Showing posts with label labour. Show all posts
Showing posts with label labour. Show all posts

Thursday, September 21, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-12

நீதித்துறையில் சனாதனம்

பிராமணர்களோடுதான் நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். (மனு 8: 1). இன்று நீதித்துறையே  பிராமணர்கள் கையில் இருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை?

வருணாசிரம தருமப்படிதான் விசாரணை நடத்த வேண்டும் (மனு 8: 24); சாஸ்திரப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும் (மனு 8: 3) என்கிறது சனாதனம்.

சபரிமலை வழக்கில் ஒரு பார்ப்பனப் பெண் நீதிபதியினுடைய தீர்ப்பும், அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பார்ப்பன நீதிபதியின் தீர்ப்பும் சாஸ்திரப்படிதானே  வழங்கப்பட்டுள்ளது?

சூத்திரனும் நாத்திகனும் நீதிபதியாகக் கூடாது. அப்படி அவர்கள் நீதிபதிகளாகிவிட்டால் சேற்றில் சிக்கிய பசு போல அந்த நாடும் சிக்கி சீரழியும் (மனு 8: 20, 21). அதனால்தான் நீதித் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லையோ?

விசாரணையின் போது குற்றம் புரிந்தவன், அவன் பிராமணனாய் இருந்தால் 'உண்மையைச் சொல்' என்றும், வைசியனாய் இருந்தால் 'பொய் சொல்லாதே, சொத்து பூரா அழிஞ்சு போயிடும்' என்றும், சூத்திரனாய் இருந்தால் 'பொய் சொன்ன, கொன்னுடுவேன் படவா' என்றும் விசாரிக்க வேண்டும் (மனு 8: 88).

இன்றும்கூட காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில், ஆர் பி வி எஸ் மணியனுக்கு, பத்ரி சேஷாத்திரிக்கு, எஸ் வி சேகருக்கு ஒரு அணுகுமுறையும், சாதாரண சூத்திர உழைப்பாளிக்கு ஒரு அணுகுமுறையும் இருக்கத்தானே செய்கிறது.

பிராமணனைக் காப்பாற்ற பொய் சாட்சி சொல்லலாம் என்கிறது சனாதனம் (மனு 8-112). 

நமது தலைவர்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, வழக்கு என்று வந்துவிட்டால், தாங்கள் அவ்வாறு எதையும் பேசவில்லை என்று அவர்களே, அவர்களுக்கான பொய்சாட்சியாக பார்ப்பனர்கள் மாறிவிடுகிறார்களே? அங்கே நிற்கிறது சனாதனம்.

சூத்திரன் ஒரு பிராமணனைக் கொடுமைப் படுத்தினால், அவன் கையை வெட்டச் சொல்கிறது சனாதனம் (மனு 8: 270). மேலும், பெயரையும் சாதியையும் சொல்லி இழிவாகத் திட்டினால் பத்து அங்குல கம்பியைக் காய்ச்சி அவன் வாயில் சொருக வேண்டும் என்கிறது (மனு 8: 271).

உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் சன்மானம் தருவேன் என்று ஒரு சாமியார் பேசுவதற்கும்,  சனாதனத்தை எதிர்த்தால் நாக்கைப் பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என கஜேந்திரசிங் செகாவத் என்ற மத்திய அமைச்சர் பேசுவதற்கும் சனாதனம்தானே வழிகாட்டுகிறது.

பிராமணனுக்கு ஒரு போதும் கொலை தண்டனை விதிக்கக்கூடாது; தலையை மொட்டையடித்தாலே அது கொலைத் தண்டனைக்கு ஒப்பானது. ஆனால், மற்றவர்களுக்கு கொலை தண்டனை உண்டு. (மனு 8: 379). 

பிராமணன் எந்தப் பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (மனு 8: 380).

சங்கரராமன் கொலையும், காஞ்சி நடுவாளும், பெங்களூருவும் நினைவுக்கு வருகிறதா? என்ன செய்ய சாஸ்திரப்படிதானே நீதி வழங்க முடியும்?

இப்படி நீதி பரிபாலன முறையில், மாறுபட்ட விசாரணை முறைகளும், வேறுபட்ட தண்டனைகளும் வகுக்கப்பட்டிருக்கிறது. இன்றளவும், இதுதான் நடைமுறையாகவும் இருந்து வருகிறது.

தொழிலாளர்களைச் சுரண்டுவதில் சனாதனம்

பிராமணனுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவன் சூத்திரன் என்கிற தொழிலாளி. எனவே, ஒரு சூத்திரனுக்கு சம்பளம் கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ ஒரு பிராமணன் சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம் என்கிறது சனாதனம் (மனு 8: 413).

சந்திரயான்-3 க்காக உழைத்த தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருப்பதும் சனாதன ஆட்சியால்தானோ?

போரில் அடிமையாகப் பிடிபட்டவன் (1), பக்தியினால் வேலை செய்பவன் (2), வேசியின் மகன் அதாவது சூத்திரன் மகன் (3), தானமாகக் கொடுக்கப்பட்டவன் (4), விலைக்கு வாங்கப்பட்டவன் (5), குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்பவன் (6),  தான் செய்த குற்றத்திற்கான தண்டனையைக் கழிக்க வேலை செய்பவன் (7) என தொழிலாளர்களை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கிறது சனாதனம் (மனு  8: 415). பெரிய அளவில் ஊதியம் தராமல் இவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான் இது.

அதேபோன்றதொரு சுரண்டல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், இதுவரைத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டத் தொகுப்புகளாகச் சுருக்கி, தொழிலாளர்களை ஏழு வகையாகப் பிரித்து, (1.நிரந்தரத் தொழிலாளர்கள், 2.NEEM தொழிலாளர்கள், 3.பயிற்சியாளர்கள் (apprentice), 4.தொழில் பழகுனர்கள் (probationers), 5.FTE தொழிலாளர்கள், 6.ஒப்பந்தத் தொழிலாளர்கள், 7.பதிலிகள்), இதில் பெரும்பாலானோருக்கு சொற்ப கூலியைக் கொடுத்து அதானி அம்பானி போன்ற பார்ப்பன பனியா முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது இன்றைய மோடி தலைமையிலான சனாதன ஆட்சி.

*****

சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது, அதை எப்படி வீழ்த்தப் போகிறோம் என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, April 6, 2021

பறிபோகும் தொழிற்சங்க-கூட்டுபேர உரிமைகள்! தொடர்-5

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஏழு தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தொழிற்சங்கத்தை அமைக்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களில் குறைந்தது 10% பேர் அல்லது 100 பேர்-இதில் எது குறைவோ அந்த அளவுக்கு-அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே அந்தத் தொழிற்சங்கம் பதிவு செய்யப்படும். எடுத்துக்காட்டாக 500 தொழிலாளர்கள் எனில் 50 பேரும் அல்லது 1000 தொழிலாளர்கள் எனில் 100 பேரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒருவேளை தொடக்கத்தில் மேற்கண்ட நிபந்தனைகளின்படி ஒரு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அச்சங்கம் தொடர்ந்து அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே தொழிற்சங்கப் பதிவை தக்க வைத்துக் கொள்ள முடியும். (விதி 6, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 

ஒரு நிறுவனத்தில் ஒரு சங்கம் மட்டுமே இருந்தால், அந்தச் சங்கம் கூட்டுபேர உரிமை பெற முடியும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்குமேயானால், எந்தச் சங்கம் 51 சதவீதத்திற்கு மேல் தொழிலாளர்களின் ஆதரவு பெற்றுள்ளதோ, அச்சங்கம் மட்டுமே நிர்வாகத்துடன் கூட்டுபேர உரிமையில் பங்கெடுக்க முடியும். எந்த ஒரு சங்கமும் 51 சதவீதத்திற்கு மேல் ஆதரவு பெறவில்லை என்றால் 20 சதவீத ஆதரவு பெற்ற தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் கூட்டபேர கவுன்சில் ஒன்றை நிர்வாகமே ஏற்படுத்தும். (விதி 14, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).


அரசியல் சட்டம் வழங்கியுள்ள சங்கமாகச் சேரும் உரிமையை நேரடியாக பறிப்பதோடு, அங்கீகாரம் பெற்ற ஒரு சங்கம் நிர்வாகத்தின் எடுபிடிச் சங்கமாக செயல்படும் சூழலில், புதியதோர் மாற்றுச் சங்கம் அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அடைத்து விடுகின்றன மேற்கண்ட பிரிவுகள்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொழிலாளர்களைப் பழிவாங்குவதில் எதேச்சதிகாரமாக செயல்படும் நிர்வாகங்களை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களுக்கான நிலை ஆணைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். 100 பேருக்கு மேல் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு நிலை ஆணைகள் சட்டம் பொருந்தும் என்றிருந்த பழைய சட்டத்தைக் குப்பைத் தோட்டியில் வீசிவிட்டு இனி 300 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே நிலை ஆணைகள் பொருந்தும் என சட்டத்தைத் திருத்தி உள்ளது மோடி அரசு. (விதி 28-29, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).

 

'நீம்' தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு ஏற்ப சட்டம் திருத்தப்பட்டுள்ளதால் இனி நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 300 பேருக்கும் குறைவாகவே வைத்துக் கொள்வார்கள். அனைத்து வகையான தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அந்த நிறுவனத்துக்கு நிலை ஆணைகள் தேவையில்லை என்கிறார் மோடி. இதன் மூலம் முதலாளிளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு இனி அளவே இருக்காது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்  நிலை ஆணைகள் சட்டத்தின் மூலம் நிவாரணம் கோருவதற்கான அரைகுறை உரிமைகளையும் பறித்துக் கொண்டுவிட்டது பாஜக அரசு.


மாதிரி நிலை ஆணைகள் ( Model Standing Orders)


300 பேருக்கு மேல் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு மாதிரி நிலை ஆணைகள் (Model Standing Orders) ஒன்றை வெளியிட்டுள்ளது நடுவண் அரசு. இதன்படி நிரந்தரத் தொழிலாளர்கள் (Permanent), தற்காலிகத் தொழிலாளர்கள் (Temporary), பயிற்சியாளர்கள் (Apprentices), தகுதிகாண் தொழிலாளர்கள் (Probationers), பதிலிகள் (Badlies) மற்றும் குறிப்பிட்ட கால வேலை வாய்ப்புத் தொழிலாளர்கள் (Fixed Term Employment) என தொழிலாளர்களை வகைப்படுத்துகிறது இந்தச் சட்டம். (விதி-3: மாதிரி நிலை ஆணைகள்)


நான்கு சட்டத் தொகுப்புகளும் பயிற்சியாளர்களுக்குப் (Apprentices) பொருந்தாது என ஏற்கனவே சொல்லிவிட்டு அவர்களை மாதிரி நிலை ஆணைகள் பட்டியலில் சேர்த்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.


படித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டால் வாழ்க்கையில் ‘செட்டில்’ஆகி விடலாம் என இனி யாரும் கனவுகூடக் காண முடியாது. பொறியியல் பட்டதாரியானாலும், முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும் இனி குறிப்பிட்ட காலப் பணிக்கான வேலைவாய்ப்பு மட்டுமே கிடைக்கும். ஆறு மாதமோ, ஓர் ஆண்டோ அல்லது மூன்று ஆண்டுகளோ என கால அளவு நிர்ணயிக்கப்பட்டால், கால இலக்கு முடிந்த பிறகு எந்தவித அறிவிப்பும் இன்றி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஏற்கனவே ‘பெல்’ போன்ற மத்திய அரசு நிறுவனங்களே இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன. குறிப்பிட்ட கால வேலை முடிந்த பிறகு வேறு ஒரு வேலை தேடி ஓட வேண்டும். ஒருவேளை உணவுக்காக பிச்சைக்காரர்கள் தட்டேந்தி வீடு வீடாக ஓடுவதைப் போல படித்தவர்கள் இனி வேலை தேடி ஓட வேண்டும். மாற்று வேலை கிடைக்க ஆறு மாதமோ ஓர் ஆண்டோ ஆகலாம். அதுவரை உயிரோடு இருந்தால் அடுத்த வேலைக்குப் போகலாம். இல்லையேல் எமதர்மன் உங்களை எடுத்துக் கொள்வான்.  


குறிப்பிட்ட கால வேலை வாய்ப்பு என்பது மிகவும் ஆபத்தானது. மலிவான தொழிலாளர் சந்தைக்கு வழிவகுப்பதோடு வாழ்க்கை நிலையற்றதாக மாற்றப்படும். எங்கும் அமைதியின்மை ஏற்பட்டு சமூகத்தில் எப்பொழுதும் பதற்றமே நிலவும்.


யுத்தத்தில் பிடிபட்டவன், பக்தியினால் வேலை செய்பவன், தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், தானமாகக் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்பவன் மற்றும் குற்றத்திற்காக வேலை செய்பவன். இவர்கள் மனு வகைப்படுத்தும் ஏழு வகைத் தொழிலாளர்கள் (மனு:8-415). மனு காட்டிய வழியில்தான் இன்றைய மனுவாதிகளும் தொழிலாளர் வர்க்கத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர்.


அனைத்துவிதமான உடல்தகுதி சோதனைக்குப் பிறகுதான் ஒருவருக்கு வேலையே தருகிறார்கள். பணிச் சூழலால் ஒரு தொழிலாளிக்கு உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்பட்டால் அவற்றைக் கண்டறிந்து தொழிலாளியை சரி செய்வதோ அல்லது உடல் தகுதிக்கு ஏற்ற மாற்று வேலையை தருவதோ நிர்வாகத்தின் கடமை. இதுதான் இதுவரை உள்ள நடைமுறை. ஆனால் இனி எந்த நேரத்திலும் தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என நிலை ஆணைகளை வகுத்திருக்கிறார்கள் (விதி-19: மாதிரி நிலை ஆணைகள்). தொழிலாளர்களின் உழைப்பைச் சக்கையாகப் பிழிந்துவிட்டு நிறுவனத்திற்காக உழைத்தத் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் உடல் தகுதியைக் காரணம் காட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முதலாளிகளுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளார் மோடி.  


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்


மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4