Thursday, September 14, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-6

தீண்டாமை

தீண்டாமை என்பது, காலம் காலமாக இந்து மதத்தில் இருந்து வரும் ஒரு சமூக மரபு ஆகும். இந்த மரபுக்கு அடிப்படையாக இருப்பது மனுதரும சாஸ்திரம். சனாதன தருமத்தின் அடிப்படையான கூறுகளில் முதலிடத்தில் இருப்பது தீண்டாமை என்றால் அது மிகையல்ல.

தீண்டாமையை முதலில் அறிமுகப்படுத்தியது பார்ப்பனர்கள்தான் என்றாலும், சாதியப் படிநிலையில் அது மேலிருந்து கீழ்நோக்கிப் பரவி உள்ளது. தீண்டாமையைக் கடைபிடிப்பதை ஒரு சமூகக் கர்வமாக ஒரு இந்து பார்க்கிறான். 

எங்கே புனிதம் (purity) பேசப்படுகிறதோ, அங்கே தீண்டாமை (pollution) கடைபிடிக்கப்படுகிறது என்று பொருள். மாசு, அழுக்கு, களங்கம், அசுத்தம், கேடு, பாவம், தீட்டு இவை எல்லாவற்றின் பொருள் ஒன்றுதான். இவற்றின் எதிர்ப்பதம்தான் புனிதம்.

சனாதன தருமத்தின்படி ஒரு இந்து தனது அன்றாட வாழ்க்கையில், வாழ்வியல் தீட்டு, சாதியத் தீட்டு என இருவகைத் தீட்டுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

தீட்டுக் கழிப்புப் பரிகாரம்

தீட்டுக்கு ஆட்பட்ட ஒரு நபர் அல்லது ஒரு இடம்,  தலை முழுகுதல், தண்ணீர் தெளித்தல், சூரியனைப் பார்த்தல், கோமியம் தெளித்தல் / கோமியம் குடித்தல், சாணம் / மெழுகுதல், பசுவைத் தொடுதல் / தீட்டுப் பட்ட இடத்திற்கு ஓட்டிச் செல்லுதல், மந்திரம் ஓதுதல், பஞ்சகவ்யம் குடித்தல்  போன்ற பரிகாரங்கள் மூலம் தீட்டைப் போக்கிக் கொள்ள முடியும்.

அ).வாழ்வியல் தீட்டு

பெண்களின் பூப்பு-மாதவிலக்கு, கர்ப்பம், பிறப்புஇறப்பு, பிணம், முடிவெட்டிக் கொள்ளுதல், உடலுறவு ஆகியவை வாழ்வியல் தீட்டு என அழைக்கப்படுகிறது. இதில் தனிமனிதத் தூய்மை அடிப்படையானதாகும். எச்சில், வியர்வை, மலம், சிறுநீர், உடல் அழுக்கு, விந்து இவை எல்லாம்கூட தீட்டுக்குரியவை. இத்தகையத் தீட்டுகள் தற்காலிகமானவை, பரிகாரம் உடையவை என்பதால் தீட்டுக்கு உள்ளான அனைவருமே தீட்டிலிருந்து விடுபட்டு விடமுடியும்; அதாவது புனிதமடைந்து விடமுடியும்.

1.பெண்களின் பூப்பு-மாதவிலக்கு,

'மாதவிடாயான முதல் நாலு நாள் பெரியோர்களாலே நிந்திக்கப்பட்டிருக்கின்றது' (மனு 3:46),

'மாதவிடாயானவளுடன் பேசப்படாது' (மனு 4-57), 

மாதவிடாயானவளுக்குப் போட்டு மீந்த உணவை, (மனு 4: 208),  

பிரசவித்தவள் செய்த உணவை (மனு 4-212) 

உண்ணக் கூடாது என பெண்கள் பூப்பெய்வதையும், அதைத் தொடர்ந்து ஏற்படும் ஒரு இயற்கையான மாதவிலக்கு நிகழ்வையும், பிரசவிப்பதையும் தீட்டாக்கி, அவர்களை ஒதுக்கி வைக்கிறது சனாதனம். 

அதனால்தான், மாதவிடாய் காலத்தில் பெண்களை தனி அறையில் அடைத்து வைப்பது சமீபகாலம் வரை தமிழ்நாட்டில் நிலவியது. ஆனால், வட இந்தியாவிலும் நேபாளத்திலும் இன்றும் இந்த வழக்கம் தொடர்கிறது.

மாதவிடாய் தீட்டு என்பதனால்தான் சபரிமலை ஐயப்பனை வழிபடும் உரிமையும், மாதவிடாய்க்கு ஆட்படும் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.  

2.வளைகாப்பு

ஒரு தாய் கருவுற்றாலே அதை தோஷம் அல்லது தீட்டு என்கிறது சனாதனம்.

'கர்ப்பகால மந்திரத்தாலும், சீமந்த ஓமத்தாலும், மாதாவின் கர்ப்பத்தில் வசித்த தோஷம் நீக்கப்படுகிறது' என்கிறது சனாதனம் (மனு 2-27).

இது ஏதோ வளையல் போடுற விழா என நினைத்துக் கொண்டு, அநேகமாக, எல்லோரும் இந்தத் தீட்டுக் கழிப்பு நிகழ்வை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆணும் கர்ப்பத்திற்குக் காரணம் என்றாலும், பெண்ணை மட்டும் தீட்டுக்காரியாக்கி அவளை இழிவுபடுத்துவதுதானே வளைகாப்பு என்கிற சனாதன நிகழ்வு.


3.பிறப்பு

'பிறப்பில் தாய் தந்தையருக்கு மாத்திரம் தொடக்கூடாத தீட்டு, அதிலும் தாய்க்கு மாத்திரம் அதிகம், தகப்பனுக்கு பதினோராநாள் ஸ்நானத்தோடே நீங்கி விடுகிறது (மனு 5-62).

'பிரசவித்தவளைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாகிறான் (மனு 5-85)

மருத்துவமனைகளில், சனாதன தருமத்தைக் கடைபிடித்தால் சேயை வீட்டுக்கும், தாயை சுடுகாட்டுக்கும்தான் அனுப்ப  வேண்டும்.

4.இறப்பு

'பிணம், பிணத்தைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாகிறான் (மனு 5-85)

கர்பத்திலேயே இறக்கும் சிசு மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் இறந்து போனால் யார் யாருக்கு எத்தனை நாள் தீட்டு என்பதையும், தீட்டு எப்படி, எப்போது கழியும் என்பதையும் வரையறுக்கிறது சனாதனம் (மனு 5: 58-109).

இன்றளவும் ஒவ்வொரு இந்துவும், மனு சொன்னதைத்தான் தங்களது வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றனர். ஆனால்,  பார்ப்பனர்கள் தங்களுக்கு 10 நாட்கள் மட்டுமே தீட்டு என சலுகை எடுத்துக் கொண்டு, சத்திரியனுக்கு 12 நாட்களும், வைசியனுக்கு 15 நாட்களும், சூத்திரனுக்கு 30 நாட்களும் தீட்டு என, தீட்டுக் காலத்தை நீட்டித்து அவர்களை முடக்குகிறது சனாதனம் (மனு 5: 83).

'பங்காளிகள் இறந்து போனாலும், தினந்தோறும் அக்கினிஹோத்திரம் செய்பவனுக்கு ஒரு நாள் அல்லது மூன்று நாளைக்கு மேல் தீட்டில்லை' என பார்ப்பனர்கள் மேலும் சலுகை எடுத்துக் கொள்கின்றனர் (மனு 5: 84).

'சூத்திரன் இறந்து போனால் ஊருக்கு தெற்குப் பக்கத்தாலும், வைசியன் இறந்து போனால் மேற்குப் பக்கத்தாலும், சத்திரியன் இறந்து போனால் வடக்குப் பக்கத்தாலும், பிராமணன் இறந்து போனால் கிழக்குப் பக்கத்தாலும் எடுத்துக் கொண்டு போக வேண்டியது' (மனு 5-92) 

என பிணத்தை எடுத்துச் செல்வதற்கான பாதையை மனு வரையறுத்து விட்டதனால், கிராமங்களில் சுடுகாட்டுப் பாதைக்கான சச்சரவுகளும் மோதல்களும் இன்றளவும் நடந்து வருகின்றன. சுடுகாட்டுப் பாதை சச்சரவுகளுக்கு, சனாதனம்தானே காரணம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

அடுத்து சாதியத் தீட்டு குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

No comments:

Post a Comment