சாதியத் தீட்டு... தொடர்ச்சி...
மூத்திரத்தை அடக்கு
ஏதாவது ஒரு வேலையாக வெளியே போய் கொண்டிருக்கும் போது, சிறு நீர் முட்டிக் கொண்டு வருகிறது என்றால் உடனடியாக எங்கேயாவது ஒதுங்குவதுதான் மனித இயல்பு. ஆத்திரத்தை அடக்கலாம்; ஆனால் மூத்திரத்தை அடக்கக் கூடாது என்பார்கள். ஆனால், ஐயர் எதிரில் வந்து விட்டால் மூத்திரத்தை அடக்கிக்த்தான் ஆக வேண்டும் என்கிறது சனாதனம். உங்கள் பிளாடர் வெடித்தாலும் பரவாயில்லை; ஆனால் ஐயர் மட்டும் தீட்டும் பட்டு விடக்கூடாது. இது சனாதன தருமம்; மீறக் கூடாது.
அது போல, ஐயர் ஆத்துப்பக்கமா வரும்போது, உங்களுக்கு வெளிக்கு வந்தா அமுக்கிக் கொள்ளனும்; ஏற்கனவே உட்கார்ந்திருந்தா, வந்ததை உள்ளிழுத்துக் கொண்டு படால்னு எந்திரிச்சடனும்.
"வாயு, அக்கினி, பிராமணாள், சூரியன், சலம், பசு, இவைகளைப் பார்த்துக் கொண்டு ஒரு போதும் மல மூத்திரங்களை விடப்படாது" (மனு 4-48).
பள்ளிக் குழந்தைகளின் வயிற்றிலடிக்கும் சனாதனம்
கரூரில்
அன்றாட சோத்துக்கே திண்டாடும் ஏழைகளின் பிள்ளைகள்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரும் சிறார்களின் பசியைப் போக்க தமிழ்நாடு அரசு காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தால் அங்கேயும் சனாதனம் தனது கோரமுகத்தைக் காட்டுகிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 15 பேர் பட்டியல்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். 15 பேர் இடைநிலைச் சாதியினர். இந்த 15 மாணவர்களும் காலை உணவை புறக்கணித்துள்ளனர். காரணம் கேட்டபோது ஒரு சக்கிலியப் பெண் சமைப்பதால் அதை சாப்பிடக்கூடாது என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நஞ்சை ஊற்றி அனுப்பிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மூன்று வேளை கஞ்சிக்கே வழி இல்லாமல், இடைநிலைச் சாதியைச் சேர்ந்த மாணவர்களின் தாய்மார்கள் ஆறு பேர் அருகில் உள்ள பஞ்சாலைகளில் தினக்கூலிகளாக வேலை செய்பவர்கள். சம்பவம் நடந்தது இந்த ஆண்டு. இது போன்று நடந்து கொண்டால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வோம் என்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் எச்சரித்து அனுப்பி உள்ளார்
தூத்துக்குடியிலும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் தலையிட்டு, அனைத்து சாதி மாணவர்களுடன் உணவருந்தி, சாதி வெறிக்கு ஆட்பட்ட பெற்றோர்களுக்கு பாடம் புகட்டி உள்ளார்.
திருப்பூரில்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், திருமலை கவுண்டன்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு பள்ளியில் பாப்பம்மாள் என்ற சக்கிலியப் பெண் சமைத்த மதிய உணவை புறக்கணித்ததனால் 88 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது நடந்தது 2018 இல்.
"அம்பட்டன், வேடன், தோணிக்காரன், கருமான் (கொல்லர்), விஸ்வகர்மா, செம்படவன், பிரம்பு வேலை செய்யும் குறவன், ஆயுதம் விற்கும் கருமான், நாய் வளர்க்கும் பறையன், கள் விற்கும் சாணார், துணி துவைக்கும்-துணிக்கு சாயம் போடும் வண்ணான், இவர்கள் சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என்கிறது சனாதனம். அப்படி சாப்பிட்டால் சாப்பிடவனுக்கு பலம் குறையும், ஆயுள் குறையும், இந்த உலகமும் கெட்டழியும், தோஷம் உண்டாகும், தெரியாமல் சாப்பிட்டு விட்டால் அதற்கு பட்டினி விரதம் இருந்து பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது சனாதனம். (மனு 4: 207-223)".
எய்தவன் இருக்க அம்பை நோவானேன். நியாயமாகப் பார்த்தால், சனாதனத்தை நியாயப்படுத்தும் மோடி-நிர்மலா கும்பல் மீதல்லவா வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாயவேண்டும்?
சாணார்கள்
இன்று நாடார்கள் என்று அறியப்படும் சாணார்கள் தீண்டத்தகாத சாதியில்தான் இருந்துள்ளனர். அதனால்தான், 'பள்ளனைத் தொட்டால்தான் தீட்டு; ஆனால் சாணானை பார்த்தாலே தீட்டு" என்ற பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. ஒரு சாணார், பனை மரத்தின் உச்சியில் இருக்கும் பொழுது அவ்வழியாக ஒரு பார்ப்பனர் வந்தால், "சாமியோ" என்று குரல் கொடுக்க வேண்டும். தெரியாமல்கூட பார்ப்பனர் மேலே பார்த்து விடக்கூடாது, பார்த்துவிட்டால் தீட்டாகிவிடும் என்கிற ஒரு முன்னெச்சரிக்கைதான் இதற்குக் காரணமாம்.
மேலும் சாணார்கள் ஊருக்குள் வசிக்க அனுமதிக்கப்படவில்லை. மாறாக, ஊருக்கு வெளியே, வயல் வெளிகளில் மரத்தடியிலோ, கிணற்று மண்மேடுகளிலோதான் வசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. நா வறண்டு போனாலும், சாணார் வீடுகளில் இடைநிலைச் சாதியினர் தண்ணீர்கூட அருந்த மாட்டார்கள்.
எனது பள்ளிப் பருவ காலத்தில் நான் கண்கூடாகக் கண்ட காட்சிகள் இன்னும் என் நினைவைவிட்டு அகலவில்லை.
சாணார் சாதி உள்ளிட்ட தீண்டத்தகாத கீழ் சாதிப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது; மீறி அணிந்தால், முலை வரி கட்ட வேண்டும் என்ற சட்டம், நம்பூதிரிப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கர் சமஸ்தானத்தில் இருந்தபோது, அதற்கு எதிராக நடைபெற்ற தோல் சீலைப் போராட்டத்தை மறைத்துவிட/ மறந்துவிட முடியுமா என்ன?
சாணார்கள் மீது ஏவப்பட்ட இந்த சனாதன அதர்மத்திற்கு எதிராகத்தான் அய்யா வைகுண்டர் அவர்கள் தனி வழிபாட்டு முறையை உருவாக்கினார். ஆங்கிலேயர் காலத்தில் பலர் மதம் மாறுவதற்கும் இந்த சனாதன தருமமே அடிப்படை.
மெர்கண்டைல் வங்கி போன்ற ஏற்பாடுகள் மூலம் நாடார்கள் பல்வேறு தொழில்களில் கடுமையாக உழைத்து இன்று பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளதோடு இடைநிலைச் சாதியாகவும் அறியப்படுகின்றனர். இன்று சனாதனத்திற்காக ஓயாமல் கூப்பாடு போடும் தமிழிசை சௌந்தரராஜனும், கரு.நாகராஜனும் இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள் என்பதை உலகறியும். ஆனால், நாடார்கள் இன்னமும் சனாதனவாதிகளின்- பார்ப்பனர்களின் நெஞ்சங்களில் சாணார்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், இவர்கள் இன்னமும் நாடார்கள், சாணார்கள், கிராமணிகள் என்றுதான் குறிக்கப்படுகின்றனர்.
தல புராணங்கள் எழுதி தற்பெருமை பேசுவதனால் வரலாற்றை மறைத்து விட முடியாது. கடந்த கால வரலாற்றை நினைவு கூர்ந்தால்தான், அடுத்த கட்டத்தை நோக்கி சமூகத்தை நகர்த்த முடியும்.
வரலாற்றுக் காரணங்களுக்காக நாம் பழி தீர்க்க வேண்டும் என்றால், சனாதனத்தை ஆதரித்துப் பேசும் ஒருவன் இன்று பொது வெளியில் நடமாட முடியுமா?
கும்பாபிஷேகமும், கிரகப்பிரவேசமும் சாதியத் தீட்டா? வாழ்வியல் தீட்டா? அடுத்து பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4
சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5
No comments:
Post a Comment