Thursday, September 28, 2023
"இந்தியா முன்னேற வேண்டுமானால் சனாதனத்தை வேரடி மண்ணோடு அழித்து ஒழிக்க வேண்டும்!" - அம்பேத்கர்
Thursday, September 21, 2023
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-13, இறுதிப் பகுதி
இதுவரை சனாதான தருமம் குறித்து மிக சுருக்கமாகவே பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். சனாதன தருமத்தின் மூல நூல் மனுதருமம் என்பதால் பெரும்பாலும் அதிலிருந்தே மேற்கோள்கள் காட்டி உள்ளேன்.
சனாதன தருமத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லை. இதன் விளைவாகத்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் இன்றளவும் கோலோச்சுகிறது. 'இந்து சாதி முறை, தேச வளர்ச்சிக்கு மகப் பெரிய இடையூறாக இருக்கிறது. இந்தியாவில் 75% மக்கள் உரிமை இழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளதால், இந்தியா இறந்துபட்ட நாடு என்ற நிலையை அடையாவிட்டாலும், சிதைந்து வரும் நாடாக ஆயிற்று' என்பார் அம்பேத்கர் (தொகுதி 7).
சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது?
பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பிறகும், ஒரு இந்து தனது வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஜாதகம் கணித்தல், வலைகாப்பு, திருமணச் சடங்குகள், கிரகப்பிரவேசம், பிறப்பு இறப்புச் சடங்குகள், யாகம் வளர்த்தல், திதி கொடுத்தல், புனித யாத்திரை, பரிகாரம் தேடுதல், கோவில்களுக்குச் சென்று வழிபடுதல் உள்ளிட்ட எண்ணற்ற சடங்குகள் சம்பிரதாயங்களுக்குப் பின்னே புரோகிதர் இருக்கிறான். இதன் மூலம் ஒரு பக்கம் நமது வருவாயின் ஒரு பகுதியை புரோகிதன் பறித்துக் கொள்வதோடு சனாதன தருமத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறான்.
சனாதனத்தைப் பலவீனப் படுத்த...
வாழ்வின் சுக-துக்க நிகழ்வுகளுக்கு புரோகிதனை அழைக்காதீர்கள். குடும்பப் பெரியோர்களைக் கொண்டு முடித்துக் கொள்ளுங்கள். அதிலும், சனாதான தருமத்தின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளி மாற்று முறைகளைக் கைக்கொள்ளுங்கள். பயிரிடுதலை இழி தொழில் (மனு 10: 84) என்று வசைபாடி, உழைக்காமல் உண்டு கொடுக்கும் புரோகிதத் தொழிலை விட்டு பார்ப்பனர்கள் வெளியேறட்டும்.
பக்தி உள்ளவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள். சனாதனத்தின் கோட்டைகளாக இருக்கும் கோவில்கள் அர்ச்சகனோடு புதைந்து போகட்டும்.
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்ப-துயரங்களுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க முயற்சிப்போம்.
அகமண முறைதான் சாதி தோன்றுவதற்கும், சாதியக் கட்டமைப்பு நீடிப்பதற்கும் அடிப்படை என்று அம்பேத்கர் அவதானித்தாலும், புறச்சாதியில் கலப்பு மணம் புரிவோர், திருமணத்திற்குப் பிறகு சாதியையும் சேர்த்தே சுமப்பதால், சாதி அவர்களை விட்டு அகலவில்லை. ஆனாலும், காதல் திருமணங்கள், சாதியக் கட்டமைப்பில், விரிசலை ஏற்படுத்துவதால், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
சுயமரியாதையோடு வாழ...
நூறு வயது சத்திரியனைவிட பத்து வயது பிராமணனே மரியாதைக்குரியவன் (மனு 2: 135) என்று சொல்லும் சனாதனத்தை ஏற்று, பார்ப்பனப் பொடியன்களின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆசிபெறும், ஆடு அண்ணாமலையைப் போல சுயமரியாதையிழந்து மானங்கெட்டு வாழாமல், நெஞ்சை நிமிர்த்தி சுயமரியாதை உள்ள மனிதனாய் வாழப் பழகிக் கொள்வோம்.
கல்வியில் முன்னுரிமை
பார்ப்பனரல்லாத பிற சாதியினர், பெண்கள் உள்ளிட்ட தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக அரசுத் துறைகளில், வேலை வாய்ப்புகளைப் பெறும்போதுதான் அங்கே நீடிக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்த முடியும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில்...
சனாதனத்தை மீட்டெடுக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவது உடனடி அவசரக் கடமையாக என்பதால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வது சனாதானத்திற்குக் கொடுக்கும் ஒரு பெரிய அடியாக இருக்கும்.
மனமாற்றமா? போராட்டமா?
மக்களின் அன்றாட வாழ்வில் சனாதனக் கருத்துக்களைப் புகுத்தி, அவர்களை இந்து என்ற சட்டகத்திற்குள் அடைத்து, இப்படித்தான் ஒரு இந்து வாழ வேண்டும் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை இந்து மதத்திற்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது சனாதனம்.
இந்து சமூகத்தில் நிலவும், சாதியக் கட்டமைப்பே, மன்னராட்சி-நிலவுடமை காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சுரண்டல் வடிவமாகும். ஒவ்வொரு பிரிவினருக்குமென ஒரு தொழிலைத் தீர்மானித்து, அவர்கள் அந்தத் தொழிலைத்தான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வரையறுத்தது, குலத்தொழில் முறையிலான ஒருவகை வர்க்கப் பிரிவினையாகும். அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை தொடர்ந்து சுரண்டுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மோடி அரசு இன்று கொண்டு வந்துள்ளது.
தீண்டாமை உள்ளிட்ட இந்து மத நம்பிக்கைகள், கருத்தளவில் நீடிக்கும் வெறும் உளவியல் பிரச்சனையா, மனதளவில் மாற்றிக் கொள்வதற்கு? அது அவனது மத நம்பிக்கையோடு தொடர்புடையது. விதிவிலக்காக, இந்து மத நம்பிக்கைகளை கைவிட்ட சொற்பமான ஒரு சிலர் வேண்டுமானால் மாறக்கூடும். ஒட்டுமொத்த மக்களையும் அப்படி மாற்றிவிட முடியாது.
கருத்துத் தளத்தில், சனாதன தருமம் சமூக கட்டமைப்பின் மேல் தளத்திலும், வர்க்கப் பிரிவினை என்ற அடிப்படையில் சமூகத்தின் அடிக்கட்டுமானத்திலும் நீடிப்பதால், மதத்திற்கு எதிரான சீர்திருத்தப் போராட்டங்கள் மூலமாகவும், சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்கின்ற வர்க்கப் போராட்டங்கள் மூலமாகவும்தான் சனாதனத்தை முற்றிலுமாக வீழ்த்த முடியும்.
சீர்திருத்தமும் வர்க்கப்போராட்டமும்
பெண் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம், சமத்துவபுரங்கள், பார்ப்பனரல்லாதோருக்கான இட ஒதுக்கீடு-குறிப்பாகப் பெண்களுக்கான தனி ஒதுக்கீடு போன்ற சில சீர்திருத்த நடவடிக்கைகள் சனாதனத்தில் பெரும் உடைப்பை ஏற்படுத்துவதால், அவற்றை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அதே வேளையில், உழைப்புச் சுரண்டலிலிருந்து ஒட்டு மொத்த மக்களையும் விடுவித்து சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை உத்தரவாதம் செய்யும் பொதுவுடமைச் சமூகத்தை அமைப்பதற்கான பாதையில் முன்னேற வேண்டும்.
சனாதான தருமம், அதாவது, இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும், சாதி இருக்கும் வரை தீண்டாமை நீடிக்கும். சனாதன தருமம் இல்லாதொழியும் போதுதான் தீண்டாமையும் ஒழியும்.
மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் போது, மதத்தின் தேவையும் முடிவுக்கு வரும். இது, இந்து மதம் உள்ளிட்ட எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆனால் இருக்கின்ற மதங்களிலேயே ஆகக் கொடியது இந்து மதம் என்பதால், அதை எவ்வளவு விரைவில் வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவில் வீழ்த்த வேண்டும்.
சனாதனத்திற்கு எதிரானப் போராட்டம் கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் தங்களுடைய நூல்களையேத் திருத்தத் தொடங்கி விட்டார்கள். நான்காவது வருணத்தவர்கள் சூத்திரர்கள் என்று நேற்று வரை புத்தகம் போட்டவர்கள் இன்று அதை வேளாளர்கள் என்று திருத்திப் போடுகிறார்கள்.
வருணப் பிரிவுகள், ஒருவரின் பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதல்ல; மாறாக, அது அவர்களின் செயலால், குணத்தால் தீர்மானிக்கப்படுவது என்று கதை அளந்து கொண்டிருக்கிறார்கள் சனாதனிகள். "வருணங்களை ஒருவரின் குணத்தைக் கொண்டு தீர்மானித்தால், கடைசியில் வருண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வருண ஏற்பாடு என்பது குலைந்து போய்விடும். ஆகவே, செயலினால் மட்டும் வருண அமைப்பைத் தீர்மானிப்பது சரியல்ல" (ஸ்ரீமத் பகவத் கீதா, பக்கம்: 274, நாக்பூர் வெளியீடு) என்று வெளிப்படையாகவே தெளிவுபட்டுவிட்டது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம்.
கீதையையே திருத்தி எழுதுபவர்கள், சனாதனத்தின் இழிவுகளை மூடி மறைக்க நாளை எதையும் செய்யத் துணிவார்கள்!
அவர்கள் சொல்வது போல, சனாதனம் அழிவில்லாதது; என்றும் நிலைத்திருப்தல்ல. மாறாக, உடன் கட்டை ஏறுதலுக்குத் தடை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு உள்ளிட்ட எண்ணற்ற சனாதனப் பழக்க வழக்கங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சனாதனத்தின் ஒரு பகுதி வீழ்த்தப்பட்டுள்ளது.
Hence, sanatan is not eternal. It should be eradicated as soon as possible.
சனாதனம் குறித்த விரிவான விவாதத்திற்கு வித்திட்ட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!
வணக்கம்!
ஊரான்
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-12
பிராமணர்களோடுதான் நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். (மனு 8: 1). இன்று நீதித்துறையே பிராமணர்கள் கையில் இருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை?
வருணாசிரம தருமப்படிதான் விசாரணை நடத்த வேண்டும் (மனு 8: 24); சாஸ்திரப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும் (மனு 8: 3) என்கிறது சனாதனம்.
சபரிமலை வழக்கில் ஒரு பார்ப்பனப் பெண் நீதிபதியினுடைய தீர்ப்பும், அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பார்ப்பன நீதிபதியின் தீர்ப்பும் சாஸ்திரப்படிதானே வழங்கப்பட்டுள்ளது?
சூத்திரனும் நாத்திகனும் நீதிபதியாகக் கூடாது. அப்படி அவர்கள் நீதிபதிகளாகிவிட்டால் சேற்றில் சிக்கிய பசு போல அந்த நாடும் சிக்கி சீரழியும் (மனு 8: 20, 21). அதனால்தான் நீதித் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லையோ?
விசாரணையின் போது குற்றம் புரிந்தவன், அவன் பிராமணனாய் இருந்தால் 'உண்மையைச் சொல்' என்றும், வைசியனாய் இருந்தால் 'பொய் சொல்லாதே, சொத்து பூரா அழிஞ்சு போயிடும்' என்றும், சூத்திரனாய் இருந்தால் 'பொய் சொன்ன, கொன்னுடுவேன் படவா' என்றும் விசாரிக்க வேண்டும் (மனு 8: 88).
இன்றும்கூட காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில், ஆர் பி வி எஸ் மணியனுக்கு, பத்ரி சேஷாத்திரிக்கு, எஸ் வி சேகருக்கு ஒரு அணுகுமுறையும், சாதாரண சூத்திர உழைப்பாளிக்கு ஒரு அணுகுமுறையும் இருக்கத்தானே செய்கிறது.
பிராமணனைக் காப்பாற்ற பொய் சாட்சி சொல்லலாம் என்கிறது சனாதனம் (மனு 8-112).
நமது தலைவர்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, வழக்கு என்று வந்துவிட்டால், தாங்கள் அவ்வாறு எதையும் பேசவில்லை என்று அவர்களே, அவர்களுக்கான பொய்சாட்சியாக பார்ப்பனர்கள் மாறிவிடுகிறார்களே? அங்கே நிற்கிறது சனாதனம்.
சூத்திரன் ஒரு பிராமணனைக் கொடுமைப் படுத்தினால், அவன் கையை வெட்டச் சொல்கிறது சனாதனம் (மனு 8: 270). மேலும், பெயரையும் சாதியையும் சொல்லி இழிவாகத் திட்டினால் பத்து அங்குல கம்பியைக் காய்ச்சி அவன் வாயில் சொருக வேண்டும் என்கிறது (மனு 8: 271).
உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் சன்மானம் தருவேன் என்று ஒரு சாமியார் பேசுவதற்கும், சனாதனத்தை எதிர்த்தால் நாக்கைப் பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என கஜேந்திரசிங் செகாவத் என்ற மத்திய அமைச்சர் பேசுவதற்கும் சனாதனம்தானே வழிகாட்டுகிறது.
பிராமணனுக்கு ஒரு போதும் கொலை தண்டனை விதிக்கக்கூடாது; தலையை மொட்டையடித்தாலே அது கொலைத் தண்டனைக்கு ஒப்பானது. ஆனால், மற்றவர்களுக்கு கொலை தண்டனை உண்டு. (மனு 8: 379).
பிராமணன் எந்தப் பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (மனு 8: 380).
சங்கரராமன் கொலையும், காஞ்சி நடுவாளும், பெங்களூருவும் நினைவுக்கு வருகிறதா? என்ன செய்ய சாஸ்திரப்படிதானே நீதி வழங்க முடியும்?
இப்படி நீதி பரிபாலன முறையில், மாறுபட்ட விசாரணை முறைகளும், வேறுபட்ட தண்டனைகளும் வகுக்கப்பட்டிருக்கிறது. இன்றளவும், இதுதான் நடைமுறையாகவும் இருந்து வருகிறது.
தொழிலாளர்களைச் சுரண்டுவதில் சனாதனம்
பிராமணனுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவன் சூத்திரன் என்கிற தொழிலாளி. எனவே, ஒரு சூத்திரனுக்கு சம்பளம் கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ ஒரு பிராமணன் சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம் என்கிறது சனாதனம் (மனு 8: 413).
சந்திரயான்-3 க்காக உழைத்த தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருப்பதும் சனாதன ஆட்சியால்தானோ?
போரில் அடிமையாகப் பிடிபட்டவன் (1), பக்தியினால் வேலை செய்பவன் (2), வேசியின் மகன் அதாவது சூத்திரன் மகன் (3), தானமாகக் கொடுக்கப்பட்டவன் (4), விலைக்கு வாங்கப்பட்டவன் (5), குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்பவன் (6), தான் செய்த குற்றத்திற்கான தண்டனையைக் கழிக்க வேலை செய்பவன் (7) என தொழிலாளர்களை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கிறது சனாதனம் (மனு 8: 415). பெரிய அளவில் ஊதியம் தராமல் இவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான் இது.
அதேபோன்றதொரு சுரண்டல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், இதுவரைத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டத் தொகுப்புகளாகச் சுருக்கி, தொழிலாளர்களை ஏழு வகையாகப் பிரித்து, (1.நிரந்தரத் தொழிலாளர்கள், 2.NEEM தொழிலாளர்கள், 3.பயிற்சியாளர்கள் (apprentice), 4.தொழில் பழகுனர்கள் (probationers), 5.FTE தொழிலாளர்கள், 6.ஒப்பந்தத் தொழிலாளர்கள், 7.பதிலிகள்), இதில் பெரும்பாலானோருக்கு சொற்ப கூலியைக் கொடுத்து அதானி அம்பானி போன்ற பார்ப்பன பனியா முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது இன்றைய மோடி தலைமையிலான சனாதன ஆட்சி.
*****
சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது, அதை எப்படி வீழ்த்தப் போகிறோம் என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
Friday, September 15, 2023
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-7
நான்கு வருணங்களுக்கிடையில் ஏற்பட்ட கலப்பினால் உருவான சங்கரா சாதிகளைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் பறையர் மற்றும் சக்கிலியர் எனும் அருந்ததியர் உள்ளிட்ட சாதிகளைத் தீண்டத்தகாத சாதிகள் என முத்திரை குத்தி, பிற சாதியினர் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறது சனாதனம்.
சண்டாளன் ஊருக்கு வெளியே வாழ வேண்டும் என்பதாலும், (மனு 10: 50) சேரிக்காற்று ஊருக்குள் வரக்கூடாது என்பதாலும் பெரும்பாலும் சேரிகள் ஊருக்கு கிழக்கே அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு பீடை திசை என்பதால் சில இடங்களில் சேரிகள் ஊருக்குத் தெற்கேயும் உள்ளன. சேரியின் தண்ணீர் ஊருக்குள் வரக்கூடாது என்பதால் மேடான இடங்களில் ஊரும், பள்ளமான இடங்களில் சேரியும் அமைந்திருப்பதைப் பல இடங்களில் காண முடியும்.
'பைபாஸ் ரோடு'
இவை மட்டுமல்ல, ஊர்க்காரர்கள் அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் சேரிக்குள் நுழைந்து சென்றால் தீட்டுப் பட்டு விடுவார்கள் என்பதால், உயர்சாதியினரின் நலனுக்காக, ஒவ்வொரு சேரியிலும் புறவழிச்சாலை அமைத்தவர்கள் அன்றைய பார்ப்பனர்கள். சரக்குகளை எந்தவித இடையூறும் இன்றி விரைந்து எடுத்துச் செல்ல, பார்ப்பன-பனியா-அதானி-அம்பானிகளின் நலனுக்காக இன்று புறவழிச்சாலைகள் (பைபாஸ் ரோடு) அமைக்கின்றனர்.
இதுதான், இன்றைய இந்திய ஊர்-சேரிகளின் வரைபடம். இதன் மீதுதான் தீண்டாமை எனும் கற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. டெட்டனேட்டர்களையும், புல்டோசர்களையும் கொண்டு இந்த கற்கோட்டையை சிதைக்காமல் தீண்டாமை ஒழிப்பில் ஒரு அடிகூட முன்னேற முடியாது.
பறையர்களின் ஆடை அலங்காரம்
பறையர்கள் எப்போதும் தொழிலுக்காக அலைந்து திரிவதோடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்கக் கூடாது, நாயை மட்டும் வளர்க்கலாம், பிணத்தின் துணியை உடுத்த வேண்டும், உடைந்த சட்டியில்தான் உணவு உண்ண வேண்டும், தங்க ஆபரணங்களை அணியக்கூடாது, இரும்பு பித்தளையிலான ஆபரணங்களை மட்டும் அணிய வேண்டும் என்கிறது சனாதன தருமம். (மனு 10: 51, 52, 54)
பறையர்கள் என்னதான் 'டிப்டாப்பாக' கோட்டு-சூட்டு போட்டு, பட்டாடை உடுத்தினாலும், இவர்கள் இழிந்த சாதியினர் என்ற பட்டம் மட்டும் மறைந்து விடாது. (மனு 10-57). இன்றைய சாதி இந்துக்களின் மன ஓட்டமும் இதுதானே!
முன்னால் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் ஆர் பி வி எஸ் மணியன் என்கிற ஒரு சனாதனி, அம்பேத்கரை மிகவும் தரக்குறைவாகப் பேசியதற்காக அண்மையில் கைது செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
தனிக்குவளை
ஒரு பாத்திரத்தை இவர்கள் தொட்டுவிட்டால், டெட்டால் போட்டு சுத்தம் செய்தாலும் அது பரிசுத்தமாகாது. இதனால்தானே தேநீர்கடைகளிலும் உயர்சாதியினரின் வீடுகளிலும் இன்றளவும் தனிக் குவளை-டீ கிளாஸ்-சொம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எச்சில் அனைவருக்குமான வாழ்வியல் தீட்டின் ஒரு அம்சம் என்றாலும், பறையன் எச்சில் மட்டும் பாலிடால் கலந்தது போல! மேலும், இவர்கள் உலோகப் பாத்திரம் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. டம்ளர்களைக் கழுவுனால்கூட தீட்டு போகாது என்பவனை காராகிரகத்தில் அல்லவா அடைக்க வேண்டும்! (மனு 10: 51)
இவர்களுக்கு நேரே அந்நம் போடக்கூடாது, வேலைக்காரரை விட்டு உடைந்த பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். (மனு 10-54).
முன்பெல்லாம் நெல் அளக்கப் பயன்படுத்தப்படும் படியில்தான் தண்ணீரோ, கஞ்சியோ, கூழோ ஊற்றிக் கொடுப்பார்கள். படியும் இல்லை என்றால் இரண்டு கைகளையும் விரிக்கச் சொல்லி ஊற்றுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது நேரில் கண்ட காட்சிகள் இவை.
இது டிஜிட்டல் யுகம் என்பதால், இன்று பறையர்கள் பயன்பாட்டிற்கென்றே வீட்டுக்கு வெளியே திண்ணையில் ஒரு ஓரத்திலோ அல்லது மரக்கிளையிலோ, எவர்சில்வர் சொம்பு ஒன்றை நிரந்தரமாக வைத்துள்ளனர். சொம்பைப் பயன்படுத்திய பறையரே அதைக் கழுவி அடுத்த முறை பயன்பாட்டிற்காக அவ்விடத்திலேயே வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நான் சமீபத்தில் கண்ட காட்சி இது. இது தீண்டாமை என்று தெரிந்தாலும், சொந்தக் காலில் நிற்க முடியாமல் அடுத்தவரை அண்டி வாழும் நிலை மாறாமல் தீண்டாமையும் வேறு வேறு வடிவங்களில் தொடரவே செய்யும்.
இது சட்டப்படி தீண்டாமைக் குற்றம் என்று உயர்சாதியினருக்குத் தெரிந்தாலும், இதுதான் இந்துக்களின் வாழ்வியல் முறை என்று சனாதனம் அவர்களுக்குப் போதித்திருக்கிறது.
அன்றே ஆதார்
கிராமத்திலும் ஊரிலும், ஏதாவது பொருளை விற்கவோ வாங்கவோ வேண்டும் என்றால் அரசன் கொடுத்த அடையாள அட்டையோடுதான் இவர்கள் ஊருக்குள் செல்ல வேண்டும். பார்த்தீர்களா! ஆதார் அட்டையை சனாதனவாதிகள் அன்றைக்கே கொண்டு வந்துள்ளனர். (மனு 10-55).
பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒருவன் தாழ்த்தப்பட்டவனா என்பதை அறிய அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கருப்புக் கயறு அணிய வேண்டும். (பக்கம் -77 அம்பேத்கர் தொகுப்பு: 25)
நிழல் பட்டால் தீட்டு
இவர்களின் நிழல் பட்டால் ஊர்க்காரர்கள் தீட்டுபட்டுவிடுவார்கள் என்பதால், ஊரிலும் பட்டணங்களிலும் இரவில் இவர்கள் சஞ்சரிக்கக்கூடாது. (மனு 10-54).
தீண்டத்தகாதவர்களின் நீண்ட நிழல்கள் ஒரு பிராமணன் மீது பட்டுவிட்டால் அவர் குளித்து தனது தீட்டைப் போக்கவேண்டியிருந்ததால், மாராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டத்தகாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும், அவர்களின் எச்சிலை ஒரு இந்து மிதித்து விட்டால் அவன் தீட்டுக்குள்ளாகக்கூடும் என்பதால், எச்சிலைத் துப்புவதற்காக தீண்டத்தகாதவர்கள் கழுத்தில் ஒரு பானையைத் கட்டிச் செல்ல வேண்டும். தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டும். (பக்கம் 76, 77: அம்பேத்கர் தொகுப்பு: 25).
தாங்கள் வாழும் பகுதி மட்டும்தான் ஊர் என உயர் சாதிக்காரர்கள் கருதுகிறார்கள். இதில் சேரி மக்களை அவர்கள் கணக்கில் கொள்வது கிடையாது. அதுபோல சேரி மக்களுக்கான ஊர் என்றால் அது தீண்டத்தகாத மக்கள் வாழும் பகுதி மட்டும்தான் என்று தீண்டத்தகாதவர்கள் கருதுகிறார்கள். இதில் உயர் சாதியினர் வாழும் பகுதியை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை.
சாதியத் தீட்டு குறித்து மேலும் பார்க்கலாம்.
தொடரும்
ஊரான்