Showing posts with label சபரிமலை. Show all posts
Showing posts with label சபரிமலை. Show all posts

Thursday, September 21, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-12

நீதித்துறையில் சனாதனம்

பிராமணர்களோடுதான் நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். (மனு 8: 1). இன்று நீதித்துறையே  பிராமணர்கள் கையில் இருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை?

வருணாசிரம தருமப்படிதான் விசாரணை நடத்த வேண்டும் (மனு 8: 24); சாஸ்திரப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும் (மனு 8: 3) என்கிறது சனாதனம்.

சபரிமலை வழக்கில் ஒரு பார்ப்பனப் பெண் நீதிபதியினுடைய தீர்ப்பும், அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பார்ப்பன நீதிபதியின் தீர்ப்பும் சாஸ்திரப்படிதானே  வழங்கப்பட்டுள்ளது?

சூத்திரனும் நாத்திகனும் நீதிபதியாகக் கூடாது. அப்படி அவர்கள் நீதிபதிகளாகிவிட்டால் சேற்றில் சிக்கிய பசு போல அந்த நாடும் சிக்கி சீரழியும் (மனு 8: 20, 21). அதனால்தான் நீதித் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லையோ?

விசாரணையின் போது குற்றம் புரிந்தவன், அவன் பிராமணனாய் இருந்தால் 'உண்மையைச் சொல்' என்றும், வைசியனாய் இருந்தால் 'பொய் சொல்லாதே, சொத்து பூரா அழிஞ்சு போயிடும்' என்றும், சூத்திரனாய் இருந்தால் 'பொய் சொன்ன, கொன்னுடுவேன் படவா' என்றும் விசாரிக்க வேண்டும் (மனு 8: 88).

இன்றும்கூட காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில், ஆர் பி வி எஸ் மணியனுக்கு, பத்ரி சேஷாத்திரிக்கு, எஸ் வி சேகருக்கு ஒரு அணுகுமுறையும், சாதாரண சூத்திர உழைப்பாளிக்கு ஒரு அணுகுமுறையும் இருக்கத்தானே செய்கிறது.

பிராமணனைக் காப்பாற்ற பொய் சாட்சி சொல்லலாம் என்கிறது சனாதனம் (மனு 8-112). 

நமது தலைவர்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, வழக்கு என்று வந்துவிட்டால், தாங்கள் அவ்வாறு எதையும் பேசவில்லை என்று அவர்களே, அவர்களுக்கான பொய்சாட்சியாக பார்ப்பனர்கள் மாறிவிடுகிறார்களே? அங்கே நிற்கிறது சனாதனம்.

சூத்திரன் ஒரு பிராமணனைக் கொடுமைப் படுத்தினால், அவன் கையை வெட்டச் சொல்கிறது சனாதனம் (மனு 8: 270). மேலும், பெயரையும் சாதியையும் சொல்லி இழிவாகத் திட்டினால் பத்து அங்குல கம்பியைக் காய்ச்சி அவன் வாயில் சொருக வேண்டும் என்கிறது (மனு 8: 271).

உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் சன்மானம் தருவேன் என்று ஒரு சாமியார் பேசுவதற்கும்,  சனாதனத்தை எதிர்த்தால் நாக்கைப் பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என கஜேந்திரசிங் செகாவத் என்ற மத்திய அமைச்சர் பேசுவதற்கும் சனாதனம்தானே வழிகாட்டுகிறது.

பிராமணனுக்கு ஒரு போதும் கொலை தண்டனை விதிக்கக்கூடாது; தலையை மொட்டையடித்தாலே அது கொலைத் தண்டனைக்கு ஒப்பானது. ஆனால், மற்றவர்களுக்கு கொலை தண்டனை உண்டு. (மனு 8: 379). 

பிராமணன் எந்தப் பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (மனு 8: 380).

சங்கரராமன் கொலையும், காஞ்சி நடுவாளும், பெங்களூருவும் நினைவுக்கு வருகிறதா? என்ன செய்ய சாஸ்திரப்படிதானே நீதி வழங்க முடியும்?

இப்படி நீதி பரிபாலன முறையில், மாறுபட்ட விசாரணை முறைகளும், வேறுபட்ட தண்டனைகளும் வகுக்கப்பட்டிருக்கிறது. இன்றளவும், இதுதான் நடைமுறையாகவும் இருந்து வருகிறது.

தொழிலாளர்களைச் சுரண்டுவதில் சனாதனம்

பிராமணனுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவன் சூத்திரன் என்கிற தொழிலாளி. எனவே, ஒரு சூத்திரனுக்கு சம்பளம் கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ ஒரு பிராமணன் சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம் என்கிறது சனாதனம் (மனு 8: 413).

சந்திரயான்-3 க்காக உழைத்த தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருப்பதும் சனாதன ஆட்சியால்தானோ?

போரில் அடிமையாகப் பிடிபட்டவன் (1), பக்தியினால் வேலை செய்பவன் (2), வேசியின் மகன் அதாவது சூத்திரன் மகன் (3), தானமாகக் கொடுக்கப்பட்டவன் (4), விலைக்கு வாங்கப்பட்டவன் (5), குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்பவன் (6),  தான் செய்த குற்றத்திற்கான தண்டனையைக் கழிக்க வேலை செய்பவன் (7) என தொழிலாளர்களை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கிறது சனாதனம் (மனு  8: 415). பெரிய அளவில் ஊதியம் தராமல் இவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான் இது.

அதேபோன்றதொரு சுரண்டல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், இதுவரைத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டத் தொகுப்புகளாகச் சுருக்கி, தொழிலாளர்களை ஏழு வகையாகப் பிரித்து, (1.நிரந்தரத் தொழிலாளர்கள், 2.NEEM தொழிலாளர்கள், 3.பயிற்சியாளர்கள் (apprentice), 4.தொழில் பழகுனர்கள் (probationers), 5.FTE தொழிலாளர்கள், 6.ஒப்பந்தத் தொழிலாளர்கள், 7.பதிலிகள்), இதில் பெரும்பாலானோருக்கு சொற்ப கூலியைக் கொடுத்து அதானி அம்பானி போன்ற பார்ப்பன பனியா முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது இன்றைய மோடி தலைமையிலான சனாதன ஆட்சி.

*****

சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது, அதை எப்படி வீழ்த்தப் போகிறோம் என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Friday, January 18, 2019

சபரிமலை-புனிதம் தீண்டாமையின் மையப் புள்ளி!

பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி நான்கு மாதங்கள் உருண்டோடி விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் பல பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முயன்றபோதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-பாரதிய ஜனதா-பார்ப்பன சங் பரிவாரக் கும்பல் மிகப் பெரிய அளவில் கேரளத்தில் கலவரத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றன. கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இருபெண்கள் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட்டுவிட்டு திரும்பி உள்ளனர். பெண்கள் பதினெட்டாம்படியேறி அய்யப்பனை வழிபட்டதால் கோவில் தீட்டுபட்டுவிட்டதாகக்கூறி கோவில் நடையை சாத்தி தீட்டுக்கழிப்பு பூஜை செய்துள்ளது தந்திரிக் கும்பல்.

தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அது எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 17 மிகத் தெளிவாக சொன்ன போதிலும் தீண்டாமையை சாதியோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதி பிற வடிவங்களில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை கண்டு கொள்ளாமல் இருப்பது அம்பேத்கரையே அவமதிக்கும் செயலாகும். அரசியல் சட்ட வரைவுக்குழுவில் இருந்தவர்கள் பல்வேறு திருத்தங்களை முன்வைத்த போதும் அவற்றை எல்லாம் நிராகரித்துவிட்டு தற்போதைய நிலையில் அதாவது தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கிற முக்கியமான அம்சத்தை ஒரு தொலை நோக்குப் பார்வையோடு சட்டப்பிரிவு 17 அம்பேத்கர் அவர்கள் உருவாக்கினார்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்து மல்கோத்ராவைத் தவிர மற்ற நான்கு பேரும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்லத் தடை விதிக்கும் கேரளா இந்துக் கோவில் வழிபாடு (நுழைவை அங்கீகரித்தல்) விதி  3(b)” ஆனது இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 14 (சமத்துவம்), 15 (பாலினப் பாகுபாடு,)  21 (தனிமனித சுதந்திரம்), 25 (ஒரு மதத்தைத் தழுவுவதறக்கும் வழிபடுவதற்குமான உரிமை) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு எதிரானது; இந்திய அரசியல் சட்டப் பிரிவு 26 ன் படி அய்யப்பன்கள் தனி வகையறா கிடையாது மற்றும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்லத் தடை விதிப்பது அவசிய மதச் செயல்பாடு கிடையாது என சட்டத்தின் பார்வையில் நின்று தீர்ப்பு வழங்கினாலும் நீதிபதி சந்திரசூட் மட்டும் தீண்டாமை என்கிற முக்கிய அம்சத்தையும் கணக்கில் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்து மல்கோத்ரா மட்டும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்களை மனுமதிக்காதது சரியே என தீர்ப்பு வழங்கி உள்ளார்.

தீட்டில் இரு வகைகள் உண்டு. ஒன்று சாதியத் தீட்டு. அதாவது பறையனைத் தொட்டுவிட்டால் அது சாதியத் தீட்டு. மற்றொன்று வாழ்வியல் தீட்டு. அதாவது மாதவிடாய்ப் பெண், பிணம் உள்ளிட்டவை இதில் அடங்கும். மாதவிடாயை தீட்டு என்கிறது இந்து மதம் (மனு 3-239, 4-208, 5-66, 5-85) மாதவிடாய்ப் பெண்ணையும் பறையனையும் தெரியாமல் தொட்டுவிட்டால் தீட்டுக் கழிக்க தலை முழுக வேண்டும் என்கிறது இந்து மதம். (மனு 5-85).

தூய்மை-தீட்டு (purity-pollution) என்கிற உயர்மை-தாழ்மை என்கிற இந்து மதக் கோட்பாடுதான் சாதியத் தீட்டையும் வாழ்வியல் தீட்டையும் வரையறுக்கிறது. எங்கெல்லாம் புனிதம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தீட்டும் சேர்ந்தே இயங்குகிறது. அதனால்தான் இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என தீட்டுக் கழிப்பு பூஜை செய்கிறார்கள். பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதைத் தடுப்பதும், மீறி சென்றால் அதற்காக தீட்டுக் கழிப்பு பூஜை நடத்துவதும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 17 க்கு எதிரான தண்டனைக்குரிய குற்றமாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டிய பெண்கள் தாக்குதலுக்கு அஞ்சி தலைமறைவாக உள்ளனர். இந்திய அரசியல் சட்டப் பிரிவு 17 க்கு விரோதமாக தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பன தந்திரி கும்பல் தெனாவாட்டாக சுற்றித் திரிகிறது.

சபரிமலைத் தீர்ப்பு குறித்த விரிவானதொரு கலந்துரையாடல் நிகழ்வு “அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்” சார்பில் 11.01.2019 அன்று மாலை இராணிப்பேட்டையில் நடைபெற்றது. தோழர் மு.இரவி இந்நிகழ்வை தலைமை ஏற்று வழி நடத்தினார். தோழர் அ.கிருபா விக்னேஷ் வரவேற்புரை நிகழ்த்த தோழர் வே.இந்திரன் அறிமுக உரையாற்றினார். தோழர் பொன்.சேகர் சபரிமலைத் தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார். இறுதியில் தோழர் சு.பாலசுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.

அ.கிருபா விக்னேஷ்

மு.இரவி
 பார்வையாளர்கள்

வே.இந்திரன்

பொன்.சேகர்

பார்வையாளர்கள்
தொடர்புடைய பதிவுகள்: