நான்கு வருணங்களுக்கிடையில் ஏற்பட்ட கலப்பினால் உருவான சங்கரா சாதிகளைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் பறையர் மற்றும் சக்கிலியர் எனும் அருந்ததியர் உள்ளிட்ட சாதிகளைத் தீண்டத்தகாத சாதிகள் என முத்திரை குத்தி, பிற சாதியினர் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறது சனாதனம்.
சண்டாளன் ஊருக்கு வெளியே வாழ வேண்டும் என்பதாலும், (மனு 10: 50) சேரிக்காற்று ஊருக்குள் வரக்கூடாது என்பதாலும் பெரும்பாலும் சேரிகள் ஊருக்கு கிழக்கே அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு பீடை திசை என்பதால் சில இடங்களில் சேரிகள் ஊருக்குத் தெற்கேயும் உள்ளன. சேரியின் தண்ணீர் ஊருக்குள் வரக்கூடாது என்பதால் மேடான இடங்களில் ஊரும், பள்ளமான இடங்களில் சேரியும் அமைந்திருப்பதைப் பல இடங்களில் காண முடியும்.
'பைபாஸ் ரோடு'
இவை மட்டுமல்ல, ஊர்க்காரர்கள் அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் சேரிக்குள் நுழைந்து சென்றால் தீட்டுப் பட்டு விடுவார்கள் என்பதால், உயர்சாதியினரின் நலனுக்காக, ஒவ்வொரு சேரியிலும் புறவழிச்சாலை அமைத்தவர்கள் அன்றைய பார்ப்பனர்கள். சரக்குகளை எந்தவித இடையூறும் இன்றி விரைந்து எடுத்துச் செல்ல, பார்ப்பன-பனியா-அதானி-அம்பானிகளின் நலனுக்காக இன்று புறவழிச்சாலைகள் (பைபாஸ் ரோடு) அமைக்கின்றனர்.
இதுதான், இன்றைய இந்திய ஊர்-சேரிகளின் வரைபடம். இதன் மீதுதான் தீண்டாமை எனும் கற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. டெட்டனேட்டர்களையும், புல்டோசர்களையும் கொண்டு இந்த கற்கோட்டையை சிதைக்காமல் தீண்டாமை ஒழிப்பில் ஒரு அடிகூட முன்னேற முடியாது.
பறையர்களின் ஆடை அலங்காரம்
பறையர்கள் எப்போதும் தொழிலுக்காக அலைந்து திரிவதோடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்கக் கூடாது, நாயை மட்டும் வளர்க்கலாம், பிணத்தின் துணியை உடுத்த வேண்டும், உடைந்த சட்டியில்தான் உணவு உண்ண வேண்டும், தங்க ஆபரணங்களை அணியக்கூடாது, இரும்பு பித்தளையிலான ஆபரணங்களை மட்டும் அணிய வேண்டும் என்கிறது சனாதன தருமம். (மனு 10: 51, 52, 54)
பறையர்கள் என்னதான் 'டிப்டாப்பாக' கோட்டு-சூட்டு போட்டு, பட்டாடை உடுத்தினாலும், இவர்கள் இழிந்த சாதியினர் என்ற பட்டம் மட்டும் மறைந்து விடாது. (மனு 10-57). இன்றைய சாதி இந்துக்களின் மன ஓட்டமும் இதுதானே!
முன்னால் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் ஆர் பி வி எஸ் மணியன் என்கிற ஒரு சனாதனி, அம்பேத்கரை மிகவும் தரக்குறைவாகப் பேசியதற்காக அண்மையில் கைது செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
தனிக்குவளை
ஒரு பாத்திரத்தை இவர்கள் தொட்டுவிட்டால், டெட்டால் போட்டு சுத்தம் செய்தாலும் அது பரிசுத்தமாகாது. இதனால்தானே தேநீர்கடைகளிலும் உயர்சாதியினரின் வீடுகளிலும் இன்றளவும் தனிக் குவளை-டீ கிளாஸ்-சொம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எச்சில் அனைவருக்குமான வாழ்வியல் தீட்டின் ஒரு அம்சம் என்றாலும், பறையன் எச்சில் மட்டும் பாலிடால் கலந்தது போல! மேலும், இவர்கள் உலோகப் பாத்திரம் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. டம்ளர்களைக் கழுவுனால்கூட தீட்டு போகாது என்பவனை காராகிரகத்தில் அல்லவா அடைக்க வேண்டும்! (மனு 10: 51)
இவர்களுக்கு நேரே அந்நம் போடக்கூடாது, வேலைக்காரரை விட்டு உடைந்த பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். (மனு 10-54).
முன்பெல்லாம் நெல் அளக்கப் பயன்படுத்தப்படும் படியில்தான் தண்ணீரோ, கஞ்சியோ, கூழோ ஊற்றிக் கொடுப்பார்கள். படியும் இல்லை என்றால் இரண்டு கைகளையும் விரிக்கச் சொல்லி ஊற்றுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது நேரில் கண்ட காட்சிகள் இவை.
இது டிஜிட்டல் யுகம் என்பதால், இன்று பறையர்கள் பயன்பாட்டிற்கென்றே வீட்டுக்கு வெளியே திண்ணையில் ஒரு ஓரத்திலோ அல்லது மரக்கிளையிலோ, எவர்சில்வர் சொம்பு ஒன்றை நிரந்தரமாக வைத்துள்ளனர். சொம்பைப் பயன்படுத்திய பறையரே அதைக் கழுவி அடுத்த முறை பயன்பாட்டிற்காக அவ்விடத்திலேயே வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நான் சமீபத்தில் கண்ட காட்சி இது. இது தீண்டாமை என்று தெரிந்தாலும், சொந்தக் காலில் நிற்க முடியாமல் அடுத்தவரை அண்டி வாழும் நிலை மாறாமல் தீண்டாமையும் வேறு வேறு வடிவங்களில் தொடரவே செய்யும்.
இது சட்டப்படி தீண்டாமைக் குற்றம் என்று உயர்சாதியினருக்குத் தெரிந்தாலும், இதுதான் இந்துக்களின் வாழ்வியல் முறை என்று சனாதனம் அவர்களுக்குப் போதித்திருக்கிறது.
அன்றே ஆதார்
கிராமத்திலும் ஊரிலும், ஏதாவது பொருளை விற்கவோ வாங்கவோ வேண்டும் என்றால் அரசன் கொடுத்த அடையாள அட்டையோடுதான் இவர்கள் ஊருக்குள் செல்ல வேண்டும். பார்த்தீர்களா! ஆதார் அட்டையை சனாதனவாதிகள் அன்றைக்கே கொண்டு வந்துள்ளனர். (மனு 10-55).
பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒருவன் தாழ்த்தப்பட்டவனா என்பதை அறிய அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கருப்புக் கயறு அணிய வேண்டும். (பக்கம் -77 அம்பேத்கர் தொகுப்பு: 25)
நிழல் பட்டால் தீட்டு
இவர்களின் நிழல் பட்டால் ஊர்க்காரர்கள் தீட்டுபட்டுவிடுவார்கள் என்பதால், ஊரிலும் பட்டணங்களிலும் இரவில் இவர்கள் சஞ்சரிக்கக்கூடாது. (மனு 10-54).
தீண்டத்தகாதவர்களின் நீண்ட நிழல்கள் ஒரு பிராமணன் மீது பட்டுவிட்டால் அவர் குளித்து தனது தீட்டைப் போக்கவேண்டியிருந்ததால், மாராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டத்தகாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும், அவர்களின் எச்சிலை ஒரு இந்து மிதித்து விட்டால் அவன் தீட்டுக்குள்ளாகக்கூடும் என்பதால், எச்சிலைத் துப்புவதற்காக தீண்டத்தகாதவர்கள் கழுத்தில் ஒரு பானையைத் கட்டிச் செல்ல வேண்டும். தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டும். (பக்கம் 76, 77: அம்பேத்கர் தொகுப்பு: 25).
தாங்கள் வாழும் பகுதி மட்டும்தான் ஊர் என உயர் சாதிக்காரர்கள் கருதுகிறார்கள். இதில் சேரி மக்களை அவர்கள் கணக்கில் கொள்வது கிடையாது. அதுபோல சேரி மக்களுக்கான ஊர் என்றால் அது தீண்டத்தகாத மக்கள் வாழும் பகுதி மட்டும்தான் என்று தீண்டத்தகாதவர்கள் கருதுகிறார்கள். இதில் உயர் சாதியினர் வாழும் பகுதியை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை.
சாதியத் தீட்டு குறித்து மேலும் பார்க்கலாம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment