post a Comment